[X] Close

ஆண் நன்று பெண் இனிது 25 : சொந்த வீடு, உணர்வு, ஜப்தி!


aan-nandru-pen-inidhu-25-sakthi-jothi

  • சக்திஜோதி
  • Posted: 18 Aug, 2018 14:31 pm
  • அ+ அ-

நிலக்கோட்டையிலுள்ள வங்கி ஒன்றுக்குப் போயிருந்தேன். மேலாளருடன் ஒரு பெண் நீண்ட நேரமாகப் பேசிக்கொண்டிருந்தார். கண்ணாடித் தடுப்பின் ஊடே அந்தப் பெண்ணின் பக்கவாட்டுத் தோற்றம் மட்டுமே தெரிந்தது. அழுகிறாரா அல்லது கண் நோய் ஏதேனுமா என்று யூகிக்க முடியாத அளவுக்கு கைகுட்டையால் அடிக்கடி கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தார்.

அந்த வங்கியில் எங்கள் நிறுவனத்தின் கணக்கு உள்ளது. வங்கி மேலாளர் பணிமாறுதல் பெற்று புதிய மேலாளர் பொறுப்பேற்கும்போது நேரில் செல்ல முடியாத சூழல். அதன்பிறகு அவரை மரியாதை நிமித்தமாக சந்திக்கப் போயிருந்தேன். சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவர் என்று அவருடைய பேச்சிலிருந்து தெரிந்து கொண்டேன். கிராமப்புற பொருளாதாரம் பற்றியும் கிராமமக்கள் வாக்குக்குக் கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள் என்கிற நம்பிக்கையோடும் வந்ததாகச் சொன்னார்.

வங்கிப் பொறுப்பினை அவர் ஏற்றுகொண்ட நான்கைந்து மாதங்களில் நானும் ஆறேழு முறையாவது  போயிருப்பேன். நான் போகும்போதெல்லாம் வங்கியில் நிலுவையிலுள்ள கடன்கள் பற்றியே பேசிக் கொண்டிருப்பார். சிலசமயம் வராக்கடனை வசூல் செய்வதற்காக வெளியே சென்றிருப்பார். அது ஒரு தனியார் வங்கி. இந்த வங்கிக்கிளை இந்த ஊரில் தொடங்கி ஐந்து ஆண்டுகளுக்குள்தான் இருக்கும். கடன் வாங்குவதும், திருப்பிச் செலுத்துவதும் பற்றிய மக்களின் சிந்தனை மாறியிருப்பதாகச் சொல்லி ஒருமுறை வருத்தப்பட்டார்.

பேசிக்கொண்டிருந்த அந்தப்பெண்மணி வெளியே சென்றவுடன் மேலாளரைப் பார்க்கச்சென்றேன். வழக்கமாக சிரித்தமுகத்துடன் பேசக்கூடியவர் வருத்தம் தோய்ந்த குரலில், 'வீட்டுக்கடன் மேடம், ஆக்ஷன் எடுக்க வேண்டிய சூழல். அதான் கொஞ்சம் டைம் கொடுங்கன்னு கேக்குறாங்க. எங்கையில இல்லையேன்னு சொன்னதும்

சட்டுன்னு அழுதுட்டாங்க. எனக்கு என்னவோ போல ஆகிடுச்சு' என்று சொன்னார்.

அவருடைய அறையிலிருந்து அழுதபடியே வெளியே ஒரு பெண் போகும்போது நான் பார்த்ததுகூட அந்தப் பெண்மணிக்குக் கூச்சமாக இருந்திருக்கும் என்று தோன்றியது. 'ஏதாவது செய்யமுடியுமா சார் , அந்தம்மா முகத்தைப் பாவமா இருக்கு ..எந்த ஊர்க்காரங்க?' என்று கேட்டேன்.

'கொடைக்கானல் மலையடிவாரம் பக்கம் ஒரு சின்ன ஊர் மேடம். நானும் இந்த ஊருக்கு ஏப்ரல் மாசம்தான வந்தேன். ஊரும் ஆட்களும் அடையாளம் தெரியறதுக்குள்ள போதும்போதும்னு ஆகிப்போவுது. ஊர் பேரே பாதி மனசுல நிக்கமாட்டேங்குது. இந்தம்மா வீட்டத் தேடித் போய் பார்த்தப்ப நல்லா வசதியாத்தான இருக்காங்கன்னு தோணுச்சு. அந்தச் சின்ன ஊர்ல அவ்வளோ பெரிய வீடு.. ஆனா கதைய கேட்டதும் எனக்கே பாவமாப் போயிருச்சு' என்று சொன்னார்.

'என்னாச்சு சார் ? ' என்று கேட்டேன். 'இந்தம்மாவுக்கு மூணு பசங்க, ஒருத்தர் ஷிப்பிங்ல, இன்னொருத்தர் மும்பையில ஒரு பெரிய கம்பெனியில, இன்னொருத்தர் சென்னையிலன்னு எல்லாரும் நல்லா இருக்காங்க. இந்தம்மாவோட வீட்டுக்காரருக்கு கறிக்கடையும் ஈவினிங் பிரியாணி ஷாப்பும். நல்ல வருமானம் வந்தப்ப கிட்டத்தட்ட நாப்பது லட்சத்துக்கு இந்த வீட்டக் கட்டியிருக்காங்க. பசங்களையும் நல்ல நெலமைக்குக் கொண்டு வந்திருக்காங்க. பசங்க மூணு பேருக்கும் கல்யாணச் செலவுக்குன்னு அங்க இங்க கடன் வாங்கியிருக்காங்க. அதத் திருப்பிக் கொடுக்க நம்மகிட்ட லோன் வாங்கியிருக்காங்க. முதல் ரெண்டு வருஷம் சரியாத்தான் கட்டியிருக்காங்க. அதுக்கப்புறம் இவங்க வீட்டுக்காரருக்கு ஸுகர் கூடிப்போயி நடமாட்டமே இல்லாம ஆகிட்டார். பசங்களும் கைவிட்டுட்டாங்க. ரெண்டு வருஷமா பசங்களோட பேச்சு வார்த்த கூட இல்லையாம். இதான் எனக்கு ஆச்சர்யமா இருக்கு. அதெப்படி இவ்வளோ பெரிய வீட்டுக்காகவாவது பசங்க இவங்களைக் கவனிச்சுக்கக் கூடாதான்னு தோணுச்சு' என்று சொன்னார்.

’நீங்க அவங்க பசங்களுக்கு நோட்டிஸ் அனுப்பிப் பார்க்கலாமே சார் ?'என்று கேட்டேன். 'மூணு பேருமே எங்க இருக்காங்கன்னு சரியான அட்ரஸ் தெரியல. எனக்கு முன்னால இங்க இருந்த மேனேஜரே அதெல்லாம் ட்ரை பண்ணிப்பாத்துட்டார்போல. புள்ளைங்க எங்க இருக்காங்கன்னு பெத்தவங்களுக்குத் தெரியலங்குறதுதான் என்னோட பெரிய வருத்தமே ' என்று சொன்னார்.

'அடடா..என்ன சார் சொல்றீங்க, மூணு பேர்ல ஒருத்தர் கூடவா இவங்க கிட்ட பேசல?' என்று கேட்டேன். 'மூணுபேருமே போன் நம்பர் மாத்திட்டாங்க. அந்தக்காலத்துலமாதிரி லெட்டர் கரஸ்பாண்டன்ஸ் எதுவும் இப்ப இல்லங்குறதால பசங்களோட அட்ரஸ் பெத்தவுங்களுக்கே தெரியல. அவங்களா என்னைக்காவது பேசினாத்தான் உண்டு. இதத் தெரிஞ்ச பழைய மேனேஜர் அவரோட கைக்காசை மூணு மாசம் கட்டி உதவியிருக்கிறார். ஒரு மூணு மாசம் வராக்கடன் லிஸ்ட்ல சேக்காம இருந்திருக்கார். பிரைவேட் பேங்க் மேனேஜருக்கு இதுவே அதிகம். அவரு ஏதோ மனிதாபிமானத்துல செஞ்சிருக்கார். எங்களுக்கு இவ்வளவுதான் அதிகாரம் மேடம். அதுக்கப்புறம் ரெக்கவரி டீம், லீகல் டீம் ன்னு கேஸ் கைமாறிடும் . அப்புறம் நாங்க தலையிடவே முடியாது' என்றுசொன்னார்.

'அப்ப இவங்க வீட்டு பேர்ல ஆக்ஷன் எடுத்துடுவாங்களா?' என்று கேட்டேன். 'கிட்டத்தட்ட அதுக்கு நெருக்கமா  வந்துட்டாங்க. லீகல் நோட்டீஸ், பேப்பர் விளம்பரம்னு அடிப்படையான வேலையெல்லாம் முடிஞ்சிடுச்சு. இனி ஏலத்தேதிக்காக ஒருமுறை பேப்பர் விளம்பரம் வரும், அவ்வளோதான்' என்றார்.

'ஏலத்துக்கு இவங்க ஒத்துக்காட்டி என்ன பண்ணுவீங்க?'என்று கேட்டேன். 'இவங்க சம்மதமே தேவையில்ல மேடம். எங்க பேங்க் ஆளுங்க யாராவது கையெழுத்துப் போட்டாலே போதும். அடமானக் கடன் பத்திரத்திலேயே அதெல்லாம் தெளிவா இருக்கும். ஆனா யாரும் அதைப் படிக்கிறதுல்ல. அப்புறம் நாங்க கடன் கொடுக்கும்போது அவங்க சொத்தை பொஷசன் எடுத்துக்கணும்ன்னு நெனச்சுக் கொடுக்கிறதில்ல, கடன் வாங்குறவங்களும் குடியிருக்கிற வீட்ட அடமானம் கொடுக்கிறாங்க, திருப்பிக்கட்டக்கூடாதுங்குற எண்ணத்தோடவா இருப்பாங்க.  வில்ஃபுல் டீஃபால்டர்ஸ் யாருன்னு எங்களுக்கு நல்லாவே அடையாளம் தெரியும். பேங்க் வேலைக்கு வரும்போதே யாரையும் முழுசா நம்பக்கூடாது, அதேநேரம் யாரையும் நம்பாம இருக்கக்கூடாதுன்னு தானே ட்ரைனிங் கொடுக்குறாங்க' என்று சொன்னார்.

'அடப்போங்க சார். ஆயிரக்கணக்கான கோடி வாங்குன ஆட்களை வெளிநாட்டுக்கு பத்திரமா அனுப்பி வச்சிட்டு இந்தம்மா மாதிரி ஆட்கள்கிட்ட வேகத்தைக் காட்டுறது தானே இன்னைக்கு பேங்கர்களோட நெலைமை..'என்றேன்.

'நீங்க சொல்றது சரிதான் மேடம். அதெல்லாம் மல்டிபிள் பேங்கிங் அரேன்ஜ்மென்ட் சிஸ்டத்தில லோன் கொடுக்கிறது. அப்புறம் அதுக்குள்ள ஆட்சி அதிகாரம்னு பல விஷயம் இருக்கு. அதுமாதிரி பெரிய லோனெல்லாம் மேலேயே பேசி முடிஞ்சிடும். நாங்க கிராமப்புறத்துல இருக்கிற மக்களுக்கு பேப்பர்ஸ் கரெக்ட்டா இருந்தா அலைய விடாம உடனே லோன் கொடுதுருவோம். அதே போல ரெக்கவரியும் கடுமையாத்தான் இருக்கும் ' என்று சொன்னார்.

'அதென்ன மல்டிபிள் பேங்கிங் அரேன்ஜ்மென்ட் சிஸ்டம், நான் தெரிஞ்சுக்கலாமா ?' என்று கேட்டேன். 'எங்க பேங்கில் ஒருத்தர் பத்துக்கோடி லோன் அப்ளை செய்றார்னு வைச்சுக்குவோம். ஆனா எங்களுக்கு ஏழு கோடி அளவுக்குத்தான் கடன் கொடுக்கமுடியும்னா, பிஸினெஸ்ஸ விட்றக்கூடாதேன்னு ஏழு கோடி அளவுக்குக்கடனக் கொடுத்திட்டு இன்னொரு பேங்க்குக்கு ரெகமன்ட் செய்வோம். அவங்க அங்க போய் மூணு கோடிதான வாங்கணும். ஆனா வேற எதுனா இன்ஃபுளுயன்ஸ் பண்ணி கூடுதல் தொகைய அங்கயும் வாங்கிருவாங்க. எங்களப்போல ப்ரைவேட் பேங்க் எவ்வளோ பெரிய ஆளா இருந்தாலும் ஆக்ஷன் எடுத்துருவோம். ஆனா மூணுநாலு பேங்க் இந்தக்கடன்ல இன்வால்வ் ஆகும்போதுதான் இதுமாதிரியெல்லாம் சிக்கல் வரும் ' என்று சொன்னார்.

'உண்மையாவே அவங்க மேலயும் ஆக்ஷன் எடுக்கிறீங்களா சார்?'என்றேன். 'சந்தேகமென்ன.. நெறைய பேங்க் இன்வால்வ் ஆகுறதால ஒவ்வொரு பேங்க்கும் ஒவ்வொரு மாதிரி ரூல்ஸ் வச்சிருப்பாங்க, அதனால இதுமாதிரி ஆளுங்க கொஞ்ச நாளுக்கு தப்பிப்பாங்க.. ஆனா கட்டாயமா நடவடிக்க எடுக்கத்தான் செய்றோம். இப்ப இந்தம்மா வந்துட்டுப் போனாங்க பாருங்க, அவங்க ஊர்ல யாரும் அந்த வீட்ட ஏலத்துக்கு எடுக்க முன்வர மாட்டாங்க. ஆனா இதுக்கெல்லாம் நெறைய ஏஜன்ட் இருக்காங்க. இந்தம்மா வீடு நாப்பது லட்சம் போகும். ஆனா எங்க பேங்க்ல முப்பது லட்சத்துக்கு ஏலம் விடுவோம். அந்த வீட்டோட மதிப்புக்கு எங்க பேங்க்ல இருக்க கடன்ங்குறது ரொம்ப சின்ன தொகைதான். அதனால கடன்போக மீதித் தொகைய அந்தம்மாட்ட கொடுத்துருவோம். ஆனா இந்த பெரிய ஆளுகளோட ப்ராப்பர்டிய ஏலத்துக்கு எடுக்கவே ஆள் வரமாட்டாங்க. அப்படியே ஏஜன்ட் வந்தாலும் அதுவும் அவங்க ஆளாவே இருப்பாங்க . பேங்கப் பொருத்த வரைக்கும் எங்க பணம் எங்களுக்கு வந்தாப்போதும்னு விட்ருவோம்' என்று சொன்னார்.

'வருத்தமா இருக்கு சார் இந்த மாதிரியான ஏற்றத்தாழ்வான நடவடிக்கைகளக் கேக்கும்போது' என்று சொன்னேன். 'எனக்கும் இதெல்லாம் வருத்தமாத்தான் இருக்கு. நான் சென்னையிலேயே பிறந்து வளந்தவன். எங்க தாத்தா வீடு கும்பகோணத்துல இருக்கு. அங்க போறதுன்னா எனக்கு அவ்வளோ சந்தோஷமா இருக்கும். எங்க தாத்தா வீடொன்னும் அவ்ளோ பெரிசில்ல. தாத்தா வீட்டுக்குப் பக்கத்துல எல்லா வீடும் ரொம்பப்பெரிசா இருக்கும். ஒருநாள் அவர்கிட்ட, 'ஏன் தாத்தா இவ்ளோ சின்ன வீடா கட்டி வச்சிருக்கீங்க'ன்னு கேட்டேன், அதுக்கு அவர்,'பாருடா நம்ம தமிழ் மரபே சின்னதா அளவா வீடு கட்டிக்கிறதுதான். அதனாலதான் 'சிறுகக்கட்டிப் பெருக வாழ்' னு ஒரு பழமொழி நம்மட்ட இருக்கு. வடநாடுகளைப்போல அல்லது மேலை நாடுகளைப்போல தமிழ் மன்னர்களுக்கு அடையாளங்கறது பெரியபெரிய வீடு இல்ல. ராஜராஜ சோழனுக்குக் கூட கோயில்தான் அடையாளம். அவ்வளோ பெரிய ராஜா எங்க குடியிருந்தார்ன்னு யாராச்சும் சொல்ல முடியுமா. ஒருத்தர்

வாழ்ந்த அடையாளங்குறது வீடு மட்டும் இல்ல. அதைத்தாண்டி மத்தவங்களுக்காக வேற என்ன செஞ்சிருக்கோங்குறதுதான் முக்கியம்'னு சொன்னார். சின்னப்பையனா நான் இருந்தப்ப எங்க தாத்தா சொன்ன சொற்கள்தான் இப்பவும் எனக்கு எங்க தாத்தா வீடாவே இருக்கு. இப்பல்லாம் வீடுங்குறது உணர்வா இருந்தது போயி அந்தஸ்தா மாறிருச்சு. இந்த இருபது வருஷத்துக்குள்ள , அதுவும் ஐடீ ஃபீல்டும், பிரைவேட் பேங்கும் தாராளமா வளர்ந்த பிறகுதான் வீடுங்குற கான்செப்ட் மாறிப்போயிருச்சு. இது இப்ப கிராமத்துலயும் வளர்ந்துடுச்சுன்னு நெனைக்கிறப்ப ரொம்ப வருத்தமா இருக்கு' என்று சொன்னார்.

'இப்பவும்கூட வீடுங்குறது செங்கல், சிமென்ட்டால கட்டப்படுறதில்ல, உணர்வுகளால் ஆனதுன்னு சொல்றதுக்கு எங்கிட்ட நெறைய கதைகள் இருக்கு. இந்த அம்மாகூட அந்த சின்ன கிராமத்தில அத்தனை பெரிய வீட்டிற்கு ஒரு உணர்வுபூர்வமான கதையோடுதான் இருப்பாங்க. அவங்க அந்த வீட்டக் கட்டும்போது இருந்த உணர்வுகளோட அவங்க பசங்ககிட்ட சேர்க்க அவங்களுக்கு எப்படியாவது உதவுங்கள்' என்று அந்த மேலாளரிடம் சொல்லிவிட்டு வந்தேன்.

மூன்று மகன்களைப் பெற்ற அந்தப்பெண்மணி, வீட்டையும் மகன்களையும் தொலைத்துவிடக்கூடாது என்று இப்போது வரை என் மனம் பதறிக்கொண்டே இருக்கிறது.

- இன்னும் வருவார்கள்

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close