[X] Close

காலமெல்லாம் கண்ணதாசன் - 26 : பிறக்கும்போதும் அழுகின்றாய்...


kalamellam-kannadasan-26

  • ஆர்.சி.மதிராஜ்
  • Posted: 24 Aug, 2018 09:34 am
  • அ+ அ-

படம்    : கவலையில்லாத மனிதன்
இசை    : விஸ்வநாதன்-ராமமூர்த்தி
குரல்    : சந்திரபாபு
* * *

பிறக்கும்போதும் அழுகின்றாய் 
இறக்கும்போதும் அழுகின்றாய் 
ஒருநாளேனும் கவலை இல்லாமல் 
சிரிக்க மறந்தாய் மானிடனே 

இரவின் கண்ணீர் பனித்துளி என்பார் 
முகிலின் கண்ணீர் மழையெனச் சொல்வார் 
இயற்கை அழுதால் உலகம் செழிக்கும் 
மனிதன் அழுதால்  இயற்கை சிரிக்கும்  

அன்னையின் கையில் ஆடுவதின்பம் 
கன்னியின் கையில் சாய்வதும் இன்பம் 
தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம் 
தன்னலம் மறந்தால் பெரும் பேரின்பம்
* * *

திரை இசைக் கலைஞர்களைக்கொண்டு மேடைக்கச்சேரி செய்யும் முறையை அறிமுகப்படுத்தியவர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆகியோர்தான். ஒருமுறை மும்பையில் கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். டி.எம்.எஸ்., பி.சுசீலா, சீர்காழி கோவிந்தராஜன், எல்.ஆர். ஈஸ்வரி, சந்திரபாபு என்று பெரிய பாடகர்கள் களமிறங்கினர்.

அரங்கத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பெரும் திரளான ரசிகர்களுக்கு நடுவே நவுஷத் அலி, எஸ்.டி.பர்மன், ஆர்.டி.பர்மன், சங்கர் ஜெய்கிஷன் போன்ற ஆளுமைகளும் கச்சேரியை ரசிக்கக் காத்துக்கொண்டிருந்தனர். சந்திரபாபு மேடையேறி வழக்கமாகத் தான் பாடும் ஒன்றிரண்டு பாடல்களைப் பாடி முடித்தபின் `பிறக்கும்போதும் அழுகின்றாய்...' என்ற பாடலைப் பாடி முடிக்க, அரங்கம் கைத்தட்டலில் நிறைந்து, மீண்டும் அதே பாடலைப் பாடும்பாடி `ஒன்ஸ்மோர்' கேட்டது.

திரும்பவும் அந்தப் பாடலை அவர் பாட, திரும்பவும் `ஒன்ஸ்மோர்'. மீண்டும்  மீண்டும் பார்வையாளர்கள் அதே பாடலைத் திரும்பத் திரும்பப் பாடச் சொல்ல, சந்திரபாபுவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. எம்.எஸ்.வி.யிடம் `இப்படி திரும்பத் திரும்பப் பாடச் சொல்கிறார்களே... என்ன செய்வது?' என்று கேட்டார்.  `ஒருமுறையாவது ஒழுங்கா பாடியிருந்தா இப்படி ஒன்ஸ்மோர் கேட்கமாட்டாங்க இல்ல...' என்று கிண்டலாகச் சொன்னாராம்  எம்.எஸ்.விஸ்வநாதன். பிறகு அடுத்த பாடகர் மேடையில் தோன்றி வேறு பாடலைப் பாடி நிலைமையைச் சமாளித்தது தனிக் கதை.

இந்தப் பாடல் பதிவின் போதும், இதேபோன்ற ஒரு சம்பவம் அரங்கேறியது. சந்திரபாபு, தான் பாடும் பாடல்களை தன் மனம்போனபோக்கில் பாடுவது வழக்கம். ஆனால் இந்தப் பாடலை இப்படித்தான் பாடவேண்டும் என்று எம்.எஸ்.வி. சொல்ல, அவ்வாறு பாட முடியாமல் சந்திரபாபு தவிக்க... பலமுறை பாடியும் சரிவராமல், சந்திரபாபு கோபித்துக்கொண்டு சென்றுவிட்டார். பின்னர் அவரை சமாதானப்படுத்தி மீண்டும் பாடவைக்க, பல `டேக்கு'களுக்குப் பின்னர் ஒருவழியாக பாடல் பதிவானது.


``எனக்கு இரண்டு நண்பர்கள் உண்டு ஒன்று சூரியோதயம் பார்க்காத சந்திரபாபு, மற்றொன்று சூரிய அஸ்தமனம் பார்க்காத கண்ணதாசன்'' என்று வேடிக்கையாகக் குறிப்பிடுவார் எம்.எஸ்.விஸ்வநாதன். அந்த இருவரும் இணைந்து... அதாவது, கவியரசரின் தயாரிப்பில் சந்திரபாபு நடிக்க உருவான படம்தான் `கவலை இல்லாத மனிதன்'. ``இந்தப் படத்தை ஆரம்பித்தபிறகுதான் கவிஞர் கவலையுள்ள மனிதன் ஆனார்'' என்றும் சொல்வார் எம்.எஸ்.வி.

`ஜிகு ஜிகு ஜிகு ஜியாலங்கடி ஜிய்யாலோ', `ஹலோ மை டியர் ராமி...' என்று சந்திரபாபு பாடிய பாடல்கள், மற்ற பாடல்களில் இருந்து வேறுபட்டு, ஆங்கில வார்த்தைக் கலப்போடு, மேற்கத்திய பாணியில், துள்ளல் இசையில் வரும் என்று முத்திரை விழுந்திருந்த காலக்கட்டம் அது. `கவலை இல்லாத மனிதன்' படத்துக்காக, அந்த முத்திரைகள் ஏதுமின்றி தத்துவமாக ஒரு பாட்டைப் போடுங்கள் என்று எம்.எஸ்.வி.யிடம் கேட்டுக்கொண்டார் சந்திரபாபு. உனக்கு அப்படியெல்லாம் `செட்' ஆகாது என்று எம்.எஸ்.வி. மறுத்தார்.

இந்நிலையில் கவியரசரின் நெருங்கிய நண்பரான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இளம்வயதிலேயே மரணமடைய மனம் உடைந்துபோனார் கண்ணதாசன். அவருக்கு ஆறுதல் சொல்லும்விதமாக, ``பெரிய மேதையான பட்டுக்கோட்டை நல்ல புகழோடு இருக்கும்போதே மறைந்து போனார். அவரைப்போல நாமும் போகவேண்டிய நாள் வரும். நம்முடைய மறைவுக்குப் பின்னும் எல்லாரும் வருந்தி அழவேண்டும்...'' என்று சந்திரபாபு கூற, அப்போது பிறந்த அற்புதமான தத்துவப் பாடல்தான் `பிறக்கும்போதும் அழுகின்றாய்' என்ற இந்தப்பாடல். கவியரசரின் ஒவ்வொரு பாடலுக்குப் பின்னணியிலும் இதுபோன்ற பல சுவையான நிகழ்வுகள் இருக்கும் என்பதை அவருக்கு நெருங்கிய நண்பர்களும், அவருடன் பணிபுரிந்தவர்களும் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

தத்துவமெல்லாம் கேட்பதற்கும் படிப்பதற்கும் நன்றாக இருக்கும். ஆனால் வாழ்க்கையில் கடைப்பிடிக்க முடியாது என்போர் உண்டு. உண்மையில் தத்துவமும் வாழ்வும் வேறு வேறு அல்ல. நம்மால் முடியவில்லை என்பதற்காக தத்துவங்களைப் புறந்தள்ளிவிட முடியாது. தத்துவத்தைப் புறம் தள்ளுதல் வாழ்வைப் புறம் தள்ளுதலைப் போன்றது. கவியரசரின் பல்வேறு தத்துவப் பாடல்கள் இன்றளவும் நம்மைத் தேற்றிவருபவை என்பதை மறுக்க முடியாது.

அழுகையும் சிரிப்பும் இருவேறு உணர்வுகள். என்றாலும் எப்போதும் சிரித்துக்கொண்டே வாழ்க்கையை உற்சாகமாக வாழ்பவர்களைக் கண்டால் அவர்களின் உற்சாகம் நம்மையும் தொற்றிக்கொள்ளும்தானே? `அழுமூஞ்சி'யாய் இருப்பவர்களை யாருக்குத்தான் பிடிக்கும்?

புதிய உலகத்தில் கண் திறந்து பிறக்கும்போதும் அழுகின்றோம். மரணம் நெருங்கும் வேளையிலும், மரணத்தை எண்ணியோ, உறவுகளை பாதியில் விட்டுப் பிரியும் எண்ணத்திலோ அழுகின்றோம். இருக்கும் வேளையில் என்ன செய்கிறோம்? ஒரு நாளாவது கவலை இல்லாமல் சிரித்தபடி இந்த வாழ்வைக் கொண்டாடினோமா? என்று கேட்கிறார் கண்ணதாசன். அழுகையும் சிரிப்பும் தனிச்சொத்தல்ல. அழுபவன் அழுதுகொண்டே இருக்கவேண்டும் என்றோ, சிரிப்பவன் சிரித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்றோ கட்டாயம் இல்லைதானே?

வாழ்வில் செய்யும் தவறுகளைத் திருத்திக்கொண்டே வருவது, அழுகையிலிருந்து தப்பித்துக்கொள்ளும் ஒரு வழிமுறை. எப்போதும் புன்னகையோடு வலம் வருவதற்கான வழிமுறையும் அதுவே.

`இயற்கை அழுதால் உலகம் செழிக்கும், மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்' என்ற இரண்டு வரிகள் ஆயிரம் அர்த்தம் பொதிந்தவை. மழைதான் இயற்கையின் அழுகை. மழையால்தான் இந்த உலகம் செழிக்கிறது. மனிதன் செழிக்கிறான். எல்லாவற்றையும் மறந்து இயற்கைக்குப் புறம்பாக, நதிகளின் தடத்தை ஆக்கிரமிப்பு செய்வது, வனங்களை அழிப்பது, நீர்நிலைகளை இல்லாமல் செய்வது போன்ற மனிதனின் செயல்கள் கண்டு இயற்கை சிரிக்க ஆரம்பித்தால் என்னவாகும் என்பதைத்தான் சென்ற ஆண்டு சென்னையில் பெய்த மழையின்போதும், தற்போது கேரளம் சந்தித்து வரும் பேரிழப்பின் மூலமும் உணர்கிறோம்.

அன்னையின் கைகளில் ஆடுவதும், கன்னியின் கைகளில் சாய்வதும் இன்பம்தான். ஆனால் உண்மையான இன்பம் என்பது தன்னை அறிவது. பேரின்பம் என்பது சுயநலம் தொலைப்பது என்று பாடலை நிறைவு செய்கிறார்.

அவரது வரிகளின்படி, தொலைக்க வேண்டியதைத் தொலைப்போம். பேரின்பம் அடையும் வழியினைத் திறப்போம்.

- பயணிப்போம்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close