[X] Close

'24' சலனங்களின் எண்: பகுதி 60 - க்ளைமேக்ஸ்


salangalin-enn

  • கேபிள் சங்கர்
  • Posted: 07 Jun, 2019 11:57 am
  • அ+ அ-

வருடத்திற்கு இருநூற்றுச் சொச்ச படங்கள் தமிழில் மட்டுமே வெளியாகிறது. அதில் பெரிய நடிகர்கள் படங்கள் என்று பார்த்தால் இரண்டு மூன்று சதவிகிதம் மட்டுமே. மீதியெல்லாம் மீடியம் பட்ஜெட், சிறு முதலீட்டு படங்கள் தான்.

அப்படி வெளியாகும் படங்களில் 95 சதவிகிதம் தோல்வியில் தான் முடிகிறது. தோல்விக்கு காரணம் படத்தின் தரம் மட்டுமே அல்ல. அதன் பின்னணியில் உள்ள பொருளாதாரம், அரசியல் என பல விஷயங்கள் இருந்தாலும், மஞ்சள் பையைத் தூக்கிக் கொண்டோ, சாப்ட்வேர் பிசினெஸ், ரியல் எஸ்டேட் என எங்கேயிருந்தாவது சம்பாதித்து சினிமாவில் முதலீடு செய்ய புதியவர்கள் வந்து கொண்டேதானிருக்கிறார்கள். அதுதான் சினிமாவின் வசீகரம்.

ஒரே ஒரு சிறு பட்ஜெட் படத்தின் வெற்றி நூறு சிறு முதலீட்டு படங்களை தயாரிக்க ஆள் கொண்டு வரும். அப்படி சினிமா பார்த்து ஆர்வமாகி, ராஜாவிடம் உதவியாளனாய் அடிபட்டு, துரோகத்தால் நொந்து, மான அவமானமெல்லாம் பார்க்காமல் சுரேந்தரிடம் அவமானப்பட்டு, போராடி, இயக்குனராய் அடியெடுத்து வைத்திருக்கும் ஸ்ரீதரின் முதல் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்களின் காட்சி. 

இடைவேளையின் போது டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்த பத்திரிக்கையாளர்களின் முகத்தை பார்த்த போது கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது. இடைவேளை ப்ளாக் நன்றாக ஒர்கவுட் ஆகியிருப்பது மீண்டும் நிரூபணமானது.

“தப்பிச்சிட்டீங்க ஸ்ரீதர்”

”நல்லாருக்கு.. நிச்சயம் சக்ஸஸ் தான்”

“மொதப்படங்கிறது ஆசிட் டெஸ்ட் மாதிரி. அதுல தப்பிச்சிட்டீங்க. இனி படம் சரியா ரிலீஸ் ஆகறது முக்கியம். உங்களுக்கு தெரியும் எல்லாம் சரியா ஏற்பாடு பண்ணியிருப்பீங்க”

“நாட் அப் டுத மார்க்”

“நல்லாயில்ல. நான் உன் கிட்ட இன்னும் எதிர்பார்த்தேன்”

“ராஜா அஸிஸ்டெண்டுனு சொல்லி விளம்பரம் தேடாம உனக்குனு ஒரு ஸ்டைல கொண்டு வந்திருக்க” என்று ஒர் மூத்த பத்திரிக்கையாளர்.

“ஃபீமேல் கேரக்டருக்கு இத்தனை இம்பார்டென்ஸ் கொடுத்து படம் பார்த்து ரொம்ப நாளாச்சு” என்று ஆங்கில பத்திரிக்கை பெண்மணி பாராட்டினார்.

“நீங்க எடுத்த நாலுல மொத முறையா ஒரு சினிமா வந்திருக்கு” என்று சுரேந்தரிடம் பல பேர் கை கொடுத்து சென்றதைக்  குறித்து அசட்டுத்தனமாய் சிரித்தபடி நின்றார் சுரேந்தர். ப்ரஸ் ஷோ முடித்துவிட்டு கிளம்புகையில் ப்ரேமி காரில் ஏறும் முன்பு ஸ்ரீதரின் கை பிடித்துக் குலுக்கி, “ஆல்த பெஸ்ட். எதுக்கும் கவலைப்படாதீங்க.” என்றாள்.

அவளின் பிடியில் இருந்த இறுக்கம் பெரிய நம்பிக்கையை கொடுத்தார்ப் போல இருந்தது. அந்த நம்பிக்கை ஸ்ரீதருக்கும்  தேவையாய் இருந்தது. மனம் முழுவதும் துக்கமாய் அடைத்திருந்தது. இத்தனை பாராட்டும், விமர்சனமும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்கத்தான். போய் சேர வேண்டுமே என்கிற ஆதங்கமும், அதற்கான வாய்ப்புகள் ஷூணமாய் இருக்கும் நிஜமும் புரிந்து ஒரு மாதிரி மருங்கியே இருந்தான்.

”முடிஞ்சா நைட் பேசுறியா?. நான் எத்தன மணினாலும் வெயிட் பண்ணுறேன்” என்றாள். அவளின் குரலில் லேசான இறைஞ்சல் இருந்தது. “வேலை முடிச்சிட்டு கூப்பிடுறேன். உனக்கு வாழ்த்துகள். உனக்கு நல்ல பேர் நிச்சயம் இந்த படத்துல” என்றான்.

அன்றிரவு அவனால் ப்ரேமியிடம் பேச முடியவில்லை. சினிமா மக்களிடையே நல்ல எதிர்பார்ப்புடன் இருந்த ஸ்ரீதரின் முதல் திரைப்படமான “மண் மகன்” தமிழகமெங்கும் மொத்தம் 47 திரையரங்குகளில் வெற்றிகரமாய் வெளியாகி மக்கள் பாராட்டவோ, திட்டவோ கூட பார்க்க வாய்ப்பில்லாமல் வருடத்திற்கு இருநூற்றுச் சொச்ச திரைப்படங்கள் வெளியாகி அதில் 95 சதவிகிதம் தோல்வி அடைந்த படங்களில் ஒன்றாய் போனது.

பார்த்த மிகச் சிலரின் பாராட்டுக்கள் மட்டுமே நிஜம். முத ரெண்டு ஷோவில் மக்கள் ரெஸ்பான்ஸைப் பார்த்துவிட்டு அஸிஸ்டெண்டுகள் எல்லாம் பிக்கப்பாயிரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்கள்.

நாற்பது சொச்ச தியேட்டர்களில் ரிலீஸான படம் அடுத்தடுத்த வாரங்களில் பெரிய படங்களின் வரிசையில் இருக்கும் போது எப்படி பிக்கப் ஆகும் என்று  வியாபாரம்  தெரிந்த ஸ்ரீதர் “அடுத்த பட வேலைய பார்ப்போம்’ என்றான்.

சுரேந்தர் படத்தின் தோல்விக்கு காரணம் ஸ்ரீதர் தான் என்று திட்ட ஆரம்பித்தார். நல்ல படத்த ஒழுங்கா ரிலீஸ் பண்ணித்தரேன்னு சொல்லி ஏமாத்திட்டான் என்று பார்க்கிறவர்களிடம் எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்.

ஆடியோ லாஞ்சில்  பார்த்து ஸ்ரீதரை கதை சொல்ல அழைத்திருந்த தயாரிப்பாளர் வேறு வேலை இருப்பதாகவும் அடுத்த வாரம் மேல் போன் பண்ணிட்டு வாங்க என்று சொல்லி அனுப்பிவிட்டார். எதிர்பார்த்ததுதான். ராஜா அடுத்த படத்துக்கு வேலைக்கு வரியா? என்று போன் செய்து அழைத்தான். குரல் முழுவதும் விஷம். “இல்லை சார். நான் அடுத்த படம் சீக்கிரம் கமிட்டாயிருவேன். தேங்க்ஸ்“ என்றான்.

“சாப்பாட்டுக்கு இல்லைன்னா வீம்புக்கு இருக்காத. வா வந்து கோ டைரக்டரா வந்து வேலை செய். உனக்காக என் கதவு எப்பவும் திறந்தேயிருக்கும்” என்று நாடகத்தனமாய் சொல்லி போன் வைத்தான்.

கிண்டல், கேலி, அவமானம் எல்லாவற்றையும் படம் வெளியாகி ஒரு வாரத் தோல்வியில் பழகியிருந்தான். என்ன தான் பழகியிருந்தாலும் நெருங்கியவர்கள், மதித்தவர்கள் முதுகுக்கு பின்னால் கொடுக்கும் கமெண்டுகளை பற்றி தெரியும் போது கொஞ்சம் வலித்தது.

ப்ரேமி இந்த ஒரு வாரத்தில் நான்கைந்து முறை போன் செய்திருந்தாள். எடுத்து பேச மனமில்லாமல் விட்டிருந்தான். இன்று மெசேஜ் போட்டிருந்தாள். “உன்னிடம் முக்கியமா பேசணும் வீட்டுக்கு வர முடியுமா? ப்ளீஸ்ஸ்ஸ்” என்றிருந்தாள் இரண்டு கை குவித்த ப்ளீஸ் ஈமோஜிக்களோடு.

காலிங் பெல் அடித்த போது ப்ரேமியின் சித்திதான் கதவை திறந்தாள். ஸ்ரீதரைப் பார்த்தும் பெரிய சிரிப்பாய் சிரித்து “வாங்க” என்று உள்ளழைத்து “ப்ரேமி எவரு ஒச்சாரு சூடு” என்று உள்ளே குரல் கொடுத்தாள். ப்ரேமி குடி வந்திருக்கும் புதிய ப்ளாட். மேக்கப் இல்லாமல் சுரேந்தரின் அறையில் முதல் முறை பார்த்த போது எப்படி இருந்தாளோ அப்படியே இருந்தாள். உடலைப் பிடித்தார்ப் போன்ற ஒரு  நைட்டி மாட்டிக் கொண்டு வெளியே வந்தாள்.

ஸ்ரீதரைப் பார்த்ததும் கண்களில் பளீர் வெளிச்சம் காட்டி சித்தியைப் பார்த்ததும் அடங்கி “உள்ள வாங்க” என்று அவளின் அறைக்கு அழைத்துப் போனாள். சித்தியின் முகம் சுருங்கியது. “பின்னி காப்பி தீஸ் ரா” என்று சொல்லிவிட்டு அறையின் கதவை சாத்தி சேரில் அமர்ந்தாள். சித்தியுடனான ஆட்டிட்டியூடில் பெரிய மாற்றம் இருந்தது அவளிடம். ஸ்ரீதர் ஏதும் பேசாமல் அமைதியாய் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“நான் என்ன சொன்னாலும் உங்களோட வருத்தம் போகாது. இந்த படம் வெளியாக எத்தனை கஷ்டம், அவமானம் பட்டீங்கன்னு எனக்கு தெரியும். நான் அதைப்பத்தி பேச கூப்பிடலை. நம்ம படத்துக்கு அப்புறம் ஒன்பது படத்துக்கு கால் வந்திருக்கு. நிஜமா சொல்லப் போனா எது சரி தப்புன்னு என்னால சரியா செலக்ட் பண்ணத் தெரியலை. குழப்பமா இருக்கு. உன்னால கிடைச்ச வாழ்க்கை அதை சரியா காப்பாத்திக்கணும்னு பயமா இருக்கு. கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமா?”

“உன் மேனேஜரா இருக்க சொல்லுறியா?”  என்ற ஸ்ரீதரின் குரலில் கோபம் இருந்தது.

கதவு தட்டப்பட்டு சித்தி காப்பி எடுத்து வந்து டேபிளின் மேல் வைத்துவிட்டு, இருவரையும் பார்த்துவிட்டு சென்றாள். ப்ரேமி அவள் போவது வரை காத்திருந்து விட்டு “எனக்கு துணையா இர்றேனு கேட்குறேன்’ என்றாள்.

காப்பியை எடுக்க குனிந்தவன் சட்டென அவளை நிமிர்ந்து பார்த்தான். அவள் கண்களில் கண்ணீர் தளும்பிக் கொண்டிருந்தது.

”எனக்கு  உன் குணம் தெரியும். கோபம் புரியும். நம்பிக்கை தெரியும். அது போல உனக்கு என்னை பிடிக்கும்னு தெரியும். எனக்கும் உன்னை ரொம்பவே பிடிக்கும்.

சுரேந்தர் கிட்டேயிருந்து வேற யார் டைரக்டரா இருந்தாலும் இத்தனை கஷ்டப்பட்டு காப்பாத்த முயற்சி பண்ணியிருக்க மாட்டாங்க. நீ பண்ணே. என்னால கஷ்டப்பட்ட, பட் எல்லாம் வேஸ்டாகிப் போனப்ப நீ வருத்தப்பட்டு நின்னத நான் பார்த்தேன். அடுத்த நாள்லேர்ந்து வேற யாரா இருந்தாலும் என்னைப் பார்க்குற பார்வையே வேற. நீ தான் என்னை ஒரு மனுஷியா, பார்த்தே. மதிச்சே.

ஐ லவ் யூனு உன்கிட்ட சொல்லுறதுக்கு எனக்கு அருகதை இருக்கானு தெரியலை. ஆனா நான் உன்னை லவ் பண்றதுக்கு உன் அனுமதி கூட தேவையில்லை. இன்னைக்கு நான் இருக்குற இடம் நீ கொடுத்தது. இல்லை உன் திறமைன்னு நீ சொல்லுவ. பட் நம்பிக்கை நீ கொடுத்தது. உன்னை கட்டாயப்படுத்தலை. இன்னும் ரெண்டு படம் நல்ல படமா கொடுத்துட்டா எனக்குன்னு ஒரு மார்கெட் வந்திரும். கொஞ்சம் கூட நம்பிக்கையா முடிவெடுக்க இரு.

உனக்கு எப்ப பிடிக்கலையோ அப்ப நீ என்கிட்டேயிருந்து விலகிப் போயிடலாம். என் சித்திய நம்பினா இன்னும் பத்து பேரோட படுக்கத்தான் விடுவாளே தவிர சரியா கைட் பண்ண மாட்டா. எனக்கு உன் கைடன்ஸ் வேணும். உன் கரிசனம் வேணும். அன்பு வேணும். நீ வேணும். . எங்கம்மா சொல்லிட்டேயிருப்பாங்க. அழுகுற புள்ளைக்குத்தான் பாலுன்னு. கேட்காம விட்டுட்டோமோன்னு காலம் பூரா வருத்தப்படுறத விட கேட்டுடலாம்னு நினைச்சேன். கேட்டுட்டேன்.

எனக்கு ஹெல்ப் பண்ணுவியா? கூட இருப்பியா” என்று மூச்சு விடாமல் நிறுத்தி நிதானமாய் பேசிய ப்ரேமியை ஆச்சர்யமாய் பார்த்தான்.

ப்ரேமி சொன்னது நிஜம். ஸ்ரீதருக்கு அவளை பிடிக்கும்.  என்ன பதில் சொல்வது என்று புரியாமல் அப்படியே நின்றான். அவனின் தயக்கத்தைப் புரிந்து கொண்டவள் இரண்டு கைகளை விரித்து “உன்னை கட்டிக்கட்டுமா?”என்றாள். ஸ்ரீதரின் புன்முறுவலை அனுமதியாய் எடுத்து இறுக அணைத்து “தேங்க்ஸ்” என்றாள் ப்ரேமி.

*********************************

ராமிற்கு ”மண் மகன்’ படம் தோல்வி பற்றி வருத்தமிருந்தாலும், பிரபல தயாரிப்பாளர் ஒருவர் ராமராஜின் படத்தை வாங்கி வெளியிடப் போகும் செய்தியும், கண்ணனின் இண்டர்நேஷனல் படமும் நம்பிக்கையை மேலும் அதிகப்படுத்தியது. மேலும் நான்கு படங்களில் நடிக்க அழைப்பு விடுத்திருந்தார்கள். மிக இளைஞர்களாய் அமைந்த ஒர் டீமையும், இரண்டு மூன்று தோல்விகளை கொடுத்து மீண்டும் எழ ப்ரெஷ் அப்ரோச்சோடு வந்த இயக்குனர் ஒருவருக்கும் டேட் கொடுத்திருந்தான்.  எங்கு பேட்டிக் கொடுத்தாலும் ஸ்ரீதரை மறக்காமல் குறிப்பிட்டான். நித்யாவுக்கும் அவனுக்குமிடையே ஆனா நெருக்கம் அதிகரித்திருந்தது. ஆனால் இருவரும் சந்திக்கும் தருணங்கள் குறைந்திருந்து. ஸ்ரீதரை சந்தித்து “ப்ரதர் நீ என்னைக்கு கூப்டாலும் போட்டத போட்டுட்டு வந்திர நான் ரெடி” என்றான்.

*********************************

நித்யாவின் வெப்சீரீஸ் வெளியாகி பெரும் சக்சஸ்.  அவளின் நடிப்பு குறித்து பேசப்பட்டது. ராமராஜ் சாரின் படம் வெளியானால் நிச்சயம் சினிமாவிலும் ஒரு ரவுண்ட் வர வாய்ப்பு அதிகம் என்று நம்பிக்கை இருந்தது. ஒன்றிரண்டு பேர் கதை சொல்ல வந்தார்கள். ராம் தான் பிசியாகிவிட்டான். ஏன் அவளும் தான் என்று புரிந்தாலும் இருவருக்குமிடையே கேப் அதிகமாகிவிட்டதை உணர முடிந்தது.

*********************************

ராமராஜின் திரைப்படத்தை ஹரி கிருஷ்ண ரெட்டி சரியான பேக்கேஜ் செய்திருந்தார். நல்ல பப்ளிசிட்டி. பெரிய படங்கள் போட்டியில்லாத ஒரு மார்ச் மாத இடைவெளியில் 150 தியேட்டர்களில் வெளியிட்டார். விளம்பரமும், மார்கெட்டிங்கும் வெகு நாள் கழித்து ஹரி கிருஷ்ண ரெட்டியின் படம் என்பதாலும் ஒர் எதிர்பாப்பு கிளம்பியிருந்தது படத்துக்கு நல்லது செய்தது. குறியீடு, உள்ளீடு என்று எதுவும் இல்லாமல் நேர்மையாய் சொல்லப்பட்ட ராமராஜின் “தொடரும்’ திரைப்படம் அந்த மாதத்தில் வெளியான நல்ல படம், லாபகரமான பட லிஸ்டில் சேர்ந்தது. 

ராமராஜின் அடுத்த படக் கதையை கேட்டு ஹரி கிருஷ்ண ரெட்டி பூஜையின் போதே தன் பெயரை விளம்பரத்தில் போட்டு விநியோக உரிமையை வாங்கினார். 

*********************************

ராமராஜுக்கு சந்தோஷமாய் இருந்தது. தன் அடுத்த படத்திலும் ராமையே ஹீரோவாக்கினார். நித்யா இப்படத்திற்கு செட் ஆக மாட்டாள் என்பதால் அவளுக்கு பதிலாய் வேறொரு பெண்ணை தெரிவு செய்யப் போவதாய் அறிவித்திருந்தார். இரண்டாவது படம் பூஜையன்றே வியாபாரம் ஆனதால் மூன்றாவது படத்தை ராமராஜ் சொன்ன உதவி இயக்குனர் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்க தயாரானார்கள் திருப்பூர் மணியின் மனைவி. ராம்ராஜ் இணை தயாரிப்பாளர் ஆனார்.

*********************************

ப்ரேமி அடுத்து நடித்த பிரபல நடிகர் படம் ஹிட். ராமராஜ் படத்தின் காரணமாய் ராமின் மார்கெட்டும் ஒர் படி ஏறியிருந்தது. விதூரன் அழைத்திருந்தார். “ஸ்ரீ.. ராமையும் ப்ரேமியை வைச்சு ஒரு ப்ராஜெக்ட் ரெடி பண்ணு. பைனான்ஸுக்கு நான் கேரண்டி. சின்னதா சிக்குனு ஒரு படம். என்ன முடியுமா?’ என்று கேட்டார். ப்ரேமியிடம் சொன்ன போது “எப்ப ஆரம்பிக்கிறேனு சொல்லு எல்லா ப்ராஜெக்டையும் மாத்திக்கலாம்” என்றாள்.

“கண்ணன் படம்  முடியப் போவுது. ராமராஜ் சார் படமும் ஆல்மோஸ்ட். இன்னும் ரெண்டு படம் ஷூட் பாதி போயிட்டிருக்கு. எப்ப டேட் வேணும்னு சொல்லுங்க ஸ்ரீதர். என்னைய கேட்கவே வேண்டாம் நீங்க அசெம்பிள் பண்ணுங்க. ஐ வில் கோவாப்ரேட்”என்று ராம் உறுதியளித்தான்.

ஏற்கனவே எழுதி வைத்திருந்த கதை தான். முக்கோணக்காதல் இரண்டு பெண், ஒரு ஆண். காசி, கார்த்தியுடன் ஒரு வாரம் சேர்ந்து விவாதித்து, நகாசு செய்து இருவரையும் சேர்ந்து எழுத சொன்னான். இன்னொரு பெண் கேரக்டரில் நித்யாவை கேஸ்ட் செய்தால் நிச்சயம் ஒர்க்கவுட் ஆகும் என்று நினைத்து ராமை கேட்டான். நித்யா டேட் என் பொறுப்பு என்றான்.

விதுரன் ஆச்சர்யப்பட்டார். “செம்ம ஸ்பீடா இருக்கீங்க. என் சைடுல பைனான்ஸ் ரெடி. விளம்பரம் கொடுத்திருவோம். பட் எனக்கென்னவோ இந்தப்படம் என் பைனான்ஸ் இல்லாமயே தயாராகிரும்னு தோணுது” என்றார்.

விளம்பரம் வந்த அடுத்த சில மணி நேரங்களில் நான்கைந்து தயாரிப்பாளர்களிடமிருந்து போன். ஆடியோ லாஞ்சில் சந்தித்து ‘கதை சொல்லுங்க’ என்றவரும் ஒருவர். ஹரி கிருஷ்ண ரெட்டியை ராம் அழைத்து வந்தான். டீல் ஓக்கே ஆக. ஹரி கிருஷ்ண ரெட்டியின் பேனரில் பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் ஸ்ரீதரின் ”பெர்மூடா” தயாராக ஆரம்பித்தது. இந்த சினிமா அது தன்னை எப்படி உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற முடிவை எடுத்துவிட்டிருந்தது.

*********************************

அதே க்ரீன் பார்க். பாட்டில்களுடன் சுரேந்தர் தன் அல்லக்கைகளுடன் அமர்ந்திருக்க நடுவே ஒரு மலையாளப் பெண் அமர்ந்திருந்தாள். “ஏன் சினிமாவுல தமிழ் பொண்ணுங்களே வர மாட்டேன்குறாளுங்க? நம்ம கலாசாரம் தடுக்குதோ?” என்று சொல்லி அபத்தமாய் சிரிக்க, அல்லக்கைகள் வழக்கப்படி சிரித்தார்கள்.

இவர்கள் எல்லாருடைய சிரிப்பையும் மையமாய் பார்த்தபடி ஒர் இளைஞன் அமர்ந்தபடி இருந்தான். “நீ சொல்லு தம்பி கதைய” என்று டிவியின் சத்தத்தை ம்யூட் செய்தார்.

டிவி திரையில் ராமும், நித்யாவும் ஆடும் சலனத்தை பார்த்தபடி, தன் தொண்டையை கனைத்துக் கொண்டு கதை சொல்ல ஆரம்பித்தான் அந்த இளைஞன்.

முற்றும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close