[X] Close

தொங்கட்டான் 24 : கணபதி செட்டியார் மளிகைக் கடையும் சீதாராம விலாஸ் மைசூர் போண்டாவும்


thongattan-24-mana-baskaran

  • மானா பாஸ்கரன்
  • Posted: 13 Aug, 2018 14:19 pm
  • அ+ அ-

பக்கிரி  பட்டறை சாமான் வாங்க, வீட்டுக்கு வேணுங்கிறதை வாங்க வாரத்துக்கு ஒருதடவையாவது திருவாரூர் போவது வழக்கம். அப்படி அவன் திருவாரூர் போகும்போதெல்லாம், பாப்பாத்தி அவனருக்கில் வந்து ‘’ஏங்க திருவாளூருக்குத்தான போறீங்க. அப்படியே

நம்ம பாலுவ  பாத்துட்டு வந்துடுங்க…’’என்பாள் தாய்மையின்  பிரதிபலிப்பு பொங்க.

அவனும் தலையைத் தலையை  ஆட்டிக்கொண்டு போவான்.

திருவாரூர் போய் இறங்கி, தனக்கு வேண்டிய பட்டறை சாமான்களை வாங்கிக்கொண்டான் பக்கிரி. அப்போதுதான் ஞாபகம் வந்தது  விடி விளக்கு மேல்  கிளாஸ் வாங்கியாறணும்னு பாப்பாத்தி சொன்னது.  இந்தியன் ஸ்டோர் போய் அதை வாங்கிக்கொண்டு,  கடைத்தெருவில் இருந்த  கணபதி செட்டியார் மளிகை கடைக்குப் போய் பாப்பாத்தி

 சொன்ன வீட்டு சாமான்களில் முக்கியமானதை வாங்கிக்கொண்ட பிறகுதான் பாலுச்சாமியைப் பார்க்கப் போவான்.

முருகவேல் பத்தர் கடைக்கு போய் அவரிடம் கொஞ்ச நேரம் போசிக்கொண்டு இருந்துவிட்டு கடைசியாகக் கிளம்பும்போது, ‘’பாலுப் பயல செத்த என்கூட அனுப்பி வையுங்க…’’ என்கிற கோரிக்கையை வைப்பான் பக்கிரி.

’’அழைச்சிட்டுப் போங்க…’’ என்று விடை சொன்ன கையோடு பாலுச்சாமியைப் பார்த்து, ‘’ஏய் உங்கப்பா கூப்பிடுறாரு போயிட்டு சீக்கிரம் வா…’’ என்று அவனுக்கும் அனுமதியளிப்பார் முருகவேல்.

அப்பனும்,  புள்ளயும் எல்லையம்மன் கோயில் சந்நிதியைத் தாண்டி… ரங்கூன் ஸ்டோர்ஸைத் தாண்டி… இந்தியா சில்க் ஹவுஸ் வழியாக  சீதாராம விலாஸ் ஹோட்டலுக்குப் போவார்கள்.

சாயங்காலங்களில் சீதாராம விலாஸ் ஹோட்டலில்  போடும் மைசூர் போண்டா பிரமாதமாக இருக்கும்.  அந்த போண்டாவுக்கு நாக்கை  தொங்கப்போட்டுக்கொண்டு எங்கிருந்தெல்லாமோ கஸ்டமர்கள் வந்துவிடுவார்கள். ஆளுக்கொரு  மைசூர் போண்டா ஆர்டர் செய்துவிட்டு அப்பனும் புள்ளயும் உட்கார்ந்திருந்தார்கள்.

அப்பனிடம் சகஜமாக பேசியதில்லை பாலுச்சாமி. அப்போதெல்லாம் அப்படித்தான். அந்தத் தலைமுறையில் பாசம் என்பது மனசில்தான் இருக்கும். அப்பன்களும் பொங்கி வழிந்து தன்னுடைய பாசத்தை பெருமழையாக பொழிந்துவிட மாட்டார்கள். பிள்ளைகள் அதுவும் ஆம்பள பசங்க அப்பன்காரனிடம் அவ்வளவாக நெருங்கிவிட மாட்டார்கள். பத்தடி தள்ளித்தான் எல்லாமும். எல்லாமும் என்றால்?  எல்லாமும்தான்.

ஹோட்டலில் பெரிதாக மாட்டியிருந்த பழனியப்பா கிழிதாள் நாள்காட்டி

யையே குறுகுறுவென்று பார்த்துக்கொண்ருந்தான் பாலுச்சாமி.

சுடச் சுட மைசூர் போண்டா வந்தது.  தொட்டுக்கொள்ள தேங்காய் சட்டினி. கேட்கவா வேண்டும். விள்ளல் விள்ளலாக உள்ளிறங்கியது. அதுவும் மைசூர் போண்டாவை பிடும்போது விரலில் தென்படும் தேங்காய் பல்லை எடுத்து தனியாக  மெல்லும்போது… வாய்

எச்சில்  வீடு கட்டும். போண்டாவை சாப்பிட்டு முடித்ததும்…  ஒரே ஒரு காப்பி வாங்கி ஒரு ஆத்து ஆத்தி பித்தளை டமராவில்  இருந்த காபியை தான் எடுத்துக்கொண்டு, டம்ளரில் இருந்ததை மகனிடம்

நீட்டினான் பக்கிரி.  அதை வாங்கிக்கொண்ட பாலுச்சாமி அண்ணாந்து  வாயில்  தூக்கி ஊற்றிக் கொண்டான்.

அதைப் பார்த்த பக்கிரி ‘’சும்மா வாய் வெச்சி ஊட்டி குடிப்பா…’’ என்றான். அப்பா அப்படிச் சொன்னது பாலுச்சாமிக்குப்  பிடித்திருந்தது. ஏனோ அவனுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.  

அப்போதெல்லாம் பலருக்கு வாய் வைத்து ஊட்டி குடிக்கும் பழக்கம் இல்லை. எல்லோருமே டம்ளர் வாயில் படாமல் காபியை  தூக்கித்தான் குடிப்பார்கள். அதுதான் நாகரிகம் என்றே நினைத்தார்கள். பாத்திரத்தில் எச்சில் பட்டுவிடும் என்கிற நினைப்புதான் இதற்குக் காரணம்.

பாலுச்சாமி  காபி டம்ளாரில் உதடு வைத்து நன்றாக ஊட்டி குடித்தான்.

ரெண்டு பேரும் வெளியே வந்தனர். கையோடு பாலுச்சாமியை அழைத்துக்கொண்டு போய், முருகவேல் பத்தரிடம் ஒப்படைத்து விட்டு கிளம்பத் தயாரானான் பக்கிரி.

அப்போது  பக்கிரியிடம் முருகவேல், ‘’ சொந்தக்காரருதான் எனக்கு நீங்க. நான் இப்புடிச் சொல்றேன்னு கோச்சிக்கக்கூடாது. நீங்க வரும்போதெல்லாம் பாலுவ அழைச்சிட்டுப் போயி டிபன், காப்பி வாங்கிக் குடுக்கறத விட்டுடுங்க. ஏன்னா…  என்கிட்டே பாலு, செவராமன் மாதிரி  நாலஞ்சுப் பேரு வேலை கத்துக்கிறானுங்க. அவனுங்க  மனசு ஒரு மாதிரியாயிடும். அதான்.’’ என்றார்.

முருகவேல் பத்தர் சொல்வதில் இருக்கிற நியாயம்… பக்கிரிக்குள்   உண்மையை உணர்த்தியது.

‘’சரி… நீங்க சொல்றா மாதிரியே பார்த்துக்கிறேன்…’’ என்று சொல்லி அங்கிருந்து புறப்பட்டான் பக்கிரி.

*** ** ** **

ராத்திரி மணி எட்டரை இருக்கும். பொறக்குடி பஸ்ஸை விட்டு இறங்கி கோகிலாவும் முருகேசனும்  வந்தார்கள்.  வீட்டிலேயே பெரியவன் காசியையும்,  குற்றாலிங்கத்தையும் விட்டுவிட்டு தம்பதி சமேதராய் ரெண்டு பேரும் வந்தார்கள்.

அண்ணன்காரன் வூட்டுக்குப் போறோம் கையை வீசிக்கொண்டா போவது என்று, ஓலப்பக்கோடா செய்து ஒரு  பித்தளை தூக்கு வாளியில் போட்டு எடுத்துக்கொண்டு வந்தாள். முருகேசன் கையில் பிடித்திருந்த  குடவாசல் சீதளா ஜவுளிக் கடை மஞ்சப் பையில் ஒரு சீப்பு பச்சநாடான் பழம் இருந்தது.

வீடே வாசலுக்கு வந்து ரெண்டு பேரையும் வரவேற்றது. கோகிலாவுக்கு வாயெல்லாம் பல்.

ஒரே இளிப்புதான். அண்ணன், அண்ணி, அம்மா எல்லாரையும் பார்த்த பெருமிதம், கூடவே பொறந்த வீட்டை மிதித்த பவுசு எல்லாம் மனசில் சந்தோசக் கூடு கட்டியது. கொல்லைப் பக்கத்தில் இருந்து ஓடி வந்த அம்புஜவல்லி… ‘’ஏ கோகிலம்…’’ எனக்  கட்டிக்கொண்டாள்.

கூடவே  சேப்பரசனும் சின்னம்மாக்காரியை சுற்றி வளைத்து படர்ந்தான்.

திடீரென்று ரெண்டு பேரு  விருந்தாளியாக வந்துவிட்ட தருணத்தில் சாப்பாடு என்னசெய்வதென்று தெரியாமல் கையைப் பிசைந்து நிற்கவில்லை பாப்பாத்தி.

‘’அத்தாச்சி செத்த இங்க வாங்களேன்…’’ என்று அடுப்பங்கரைக்குள் அம்புஜத்தை கூப்பிட்டாள். வந்தவளிடம்  ஒரு கை நிறைய சின்ன வெங்காயத்தை அள்ளிக் கொடுத்து,  ’’உரிச்சு அரியுங்க…’’ என்று சொன்னாள். அவளும் அருவாமனையை எடுத்து  வைத்துக் கொண்டு

உட்கார்ந்து வெங்காயம் அரிய ஆரம்பித்தாள்.

ஒரு பெரிய பித்தளை தேக்குசாவில் கொட்டி வைத்திருந்த ரவாவை எடுத்து, முறத்தில் கொட்டி, புழு கிழு இருக்கா என்று பார்த்தாள் அம்புஜம். சுத்தமாக இருந்தது.

 ரவாவை வறுத்து, கொதிக்கிற தண்ணியில் போட்டுக் கிளறி… அம்புஜம் அரிந்து தந்த வெங்காயத்துடன் கூட்டணி சேர்ந்து ரவா உப்புமா அரை மணி நேரத்தில் கமகமத்தது.

அப்போதெல்லாம் யாராவது  சொல்லிக்கக் கில்லிக்காம திடீரென்று வீட்டுக்கு வந்துவிட்டால்… அவர்களுடைய போஜனத்துக்கு கை கொடுப்பது ரவா உப்புமாதான். நடுத்தர ஜீவன்களின் எளிய பலகாரம். உபத்திரவம்  இல்லாதது. செலவும் கையைக் கடிக்காது.

சாப்பாட்டுக் கடை முடிந்து எல்லாரும் முற்றத்தில் வந்து உட்கார்ந்து கொண்டார்கள்.

பக்கிரியும் முருகேசனும் மட்டும் தாழ்வாரத்தில் உட்கார்ந்துகொண்டு, காலை முற்றத்தில் தொங்கப் போட்டிருந்தார்கள். சுற்றும் முற்றும் பார்வையை ஓட்டிய முருகேசனுக்கு கூடத்தில் ஏதோ முன்பு இருந்தது

இப்போது இல்லாதது போலத் தோன்றியது. பட்டென்று நினைவில் மின்னல் வெட்ட ‘’மாப்ள  கூடத்துல இருந்த ஊஞ்சலைக் காணோம்…?”’ என்று கேட்டான்.

‘’அதுவா, வயல்ல தண்ணீ ஏறல.  பெரிய வாய்க்கால்ல தடுப்புப் போட்டு தண்ணீ ஏத்த வேண்டியதாப் போயிட்டு.  ஊஞ்சப் பலகையை கழட்டிட்டுப் போயி தடுப்புப் போட்டிருக்கோம்..’’ என்று விளக்கம் கொடுத்தான் பக்கிரி.

‘அது சரி மாப்புள. எங்க தலைவர போயி திருவாளூர்லநேர்ல பார்த்து மனுல்லாம் கொடுத்தீங்களாம்ல…’’ என்று முருகேசன் சொன்னபோது பக்கிரிக்கு  உற்சாகம் பீரிட்டு வந்தது.

‘அய்யைய்யோ… சேட்டு மூட்ட செவ்வாக்கெழமையெல்லாம் ஒண்ணா சேர்ந்துட்டு.

இன்னிக்கு எல்லாரும் தூங்குனாப்புலதான்..’’ என்று சொல்லிவிட்டு கெக்களித்தாள் கோகிலா.

‘’ஆமா . மூனா கானா, அண்ணாதொரன்னு ரெண்டும் பேசிட்டு கெடக்கட்டும்… அத்தாச்சி நாம சந்தூடுக்குப் போயி பேசிட்டிருப்போம் என்று கோகிலாவை கூப்பிட்டாள் பாப்பாத்தி. கூடவே அம்புஜவல்லியும், சேப்பரசனும் சென்றார்கள்.

அங்கேயும் இங்கேயுமாக பேச்சு கச்சேரி களைகட்டியது.

- தொங்கட்டான் அசையும்    

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close