[X] Close

பயணங்களும் பாதைகளும் 20 : அது நம்மூரு போல வருமா?


payanangalum-paadhaikalum-20

  • kamadenu
  • Posted: 24 Aug, 2018 10:23 am
  • அ+ அ-

அன்று சாயந்தர நேரம். எதிரே உள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை . மாடியிலிருந்து வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தேன்.

நான்கு ஜெர்மன் குழந்தைகள். ஒன்றோடு ஒன்று ஏதோ பேசியபடி, அடித்துத் தள்ளி மண்ணில் விழுந்து புரண்டு , அம்மாக்கள் சற்று தனியே அமர்ந்து தலையை ஆட்டி,ஆட்டி, அது நிச்சயம் ஏதோ வம்புதாங்க......

சற்று தள்ளி, ஒரு இந்தியக் குழந்தை. அதன் அம்மாவைப் பார்த்தால் குஜராத்தி போல் தெரிந்தது. அவர் மட்டும் தனியே, விளையாடும் குழந்தையின் பக்கத்தில் . குழந்தைக்கு இரண்டு வயதிருக்கும்.

மற்றக் குழந்தைகளும், பக்கம் வந்து, ஏதோ கொடுத்து வாங்கிச் சென்றன. பார்த்துக்கொண்டே இருக்கும்போது, அந்தக் குழந்தை சறுக்கு மரத்தின் படிகளிலிருந்து , தொபேல்......ஒரு பந்து போல் உருண்டு வந்து, கீழே மண்ணில் விழ, அம்மா குஜராத்தியில் ஏதோ சமாதானப் படுத்த, பயத்தில் உறைந்து அழுகை கூட வராமல் குழந்தை விழிக்க, நெற்றியிலிருந்து ஒரு மெல்லிய கோடாக ரத்தம் வழிய ஆரம்பிக்க, மற்ற குழந்தைகள் விளையாட்டைத் தொடர்ந்தன . அம்மாக்கள் திரும்பிக்கூட பார்க்காமல் வம்பைத் தொடர்ந்தனர்.

நான் கீழே இறங்கி ஓடினேன்.

குழந்தை வீறிட்டு அழ ஆரம்பித்தது.

இனி நடந்தது எல்லாம், அந்தப் பெண்ணிடம் கேட்டுத் தெரிந்து கொண்டது

குழந்தையை தூக்கிக் கொண்டு வீட்டுக்கு ஓடினாள். யாரும் என்ன....ஏது என்று கேட்கவில்லை . அவளை ஒரு பொருட்டாகப் பார்க்கவும் இல்லை. குழந்தை அழுது அழுது ஓய்ந்தது. கண்ணுக்கு மிக அருகில் இருந்து ரத்தம் வழிவது நிற்கவேயில்லை .

பெண் குழந்தை,கண்களில் ஏதாவது ஆகி இருந்தால்..., அவளுக்கு பயத்தில் தலை சுற்றியது.

கணவருக்கு போன் செய்தாள்.போன் ஸ்விட்ச் ஆப். அடக்கடவுளே, இன்றைக்கு முக்கியமான மீட்டிங். காலையிலேயே சொல்லி இருந்தார். சாயந்தரம் வரவும் லேட் ஆகும் என்று.  ச்சே.....நம் ஊராக இருந்தால் ....யாரையாவது துணைக்காவது கூப்பிட்டிருக்கலாம்.

ரத்தம் நிற்கவேயில்லை.  ஐஸ் கட்டி வைத்துப் பார்த்தாள்.

டாக்டரிடம் அழைத்துக் கொண்டுதான் போகவேண்டும்.

நல்ல வேளை. இன்னும் ஐந்து மணி ஆகவில்லை. டாக்டர் கிளீனிக்கில்தான் இருப்பார்.தடுப்பூசி போடப் போனபோது போகும் வழி பழகிவிட்டது. அவ்வளவாக ஊரைப்பற்றித் தெரியாது. எந்த மெட்ரோ? எந்த யூ பான்? நல்ல வேளை இவை தெரியும். டாக்டருக்கும் இங்கிலீஷ் தெரியும்.போன் செய்தாள்.

ஹலோ.....டாக்டர், குழந்தைக்கு நெற்றியில் நல்ல அடி, ரத்தம் நிற்கவில்லை. இப்போது வரலாமா? இப்போதுதான் நாலரை. உங்கள் ட்யூட்டி டைமிற்குள் உடனே வந்து விடுகிறேன்.

இல்லை டாக்டர் , உங்க நேரத்துக்குள் வந்து விடுகிறேன், இல்லை டாக்டர்,ரொம்ப சீரியஸ் போல் தெரியவில்லை, உங்கள் கிளீனிக் டைமுக்குள் சிகிச்சை முடிந்துவிடும், ப்ளீஸ் டாக்டர்...

என்ன சொல்லியும் டாக்டர் ஒப்புக்கொள்ளவில்லை. இங்கே இப்படிப்பட்ட தனியார் கிளீனிக் நேரப்படிதான் இயங்கும். வருவது நேரத்துக்குள் இருந்தாலும் , பார்த்து முடிக்க நேரம் ஆகும் என்று எண்ணியதால் பார்க்க மறுத்துவிடுவார்கள் . நினைத்தபடி வேறு டாக்டரை சென்றும் பார்க்கமுடியாது. நாம் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட கிளீனிக்கிற்கு மட்டும்தான் செல்லமுடியும். வேறு எந்த டாக்டரும் பார்க்கக் கூட மாட்டார்கள்.

ரத்தம் கோடாக வழிந்து கீழே சொட்டிக் கொண்டிருந்தது ..

டாக்டர், தாங்கள் பார்க்காவிட்டால் நான் எங்கே போவது?

ஆமாம், குழந்தைக்கு ப்ளட் டெஸ்ட் செய்ய பொது ஆஸ்பத்திரி சென்றேன். சரி அங்கே போகிறேன். என்ன......இன்னும் ரத்தம் நிற்கவில்லை.தையல் போட வேண்டி இருக்குமா ?

பொது மருத்துவமனை எல்லா நேரமும் திறந்து இருக்கும். நேரப்படி, முன்பதிவு செய்யப்பட்டால் மட்டுமே தனியார் ஆஸ்பத்திரி.  எமெர்ஜன்ஸி என்று வந்தால் பொது ஆஸ்பத்திரிதான். குழந்தையைத் தூக்கிக் கொண்டு அங்கே ஓடினாள்.

அதற்குள் அழுது அழுது குழந்தை மயக்க நிலையில் இருந்தாள்.

தட்டுத் தடுமாறி ,வாசலில் ரிசப்ஷன் பெண்ணிடம் நடந்ததைச் சொன்னாள். ஜெர்மன் மொழி மட்டுமே அறிந்த அவள், ஏதோ அதிவேகமாகச் சொன்னபடி கைகளை நீட்டினாள் .இவளும் விடாமல் அர்ஜெண்ட்....அர்ஜெண்ட். என்றும் சொன்னபடி இருந்தாள். தலையை ஆட்டிவிட்டு,மறுபடியும் கைகளை நீட்டினாள். இவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

அதற்குள் யாரோ இன்னொருவர் வந்ததும் அவர் கார்ட் நீட்டினார்....

இப்போது புரிந்தது.ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு போல் ஒன்று கொடுக்கப்படும்.இதில் ஜெர்மன் நாட்டவர், வெளிநாட்டவர் என்று பாகுபாடில்லை . அந்த கார்டு இல்லையென்றால் பார்க்கமாட்டார்கள். அவசரத்தில் கொண்டுவர மறந்துவிட்டாள்.

மறுபடியும்.டிராம் பிடித்து, வீடு வந்து கார்டு எடுத்து போவதற்குள், குழந்தையை ஸ்ட்ரோரலில் வைத்து எடுக்கும் போது. மறுபடியும் நெற்றியில் பட, புதிதாக ஒரு சிவப்புக் கோடு.

கடவுளே, அஜாக்கிரதையால் குழந்தைக் கண்களைப் பறித்து விடாதே..

வீக்கத்தில் கண்  மறைந்து கிடந்தது.

கார்டு வாங்கப்பட்டு ஒரு லைனில் அமர்த்தப்பட்டாள்.

இங்கே அவசரம் என்பது நம் கூற்றுப்படி அல்ல. அதேபோல் டோக்கன் முறை என்றும் இல்லை. டிவி மானிட்டர் வழி உள்ளே இருந்து டாக்டர்கள் பார்த்து, யாரை முன்னால் கூப்பிட வேண்டும் என்று முடிவெடுப்பார்கள்.

அதன் படி நான்காவதாக அவள் அழைக்கப்பட்டாள் .

நல்ல வேளையாகக் குழந்தை கண்களுக்கு ஒன்றும் ஆகவில்லை. தையல் போட வேண்டிய தேவையும் இல்லை என்று சொல்ல, ஒரு பெரிய நிம்மதி.

இந்தக்கதை உண்மையில் ஜெர்மனியில் நடந்தது. இதை நான் இங்கே சொல்லும் காரணம் வெளிநாடுகளுக்கு வேலை பார்க்கப்போகிறோம். அங்கே இப்படிப்பட்ட இடர்கள் மிக அதிகமாக நாம் சந்திக்க வேண்டி இருக்கிறது. நாம் செல்லப்போகும் வெளிநாட்டில் ஹெல்த் கேர் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்வது அவசியம். அற்புதமான ட்ரீட்மெண்ட்.....இருக்கலாம். அதி நவீன மருத்துவ முறை.....இதுவும் இருக்கலாம்......முதல் தரம் வாய்ந்த மருந்து.....ஆமாம்பா. ஆமாம். எல்லாம் இருக்கலாம்.

ஆனால், பாஷை புரியாமல், லேசாக கைகளைப் பிடித்து அழுத்தி தைரியம் கொடுக்க ஓர் சொந்தம் இல்லாமல்.,

நம் குழந்தைக்கு ஒன்று என்று சொல்லும்போது அது வெறும் தும்மலாக இருந்தால் கூட, தாய்க்கு அது  கடுமையான ஒன்றாகத்தான் தோன்றும். நம் நாடு போல் நினைத்த போது டாக்டரைப் பார்க்க முடியாது, எமெர்ஜென்ஸி என்றாலும் கூட க்யூ.

வெளி நாடுகளைப் பற்றி நல்லதைப் பேசலாம். கூடவே அவற்றின் கஷ்டங்களையும் அறிந்து கொள்ளலாம்.

ஆக, சொர்க்கமே என்றாலும்அது நம்மூரைப் போலாகுமா!

என்று சொல்லிக்கொள்கிறேன்.

-பயணம் இனிதே நிறைவுற்றது

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close