[X] Close

'24' சலனங்களின் எண்: பகுதி 59 - நம்பிக்கை


24-salanangalin-enn

  • கேபிள் சங்கர்
  • Posted: 31 May, 2019 14:21 pm
  • அ+ அ-

சினிமாக்காரனுக்கு காத்திருத்தல் புதிதல்ல. காத்திருத்தல்தான் நம்பிக்கை, எதிர்காலம் எல்லாமே. “ஒரு ப்ரொடியூசர் பேசிட்டிருக்கேன். எலக்‌ஷன் முடிஞ்சதும் ஆர்மபிச்சிரலாம்னுருக்காரு”. இப்படி ஆரம்பித்து, அமாவாசை, பெளர்ணமி, பொங்கல், தீபாவளி, என அத்தனை பண்டிகை தினங்கள். அரசியல், மற்றும் பூகோள மாற்றம், புயல், வெள்ளம், வெய்யில் என பட்டர்ப்ளை எபெஃக்ட் போல சம்மந்தமேயில்லாத பிள்ளைப்பிறப்பு, சாவு போன்ற அபத்த காரணங்கள் காத்திருப்பு நாட்களை அதிகரிக்கும். 

ஆனால் காத்திருக்க வேண்டும். அதுதான் ஆதார விதி. காத்திருந்தால் தான் வெற்றி என்று நிருபிக்கப்பட்ட உண்மை. காத்திருந்து காய்ந்து, வெந்து போனவன் ஆயிரம் பேர்  இங்குண்டு. ஆனால் அதில் வெற்றி பெற்றவனை மட்டுமே உதாரணமாய் எடுத்துக் கொண்டு உழலும் உலகத்தில் காத்திருந்தல் மிக அவசியம். ராமராஜுக்கு எத்தனையோ காத்திருப்புகள் பழக்கமிருந்தாலும், இந்த இரவை கடப்பதற்கு மிகவும் கஷ்டமாய் இருந்தது.

ஹரி கிருஷ்ண ரெட்டி “நாளைக்  காலை சொல்கிறேன்’ என்ற கிளம்பிய பிறகு, ரொம்பவே எக்ஸைட் ஆனார். எக்ஸைட்மெண்ட் உடலெங்கும் மயிர்க்கால்களை கூச்செறியச் செய்தது. திடுக்கென வேர்த்தது. ஒரு சிகரெட்டை எடுத்து ஆழ உறிஞ்சி புகையை விட்டார். ஏனோ இத்தனை நாள் இல்லாத ஒர் பதட்டம் அவரிடம் ஒட்டிக் கொண்டுவிட்டதாய் தோன்றியது.

நிச்சயம் ஏதோ ஒரு நல்லது நடக்கப் போகிறது. என்பதை மட்டும் உள் மனசு சொல்லிக் கொண்டேயிருந்தது. படமே முடியுமானு இருந்த நிலையிலேர்ந்து இன்னைக்கு மூகம் தெரியாத ஒருவர் வாங்கிக்கிறேனு சொல்லுற அளவுக்கு வளர்ந்திருக்கு. நான் நினைச்சனா? யாரு நினைச்சா? இப்படி வரும்னு?. இதோ வந்திருக்கு.

வீட்டுல இருக்குற பெருசுங்க குடும்பத்த காக்குற சாமியா உருமாருறா மாதிரி நான் நம்புன சினிமா என்னையும் தன்னையும் வளர்த்தெடுத்திட்டிருக்கு. நல்லா வரும். சரி.. வராட்டித்தான் என்ன? நான் எடுத்த சினிமா நல்ல சினிமா. நிச்சயம் அது எங்க போகணுமோ அங்க போய் தானா சேர்ந்துக்கும் என்று யோசித்தபடியே இரவு முழுவதும் விழித்திருந்தார்.

பத்ரி அதிகாலையில் மெஸேஜ் அனுப்பியிருந்தான். தன்னை இப்படத்தில் சேர்த்துக் கொண்டதற்கு மிக்க நன்றி என்றும், ஒரு நல்ல படத்தில் வேலை செய்திருக்கிறேன். என்று உணர்ச்சிவசப்பட்டிருந்தான். ராமராஜ் சிரித்துக் கொண்டார். இதே போல தான் ராமராஜ் வேலை பார்த்த முதல்பட இயக்குனருக்கு லெட்டர் எழுதியிருந்தார்.

வழக்கத்திற்கு மாறாக பதட்டத்துடன் இருப்பதாய் அவரது மனைவிக்கு பட்டு “என்ன ஒரு மாதிரி இருக்கீங்க?” என்று கேட்டாள்.

ஒரு முறை அவளை நேராய் பார்த்தார். தோள் பிடித்து அவர்பால் இழுத்து அணைத்துக் கொண்டார்.  என்னாச்சு இவருக்கு? என்று புரியாமல் இருந்தாலும் மனுஷனுக்கு ஏதோ ஒரு பதட்டம் குழப்பம் என்று உணர்ந்து ஆதரவாய் மேலும் இறுக்கி, அணைத்து, அவரது கன்னத்தில் முத்தமிட்டாள். “எல்லாம் சரியாயிரும். சாமிக்கு காசு முடிஞ்சு வைக்குறேன்’ என்றாள். ராமராஜுக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.

‘எத்தனை நம்பிக்கை. இது வரை ஒரு கேள்வி கேட்டதில்லை. கல்யாணம் கட்டிக் கொண்டு வந்த போதும் சரி. இருக்குற நகையை கொடுனு கேட்ட போதும் சரி. எல்லாவற்றுக்கும் பதிலே சொல்லாத இந்தா எடுத்துக்க’ என்கிற ரியாக்‌ஷன் தான் கொடுப்பாள். ’உன்னை நம்பி வந்திருக்கேன். நீ பாத்துப்பங்கிற நம்பிக்கைதான். எனக்காக ஒண்ணே ஒண்ணு கேட்பேன்னா.. நீ குடிக்கிறத குறைச்சிக்க. அவ்வளவுதான்” என்பாள்.

இன்னும் இறுக்கமாய் அவளை அணைத்தார் ராம்ராஜ். மெல்ல அவளை நிமிர்த்தி முத்தமிட்டார். அவளுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. இது போன்ற சம்பவம் நடந்தேறி எத்தனை மாதம் ஆகியிருக்கும் என்று நியாபகம் கூட இல்லை. சிறிது நேரம் கிறங்கிக் கிடந்தாள். அவளின் கிறக்கம் ராம்ராஜுக்கு இன்னும் வேகத்தை கூட்ட, இன்னும் வேகமாய் உதடுகளை உறிஞ்சினார். கழுத்து மார்பு என முத்தங்களைப் பரப்பினார்.

அவளை அப்படியே ஹாலில் இருந்த சோபாவில் சாய்த்து அவளின் மேல் இயங்க ஆரம்பித்தார். அவள் ராமராஜின் வேகத்தை, ஆதங்கத்தை, பதட்டத்தை, சந்தோஷத்தை, உற்சாகத்தை தன்னுள் இறக்கிக் கொள்ள அனுமதித்து அவருக்கு வசதி செய்து கொடுத்தாள்.  ராம்ராஜ் முச்சு இழைந்து அவளின் மீதிருந்து இறங்கிய போது போன் மணி அடித்தது.

“எத்தனை மணிக்கு?”

“             “

“ஓக்கே சார். வந்திடறேன்” என்று போனை வைத்தவர் கலைந்து கிடந்த மனைவியை அப்படியே மீண்டும் இழுத்து அணைத்து “தேங்க்ஸ்” என்று சொல்லிய வீட்டை விட்டு கிளம்பினார்.

*********************************

“நாம படத்த தள்ளி வைக்க முடியுமா?”என்று கேட்ட விதூரனை புரியாமல் பார்த்தான் ஸ்ரீதர்.

“சார் இன்னும் மூணு நாள் தான் இருக்கு ரிலீஸுக்கு?”

“நேத்து வரைக்கும் 145 தியேட்டர் ஓக்கேன்னாங்க. பட் பிரச்சனை என்னான்னா மூணு படம் ரிலீஸானதுல ரெண்டு சூப்பர் ஹிட். மூணாவது படம் ஓடுற தியேட்டர்காரங்கதான் டேட் தர்றேன்னு சொன்னாங்க. அவனும் பெரிய ஹீரோ. பத்து நாள் கூட ஓடலைன்னா தனக்கு அசிங்கம்னு நினைக்கிறான். நேரடியாய் தியேட்டர்காரங்க கிட்ட பேசியிருக்கான். லாஸ் ஆச்சின்னா எம்ஜிய அட்வான்ஸா மாத்தி திரும்பத்தர்றேனு சொல்லியிருக்கான். பணம். அதுவும் ரெகுலரா படம் பண்ணுற ஹீரோ. அவங்க அவனுக்குத்தான் அட்ஜெஸ்ட் பண்ணுவாங்க. .நாம அடுத்த வாரம், இல்ல அதுக்கு அடுத்த வாரம் ஒரு டேட் பார்த்து ரிலீஸ் பண்ணுவோம். என்ன சொல்றீங்க?” என்றார்.

அவர் சொல்லும் காரணம் தெளிவாய் புரிந்தது. ஆனால் இதை எப்படி சுரேந்தர் எடுத்துக் கொள்வான் என்று தெரியவில்லை. ஏற்கனவே ரவியிடம் நான் சொன்ன டேட்டுல ரிலீஸ் பண்ணுவேன் என்று பிடிவாதம் பிடித்ததினால்தான் இந்த ரிலீஸ் ஏற்பாடே. என்ன சொல்வது என்றே புரியவில்லை. சேது சாருக்கு போன் செய்தான். விஷயத்தை சொன்னான்.

“அய்யோ. . நம்மாளு காண்டாயிருவாரே. பட் நீங்க சொல்லுறது லாஜிக் தான். என்ன பிரச்சனைன்னா.. தலைவரோட நிதி நிலைமை இப்பதைக்கு அவ்வளவா சரியில்லை. ஒரு வேளை இப்ப ரிலீஸாகாம போயிட்டா ஏற்கனவே ஷெல்புல வச்சிருக்கிற படம் போல இதையும் வச்சிட்டு போயிருவாரு. அவருக்கு என்ன? அதான் யோசிக்கிறேன். ஆனால் அவர்கிட்ட சொல்லாமயும் இருக்க முடியாது?’ என்று அவரே கேள்வி கேட்டு அவரே குழம்பினார். ஒரு முடிவாய் சுரேந்திரிடம் சொல்லி விடுவது என்று முடிவெடுத்து காலையில் முதல் வேலையாய் விதூரன், சேது, ஸ்ரீதர் மூவரும் அவரது அறைக்கே சென்று விஷயத்தை சொன்னார்கள்.

”உங்களை என்னவோ பெரிய டிஸ்ட்ரிப்யூட்டர் அது இதுன்னு சொல்லி பில்டப் கொடுத்தாரு உங்க டைரக்டர். இப்ப என்னடான்னாகொட்டு வாயில கிடைச்சாட்தான் கிடைக்கும்னா?. எனக்குனு இண்டஸ்ட்ரியில ஒரு மரியாதை இருக்குல்ல?.நாளை பின்ன ரிலீஸ் பண்ண வக்கில்லாதவன்னு சொல்லிர மாட்டாங்க.”

“சார். இப்போ சினிமா இருக்குற நிலைமையில டேட் சொல்லி ரிலீஸ் தள்ளிப் போறது எல்லாம் பெரிய விஷயமே இல்லை. அதுவும் நம்முளுது சின்னப்படம். கொஞ்சம் தியேட்டர் கிடைச்சு மக்கள் பார்த்து மவுத் டாக்குல ஓட வேண்டிய படம். தியேட்டர் இல்லாம போச்சுன்னா நல்ல படம் ஓடாது.”

“நீங்களே நல்ல படம்ங்குறீங்க. அப்புறம் அது ஓடாது, தியேட்டர் கிடைக்காதுங்குறீங்க. எத்தனையோ படம் கொஞ்ச தியேட்டர்ல ரிலீஸ் ஆகி பின்னாடி பெரிய ஹிட்டெல்லாம் ஆயிருக்கு. எனக்கும் சினிமா தெரியும். நீங்க ரிலீஸ் பண்ணுங்க. எத்தனை தியேட்டர் கிடைக்குதோ அத்தனையில. பார்த்துக்கலாம். நான் பின் வாங்க மாட்டேன்”  சுரேந்தர் உறுதியான குரலில்.

“சார். கொஞ்சம் பொறுமையாய் இருக்கலாமே.. “ என்று ஸ்ரீதர் இழுக்க, “என் காசு. என்படம் நீ என்ன சொல்லுறது இப்ப ரிலீஸ் பண்ணு அப்ப ரிலீஸ் பண்ணுன்னு. இதுல பொறுமையா இருனு அட்வைஸ் மயிரு வேற. ரெண்டு கோடி மயிராப் போச்சுன்னு போயிட்டேயிருப்பேன். இன்னைக்கு தியேட்டர் கிடைக்கலைன்னு சொல்லி இத்தனை நாள் பண்ண விளம்பரம் காசு நாற்பது லட்சம் போச்சு. திரும்ப டேட் மாத்தி விளம்பரம் பண்ணனும்னா திரும்பவும் அதே விளம்பரம், பேட்டினு. உனக்கென்ன ஜாலியா பேட்டிக் கொடுப்ப. துட்டு என்னுதுதானே?” என்று கோபமாய் கத்தினார்.எதுவும் பேசாமல் வெளியே வந்த ஸ்ரீதரின் முகத்தையே விதூரன் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஒரு இயக்குனருக்கு படம் கிடைப்பது எப்படி கஷ்டமோ அதை விடக் கஷ்டம் அப்படம் ரிலீஸாவது. ரிலீஸானால்தான் அவன் இயக்குனர். ரிலீசே ஆகாத படத்தை இயக்கியவனை எப்போது இயக்குனராய் இந்த உலகம் ஏற்றுக் கொள்வதில்லை. அவன் வேலைப் பார்த்த குழு வேண்டுமானால் அவனை இயக்குனராய் ஏற்றுக் கொள்ளும்.  அவன் படத்துக்கு முன்னாள் ரிலீஸ் செய்யாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இரண்டு படங்களின் இயக்குனர் நிலையைப் பற்றி யோசித்தான். இன்றளவில் அடுத்த படம் கிடைக்காமல் வேறு சில இயக்குனர்களிடம் உதவி இயக்குனர்களாய் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் .திரும்பவும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டிய ப்ராசஸ்.  எப்படி இந்தப்படம் கிடைத்தோ? எப்படி இந்த படம் தன்னை வளர்த்துக் கொண்டதோ? எப்படி இத்தனை பிரச்சனைகளையும் கடந்து இப்படம் தயாரானதோ? அப்படி தன்னையே வளர்த்துக்  கொண்ட சினிமா அதன் முடிவையும் தேடிக் கொள்ளட்டும் என்று ஆழமாய் மூச்சிழுத்து முடிவெடுத்து. “வேற வழியில்ல சார். நடக்குறது நடக்கட்டும். கிடைக்கிற தியேட்டர்ல ரிலீஸ் பண்ணுவோம்” என்றான் ஸ்ரீதர்.

*********************************

“படம் எனக்கு பிடிச்சிருக்கு. நல்ல எமோஷனல் கண்டெண்ட். நிச்சயம் நல்ல பப்ளிச்சிட்டி பண்ணினா நல்லா போகும். நான் இது வரைக்கும் இப்படி ஜட்ஜ் செய்த படங்கள் ஓடாம இருந்ததில்லை. என்ன பட்ஜெட் ஆச்சுன்னு சொல்லுங்க. மேல ஒரு விலை நான் கொடுத்துடறேன். எனக்கு தெரியும் இது எத்தனை ஆயிருக்கும்னு. பட் படம் உங்குளூது. நீங்கதான் விலை சொல்லணும்” என்று தன் எதிரே அமர்ந்திருந்த ராமராஜையும், அவரின் தயாரிப்பாளர்களையும் பார்த்து சொன்னார் ஹரி கிருஷ்ண ரெட்டி.

மிகவும் அடிப்படையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர் ஹரி கிருஷ்ண ரெட்டி. சாதாரண மேக்கப் மேனாய் தொழிலை ஆர்மபித்தவர் மெல்ல பிரபல நடிகருக்கு மேக்கப்மேனாய் செட்டிலானார். அவருடய தயாரிப்பு நிறுவனத்திற்கு பினாமி தயாரிப்பாளர் ஆனார். அது வெற்றி பெற அதே நடிகரை வைத்து பைனான்ஸ் வாங்கி தயாரிப்பாளர்.

தொடர்ந்து அதே படத்தை தெலுங்கு, இந்தி என்று போய் ஹிட்டாக. பிரபல தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என தனக்கென ஒரு ப்ராண்டை உருவாக்கி வைத்துள்ளவர். திரைப்பட விநியோகம், மற்றும் திரையரங்குகளிலிருந்து சரியான கணக்கு வருவதில்லை என்ற ஆதங்கத்தில் சிறிது காலமாய் தமிழ் சினிமாவிலிருந்து ஒதுங்கி தெலுங்கில் மட்டும் படம் பண்ணிக் கொண்டிருக்கிறவர். அப்பேர்பட்ட தயாரிப்பாளர் தன் படத்திற்கு விலை கேட்பது குறித்து என்ன பதில் சொல்வது என்று புரியாமல் திகைத்துப் போய் அனைவரும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“என்ன ராமராஜ்? உங்களைத்தான் அவங்க புதுசு. உனக்கு தெரியாதா?”  என்று கலைத்தார்

“சார். உண்மையில என் படம் இன்னைக்கு உங்க வரைக்கும் வந்திருக்குன்னா அது கடவுள் கிருபை. செத்துப் போன மணி சாரோட ஆசை. ஆசீர்வாதம். படத்தோட இன்னைய வரைக்குமான பட்ஜெட் 1.97 சார். கொஞ்சம் சில்லரை வேலைகளுக்கான செட்டில்மெண்ட் இருக்கு. இவங்க ஹஸ்பெண்ட் ஆசை ஆசையா படம் பண்ண வந்தாரு.  அவரு இருந்து முடிக்க முடியலை.

அவரோட கடைசி ஆசைய நிறைவேத்தணும்னுதான் சினிமான்னா என்னான்னு தெரியாத இவங்க படத்தை முடிச்சிருக்காங்க. மணி சார் ஆசைப்பட்ட படம். ஜெயிக்கும்னு நம்புன படம். அவர் மனசு போலவே நல்ல கையில போய் சேரப் போவுது. நீங்களே சொல்லுங்க. படம் நல்ல படியாய் ரிலீஸ் ஆகணும். ஜெயிக்கும். ஜெயிக்க வைப்பீங்கற நம்பிக்கை எனக்கிருக்கு” என்று தழுதழுத்து பேசினார் ராம்ராஜ்.

மணியின் மனைவியும்,மாமனாரும் எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தார்கள். ஹரி கிருஷ்ண ரெட்டி வியாபாரி. நல்ல ப்ராடெக்ட் கொடுக்குறத கொடு என்று வருகிறது. வாங்கிப் போட்டால் டிஜிட்டல், சாட்டிலைட், தெலுங்கு, இந்தி என பிச்சி பிச்சி விற்றாலே கவர் செய்துவிடலாம் என்கிற அவரது அனுபவ கணக்கு சொன்னது. இருந்தாலும் ராமராஜையும், அவரின் தயாரிப்பாளர்களையும் பார்க்கும் போது வியாபாரியாய் யோசிக்க முடியவில்லை. 

சினிமா தான் எல்லாமே என்றிருக்கும் ராமராஜ். என்றைக்காவது சினிமா பண்ணணும்னு ஆசைப்பட்டு வந்து தயாரிப்பாளராகி, நண்பனின் துரோகத்தால் கொலையாகி, ஆசை நிராசையாகக்கூடாது என்று அவன் குடும்பமே கூட நின்று முடித்திருக்கிற படம். பாஸிட்டிவ் எனர்ஜி படத்தில் மட்டுமில்லை. படத்தை தயாரித்தவர்களின் எண்ணத்தில் கூட இருக்கிறது. கண் மூடி  பத்மாவதி தாயாரே. என்ன சொல்லட்டும் என்று  யோசித்தார். 

“சார் மொத்தமா மூணு கோடி கொடுத்துடறேன். மொத்த ரைட்ஸையும் எனக்கு அவுட்ரைட்டா கொடுத்திருங்க. பப்ளிச்சிட்டி மத்த ரிலீஸ் செலவெல்லாம் சேர்த்தா இன்னும் ஒரு கோடி வரும். இந்த படம் நிச்சயம் நல்லா வரும். எனக்கு நம்பிக்கை இருக்கு. என்ன சொல்றீங்க?” என்றார்.

“லச்சலச்சமா சம்பாரிச்சாலும், என்ற ஊட்டுக்காரருக்கு எப்பவும் மனசு பூரா சினிமாதான். அவரு ஆசைப்பட்டு செய்யணும்னு நினைச்ச விஷயம் எதையும் செய்யாம விட்டதில்லை.  அதுக்காக காத்திருப்பாரு. எங்க கல்யாணம் உட்பட. நாங்க லவ் மேரேஜ். சினிமா தான் எங்களை சேத்து வச்சிது. அதைச் சொனா தனியா படமெடுக்கலாம். அப்படி ஒரு ஆசை சினிமா மேல. அதான் தடங்கலாயிருச்சு. அதுக்காவ உட்ர முடியுங்குளா?

அவரோட ஆசைய நிறைவேத்தாம எனக்கெதுக்கு இந்த வாழ்க்கைனு யோசிச்சுத்தான் இதுல இறங்குனேன். அப்பா கூட வேணாம் எதுக்குனு சொல்லிட்டேத்தான் இருந்தாரு. நான் தான் அவரு படம் ரிலீஸாவலைன்னா அவரு ஆத்மா நிம்மதியா மேல போவாது. நாம பண்ணனும்னு கூட்டிட்டு வந்தேன். அவரோட ஆத்மா தான் உங்களை எங்களோட பேச வச்சிருக்கு. நீங்க லாபம் கொடுக்குறீங்களோ இல்லையோ?

நல்ல படியா பெருசா ரிலீஸ் பண்ணுங்க. என்ற வூட்டுக்காரர் ஆசைய நான் நிறைவேத்தணும்” என்று மணியின் மனைவி முதல் முறையாய் சினிமாப் பற்றி முடிவாய் பேசினாள். அந்த அறையில் இருந்த அனைவருமே கொஞ்சம் எமோஷனலாய் இருந்தார்கள்.

ஹரி கிருஷ்ண ரெட்டி தன் உதவியாளர் கொண்டு வந்த டாக்குமெண்டை மணியின் மனைவியின் பக்கம் திருப்பி “இதுல உங்க படத்தை மூணு கோடிக்கு எம்.ஜி அடிப்படையில மொத்த உரிமையும் வாங்கியிருக்கேனு எழுதியிருக்கு. மூணு கோடிக்கு மேல லாபம் வரும் போது உங்களுக்கு லாபத்துல 50 சதவிகிதம். படிச்சிப் பார்த்துக்கங்க.. .இல்ல உங்க லாயர் யாராச்சும் இருந்தா கூட்டி வந்து படிச்சிட்டு அப்புறம் கூட கையெழுத்து போடுங்க” என்றார்.

முதலில் சொன்னது வெறும் மூன்றுகோடி மட்டுமே இப்போது எம்.ஜி. ராம்ராஜுக்கு இந்த அக்ரிமெண்ட் எத்தனை லாபகரமானது என்று புரிந்தது. மணியின் மனைவியைப் பார்த்தார். அவர் முகத்தில் எந்தவிதமான உணர்ச்சியும் இல்லாமல் பேப்பரை தன் பக்கம் திருப்பி “எங்க கையெழுத்துப் போடணும்?’என்று கேட்டு, சரசரவென கையெழுத்துப் போட்டு டாக்குமெண்டை ஹரி கிருஷ்ண ரெட்டியிடம் கொடுத்தாள். ராமராஜின் கை பிடித்து குலுக்கினாள்.

“என் புருஷன் ஆசைய நிறைவேத்துனதுக்காக இந்தாங்க” என்று தன் பையிலிருந்து ஒரு கட்டு இரண்டாயிரம் ரூபாய் கட்டை எடுத்துக் கொடுத்தாள். ராம்ராஜுக்கு எப்படி ரியாக்ட் செய்வது என்று கூட புரியவில்லை. ”அய்யோ.. இது என் கடமை. நீங்க பணமே கொடுக்காட்டாலும், படத்தை முடிச்சிருப்பேன்”

“தெரியும். என் மனசு திருப்திக்காக வாங்கிக்கங்க” என்றாள். மறுக்க முடியாமல் தயக்கத்துடன் வாங்கிக் கொண்டார் ராம்ராஜ்.  எல்லாம் முடிந்து வெளியே வந்து காரில் ஏறும் முன் “ராம்ராஜ் சீக்கிரமே ஒரு ஆபீஸ் பாருங்க. அடுத்த படமும் நீங்கதான் பண்ணுறீங்க.

அதுக்கு அப்புறம் வருஷத்துக்கு ஒரு படம் நம்ம பேனர்ல  நீங்க செலக்ட் பண்ணுற ஆட்களை வச்சி படம் பண்ணுறோம். நீங்க தான் பார்த்துக்கணும். பெரிய டைரக்டர் ஆனாலும் பார்த்துப்பீங்க இல்லை” என்றாள். ராம்ராஜுக்கு கண்கலங்கி வழிந்த கண்ணீரை துடைத்தபடி பேச முடியாமல் தலையாட்டினார். ராமராஜின் கைகளை இறுக்கமாய் பிடித்து “ஆல் த பெஸ்ட்’ என்று சொல்லி கார் கிளம்பியது. அது போவதையே பார்த்துக் கொண்டிருந்தார் ராம்ராஜ்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close