[X] Close

காலமெல்லாம் கண்ணதாசன் - 16 நல்லவர்க்கெல்லாம்...


kalamellam-kannadasan-16

தியாகம் - சிவாஜி, லட்சுமி

  • ஆர்.சி.மதிராஜ்
  • Posted: 15 Jun, 2018 08:46 am
  • அ+ அ-

படம்    : தியாகம்
இசை    : இளையராஜா
குரல்    : டி.எம்.சௌந்தர்ராஜன்

* * *
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா
அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா
அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா

நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றம் அன்றி வேறே யாரம்மா
பறவைகளே பதில் சொல்லுங்கள்
மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள்
மனதுக்கு மனது கொஞ்சம் தூது செல்லுங்கள்

ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை
மனிதனம்மா மயங்குகிறேன்
தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே
தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே
* * *

திரைப்பாடல்களில் தத்துவத்தையும் வாழ்க்கையையும் இணைத்த பெருமை கவியரசர் கண்ணதாசன் அவர்களையே சாரும். திரையிசையோடு நாட்டுப்புற இசையை இணைத்த பெருமை இசைஞானி இளையராஜாவுக்குச் சொந்தம். இருவரும் இணைந்து வழங்கிய அற்புதமான திரைப்பாடல்கள் கொண்ட படம்தான் தியாகம். சிவாஜிகணேசன், லட்சுமி, பாலாஜி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்தது.

வெகுசில பாடல்களுக்கு முன்பு வரும் `இசை முனகல்' நம் ஆன்மாவை உருக்குவதாக இருக்கும். இந்தப் பாடலுக்கு முன் டி.எம்.எஸ்.அவர்களின் குரலில் வரும் ஹம்மிங் அப்படியான ஒன்று.

நாம் அடிக்கடி சொல்கிற, கேட்கிற, கேள்விப்படுகிற வார்த்தைகள்.... என்னை ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கற? என்னை எப்பதான் புரிஞ்சுப்பே? என்னை ஏன் தப்பாவே நினைச்சுட்டு இருக்கே? என் மனசை எப்பவுமே புரிஞ்சிக்க மாட்டியா? - இப்படி எத்தனை விதமாக, எத்தனை தொனிகளில் கேட்டாலும் எல்லா கேள்விகளுக்குள்ளும் இருக்கும் ஒரே செய்தி... புரிதல்தான்.

இந்தப் புரிதல் இல்லாததால்தான் பல பிரிதல்கள்.

புரிதல் ஏன் இல்லாமல் போகிறது? ஆத்மார்த்தமான நட்பில், ஆழமான காதலில், அழகான ஓர் உறவில் திடீரென்று ஏன் பிரிவு வருகிறது?

பிரிவு திடீரென்றெல்லாம் வருவதில்லை. அது ஏற்கெனவே அந்த உறவுக்குள் இருக்கிறது. வெளிக்காட்டாமல் - ஆழத்தில், மிக ஆழத்தில் அது அமைதியாக இருக்கிறது. அதை மேலே கொண்டுவராமல், அந்த உறவுக்குள் இருக்கும் அன்பு பார்த்துக்கொள்கிறது. அந்த அன்பில் மேலும் எதிர்பார்ப்பும், சந்தேகமும் எழுகையில் இடைவெளி உருவாகிறது. ஒரு சிறிய இடைவெளி போதும்தானே எந்தப் பெரிய பிரிதலுக்கும்?

பிரிவை நோக்கிச் செல்லும் ஓர் உறவில் எழும் ஆற்றாமையும், அழுகையும் மிகவும் துயரமானது. நம் எல்லோர்க்குள்ளும் ஒரு நல்லவன் இருப்பான். கெட்டவன் இருப்பதை நாம் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், எங்கேனும் ஓர் ஓரத்தில் ஒரு நல்லவன் இருக்கிறான் என்பதை பெரிதாக நம்புவோம். அந்த நல்ல மனசைப் புரிந்துகொள்ளாமல் வரும் பிரிவை என்ன சொல்லிப் புரியவைப்பது என்று தவிப்போம். சில, பேசினால் புரிந்துகொள்ளும். சில, என்ன சொன்னாலும் புரிந்துகொள்ளாது. 

என்ன செய்தாலும் புரிந்து கொள்ளாத நிலையில் தனக்குத் தானேயோ, இறைவனிடமோ, இயற்கையிடமோ தன்னிலை விளக்கம் அளிப்போம். அப்படி தன்னைத் தவறாகப் புரிந்துகொண்டு பிரிந்த காதலிக்கு அளிக்கும் தன்னிலை விளக்கமாக இந்தப் பாடலை இயற்றியிருப்பார் கவியரசர். வழக்கமாக அவர் முறையிடும் இறைவனிடமே இந்தப் பாடலிலும் தன்னிலை விளக்கம் அளிப்பதாக அமைந்திருக்கும்.

`என் மனசறிய நான் எந்தத் தப்பும் பண்ணல. இது எனக்குத் தெரியும், அடுத்து அந்த தெய்வத்துக்குத் தெரியும்...' என்று பேச்சு வழக்கில் நாம் சொல்வதையே பாடலின் பல்லவியாக ஆக்கியிருப்பார். கவியரசரின் பாடல்கள் எளிய மனிதர்களின் குரலையும், மனதையும் பிரிதிபலிப்பவை என்பது எத்தனை உண்மை.

நல்லவர்களுக்கு இரண்டு சாட்சிகள். ஒன்று மனசாட்சி, ஒன்று தெய்வத்தின் சாட்சி. நம்மை, நம் மனதை, நல்ல குணத்தை நாம் அறிவோம். அடுத்ததாக மற்ற மனிதர்கள் அறிந்துகொள்ளாவிடினும் தெய்வம் அறியும். கெட்ட குணத்துக்கும் இந்த விதிகள் பொருந்தும்.

நம்பிக்கை கொண்டு கல்லைப் பார்த்தால் அதுதான் தெய்வத்தின் காட்சி. அதுவே உள்ளத்தின் சாட்சியும், உண்மையின் காட்சியும் என்கிறார். கவியரசரின் பாடல்களில் வரும் ஓசை நயம் அலாதியானது. அடுத்தடுத்து வரும் வரிகளுக்குள் இருக்கும் சந்தம் பாடலை மனதோடு ஒட்டவைத்துவிடும்.

நதி வெள்ளம் காய்ந்துவிட்டால், அது நதியின் குற்றமில்லை. விதியின் குற்றம் அன்றி வேறு எது? என்கிறார். உண்மைதான். நதி காய்ந்துபோவது நதியின் குற்றமில்லை. பேராசை கொண்டு மணலைச் சுரண்டும், சுரண்டிய நம்மைப்போன்ற மனிதர்களின் குற்றமும்தானே? அதைத்தான் விதியின் குற்றம் என்கிறார்.

யார் என்ன சொன்னாலும் சொல்லட்டும், யார் என்ன நினைத்தாலும் நினைக்கட்டும். ஆண்டவன் அறிய, நம் நெஞ்சில் துளியும் நஞ்சும் வஞ்சகம்மு இன்றி இருக்கையில், அவனைத் தவிர வேறு ஆறுதல்களே தேவையில்லைதானே?

தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே, தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே...என்று பாடலை நிறைவு செய்யும் இந்தக் கடைசி வரிகளின் அர்த்தம் பொதிந்த வார்த்தைகளும் ஓசைநயமுமே கவியரசரின் திறமைக்குச் சான்று.

இதே படத்தில் `வசந்தகாலக் கோலங்கள்' என்ற ஒரு பாடலும் இருக்கிறது. கதாநாயகி இதே மனநிலையில் பாடுவதாக இருக்கும். அதுவும் மிக அழகான பாடல். அலையில் ஆடும் காகிதம், அதிலும் என்ன காவியம்? நிலையில்லாத மனிதர்கள், அவர்க்குள் என்ன உறவுகள்? என்று எழுதியிருப்பார்.

யாரேனும் நம்மைப் புரிந்துகொள்ளவில்லை என்று நினைக்கும்போதெல்லாம் இந்தப் பாடலை ஒருமுறை கேட்டால், எல்லாக் கவலைகளையும் மறந்து, நம்மை நாமே புரிந்துகொள்ள பேருதவியாக இருக்கும்.

- பயணிப்போம்

Already Registered User? Pls Login to read

Sign in with

OR

LOGIN

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close