[X] Close

கேட்டது கிடைக்கும்; நினைத்தது பலிக்கும்! 24: வாஞ்சியம் வந்தால்... உடலுக்கும் தெம்பு; மனதுக்கும் தெம்பு!


kettadhu-kidaikkum-ninaithadhu-palikkum-24

  • வி.ராம்ஜி
  • Posted: 28 Aug, 2018 11:40 am
  • அ+ அ-

கும்பகோணத்தில் இருந்து நன்னிலம் செல்லும்  வழியில் உள்ளது அச்சுதமங்கலம். அங்கிருந்து கிளைபிரிந்து செல்லும் சாலையில் ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீவாஞ்சியம்.

அதாவது, குடவாசலில் இருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஊர். ஆரூர் எனப்படும் திருவாரூரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் இருக்கிறது ஸ்ரீவாஞ்சியம்.

வாஞ்சியத்துக்கு வந்தால், வாழ்நாளெல்லாம் நிம்மதியாக வாழலாம் என்பார்கள். வாஞ்சியம் வந்து, ஈசனைத் தரிசித்தால், நீண்ட ஆயுள் நிச்சயம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். 
எமனின் பாசக்கயிறில் இருந்து எவரும் தப்பவே முடியாது. பிறப்பின் போதே தீர்மானிக்கப்பட்டு விடுகிறது இறப்பும். அந்த இறப்பை நோக்கி நகருவதே வாழ்க்கைப் பயணம். அந்த பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவேயான வாழ்க்கையைப் பொருத்தே பிறவிக்கணக்குகள் இருக்கின்றன. இதையே பிறவிப்பிணி என்கிறோம். இந்த, இப்பிறவியைச் செவ்வனே கழிப்பதுதான் நம் முதல், முக்கிய, முழுக்கடமை.

மரணம், ஒரேயொருமுறைதான் வரும். ஆனால் மரணம் வரும் மரணம் வரும் என்று செத்துச்செத்துப் பிழைக்கிற வாழ்க்கையைத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இத்தகைய மரண பயத்தைப் போக்கி அருளும் திருத்தலம்தான் திருவாஞ்சியம். இறைவனின் திருநாமம் வாஞ்சிநாத சுவாமி. அம்பாள் - ஸ்ரீமங்களாம்பிகை.

சிவனார், தன் மனைவி உமையவளுடன் ரிஷப வாகனமேறி உலகையே வலம் வந்தார். அப்போது அம்பிகைக்கு திருத்தலங்கள் குறித்தும் அந்தத் தலங்களின் பெருமைகள் பற்றியும் விளக்கிக்கொண்டே வந்தார். காசி க்ஷேத்திரத்தின் பெருமையையும் கங்கையின் புண்ணிய விசேஷங்களையும் எடுத்துரைத்தார். காளஹஸ்தி திருத்தலத்தின் தோஷ நிவர்த்திகளை விளக்கினார்.

இப்படி திருத்தலங்களை சொல்லிக்கொண்டே வந்தவர், ஸ்ரீவாஞ்சியம் தலத்துக்கு வந்தார். அந்தத் தலத்தின் பெருமையை எடுத்துரைத்தார். ’காசிக்கு நிகரான க்ஷேத்திரம் என்று பல உண்டு. காசியை விட புண்ணியம் மிக்க க்ஷேத்திரங்களும் இருக்கின்றன. இதோ... இந்த வாஞ்சியம், காசியை விட புண்ணியம் நிறைந்த க்ஷேத்திரம் என்று தெரிவித்தார் ஈசன்.

’இந்த திருவாஞ்சியத்தில் உள்ள தீர்த்தம் குப்த கங்கை. இது கங்கையை விடவும் புனிதமானது. மனிதனாகப்பட்டவன், தன் வாழ்நாளில்,  ஒரேயொரு நாள் இரவில் இங்கே தங்கினால், அது திருக்கயிலாயத்தில் சிவகணங்களாகத் திகழும் பெரும்பேற்றைத் தந்திடும்’ என்று சிலாகித்துச் சொன்னார்.

தன்னுடைய தலங்களை, சிவனாரே விளக்குவதும், அதுவும் உமையவளுக்கு எடுத்துரைப்பதும் எப்பேர்ப்பட்ட மகிமைமிக்கது என்கிறது ஸ்தல புராணம்.

ஸ்ரீவாஞ்சியம் தலத்தில் ஈர்க்கப்பட்ட அம்பிகை, இங்கே தங்குவது எனத் திருவுளம் கொண்டாள். அப்படி தங்கி, சிவநாமம் சொன்னபடி, சிவலிங்க பூஜைகள் செய்து,  சிவதவத்தில் லயித்தாள். இதனால் இந்த நாயகிக்கு, இங்கே உள்ள தேவிக்கு, இன்னொரு பெயரும் அமைந்தது. அது... வாழ வந்த நாயகி!

வாஞ்சியத்தில் வாழ வந்த நாயகி என்று போற்றப்படும் உமையவள், இங்கே சிவனாரை நாடி வருவோரையெல்லாம் வாழவைத்துக்கொண்டிருக்கிறாள். தன் கருணையையும் அருளையும் வழங்கிக்கொண்டே இருக்கிறாள்.

ஸ்ரீவாஞ்சியத்துக்கு ஒருமுறை, ஒரேயொரு முறை வாருங்கள். அங்கே, ஒருநாள் தங்குங்கள். விடியலில், வாஞ்சிநாத சுவாமிக்கு வில்வமும் மங்களாம்பிகைக்கு செவ்வரளியும் சார்த்தி தரிசித்து, மனதார வேண்டிக்கொள்ளுங்கள். உங்களின் இந்த ஜென்மத்தை இனிதாக்குவார்கள் அம்மையும் அப்பனும்! கணவனின் ஆயுளையும் ஆரோக்கியத்தையும் நீட்டித்து அருள்வார் சிவபெருமான்!

எமனின் பாசக்கயிறில் இருந்து எவரும் தப்பவே முடியாதுதான். ஆனாலும் எமனின் பாசக்கயிறு நம்மை நோக்கி வருவதை, நீட்டித்து அருள்வதற்காகவே நமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார் தென்னாடுடைய சிவனார்!

வாழ்வில், ஒருமுறை, ஒரேயொருமுறை ஸ்ரீவாஞ்சியம் திருத்தலத்துக்கு வாருங்கள். சிவதரிசனம் செய்யுங்கள். அடுத்தடுத்த வாழ்வில், உடலிலும் மனதிலும் மாற்றங்கள் ஏற்படுவதை உணருவீர்கள். உணர்ந்து சிலிர்ப்பீர்கள் என்பது உறுதி!

- இன்னும் தரிசிப்போம்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close