[X] Close

'24' சலனங்களின் எண்: பகுதி 57


salanangalin-enn

  • கேபிள் சங்கர்
  • Posted: 19 May, 2019 12:08 pm
  • அ+ அ-

ஹாஸ்பிட்டலின் அசெப்டிக் மணம் நாசியில் ஏறி கண் விழித்தார் ராமராஜ். தான் இருப்பது ஹாஸ்பிட்டல் என்றும், சரக்கடித்ததும், எதிரே வண்டி வந்ததும் நியாபகம் வர, மண்டையில் வலி தெரிய, “ஆ” என்று கத்தினார். அவரின் சத்தம் கேட்டு நர்ஸ் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்து “ ஒண்ணுமில்லை. சார். தலையில லேசா அடிபட்டிருக்கு. இப்படியா குடிச்சிட்டு வண்டி ஓட்டுவீங்க? யாரோ ஒரு புண்ணியவான் உடனடியாய் உங்களை வந்து ஹாஸ்பிட்டல்ல சேர்த்துட்டு போனான்” என்றாள்.

தண்ணி” என்று ஷீணமான குரலில் கேட்டார்.

நர்ஸ் அவரை படுக்கையில் உட்கார வைத்து தண்ணீரை கொடுத்தபடி, “நீங்க கண் முழிச்சா போன் பண்ணச் சொல்லி நம்பர் கொடுத்துட்டு போயிருக்காங்க” என்று ஒரு கார்டை கொடுத்தாள். திருப்பூர் மணியின் மாமனார் நம்பர். அடடா அவங்க போன் பண்ணாங்களே என்று பதற்றமாகி, பாக்கெட்டில் போனைத் தேட, அப்போதுதான் தான் சட்டையில்லாமல் இருப்பதை உணர்ந்தார்.

இருங்க உங்க போன், பர்ஸ் எல்லாத்தையும் பத்திரமா கொடுத்துட்டுத்தான் போயிருக்காங்க” என்று அறையில் இருந்த டிராயரிலிருந்து அவரின் உடமைகளை எடுத்துக் காட்டிவிட்டு, போனை மட்டும் எடுத்து கொடுத்தாள். மணியின் மாமனார் நம்பருக்கு போன் அடித்தார். ரெண்டாவது ரிங்கிலேயெ எடுத்துவிட்டார்.

என்னங்க ராமராஜ். இப்ப உடம்பு எப்படி இருக்கு? எப்ப டிஸ்சார்ஜ்?”

இப்பத்தான் கண் விழிச்சேன். டிஸ்சார்ஜ் எப்பன்னு தெரியலை இருங்க கேட்டுச் சொல்லுறேன்” என்று நர்ஸிடம் “எப்ப டிஸ்சார்ஜ்?” என்று சைகையாலும், ரகசிய குரலாய் கேட்டார். “இன்னும் ஒன் அவர்ல. டாக்டர் வந்ததும் அனுப்பிடலாம்” என்றாள் நர்ஸ்.

சார் இன்னும் ஒன்னவர்ல ஆக்கிருவாங்களாம்.”

பில்லெல்லாம் செட்டில் பண்ணியாச்சு. டிஸ்சார்ஜ் பண்ணும் போது சொல்லுங்க. வண்டி அனுப்புறேன். வீட்டுல போய் ரெஸ்ட் எடுத்துட்டும் ஈவினிங் கூட வாங்க. ஒரு முக்கிய விஷயம் பேசணும்” என்று போனை வைத்துவிட்டார்.

ராமராஜுக்கு பொறுமையில்லை. ”எத்தனை சீக்கிரம் டிஸ்சார்ஜ் செய்ய முடியுமோ அத்தனை சீக்கிரம் ஆக்குங்க” என்று நர்ஸை கெஞ்சிக் கேட்டு, அவளும் டாக்டருக்கு போன் செய்து பார்மாலிட்டியை செய்து முடித்து கொடுக்க, வண்டி அனுப்பி விட்டிருந்தார். “சார். வீடு அட்ரஸ் சொன்னீங்கன்னா.. உங்களை ட்ராப் பண்ணிட்டு, ஈவினிங் நானே வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்” என்றான் ட்ரைவர் பவ்யமாய்.

இல்லை. நான் சாரைப் பார்த்துட்டே வீட்டுக்கு போறேன்” என்று அவனை அவர்கள் தங்கியிருக்கும் இடத்திற்கே போகச் சொன்னார். தலையில் “விண்விண்” என வலித்தது. அதையும் மீறி மனம் படபடவென இருந்தது. ஏசி காரில் வேர்த்துக் கூட கொட்டியது. வண்டி மணியின் மாமனார் தங்கியிருந்த கெஸ்ட் அவுஸுக்குள் நுழைந்தது. ராமராஜ் காரிலிருந்து இறங்குவதை பார்த்து மணியின் மாமனார் வெளியே வந்து வரவேற்றார். “என்ன அவசரம். வீட்டுக்கு இல்லை போய் விடச் சொன்னேன் உங்களை” என்று டிரைவரை கடிந்தார். “உள்ள வாங்க” என்று ராமராஜின் தோளணைத்து உள்ளே அழைத்து உட்கார வைத்தார். உள்ளறையிலிருந்து மணியின் மனைவி வெளியே வந்தார்.

என்னங்கண்ணே.. இப்படி கண் மண்ணு தெரியாமயா குடிக்கிறது?. உடம்பு என்னத்துக்கு ஆகுறது?. நேத்து மட்டும் ஏதாச்சும் சீரியஸா ஆகியிருந்தா என்ன ஆயிருக்கும்?” என்று உரிமையாய் கோபித்தாள்.

படம் பாதியில் நின்று விட்டது. எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டது. மீண்டும் விட்ட இடத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டுமே என்கிற கவலை, அவமானம் என்று எப்படி சொல்வது? என்று புரியாமல் ராமராஜ் அமைதியாய் இருந்தார்.

சரி விஷயத்துக்கு வர்றேன். என் மாப்பிள்ளை ஆசைப்பட்ட எதையும் முடிக்காம விட்டதில்லை. அதுல முக்கியமானது இந்த சினிமா. எங்களுக்கு இதைப் பத்தி எதுவும் தெரியாது. ஆனா அவரு உங்களை ரொம்ப நம்புனாரு. நீங்க அவருக்கு டைரக்டரா கிடைச்சது அதிர்ஷ்டம்னு சொல்லிட்டேயிருப்பாரு. அவரு நம்பிக்கையை நீங்க காப்பாத்துவீங்கன்னு நம்பி அவரோட கடைசி ஆசையாய் இந்த படத்த முடிச்சிக் கொடுத்து ரிலீஸ் வரைக்கும் எல்லாத்தையும் பார்த்துக் கொடுக்கணும். முடியுமா?”என்றாள் மணியின் மனைவி தீர்மானமான குரலில்.

திக்குமுக்காடிப் போனான் என்று எழுதி படித்திருக்கிறார். நிஜத்தில் முதல் முறையாய் ராமராஜ் உணர்ந்தார். உடலெங்கும் புல்லரித்து கண்களிலிருந்து தாரை தாரையாய் கண்ணீர் வர, அதைப் பார்த்து மணியின் மனைவியும், மாமனாரும், பதறித்தான் போனார்கள்.

முடியுமாவா? முடியுமாவா? என்ன இப்படி கேட்டுட்டீங்க? இதை விட எனக்கு வேற என்ன வேலை?. இந்த படம் மணி சாரோட கனவு மட்டுமில்லை. என்னோட கனவும். என் கனவையும் சேர்த்துத்தான் மணி சார் சுமந்தாரு. அந்தப் படுபாவி ரவி மட்டும் வரலைன்னா.. இந்நேரம் படம் முடிஞ்சு.. “ என்று கேவியபடி “என்னன்னவோ நடந்திருச்சு” என்று குலுங்கினார். அவர் அழுது முடிக்கும் வரை இருவரும் அமைதியாய் இருந்தார்கள். அவர்களின் அமைதி உறுத்தி, அழுவதை நிறுத்தி, கண்களை துடைத்துக் கொண்டு “நான் ரெடி” என்றார்.

அடுத்த அரை மணி நேரத்தில் எல்லா விஷயங்களும் பேசப்பட்டன. இன்னும் எத்தனை நாள் ஷூட்டிங் இருக்கிறது? எவ்வளவு செலவாகும்?. வியாபாரம், விளம்பரம் செலவு எவ்வளவு? வியாபாரம் ஆகவில்லை என்றால் டீசண்டான ரிலீஸுக்கு ஆகும் செலவு எவ்வளவு? என அனைத்தும் விவாதிக்கபட்டது. “நான் ஒரு மாசம் இங்கேயே இருக்கேன். உங்க வேலையில தலையிட மாட்டேன். ஒரு தயாரிப்பாளரா மணி இருந்தா எப்படி நிம்மதியாய் வேலை பாப்பீங்களோ அப்படி பாருங்க. மணியோட வேலையையும் சேர்த்து” என்று ராம்ராஜை அணைத்து, தலைவருடி ஆசீர்வதித்தார் மணியின் மாமனார். மணியின் மனவியின் கண்களில் கண்ணீர் எப்போது வேண்டுமானாலும், வழிந்தோட தொக்கி நின்றது. ராமராஜ் மணியின் மாமனார் காலில் வீழ்ந்து வணங்கினார்.

எல்லாரையும் இங்கயே அசெம்பிள் பண்ணிரட்டுமா சார்?” என்று கேட்டார்.

உங்களுக்கு ஒரு சூட் ரூம் புக் பண்ணியிருக்கேன். அங்க வரச் சொல்லிருங்க” என்றார் மணியின் மாமனார்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் தன் டீம் மெம்பர்களை அழைத்து அனைவரையும் மணியின் மாமனார், மனைவி இருவருக்கும் அறிமுகம் செய்துவிட்டு “எங்க ரூம் எங்க இருக்கு?” என்று கேட்டு அந்த ரூமில் போய் அமர்ந்து அடுத்தடுத்த வேளைகளில் இறங்கினார். ராமை அழைத்தார். உடனடி ஷூட்டிங்கிற்கு ஏற்பாடு செய்யப் போவதாகவும். கண்ணன் பிராஜெக்ட்டில் ஒரு பத்து நாள் மட்டும் தள்ளிப் போகும் கொஞ்சம் பேசி பர்மிஷன் வாங்கிரு என்று கேட்டுக் கொண்டார். நித்யாவிடமும் அதே போல பேசி அடுத்த ஒரு மணி நேரத்தில் நாளை மறுநாள் ஷூட்டிங் அசெம்பிள் செய்தார். ஷூட்டிங் போனார். நான்கைந்து நாள் பேச் ஒர்க் முடித்து, பாடல் காட்சி முடித்த அதே வேளையில் எடிட்டிங்கும் நடந்தேறிக் கொண்டிருந்தது.

மணியின் இறப்புக்கு பிறகு அசெம்பிள் ஆகவே ஆகாது என்று அனைவராலும் கைவிடப்பட்டிருந்த ப்ராஜெக்ட் மீண்டும் அவரின் ஆசைக்காக குடும்பத்தார் இறங்கியிருக்கிறார்கள் என்றதும் டெக்னீஷியன்கள் முதல் ஆர்டிஸ்ட் வரை மணியின் மீதான மரியாதைக்கும், ராமராஜின் எதிர்காலத்தையும் நினைத்து உடனடியாய் அத்தனை வேலைகளையும் புறம் தள்ளி வேலை செய்து கொடுத்தார்கள்.

ஒரே மாதத்தில் படம் முடிந்து பைனல் காப்பி ரெடி. டி.. ஸ்டூடியோவில் மிக நெருங்கிய டெக்னீஷியன்களோடு, மணியின் குடும்பம் மட்டும் படம் பார்த்தது.

இந்த படம் பண்ணப் போறேன்னு அவரு முடிவு பண்ணதும் படத்துல ஒவ்வொரு காட்சியையும் நீங்க எழுதினப் என்கிட்ட படிச்சிக் காட்டியிருக்காரு. அதை அப்படியே படமா பாக்குறப்ப என்னால கண்ட்ரோல் பண்ணவே முடியலை. எத்தனை தத்ரூபமாய் சொல்லியிருகாருன்னு தோணிச்சு. என்ன எழுதினீங்களோ அதை அப்படியே படமா கொண்டு வந்திருக்கீங்க. ரொம்ப நன்றி அண்ணே.” என்று கைக்கூப்பி வணங்கினாள் மணியின் மனைவி.

அங்கிருந்த அனைவருமே எமோஷனலாய் இருந்தது. அனைவரின் கருத்துக்களும் உணர்வெழுச்சியின் நீட்சியாய் உணர முடிந்தது. படத்தைப் பற்றிய அவர்களது கருத்தை அப்படியே எடுத்துக் கொள்ள முடியாது. ஆனால் நிச்சயம் பணம் போட்டு தயாரித்தவர் தான் முதலில் திருப்தியாய் உணர வேண்டும். அது நடந்தேறியிருப்பது குறித்து ராமராஜுக்கு மகிழ்ச்சியே. இந்த மகிழ்ச்சி வியாபாரமாய் மாறினால் தான் நிஜ வெற்றி என்று ராமராஜுக்கு தெரியும். அவருக்கு தெரிந்தே சில பல காம்பரமைஸுகளை இந்த கடைசி நேர ஷூட்டிங்கில் செய்திருக்கிறார். ஆனால் அதை யாரும் அவ்வளவு சுலபமாய் கண்டுபிடிக்க முடியாத படி எமோஷனலாய் படத்தை கொண்டு சென்றதால் தப்பித்திருக்கிறோம் என்று அவருக்கே தெரியும். எல்லாரையும் வழியனுப்பி விட்டு தனியே தன் பைக்கில் மேல் உட்கார்ந்தபடி புகைத்துக் கொண்டிருந்த போது டி.. அசிஸ்டெண்ட் அவரிடம் வந்து நின்றான். இருபது இருபத்தி ரெண்டு வயதிருக்கும் அவனுக்கு. என்ன என்பது போல அவனைப் பார்த்தார்.

சார்.. படத்தை நானும் பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இந்த மாதிரி லவ் ஸ்டோரி வந்து ரொம்ப நாளாச்சு. படம் முடிச்சு ஒரு அரை மணி நேரம் அப்படியே உட்காந்துட்டேன். கீழே இன்னொரு ஸ்டூடியோல தெலுங்கு படம் டி.. ஒடுது. அந்த ப்ரோடியூசர் டிஸ்ட்ரிபியூட்டர். அவராண்ட உங்க படத்தைப் பத்தி சொன்னேன். படம் காட்ட முடியுமான்னு கேட்க சொன்னாரு. படம் பிடிச்சிருந்தா தெலுங்கு வாங்கிக்கிறாராம் என்ன சொல்றீங்க?” என்று கேட்டான். ராமராஜ் அப்படியே அவனை அணைத்து “ரொம்ப தேங்க்ஸ் தம்பி. உன் பேரு என்ன?’ என்றார்.

மகேஷ்”

மகேஷு. என் படத்துக்கு வந்திருக்குற மொத ரிவ்யூ. அது வெறும் விமர்சனமா இல்லாமல் வியாபாரமா கொண்டு வந்திருக்க. ரொம்ப நன்றி தம்பி. என்னைக்கு பாக்குறாருனு கேளு காட்டிரலாம்” என்றார்.

உங்களுக்கு ஓக்கேன்னா.. மேல நீங்க பார்த்த ஸ்டூடியோ ஃப்ரீயாத்தான் இருக்கு. உடனே கூட ரெடி” என்றான் மகேஷ்.,

ஒரு சினிமா ஆரம்பிக்கும் வரைதான் அதன் க்ரீயேட்டர் கையில். வளர வளர அதுவே அதன் எதிர்காலத்தை தீர்மானித்துக் கொள்ளும். அடுத்த அரை மணிநேரத்தில் ஹரி கிருஷ்ணா ரெட்டி, ராமராஜின் திரைப்படத்தை டி.. தியேட்டரில் தனியாய் பார்த்துக் கொண்டிருக்க, வெளியில் ராமராஜ் சாப்பாடு கூட சாப்பிடாமல் புகைத்துக் கொண்டேயிருந்தார். அவ்வப்போது கதவுக்கு அருகில் நின்று டைம் பார்த்தபடி மூணாவது ரீல் , நாலாவது என்று எண்ணிக் கொண்டேயிருந்தார். பின்னணியிசை ஓடும் போதே என்ன காட்சி? எப்படி ரசிப்பாரோ? என்று எண்ணமும் அவருள் ஓடிக் கொண்டிருந்தது. இரண்டு மணி நேரம் முடிந்து கதவைத் திறந்து கொண்டு ஹரிகிருஷ்ண ரெட்டி வெளியே வந்தார். அதீத சிகரட் புகைப்பால் ராமராஜை சுற்றி சிகரெட் நெடி இருந்தது.

 “எத்தினி வர்ஷமா ஃபீல்டுல இருக்கீங்க?” என்று வினவினார். ராமராஜ் யோசிக்காமல் தன் முதல் படத்தின் பெயரை சொல்ல, “ம்ம்..” என்றவர் “நாளைக்கு காலையில சொல்லுறேன்” என்று தோள் தட்டி கிளம்பிவிட்டார். ராமராஜின் மனம் படபடவென அடித்துக் கொண்டிருந்தது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close