[X] Close

காலமெல்லாம் கண்ணதாசன் - 18 வீடு வரை உறவு... வீதி வரை மனைவி!


kalamellam-kannadasan-18

பாதகாணிக்கை - எஸ்.ஏ.அசோகன்

  • ஆர்.சி.மதிராஜ்
  • Posted: 29 Jun, 2018 09:04 am
  • அ+ அ-

படம்    : பாதகாணிக்கை
இசை    : எம்.எஸ்.விஸ்வநாதன்
குரல்    : டி.எம்.சௌந்தர்ராஜன்

* * *
ஆடிய ஆட்டம் என்ன பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வம் என்ன திரண்டதோர் சுற்றம் என்ன?
கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன?

வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?

ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம்
கூடி வரும் கூட்டம் கொள்ளி வரை வருமா?

தொட்டிலுக்கு அன்னை கட்டிலுக்குக் கன்னி
பட்டினிக்குத் தீனி கெட்ட பின்பு ஞானி

சென்றவனைக் கேட்டால் வந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால் சென்று விடு என்பான்

விட்டு விடும் ஆவி பட்டு விடும் மேனி
சுட்டு விடும் நெருப்பு சூனியத்தில் நிலைப்பு
* * *

ஒவ்வொரு நாளாக இறந்துகொண்டிருக்கிறோம் என்று எழுதுகிறான் ஒரு கவிஞன். மேலோட்டமாகப் பார்த்தால், வாழ்வின் மீது நம்பிக்கை இழந்த வரிகளைப்போலத் தோன்றும். கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்தால், எத்தனை சத்தியமான வார்த்தைகள் இவை.  எப்போது, எங்கு, என்றைக்கு என்பது  தெரியாது.... ஆனால், நிச்சயம் வரும் என்று மட்டும் எல்லோருக்கும் தெரியும். அதுதான் மரணம்.

ஒரு துக்கவீடு. இழந்தவனின் இல்லாமை இருப்போரை வாட்டுகிறது. அழுகுரல்கள். யார் யாரோ வருகிறார்கள். எப்படியெல்லாம் வாழ்ந்தான், எவ்வளவு நல்லவனாக இருந்தான், அவனுக்கும் தமக்குமான தொடர்பு என்று.... ஒவ்வொருவரும் அவனின் நினைவுகளில் மூழ்கியபடி அமர்ந்திருக்கின்றனர். அந்த ஒட்டுமொத்த சூழலையும் ஆற்றுப்படுத்துவதுபோல `மைக்செட்'டில் கண்ணதாசனின் வரிகள் ஒலிக்கின்றன.

துக்கவீட்டில் ஒலிக்கும் பாடல்கள் நம் நெஞ்சில் ஆழப்பதிகின்றன. அப்போது நமக்கு வேறு சிந்தனைகள் இல்லை. மனம் முழுக்க மரணம் என்னும் `ஆக்டோப°' சுற்றிக்கொண்டிருக்கிறது. இல்லாதுபோனவனின் இழப்பு மட்டும் இருந்துகொண்டிருக்கிறது. பாடலோடு... இறந்தவனையும், இறப்பையும், வாழ்வையும், மரணத்தையும், நம்மையும் நினைத்துக்கொண்டிருக்க வைக்கிறது. துக்கவீட்டில் அசையும் ஊதுவத்திப் புகைக்கும், குவியலாக குவிக்கப்பட்டிருக்கும் மாலையில் உள்ள பூக்களுக்கும் அப்போது மட்டும் வேறு மணம் வந்துவிடுகிறது. அது வாழ்வின் மீதான நமது கேள்விகளை அசைத்துப் பார்க்கிறது.

மரணத்தை நாம் எப்போதுதான் ஏற்றுக்கொள்வோம்? உண்மையில் மரணம் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதானா? நாம் ஏற்றுக்கொள்வதற்காகவெல்லாம் அது காத்திருப்பதில்லை அல்லவா? பிறந்த குழந்தை இறக்கும். இறந்து பிறக்கும் சிசுவும் உண்டு. சிறுவர்களாக, திருமணம் முடித்த குறுகிய காலங்களில், ஏதேனும் ஒரு சாலை விபத்தில், இவ்வளவு ஏன், இந்த வாழ்க்கையைவிட மரணம் மேல் என்று சுயமாக மரணத்தை நாடிச் செல்வோரும் உண்டு. ஆனாலும் கடவுளையும் சாத்தானையும்விட மரணத்தைக்கண்டுதான் மனிதனுக்கு பயம் அதிகம். காரணம், மரணத்தை மட்டும்தான் மனிதனால் வெற்றிகொள்ள முடிவதில்லை. கடவுளையும் சாத்தானையும் அவன் வெற்றிகொள்ள நினைப்பதில்லை.

வயது முதிர்ந்து மரணித்தாலும், `நேத்துவரை நல்லாதான் இருந்தார், போனவாரம் கூட பேசினேன்... இன்னும் கொஞ்ச நாள் இருப்பார்னுதான் நினைச்சேன்' என்றுதானே சொல்லுவோம். மரணத்தைப் பற்றியும் வாழ்க்கையைப் பற்றியும் பலர் பலவிதமாக எழுதியிருந்தாலும், திரைப்பாடல்களில் அதன் உச்சம் தொட்டவர் கவியரசர் கண்ணதாசன்.

பெரிய விளக்கங்கள் தேவையற்ற, பாமரனுக்கும் புரியும் வகையில், கவலைப்படாதே என்று அவன் தோள்மீது கைபோட்டபடி உரையாடும் வல்லமை அவரது பாடல்களுக்கு உண்டு.

`வீடு வரை உறவு' என்ற இந்தப் பாடலில் அவரது கேள்விகள் அவ்வளவு அர்த்தம் உள்ளவை. `கடைசிவரை யாரோ?' என்னும் விடை தெரியாத கேள்வியை வெறும் கேள்வியாகவே நிறுத்தி பாடலைப் புனைந்திருப்பார்.

உடலை எடுத்தவுடன், வீட்டிலேயே உறவுகள் கலைந்துவிடும், மனைவி வீதியில் நின்று அழுவாள். பிள்ளை கொள்ளி வைக்க இடுகாடு வரை வருவான். கடைசிவரை வருவது யார்? என்கிறார்.

கடைசி என்கிற சொல்லுக்கே பயந்துவிடுபவர்கள் நாம். ``கடைசியாக ஒருமுறை பார்த்துக்கறேன், கடைசியா ஒரு வாய் சாப்பிடுடா...'' என்று சொன்னால், ``அப்படிச் சொல்லாதே'' என்போம். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் `கடைசி' என்ற ஒன்று இருக்கிறதுதானே?

தொட்டிலுக்கு அன்னை, கட்டிலுக்குக் கன்னி என்று எழுதிய கவியரசர், பட்டினிக்குத் தீனி, கெட்ட பின்பு ஞானி என்கிறார். குழந்தையாக இருக்கும்வரை அன்னை வேண்டும். கட்டிலுக்குப் பெண்ணும், பசிக்கும்போது உணவும் வேண்டும். கெட்ட பின்புதான் ஞானி.

தவறுகளிலிருந்து தன்னைத் திருத்திக்கொள்பவன் மனிதன். மீண்டும் அந்தத் தவறுகள் நிகழாதவண்ணம் பார்த்துக்கொள்கிறவன் ஞானி. கண்ணதாசன் தன்னைத்தானே சொல்லிக்கொள்கிறாரோ என்று இந்த வரிகளைப் பார்க்கும்போது எனக்குத் தோன்றும். காரணம், `நீங்கள் எப்படி எல்லாம் வாழக்கூடாது என்று சொல்லுகிற முழு தகுதி எனக்கு இருக்கிறது. ஏனெனில் நான் அப்படி எல்லாம் வாழ்ந்து பார்த்தவன்' என்று சொன்னவர் கண்ணதாசன்.

இருக்கும்வரை `என்ன வாழ்க்கை இது' என்று சலித்துக்கொள்வோம். இல்லாமல் போய்விடுவோமோ என்னும் வேளையில், இன்னும் கொஞ்சம் இருக்கவேண்டும் என்று ஆசையில் அல்லல் படுவோம்.

Already Registered User? Pls Login to read

Sign in with

OR

LOGIN

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close