[X] Close

'24' சலனங்களின் எண்: பகுதி 19 - ஸ்ரீதர் – ராம் – ராமராஜ்


24-cable-sankar-series-salanangalin-en

  • கேபிள் சங்கர்
  • Posted: 11 Aug, 2018 11:15 am
  • அ+ அ-

”நீதான் கண்டிப்பா பண்ணுறேன்னு என்னால ஸ்ட்ராங்க சொல்ல முடியலை. பட். இப்ப இருக்குற நிலைமைய பார்த்தா அதுக்கான சான்ஸ் அதிகம்.

இப்போதைக்கு நீ ஸ்டாண்ட் பை தான். பட்  நீ தயாரா இருக்கியாங்கிறது முக்கியம். நாளபின்ன நான் ஷூட் கூப்பிடும் போது, ராமராஜ் சார் படம் இருக்குன்னு சொல்லக் கூடாது.

அவரு படத்தை விட, என்னுடயது பெருசு. பட்ஜெட், கேன்வாஸ் எல்லாத்துலேயும். ஸோ நீ தான் முடிவு பண்ணி சொல்லணும்” என்ற ஸ்ரீதரின் முகத்தை ஆச்சர்யமும், குழப்பமுமாகப் பார்த்தான் ராம்.

ஸ்ரீதர் அழைத்து தனக்கு அவன் படத்தில் வாய்ப்பு இருக்கிறது என்று சொல்வது அவன் நெடுநாளாய் எதிர்பார்த்தது. ஆனால் அதே நேரத்தில் ராமராஜுக்கு என்ன பதில் சொல்வது?. யாருமே தன்னை ஒரு பொருட்டாய் பார்க்காத நேரத்தில் “நீ தாண்டா என் பட ஹீரோ” என்று நம்பிக்கையளித்தவர். சொன்ன சொல்லை காப்பாற்றியவர்.

ஸ்ரீதர் அப்படியல்ல.. வியாபார ரீதியான ஹீரோ கிடைக்கவில்லை என்றால் தான் நீ என்கிறான். நியாயமாய் பார்த்தால் தான் ஒரு சப்ஸ்டிடியூட் தான். ஸ்ரீதரின் படத்தில் நடிப்பதால் கிடைக்கும் ரீச் ராமராஜ் படம் மூலம் கிடைக்குமா? என்ற சந்தேகம் அவனுக்கு எப்போதுமே உண்டு.

“ஏற்கனவே ஒத்துக்கிட்டிருக்கேன் ஸ்ரீதர். அவரும் ஸ்க்ரிப்ட் எல்லாம் முடிச்சிட்டாரு. ஷூட்டிங் எப்ப வேணா ஆர்மபிக்கலாம்ங்கிற நிலையில இப்ப போய் சொன்னா தப்பாகிடாது? வேணும்னா டேட்ஸ் க்ளாஷ் ஆகாம பாத்துக்கறேன்” என்ற ராமை பார்த்து அடக்க மாட்டாமல் சிரித்தான் ஸ்ரீதர்.

“வாழ்வுதாண்டா உனக்கு. படமே ஆரம்பிக்கலை டேட்ஸ் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேங்குறே? ஒண்ணு என் படத்துல பிரபலமான ஹீரோ இருக்கணும் இல்லாட்டி என்னால அறிமுகப்படுத்தப்பட்ட ஹீரோவா இருக்கணும். அப்பத்தான் நான் ஜெயிக்கும் போது கெத்தா இருக்கும்.

நீ டேட்டு தரலைன்னா என்ன? மூஞ்சு முகம் தெரியாத எவனையும் வச்சி படமெடுத்து ஹிட் கொடுக்க முடியும்னு காட்ட வேணாம்?” என்று சிரித்தான்.

ஸ்ரீதர் சிரித்ததை அவமானமாய் உணர்ந்தான் ராம். ஏதும் பதில் சொல்லாமல் அமைதியாய் அவனையே பார்த்தான். அவனின் அமைதியின் அழுத்தன் சட்டென உணர்ந்து ஸ்ரீதர் சிரிப்பை கட் செய்துவிட்டு, “ஓகே.. நீ தான் டிசைட் பண்ணனும். யோசிச்சுட்டு சொல்லு” என்றான்.

“இதுல யோசிக்கிறதுக்கு என்ன இருக்கு ஸ்ரீதர். நல்ல ப்ராஜெக்ட் இல்லேங்குல.. ஆனா கன்பார்மேஷன் இல்லாம எப்படி நான் எனக்கு கிடைச்ச வாய்ப்பை நழுவ விட முடியும்?”

ஸ்ரீதர் தோள் குலுக்கி ‘உன் இஷ்டம்’ என்பது போலப் பார்த்தான். அவனின் பார்வை அர்த்தம் புரிந்து சற்றே யோசித்த ராம் “சரி.. ஒரு ஹெல்ப் பண்ணுங்க. நான் ராமராஜ் சாரை பேசி சரிப் பண்ணிக்கிறேன்.  அனௌன்ஸ்மண்ட் மட்டும் வேண்டாம்.

ஏன்னா முத படத்திலேயே நான் இருக்கேன் -இல்லேங்குற விளையாட்டு வேணாம்னு தோணுது” என்றான்.

“ஓகே.. அதுவும் சரிதான். பட் டூ பி ப்ராங்க் வித் ஹெல்ட்தான் நியாபகம் வச்சிக்கோ” என்ற ஸ்ரீதரின் தோளை காசி அழுத்தினான். ராம் வெளியேறிய பின் “ஏன் திரும்பத் திரும்ப அவனை ஹர்ட் பண்றாப்புல பேசுறே?” என்று கேட்டான் காசி

“ஆரம்பத்துலேயே நம்ம கண்ட்ரோல்ல வைக்கணும் அதுக்காகத்தான்” என்ற ஸ்ரீதரை அதிர்ச்சியாய் பார்த்தான் காசி.

**************************

திருப்பூர் மணியின் கண்கள் கலங்கியிருந்தது. ராமராஜின் கதையை முழுவதுமாய் படித்து முடித்திருந்தார்.

சினிமா தான் அடுத்த கட்டம் என்று முடிவான பின், ஸ்கிரிப்டுடன் வருகிறவர்களுக்குத்தான் முன்னுரிமை என்றானவுடன் ஏகப்பட்ட ஸ்கிரிப்டுகளை படித்திருக்கிறார்.

சிலது ஸ்கிரிப்ட் என்கிற வடிவமே இல்லாமல் கேரக்டர்களின் மனவெழுச்சியை எல்லாம் பக்கம் பக்கமாய் எழுதியிருந்ததை படித்திருக்கிறார். ஆனால் அவைகள் எல்லாம் எப்படி காட்சிப்படுத்தப் போகிறார்கள் என்ற விளக்கம் ஏதுமிருக்காது.

சரி. ஒரு வேளை இயக்குனர் அதை மனதில் வடிவமைத்திருப்பார் என்று அழைத்துக் கூப்பிட்டால் “திருதிரு’வென முழிப்பார்கள். பெரும்பாலும் கேரக்டர்களின் சோக மூகத்தை பல ஆங்கிள்களில் ஷாட்களாய் பிரித்து சொல்வார்கள்.

இன்னும் சிலரின் ஸ்கிரிப்ட் அட்டகாப்பியாயிருக்கும். சென்சார் ஸ்கிரிப்ட் போல ஷாட் பை ஷாட்டாய் பார்த்த படத்திலிருந்து கொஞ்சம் கூட மாற்றாமல் எழுதப்பட்டிருக்கும்.

தொடர்ந்து படம் பார்க்கும் வழக்கமிருக்கிறவனுக்கு இந்த ஸ்கிரிப்டைப் படித்தவுடன் புரிந்து விடும், உட்டாலக்கடி என.

ராமராஜின் ஸ்கிரிப்ட் அப்படி அல்ல. படிக்கும் போது காட்சி கண் முன் ஓடியது. ஒரு காட்சியின் ஆரம்பம், முடிவு, அடுத்த காட்சியின் ஆரம்பம் என ஒரு காட்சி கூட இடைச் சொருகலாய் இல்லாமல் பர்பெக்டாய் எல்லா எமோஷன்களை மிக அழகாய் வசனங்களாகவும், ரியாக்‌ஷன்களாகவும் தெளிவாக எழுதப்பட்டிருந்தது. 

என்ன மாதிரியான உணர்வுகளை அக்கேரக்டர்கள் காட்டுகிறது என்பதை மிகத் தெளிவாய் குறிப்பிட்டிருந்தார். மாஸ்டர், க்ளோஸ், வொயிட் என சின்னச் சின்ன இண்டிகேஷன்களாய் ஸ்கிரிப்டிலேயே ஷாட் பிரித்திருந்தது அவரது அனுபவத்தை காட்டியது.

“ரொம்ப சந்தோஷம் சார். ஸ்கிரிப்ட் அட்டகாசம். நிச்சயம் எனக்கும் உங்களுக்கும் ஒரு எக்ஸ்ட்ராடினரி ஆரம்பமா இருக்கும்” என்று கைகுலுக்கி ராமராஜை பாராட்டினார்.

“பட்ஜெட்  மேலப் போகாது இல்லை. முன்னபின்ன ஆகும்னு சொன்னீங்கன்னா.. ஏற்பாடு பண்ணனும். ரிலீஸுக்குன்னு தனியாய் நீங்க சொன்னா மாதிரி எடுத்து வச்சிட்டேன்” என்று திருப்பூர் மணி சொன்னதை பார்த்து ராமராஜுக்கு சந்தோஷமாய் இருந்தது. இத்தனை நாள் கழித்து ஒரு படம் கிடைத்திருக்கிறது. அதுவும் இயக்குனரை மதிக்கும் தயாரிப்பாளரோடு படம் செய்வது பாக்கியம்.

“எல்லாம் சரியா போச்சுன்னா.. நான் சொன்ன பட்ஜெட்டுல படம் முடிச்சிருவேன். எதுக்கும் ஒரு 20 பர்செண்ட் பணம் மட்டும் ரெடி பண்ணிக்கங்க. ரிலீஸுக்குள்ள நமக்கு வியாபாரமே நடந்துரும். கடவுள் இருக்கான் எல்லாம் நல்லபடியா நடக்கும். அப்புறம் நாம டெக்னீஷியன்களுக்கு ஆர்டிஸ்டுக்கு எல்லாம் அட்வான்ஸ் கொடுத்துட்டா அடுத்த கட்ட வேலைய பார்க்கலாம்” என்றார்.

‘தாராளமா.. நாளைக்கே நல்ல நாளா இருக்கு எல்லாரையும் கூப்பிட்டிருங்க.. பேசி அக்ரிமெண்ட் போட்டு அட்வான்ஸ் கொடுத்துருவோம்” என்று சொல்லிவிட்டு, தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து கணக்குப் பார்க்காமல் பணத்தை எடுத்து, ராமராஜை அணைத்து அவர் பாக்கெட்டில் வைத்தார்.

ராமராஜ் “எதுக்கு சார். அதான் எனக்கு அட்வான்ஸ் கொடுத்துட்டீங்களே?”  என்று சொல்ல, “இருக்கட்டும் ராஜு. ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல ஸ்கிரிப்ட் படிச்சிருக்கேன் அதுக்காக” என்றார் மணி.

**************************

ராமராஜின் ஃபோன்காலை பார்த்ததும் கெதக்கென இருந்தது ராமுக்கு.

சற்றே யோசித்து தான் போனை எடுத்தான். “சொல்லுங்க சார்.. “

“தம்பி.. நாளைக்கு காலையில வந்திரு. பத்து பண்ணெண்டு ராவுகாலம். அதனால ஒம்போதுக்கே வந்துரு. மொத அட்வான்ஸ் உனக்குத்தான். ஹீரோல்ல” என்றார் ராமராஜ். அவரின் குரலில் ஏகப்பட்ட உற்சாகம் இருந்தது.

ராமுக்கு எப்படி ரியாக்ட் செய்வது என்று புரியாமல் அமைதியாய் இருந்தான்.

“என்ன தம்பி.. சந்தோஷமா கத்துவேன்னு பார்த்தா அமைதியா இருக்கே?” என்று கேட்ட ராமராஜுக்கு என்ன பதில் சொல்வது என்றே ராமுக்கு புரியவில்லை.

ஸ்ரீதரின் ப்ராஜெக்ட் மட்டும் இல்லையென்றால் அவனின் ரியாக்‌ஷன் அதுவாகத்தான் இருந்திருக்கும். ஆனால் இப்போது சந்தோஷப்படவும் முடியாமல் துக்கப்படவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.

“இல்லேண்ணே எப்படி ரியாக்ட் பண்றதுன்னு தெரியலை. ரொம்ப சந்தோஷம்ணே.. வந்துர்றேன்”

“சரி அப்படியே நம்ம நித்யா பொண்ணை இன்னைக்கே வரச்சொல்லு. ஸ்கிரீன் டெஸ்ட் எடுக்கணும்னு நம்ம சின்னப்பய அஸிஸ்டெண்ட் ஒத்தக்கால்ல நிக்குறான். எனக்கு அவ சரிப்பட்டு வருவானு தோணுது. நானும் அவ கிட்ட பேசிடறேன். நீ சொன்னா இன்னும் கொஞ்சம் இண்ட்ரஸ்ட் காட்டுவா..

எனக்கு ஆன் ஸ்க்ரீன் கெமிஸ்ட்ரிக்கு பிரச்சனை வராதுன்னு நினைக்கிறேன்” என்று பெரிதாய் சிரித்தபடி போனை கட் செய்தார்.

ஸ்ரீதருக்கும், ராமராஜுக்கும் இடையே தான் நசுங்கிக் கொண்டிருப்பதாய் உணர்ந்தான் ராம்.

 

- தொடரும்

முந்தைய அத்தியாயங்களைப் படிக்க

பகுதி 18 - https://bit.ly/2MkvvFd

பகுதி 17 - https://bit.ly/2OIQjVo

பகுதி 16 - https://bit.ly/2mIJWof

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close