[X] Close

காலமெல்லாம் கண்ணதாசன் - 22 ஆண்டவனின் தோட்டத்திலே ...


kalamellam-kannadasan-22

அரங்கேற்றம் பிரமிளா

  • ஆர்.சி.மதிராஜ்
  • Posted: 27 Jul, 2018 11:10 am
  • அ+ அ-

படம்    : அரங்கேற்றம்
இசை    : வி.குமார்
குரல்    : பி.சுசீலா
* * *

ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது
ஆகாயம் பூமி எங்கும் இளமை சிரிக்குது
வேண்டு மட்டும் குலுங்கிக் குலுங்கி நானும் சிரிப்பேன்
அந்த விதியைக்கூட சிரிப்பினாலே விரட்டியடிப்பேன்

குழந்தையிலே சிரிச்சதுதான் இந்த சிரிப்பு
அதை குமரிப்பொண்ணு சிரிக்கும்போது என்ன வெறுப்பு
பொறந்ததுக்கு பரிசு இந்த சிரிப்பு அல்லவா
இது பொண்ணுக்காக இறைவன் தந்த சலுகையல்லவா

லலலா லலலா லலலா லலலா
பதமா இதமா சிரிச்சா சுகமா...

குளம் குளமா தவமிருந்து கொக்கு சிரிக்குது
அது கொத்தப் போவதை மறந்து மீனும் சிரிக்குது
குளத்தை விட்டுக் கரையில் ஏறி நண்டு சிரிக்குது
அதைக் கொண்டு போயி உண்டு பார்த்த நரியும் சிரிக்குது.

லலலா லலலா லலலா லலலா
பதமா இதமா சிரிச்சா சுகமா...
* * *


கே.பாலசந்தர் இயக்கத்தில் வி.குமார் இசையில் 1973-ஆம் ஆண்டு வெளிவந்து, தமிழகத்தில் பெரிய அனல் பறக்கும் விவாதத்தை உண்டாக்கிய படம்  `அரங்கேற்றம்'.

திரைப்படம் வெளியானதும் ஒரு கூட்டம் வெகுவாகப் புகழ, ஒரு கூட்டம் கடுமையாக விமரிசனம் செய்தது. காரணம், வறுமையாலும் சூழலாலும் ஒரு (பிராமண குடும்ப) பெண் வழிதவறிச் செல்வதை மையப்படுத்திய கதை. வழி தவறும் பெண்ணாக பிரமிளாவும், அவருக்கு வாழ்வு தர முன்வரும் இளைஞராக சிவகுமாரும் நடித்திருப்பார்கள். களத்தூர் கண்ணம்மாவில் சிறுவனாகத் தோற்றம் காட்டிய கமலஹாசன், வாலிபனாக முதன்முதலில் திரையில் தோன்றிய படமும் இதுவே.

படம் குறித்த விவாதங்கள் ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், மக்களின் வரவேற்பில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம். பேசாப் பொருளைப் பேசத் துணியும் கதைகளின் வரிசையில் அரங்கேற்றம் திரைப்படம் ஒரு `டிரெண்ட் செட்டர்' என்றால் மறுப்பாரில்லை.

1972-இல் `வெள்ளிவிழா' திரைப்படத்தின் படப்பிடிப்பில், இயக்குநர் பாலசந்தருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.  படப்பிடிப்பை நிறுத்திவிட்டு மருத்துவமனை செல்லும் வழியில் பலவித சிந்தனைகளும் தோன்றின. இந்தத் திரையுலகில் நாம் சாதித்தது என்ன? பயனுள்ள வகையில் எதையாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் அப்போதுதான் தோன்றியது என்கிறார் இயக்குநர் கே.பி. அதன் பிறகு அவரது மனதில் உருவான கதைதான் `அரங்கேற்றம்'.

இது பற்றி கே.பாலசந்தர் அளித்த பேட்டியில், ``திரைப்படத்துறை ஒரு தொழில்தான். மறுக்கவில்லை. ஆனால் அது கலப்படம் இல்லாமல் இருக்கவேண்டும். ஏதேனும் ஒரு விஷயத்தைச் சொல்லியே ஆக வேண்டும் என்ற ஆர்வத்தின் அடிப்படையில் திரைப்படங்கள் அமையும்போதுதான், திரைப்படத் தொழில் சமுதாயத்திற்கு தான் செய்ய வேண்டிய கடமையைச் செய்து முடித்ததாக கருதமுடியும். ஏற்கனவே சில திரைப்படங்களில் ஆங்காங்கே `குடும்பக் கட்டுப்பாடு' மென்மையாக வலியுறுத்தப்பட்டு இருந்தது. என்றாலும், முழுத் திரைக்கதை அமைப்பிலும் குடும்பக் கட்டுப்பாடு வலியுறுத்தப்பட்டு இருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தால், `இல்லை' என்ற பதில்தான் என் நினைவுக்கு எட்டியவரை தோன்றியது. எனவேதான், `அரங்கேற்ற'த்தின் மூலக் கருத்தாக அதை வைத்தேன்.

கற்பனையைவிட உண்மை சில நேரங்களில் விசித்திரமாக இருப்பதை நாம் பார்க்கிறோம். ஏன், பயங்கரமான உண்மைகளும் உண்டு. சில உண்மைகளைச் சொல்வதற்கு நாம் அஞ்சுகிறோம். ஆனால் `அரங்கேற்ற'த்தில் அதைச் சொல்ல நான் அஞ்சவில்லை..'' என்றார் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்.

இப்படித் துணிச்சலான கருத்துகளை முன்வைத்த பாலசந்தரின் படங்களுக்குப் பெரிதும் துணை நின்றவை கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள். இந்தப் படத்தில் இடம்பெற்ற `ஆண்டவனின் தோட்டத்திலே...' பாடலும் புகழ்பெற்ற ஒன்றே.

மனித குலத்துக்கு இறைவன் அளித்த மிகப்பெரிய பரிசு சிரிப்பு. குழந்தையில் சிரிப்பும் குறும்பும் கும்மாளமுமாக இருக்கும் மனிதன் கொஞ்சம் கொஞ்மாய் குழந்தைமையைத் தொலைப்பதோடு சிரிப்பதையும் மறந்துவிடுகிறான். அதுவும் பெண் பிள்ளைகள் சிரித்துப் பேசுவதை குற்றமாகச் சாடும் நம் சமூகத்தை கேலி செய்வதாக அமைந்திருக்கிறது இந்தப் பாடல்.

`வேண்டு மட்டும் குலுங்கிக் குலுங்கி நானும் சிரிப்பேன், அந்த விதியைக்கூட சிரிப்பினாலே விரட்டியடிப்பேன்' என்கிற கதாநாயகியின் குரல்... அடக்கி ஒடுக்கப்பட்ட பெண்ணினத்தின் குரலாகவே ஒலித்தது. விதியை மட்டுமல்ல... எந்தப் பிணியையும் விரட்டியடிக்கும் ஆயுதம் புன்னகை ஒன்றே. 

பி.சுசீலா அவர்களின் குரலில் இருக்கும் எள்ளலும், வி.குமார் அவர்களின் இசையில் இருக்கும் துள்ளலும் கவியரசரின் வரிகளுக்குப் பெரிதும் உயிர்கொடுத்தன. ஒவ்வொரு சரணத்தின் முடிவிலும் வரும் `லலலா லலலா லலலா லலலா... பதமா இதமா சிரிச்சா சுகமா...' என்ற சுசீலா அவர்களின் குரல் சுகம்.

ஒவ்வொரு குளமாகக் காத்திருக்கும் கொக்குகளைப் போலத்தான் சில மனிதர்களும். எங்கே மீன் கிடைக்கும், இரையாக்கலாம் என்று தவமாய் தவமிருப்பார்கள். அப்படி மாட்டப் போகும் மீன்களைப் பார்த்து அவர்கள் சிரிப்பார்கள். ஆனால் மாட்டப்போகிறோம் என்று தெரியாமல் மீன்களும் சிரிப்பதுதான் வாழ்வின் முரண்.

இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் புத்துணர்ச்சியும், இளமையும் ததும்பி வழியும். எல்லாவற்றையும் ஒரு சிரிப்பால் கடந்துவிடமுடியும் என்பதை அழுத்தமாகச் சொன்ன கவியரசரின் அமர வரிகள்தான்... இந்த `ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது... ஆகாயம் பூமி எங்கும் இளமை சிரிக்குது...'.

இருக்கும்வரை இருப்போம். அதுவரை இந்தச் சிரிப்பை விட்டுவிடாதிருப்போம்.

- பயணிப்போம்

Already Registered User? Pls Login to read

Sign in with

OR

LOGIN

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close