[X] Close

காலமெல்லாம் கண்ணதாசன் - 25 : உன்னை காணாத கண்ணும்...


kalamellam-kannadasan-25

இதயக்கமலம் கே.ஆர்.விஜயா, ரவிச்சந்திரன்

  • ஆர்.சி.மதிராஜ்
  • Posted: 17 Aug, 2018 10:38 am
  • அ+ அ-

படம்    : இதயக் கமலம் (1965)
இசை    : கே.வி.மகாதேவன்
குரல்    : பி.சுசீலா
* * *

உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல

இங்கு நீயொரு பாதி நானொரு பாதி
இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி
காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்
காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல

என் மேனியில் உன்னை பிள்ளையைப்போலே
நான் வாரியணைப்பேன் ஆசையினாலே
நீ தருவாயோ நான் தருவேனோ
யார் தந்த போதும் நீயும் நானும் வேறல்ல

ஒரு தெய்வம் இல்லாமல் கோவிலும் இல்லை
ஒரு கோவில் இல்லாமல் தீபமும் இல்லை
நீ எந்தன் கோவில் நான் அங்கு தீபம்
தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல
* * *

ஒரு நொடி என்றாலும் ஒரு யுகம் என்றாலும் பிரிவு என்பது பெரும் துயர்தான். சிறிதோ பெரிதோ, தற்காலிகமோ நிரந்தரமோ... பிரிவின் துயர் அனுபவிக்காத உயிர்கள் இருக்கமுடியாது. அன்பு கொண்ட இரண்டு மனங்கள் நிச்சயம் பிரிவை விரும்பாது.

அப்படி அன்பு கொண்ட மனதின் பிரிவுத்துயர் நிரம்பி வழியும் ஒரு பாடல்தான் 1965ல் இதயக்கமலம் திரைப்படத்தில் இடம்பெற்ற `உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல...' பாடல். 1964ல் மராத்தி மொழியில் வெளியான `பாத்லாக்' எனும் திரைப்படத்தைத் தழுவி வெளிவந்த படம் இதயக்கமலம்.

`இதயக் கமலம்' வெளியான அதே மாதம் `பாத்லாக்' படத்தைத் தழுவி தமிழில் வெளிவந்த திரைப்படம் ஜெயலலிதாவின் நடிப்பில் வெளியான `நீ'. சுனில்தத் - சாதனா நடிக்க இந்தியிலும் இதே படம் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

`த்ரில்லர்' வகையைச் சார்ந்த இந்த மூன்று படங்களுமே வெற்றிபெற்றாலும், `இதயக் கமலம்' மாபெரும் வெற்றிபெற்றது. இரண்டு வேடங்களில் வந்த கே.ஆர்.விஜயாவின் சிறந்த நடிப்புக்காக ஏராளமான பாராட்டுகளும் விருதுகளும் குவிந்தன. பி.சுசீலா அவர்களின் குரலில், தனித்துவமான கவியரசரின் பாடல்கள் படத்துக்கு பெரிய பலமாய் துணை நின்றன.

காதல் மனைவி (கே.ஆர்.விஜயா) நோய்வாய்ப்பட்டு இறந்துவிட, அவருக்கான சடங்குகளைச் செய்து முடித்து தகனம் செய்து வீட்டுக்குள் வந்து அமரும் கணவன் (ரவிச்சந்திரன்) முன் வந்து நின்று `நான்தான் உங்கள் மனைவி' என்று கே.ஆர்.விஜயா சொன்னால் எப்படி இருக்கும்? பார்ப்போரின் இதயத்துடிப்பை எகிற வைக்கும் திரைக்கதை. உண்மையில் என்ன நடந்தது என்று ரவிச்சந்திரன் துடிக்க கதையின் முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழத் தொடங்கும்.

கே.வி.மகாதேவின் இசையில் `தோள் கண்டேன் தோளே கண்டேன்', `நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ...போ..', `உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல' போன்ற பாடல்கள்  கேட்போர் இதயத்தைக் கொள்ளை கொண்டன.

கே.ஆர்.விஜயாவின் புகைப்படம் சுவரில் மாலையோடு மாட்டப்பட்டிருக்க, அருகே அவரையே கலக்கத்துடன் ரவிச்சந்திரன் பார்த்தக்கொண்டிருப்பார். அந்தக் காலத்து கறுப்பு வெள்ளையில் `கலர்' அடித்ததுபோன்ற வண்ணம் ஒரு த்ரில்லர் படத்துக்கான உணர்வைத் தருவதாக இருக்கும். அவர் வெறித்து வானம் பார்க்க அங்கிருந்து இறங்கி வந்து தன் அரூப உடலோடு கே.ஆர். விஜயா பாடும் பாடல்தான் `உன்னைக் காணாத கண்ணும்...' பாடல். திரைச்சீலை காற்றில் அசைய நிழலும் நிஜமும் கலந்த அந்தக் கால `கிராபிக்°' அப்போதைய ரசிகர்களை சுண்டி இழுத்தது.

கண்கள் என்றால் உன்னைப் பார்க்கவேண்டும். நெஞ்சம் என்றால் உன்னை நினைக்கவேண்டும். சொல்லும் செயலும் உன்னைச் சுற்றியே இருக்கவேண்டும். காதலில் திளைக்கும் உயிர் வேறு எப்படி எண்ணும். பிரிவின் பெருந்துயர் என்பது இனி அந்த முகத்தைப் பார்க்கவேமுடியாது எனும்படி முற்றிலுமாய்ப் பிரிந்து மரணம் தழுவுதல். அந்தச் சூழலில் நம்மை ஆற்றுப் படுத்தும் வரிகள் எப்படி இருக்கவேண்டும்? அந்த அன்பைச் சொல்லும் வரிகள் நம்மை அடித்துத் துவைக்கவேண்டாமா? அப்படியெல்லாம் நம்மை அல்லல்படுத்திய ஆற்றுப்படுத்திய, அன்பையும் பிரிவையும் சரிவிகிதத்தில் கலந்து தந்ததுதான் கவியரசரின் இந்தப் பாடல்.

நம் அன்புக்குரியோருடன் உடனிருக்க வாய்ப்பதில்லை. உடனிருக்க வாய்ப்பவர்களிடம் எல்லாம் அன்பாக இருப்பது சாத்தியமில்லை. அதனால்தான் அன்பானவர்கள் உடன் இருக்க வாய்ப்பது வரம் என்கின்றார்கள். அப்படியே அன்பு கொண்டோர் உடனிருந்தாலும், யாரும் யாரோடும் எப்போதும் உடனிருக்க வாய்ப்பில்லை என்பதுதானே இயற்கை?

பிரிவின் பின் நினைவுகள் நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாய் கொல்லுகின்றன. அந்த நினைவுகளை மட்டுமாவது வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாய் வாழவும் வைக்கின்றன. அன்பின் எழுதப்படாத விதி இதுதான்.

`ஈருடல் ஓருயிர்' என்று சொல்வார்கள். இந்தப் பாடலில் இரண்டு என்பதே இல்லை. இருவரும் சேர்ந்துதான் ஒன்று என்கிறார் கண்ணதாசன். உடலின் ஒரு பாதி நீ. மறு பாதி நான். இரண்டில் எந்தப் பாதி பிரிந்தாலும் வேதனை மீதி என்கிறார். ஒரு பிள்ளையைப்போல உன்னை என் மேனியில் இட்டு வாரி அணைப்பேன். அந்த அன்பையும் சுகத்தையும் நீ தந்தாலும் நான் தந்தாலும், பிரிவின் வலியை நீ தந்தாலும் நான் தந்தாலும், நீயும் நானும் வேறில்லை என்கிறார்.

தெய்வம் இருக்கும் இடம்தான் கோயில். கோயில் இருக்குமிடத்தில்தான் தீபம் ஏற்றப்படும். நீ எந்தன் கோயில். நான் அங்கு தீபம். கடவுளுக்குக் கோயில் முக்கியமா? தீப ஆராதனை முக்கியமா? தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல. பல்லவியிலும் மூன்று சரணத்திலும் இரண்டு உயிர்களின் சங்கமத்தை, அவர்களுள் ஊடாடும் காதலை அழகழகான பரிணாமங்களில் வெளிப்படுத்தும் வரிகள் இவை.

பிரிவைச் சொல்லிய ஆயிரம் படங்கள் வந்திருந்தாலும், பிரிவைப் பாடிய லட்சம் பாடல்கள் வந்திருந்தாலும்... பிரிவின் வலியில் இருக்கும்போது இந்தப் பாடலைக் கேளுங்கள். தேம்பும் சுசீலா அவர்களின் குரல் நம்மைத் தேற்றும்.

- பயணிப்போம்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close