[X] Close

ஆண் நன்று பெண் இனிது 26 : வாழ்வெல்லாம் பூண்டு வாசம்!


aan-nandru-pen-inidhu-26-sakthi-jothi

  • சக்திஜோதி
  • Posted: 28 Aug, 2018 10:43 am
  • அ+ அ-

சமீபத்தில் ஒருநாள் மதுரை, விளக்குத்தூண் அருகேயுள்ள நடைபாதை வழியாகச் சென்றேன். ஓயாத போக்குவரத்து இரைச்சலையும் மீறி ‘வீட்டுக்கு பூடு வாங்கிட்டு போம்மா. ஒருப்பூடு, ஒடம்புக்கு ரொம்ப நல்லது’ என்று குரல் கேட்டுத் திரும்பிப்பார்த்தேன். ஒல்லியான தேகத்துடன் வெயிலில் கறுத்து மினுங்குகிற முகமுமாக ஒரு அம்மா அமர்ந்திருந்தார். அந்த நடைபாதை முழுக்க வேறு யாரும் கடைபோடவில்லை. வெயிலுக்கோ, மழைக்கோ தலைக்கு மேல் தடுப்பு எதுவுமில்லை. அந்தம்மா குரலில் நான் நின்றவுடன், ‘மூடாக்குப் போட்டு வச்சிருந்ததிலருந்து நேத்துதான் எடுத்தது. தண்ணி வத்தாம, மண்ணுலருந்து பிடிங்கியெடுத்த ஈரங்காய்ஞ்சு, பளபளன்னு பக்குவமா இருக்கு பாரு, ஒரு கிலோ வாங்கிக்கோம்மா’ என்று சொன்னார். வெள்ளைப்பூடு பதப்படுத்துகிற தொழில்நுட்பத்தோடு வெகு இயல்பாக பேசுகிற அந்தம்மாவைக் கடந்து செல்லமுடியவில்லை. ‘எவ்ளோம்மா கிலோ?’என்று கேட்டேன். ‘இவ்ளோ நேரம் கிலோ நூத்தியிருவதுன்னு போட்டேன், ஒனக்கு நூறுன்னு குடுக்குறேன்..’ என்று சொன்னார்.

வியாபாரயுக்தி அதுவெனத் தெரிந்தாலும் அந்தம்மாவின் முகமும் குரலும் ‘வாங்கிக்கொள்’ என்றே சொன்னது. ‘சரிம்மா, ஒரு கிலோ கொடுங்க, அளவு சரியா நிறுத்துப்போடுங்க’ என்று சொன்னேன். ‘அதெல்லாம் நம்ம நிறுவைய கொற சொல்ல முடியாது, நீ வேணா வீட்ல போய் அளந்துபாரு, நாலு பூடு கூடத்தான் இருக்கும். முப்பத்துநாலு வருஷமா இங்குனக்குள்ளயேதான் கடை போடுறேன், முந்தியெல்லாம் காப்படி, அரப்படின்னு அளந்து குடுப்பேன், அப்பவும் தலைத்தட்டப் போடமாட்டேன், ஒலக்குக்கு மேல குவிச்சுத்தான் குடுப்பேன்.. பை வச்சிருக்கியாம்மா.’ என்று பேசிக்கொண்டே அரைகிலோ அளந்தார். ‘கொண்டு வரலையேம்மா, உங்ககிட்ட இல்லையா?’என்று கேட்டேன். ‘பிளாஸ்டிக் பை வச்சுகிறக் கூடாதுல்ல, தெரியாம வச்சிருந்தா ரெண்டாயிரம் ரூவா ஃபைன் போட்டுருவாங்க. பேப்பர் பை, துணிப்பையெல்லாம் எங்களமாதிரி ஆளுகளுக்கு கட்டுப்படியாகதுல்ல’ என்று சொன்னார். ‘நானும் பை எதுவும் கொண்டுவரலையே..இப்ப என்ன செய்ய?’ என்று கேட்டேன்.

நிமிர்ந்து என் முகத்தைப் பார்த்தவர், ’பொறு தாயி, தோ, ஒரே நிமிசம்..’ என்றவர் எழுந்து பக்கத்திலிருந்த துணிக்கடைக்குச் சென்றார். கைத்தறி துண்டு, பனியன், தலையணை உறை, கால்மிதியடி ஆகியவற்றை வாசலில் நின்றபடியே வாங்குமளவு சிறிய கடைதான் அதுவும். ‘ஏய்யா ஒரு பை குடு...’ என்று சொன்னவுடன் ஒரு இளைஞன் ஒன்றுமே சொல்லாமல் புன்னகையுடன் பச்சைநிற பை ஒன்றை எடுத்து நீட்டினார்.

‘வருஷம் முச்சூடும் நாளு முழுக்க இங்குனையே உக்காந்துருக்கேனா..அதான் நான் கேட்டதும் குடுக்குது.. இவுக தாத்தா காலத்துல பனியன் கடைய தொடங்குனாங்க.. இவுக அப்பா பாத்து.. இப்ப கடைக்கு பேரன் வந்துட்டான்.. கடைய இதுக்கு மேல பெருசாக்காம இப்படியே ஏவாரம் பண்றாங்க, எம்புட்டோ பெரிய பெரிய துணிக்கடையெல்லாம் வந்துகிட்டேயிருக்கு, ‘நீ கூட இந்தக் கடைய பெருசாக்கலாம்ல்ல’ன்னு கேட்டாலும் இந்தப் புள்ள ஒண்ணும் சொல்லாம இப்படித்தான் சிரிக்கும்...’ என்றபடி பூண்டு இருந்த பையை என்னிடம் கொடுத்தார்.

எனக்கு அந்தம்மாவிடம் தொடர்ந்து பேசவேண்டும்போலத் தோன்றியது. ‘முப்பத்து நாலு வருஷமா இங்கயேவா கடை போடுறீங்க, உங்க வீடு எங்க இருக்கு’ என்று கேட்டேன். ‘கீழக்குடி..கீழக்குடி தெரியும்ல? அங்க தான் வீடு. என்று கேட்டவர் என் பதில் எதுவும் தேவைப்படாமலேயே தொடர்ந்தார், ’இதோ இம்முட்டுப்புள்ளயா இருந்தப்ப எங்காத்தாகூட வருவேன், அந்தகாலத்துல தெருவுல பூடு வித்து வந்த எங்கய்யாவ விருப்பப்பட்டு கட்டிகிருச்சு, அவருகூடச் சேந்து எங்காத்தா இங்குனகுள்ள அந்தக்காலத்துல கடை போட்டுச்சு, அது வயித்துக்குள்ள நான் இருந்ததுலயிருந்து இன்னைக்குவரைக்கும் ஏ ஒடம்பு ஆவி பூராம் பூடுதான் கலந்து கெடக்கு..’ என்று சொன்னார்.

‘அந்தக் கடைக்காரங்களைச் சொல்றீங்க, உங்களுக்கு பெருசா கடை போடணும்ன்னு தோணலையா, இப்படி தெனமும் மூடையில தூக்கிட்டு வந்து, வெயிலு மழைக்கு ஒதுங்கக்கூட இடமில்லாம இங்கயே உக்காந்திருக்கீங்க, அதுவும் முப்பத்துநாலு வருஷமான்னு வேற சொல்றீங்க, நீங்க கல்யாணம் பண்ணிக்கலையா..?என்று கேட்டேன். என்னோடு

பேசிக்கொண்டே தன் முன்பாக இருந்த பூண்டு குவியலின் காய்ந்த சருகுகளை ஒதுக்கிக்கொண்டே இருந்தவர் நிமிர்ந்து என்னை ஆழமாக ஊடுருவிப்பார்த்தார். ‘நீ எந்த ஊரு தாயி?’ என்று கேட்டார். ‘மதுரதாம்மா’ என்று சொன்னேன். ‘வெறுங்கழுத்தியா இருக்கனேன்னு பாக்குறியா, பூடு பல்லு மாதிரி வெள்ளையா சிரிக்கிறேன்ன்னு சொல்லித்தான் என்னைய கட்டிக்கிட்டார் அந்த மனுஷன்.. இப்பவும் ஒருநா விடாம எங்கை பூடு நிறுத்துப்போட்டுட்டேதான் இருக்கு, இதத் தொடாம ஒருநா இருந்ததில்ல நான், ஆனா அப்பப்போல சிரிக்குறதுதான் இல்ல. சிரிச்சா சொல்ல அந்தமனுஷனும் இல்ல, எல்லா பொம்பளக்கும் கழுத்துல கயிறு இருந்தாலும், இல்லேன்னாலும் அதுஅதுக்குன்னு ஒரு கத இருக்கும்.. வாயத் தொறந்தா மூடாமப் பேசிக்கிட்டே இருக்குறவதான் பொம்பளன்னு பேரெடுத்திருந்தாலும், அவளப்பத்தி மூடி வச்சுக்கவும் எம்புட்டோ விஷயமிருக்கும்.. இத்தன வருஷத்துல இந்த எடம் எம்புட்டோ மாறிப்போயிருச்சு, இந்த எடத்தவிட்டு வேறபக்கம் போறதுக்கோ பெருசா கடைபோடுறதுகோ எம்மனசு மட்டும் மாறல’ என்று அமைதியான குரலில் சொன்னார்.

அந்தப்பெண்மணிக்குள் புதைந்து கிடக்கிற கதையைக் கலைப்பதற்கு மனதின்றி நானும் விடைபெற்றுக்கொண்டேன். அப்போது அவர் ’இத்தன வருஷத்துல யாருமே இதுவரைக்கும் எங்கிட்ட நின்னு இம்புட்டு நேரம் பேசினது இல்ல, எம்மக மாதிரி நெனச்சுச் சொல்றேன்.. நீ நல்லா இருக்கணும், மகராசியா இருக்கணும்.. ஒங்கொலம் நெலச்சிருக்கணும்.. அடுத்த வருஷம் வந்தாலும் இங்கதான் உக்காந்திருப்பேன், அதுக்கடுத்த வருஷம் வந்தாலும் இங்கதான் இருப்பேன்.. எப்பவேணா வா.. இப்ப நல்லபடியா போயிட்டு வா’ என்று எழுந்து நின்று வழியனுப்பினார்.

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு முகம் இருக்கிறது. நம்முடைய உணர்வுக்கு ஏற்ப அதனுடைய முகமும் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் சுகமோ, துக்கமோ எவ்விதமான உணர்வோடு இருந்தாலும் மதுரை எனும் பழமையான நகரம் ஒவ்வொரு முறையும் அதனுடைய புதுமையை எனக்கு அடையாளம் காட்டிவிடுகிறது. இம்முறை விளக்குத்தூண் அருகே பூண்டு விற்கிற ‘லோகம்மா’ என்கிற பெண்மணியை என்னிடம் சேர்த்திருக்கிறது இந்தப் பெருநகரம்.

கடலில் மீன் பிடிப்பதில் பல விதங்கள் உள்ளன. பெரிய கப்பலில் நடுக்கடல் செல்பவருக்கும், சிறிய படகில் செல்பவருக்கும் மட்டுமன்றி கரையோரம் அமர்ந்து தூண்டில் போடுபவருக்கும் கடல் தன்னைத் திறந்தே வைத்திருக்கிறது. அவரவர் கொண்டு செல்கிற கலனுக்கும், உழைப்புக்கும் ஏற்ப மீன்களோடு திரும்புவதுபோல மதுரை நகரின் வியாபாரமே ஒரு வினோதமான விஷயம்தான். தலைமுறை தலைமுறையாக என்கிற சொல்லோடு வியாபாரம் நடைபெறுகிற பல தொழில்கள் இங்கே உண்டு. நகைக்கடை, ஜவுளிக்கடை, பாத்திரக்கடையென ஒரு தெருவில் பெரியதும் சிறியதுமாக எண்ணற்றவை தொடங்கப்பட்டு எல்லாவற்றிலும் வியாபாரம் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. இந்த நகரத்தின் தொன்மம்போலவே இங்கே வசிப்பவர் பலரது மனமும் மாறுவதேயில்லை. பூண்டு வியாபாரமோ, துணி வியாபாரமோ ஏதோ ஒன்றில் மனம் பதித்துவிட்டால் அதனைவிட்டு தன்னை மாற்றிக்கொள்ளாதவர் பலருண்டு. புற உலகில் ஏற்படுகிற எந்த மாற்றமும் தன்னையோ தன்னுடைய விருப்பத்தையோ பாதிக்காமல் ஒன்றிலேயே மனம் குவித்து, அங்கேயே நிலைபெற்றுவிட்ட பலரை எனக்கு இந்நகரம் அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கிறது.

சிம்மக்கல் அருகேயுள்ள செல்லத்தம்மன் கோயில் முன்பாக உள்ள செல்லத்தம்மன் செக்கெண்ணெய் என்கிற கடையில் வழக்கமாக நல்லண்ணைய் வாங்குவேன். அந்தக்கடையிலிருக்கும் பித்தளைக்குடம் பற்றி ஒருமுறை நான் அந்தக் கடையின் உரிமையாளர் ராஜ்குமாரிடம் விசாரித்தபோது, ’இது எங்க தாத்தாவுக்கு தாத்தா காலத்துல செஞ்ச கொடம், சுத்தமான பித்தள, இதுமாதிரி மாடல்ல இப்ப செய்யக்குடுத்தேன், இப்பல்லாம் செம்பு கலந்து செய்யுறதால கொஞ்சம் கனமா இருக்கு, இந்த வடிவமும் வரல, அதனால இந்த பழைய கொடத்த மாத்தவே மனசில்ல, விளிம்புல லேசா பத்தவச்சு இதையே பயன்படுத்துறேன். அதுமாதிரி அந்தக்காலத்துல இருந்து அளக்குறதுக்கு இந்தச்செம்புதான் கணக்கு, இப்பவும் இதுலதான் அளந்து ஊத்துறேன். இந்தச்செம்பு ரெண்டு லிட்டர் பிடிக்கும். சின்னப்பையனா இருக்கும்போதே தாத்தாவோட இல்லேன்னா அப்பாவோட கடைக்கு

வருவேன். அதுனால கையோட கனத்துலயே லிட்டர் அளவும் கணக்கா தெரியும், அதுக்குன்னு தனியா லிட்டர் படியெல்லாம் இன்னைக்கும் நான் வாங்கிக்கல’ என்று சொன்னார்.

ஒரு பித்தளைக்குடமும், ஒரு பித்தளைச்செம்பும், பித்தளைக்கூடையும், இந்தச்செக்கெண்ணெய் தொழிலும், இந்தக்கடையும் தன்னிடமுள்ள தாத்தாவின் சொத்தாக நினைத்துக்கொள்வாராம். ராஜ்குமார், பிகாம் படித்துவிட்டு வங்கி வேலைக்குப்போகச் சொன்ன அவருடைய தந்தையிடம் வேண்டாமென மறுத்துவிட்டு, கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக இந்தத் தொழிலில் இருப்பவர். தினமும் காலையில் செல்லத்தம்மன் கோவிலில் மூலஸ்தானத்தை வழிபட்டுவிட்டு அங்கேயுள்ள கண்ணகி சந்நிதிக்குச் செல்வாராம். ‘தாயே.. அஞ்சு தலைமுறை கடந்து எங்கிட்ட இந்தத்தொழில் வந்திருக்கு. உன்னப் போல ஒரு வணிககுடும்பத்துல பிறந்தவன் நான்.. நேர்மையோட நான் நடந்துக்க என்னை வழிநடத்து. இந்த எண்ணெய மருந்துக்கும், குழந்தைப் பிறப்புக்கும் வாங்கிட்டுப் போறாங்க, நோய்நொடியில்லாம அவங்க குலம் செழித்திருக்கச் செய்..’ என்று வேண்டிக்கொண்ட பின்பே கடை திறப்பாராம். விதவிதமாக எத்தனையோ எண்ணெய் நிறுவனங்கள் அறிமுகம் ஆனபோதும் தங்கள் கடைக்கென பிரத்யேகமான வாடிக்கையாளர்களைக் கொண்டிருப்பதாக அவர் சொல்கிறார்.

மதுரையின் பிரத்யேக அடையாளமாக இருந்த பல கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. ஆசியாவின் மிகப்பெரிய திரையரங்கான ‘தங்கம்’ தரை மட்டமாகி வேறொரு வணிகத்தளமாகிவிட்டது. புற உலகில் காலந்தோறும் மாறுதல்கள் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. ஆனால் தன்னுடைய காலத்திற்குப் பிறகு ஏழாவது தலைமுறையாக தன் மகன்கள் தொழிலைக் கையிடுத்துக்கொள்வார்கள் என செக்கெண்ணெய் விற்கும் ஒருவர் நம்புகிறார்.

ஆங்கிலேயர் காலத்தில் மதுரைநகரை விரிவு செய்வதற்காக கோட்டை மதில்கள் இடிக்கப்பட்டன. நகரைச் சுற்றியிருந்த அகழியை மூடுபவர்களுக்கு வீட்டுமனையாக அவ்விடம் சொந்தமாக்கித் தரப்படும் என்று அறிவித்து செயல்படுத்திய அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஜோஹன் ப்ளாக்பர்ன் என்பவர் நினைவாக விளக்குத்தூண் அமைக்கப்பட்டது. அதனருகேயுள்ள

வீதியில் ஒரு பெண்மணி எவ்வித அடையாளமும் அற்றவராக, அவ்விடத்தின் அடையாளமாக, எதற்கோ சாட்சியாக முப்பத்துநான்கு வருடங்களாக வெள்ளைப்பூண்டு வியாபாரம் செய்து வருகிறார். தன்னுடைய மனதிற்குள் எவ்வித நகர்தலுமற்ற அவள், கடிகாரத்தின் முட்களுக்கு நடுவே குத்தவைத்து அமர்ந்து காலத்தை நகர்த்திக்கொண்டிருப்பதைப்போலவே அந்த நடைபாதையில் அமர்ந்திருக்கிறாள்.

புற உலகின் மாற்றங்களால் பாதிக்கப்படாதவர்களால்தான் ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலான மதுரையின் வீதிகள் புதிதாகவே இருக்கின்றன. அவர்களாலேயே இந்நகரம் உயிர்ப்புடன் இயங்குகிறது.

- இன்னும் வருவார்கள்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close