[X] Close

'24' சலனங்களின் எண்: பகுதி 56 - ஸ்ரீதர், ரவி, டென்ஷன்


salangalin-enn

  • கேபிள் சங்கர்
  • Posted: 10 May, 2019 11:36 am
  • அ+ அ-

”அவனுங்க உரிமையா செய்யுறத நம்மளை குற்ற உணர்ச்சியோட செய்ய வச்சிட்டாங்க” என்று சொல்லியபடி பாரதி கொடுத்த கஞ்சாவை இழுத்த நித்யாவுக்கு இப்போது உலகமே பளிச்சென்று இருந்தது.

‘அதானே. பொம்பளை இல்லாம ஒண்ணியும் இவனுங்களால ஆட்ட முடியாது. இவனுங்க பண்ணா ரைட்டு. பொம்பளை பண்ணா தப்பா? லெட்ஸ் டூ இட் “ என்று உற்சாகமாய் கிளம்பினாள். இதைத்தான் பாரதி எதிர்பார்த்தாள். அவள் கிளம்பியவுடன் அவள் பின்னாலேயே அவளுடன் சென்றவள் டைரக்டரைப் பார்த்து ‘சக்சஸ்” என்று கட்டை விரலை உயர்த்தினாள்.

அடுத்த சில மணி நேரங்கள் நித்யா மிகத் திறமையான ஒரு நடிகையாய் மாறியிருந்தாள். சுற்றி இருப்பவர்களைப் பற்றி ஏதுவுமே தோன்றவில்லை. மனம் முழுவதும் பளிச்சென்று இருந்தது. நடுவே பாரதியை மட்டும் அழைத்து ’ஒரு பஃப் கிடைக்குமா?’ என்று அப்பாவியாய் கேட்டு இழுத்துவிட்டு போனாள். “வேற இல்லை இதான் லாஸ்ட்” என்ற பாரதியை தேவையேயில்லாமல் “ச்சோ..ச்வ்வீவீட்” என்று கட்டி அணைத்துவிட்டு சென்றாள்.

“ரொம்ப கான்ஷியசா இருக்காங்க. இந்த சீன் ரொம்பவே முக்கியம். அவங்களுக்கு புரியுது. எனக்கும் எப்படி அதை அவங்க கிட்ட சொல்லி ஈஸியாக்க முடியும்னு தெரியலை” என்று புலம்பிய டைரக்டரிடம் “நான் பார்த்துக்கறேன். நம்ம லைட்மேன்ல ஒருத்தரு ஸ்டப்பு வச்சிருக்காரு ரெண்டு வாங்கிட்டு வாங்க. ஒரு ட்ரை பண்ணுறேன்” என்ற பாரதியை ஆச்சர்யமாய் பார்த்த படி “ஆர். யூ.ஷுயூர்” என்று கேட்டான் டைரக்டர்.

“அவ அடிச்சான்னா ஷுயூர்” என்ற சொல்லிவிட்டு போன பாரதியின் உதவியால் இன்றைய ஷூட் மிகச் சிறப்பாய் முடிந்தது குறித்து அன்று பூராவும் இயக்குனன் பாராட்டிக் கொண்டிருந்தான்.

பாரதிக்கு தெரியும் போதை மனசின் தயக்கங்களை, உடைக்கும். அதீத தைரியத்தை, இன்பத்தை, துன்பத்தை தருமென்று. அவளுடய முதல் அனுபவம் ஒரு நல்ல போதையில் தான் நடந்தேறியது.

“எப்படி இருந்துச்சு பர்பாமென்ஸ்?” என்று ஆவலாய் கேட்ட நித்யாவை, கட்டி அணைத்து “ஆசம்” என்றாள் பாரதி.

*********************************************
யார் வந்தாலும் வராவிட்டாலும் நான் சொன்ன தேதியில் ரிலீஸ் செய்வேன் என்ற சுரேந்தரிடம் ஏதுவும் எதிர்த்து பேசாமல் வந்துவிட்டாலும் ஸ்ரீதரின் மனது பூராவும் ஏதுவும் தப்பா ஆயிரக்கூடாதே என்ற பயம் தொற்றிக் கொண்டது. படத்திற்கு ரிலீஸ் என்பது எத்தனை முக்கியம் என்று தெளிவாக அறிந்தவன். ஏனோ தானோவென்று ரிலீஸ் நிச்சயம் புது முக நடிகர் படங்களை துவட்டி சாய்த்துவிடும்.

சமீபத்தில் ரிலீஸான ஒரு ப்ராண்ட் படத்தின் இரண்டாம் பாகம் ஏனோ சரியாக ஓடவில்லை. காரணம் தயாரிப்பாளர் தரப்பில் விளம்பரம் சரியாக செய்யவில்லை என்று குற்றச்சாட்டு. இத்தனைக்கும் அந்த முதல் பாகம் இண்டர்நெட்டில் மட்டுமே பிரபலம். வசூல் ரீதியாய் பெரிதாய் ஓடாத படம் தான். பட். அதை நம்பி வெறும் இண்டர்நெட்டில் மட்டுமே விளம்பரப்படுத்தினால் போதுமென்று நினைத்தது விட்டார்களோ என்னவோ பேச்ச்சிருந்த அளவிற்கு படம் விலை போகவில்லை எல்லா வியாபாரத் தளத்திலும். அதே நிலை தன் படத்திற்கு வந்துவிடக் கூடாது என்று பயம் தான் ஸ்ரீதரை ஆக்கிரமித்திருந்தது.

அடுத்தடுத்த விநியோகஸ்தர்கள் மீட்டிங் நடந்தேறியது. அவுட் ரைட் வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்ன ரவி, சுரேந்தர் பேகிற போக்கில் “நீங்க பணம் கொண்டு வந்து தருவீங்கன்னு இங்க யாரும் காத்திட்டிருக்கலை” என்று சொல்லிவிட, முகம் சுளித்த ரவியை தனியே கூப்பிட்டு “அவருக்கு பிசினெஸ் தெரியாது சார். ப்ளீஸ் உங்களைத்தான் நம்பியிருக்கேன்” என்று பேசியதால் தொடந்து வியாபாரம் பேச உட்கார்ந்தார்.

சுரேந்தர் போன்றவர்களிடமிருந்து தன் படத்தை காப்பாற்ற யார் காலிலும் விழ தயாராய் இருந்தான் ஸ்ரீதர்.

ரவி ஒரு வியாபாரி. சினிமாவில் நடிகராய் வர ப்ரயத்தனப்பட்டு, அது முடியாமல் அங்கிங்கு கிடைத்த வேலைகளில் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்த போது பிரபல விநியோக கம்பெனியில் வேலைக் கிடைத்தது. கொஞ்சம் கொஞ்சமாய் வியாபாரம் பிடிபட்டது. சினிமா பற்றிய அறிவும் ஆர்வமும் அவனிடம் இருந்ததால், சரியான படங்களை தரம் பிரித்தான்.

இது ஓடும் இது ஓடாது என்று அவன் சொன்ன படங்கள் சொல்லி வைத்தார்ப் போல ரிசல்ட் கொடுக்க, அவனது ஏரியாவில் அவனின் கணிப்பு முக்கியமனாதாய் பட்டது. ரவி ஒரு படத்தை பார்த்துவிட்டு பிடிக்கலை என்று சொன்னதாய் தெரிந்துவிட்டால் படத்தின் வியாபாரம் அப்படியே வீழ்ந்து போய் விடக்கூடிய அளவிற்கு பிரபலமாக, தெரிந்த நண்பர் அவனை நம்பி குறைந்த வட்டியில் பணம் கொடுத்து உதவினார்.

முதல் படமே சின்ன கல்லு பெத்த லாபமாய் வர, அதன் பிறகு சுக்கிர தசைதான் அவனுக்கு. அவனுக்கு தெரியும் அரைகுறை தயாரிப்பாளர் தான் இங்கு பிரச்சனையென்று. அதனால் பிரச்சனையை ஸ்ரீதரின் பக்கம் திருப்பி தன் வியாபாரத்தை லாபகரமாய் முடிக்க காய் நகர்த்த ஆரம்பித்தான்,

இது தெரியாத ஸ்ரீதர் சுரேந்தரை எப்படியாவது நான் பேசி சரி பண்ணுறேன். ”நீங்க சொன்னதை மட்டும் ஹானர் பண்ணுங்க” என்று கெஞ்சிக் கொண்டிருக்க, ”பிப்ரவரி 14 காதலர் தினம். அன்னைக்கு பிக்ஸ் பண்ணிருவோம்” என்றார் விநியோகஸ்தர்.

“சார்.. பிப்ரவரி ஒன்ணு அன்னைக்கு ரெண்டு பெரிய படம் வருது. அதுக்கு அடுத்த ரெண்டாவது வாரம் சரியா இருக்குமா? “ என்று மேனேஜர் சேதுவை விட்டு கேட்கக் சொன்னான் ஸ்ரீதர்.

“வெள்ளி, சனி, ஞாயிறு மூணு நாள் தான் சினிமா இப்பல்லாம். இதுல யார் படமாயிருந்தா என்ன? நான் ரிலீஸ் பண்றேன்னா. எனக்குன்னு தியேட்டர் இருக்கு. நீங்க கவலைபடாதீங்க. அதும் நான் எத்தனையோ படம் பார்த்திருக்கேன். சார் ப்ரொடக்‌ஷன்ல தான் பைனான்ஸியல் கமிட்மெண்ட் எதுவுமே இல்லாமல் க்ளீன் ஸ்லேட்டா இருக்குற ப்ராஜெக்டை டைரக்டர் கொடுத்து வச்சிருக்கணும்” என்று சுரேந்தரை புரிந்து புகழ்ந்தார். கூட்டி வந்த ஸ்ரீதரை ஒதுக்கினார்.

ரிலீஸ் தேதி நெருங்கிக் கொண்டேயிருந்தது. “என்ன ஸ்ரீதர் நீ கூட்டிட்டு வந்த ரவி இன்னும் அட்வான்ஸ் தரவேயில்லை?” என்று கேட்க ஆரம்பித்துவிட்டார். “இருங்க சார் பேசிட்டு சொல்லுறேன். இண்டஸ்ட்ரியில அவருக்கு நல்ல நேம் இருக்குசார். சொன்னத ஹானர் பண்ணுறவர்னு” என்று நம்பிக்கையாய் சொன்னாலும், ரெண்டு நாளாய் ஸ்ரீதர் கூப்பிட்டு ரவி எடுக்கவேயில்லை என்று அவரிடம் சொல்ல விருப்பமில்லை.

ஒரு இயக்குனருக்கு இது தேவையேயில்லாத ஆணிதான். படம் இயக்குவது எப்படி ஒரு தனித்திறமையோ, அது போல படம் தயாரிப்பது அதை வியாபாரம் செய்வது தனித்திறமை வேண்டும். அது இல்லாமல் தான் கடந்த நான்கு படங்கள் பணமிருந்தும் வேலைக்கு ஆகவில்லை என்பதை உணராத கும்பலிடமிருந்து படத்தை காப்பாற்ற நினைத்தான் ஸ்ரீதர். வேறு வழியேயில்லாமல் ரவியின் ஆபீஸுக்கே போய் காத்திருந்தான். அவன் வந்தது தெரிந்தும் ரெண்டு மணி நேரம் காக்க வைத்து கூப்பிடான் ரவி.

“சொல்லுங்க டைரக்டர்”

“சார் . பார்த்துட்டு வரச் சொன்னாரு. அட்வான்ஸ் டாக்குமெண்டேஷன் எதுவுமே நடக்கலை. அதான்..” என்று இழுத்தான்.

“அட ஒண்ணுமில்ல டைரக்டர். ஒன்னாம் தேதி ரிலீஸாகுற ரெண்டு படத்தையும் நாமதான் ரிலீஸ் பண்ணுறோம். அதான் கொஞ்சம் டைட் இன்னும் ரெண்டு நாள்ல எல்லாம் சரியாயிரும்னு சார் கிட்ட சொல்லுங்க. யார் போனையும் அட்டெண்ட் பண்ண முடியலை சாரி” என்று அதீதமாய் மன்னிப்பு கேட்டான். அவன் சொன்ன காரணம் நியாயமாகவேபட்டது.

விநியோகஸ்தர்கள் பணத்தை புரட்டிக் கொண்டேயிருப்பவர்கள். தயாரிப்பாளர் ஒரு வருஷம் செய்த வேலையை ஒரு வாரத்துக்கு முன் ரிலீஸ் ஏற்பாட்டிலிருந்து பப்ளிசிட்டி வரை கவனத்தில் கொண்டு வந்து பரபரவென வாரக்கடைசி மூன்று நாளில் கணக்கு பார்க்க வேண்டிய கட்டாயம் ஆகிவிட்டது அவர்களது வியாபாரம். பெரிய படம் பெரிய பணம் எனும் போது டென்ஷன் நிச்சயம் இருக்கத்தான் செய்யும் என்று தன்னைத் தானே சமாதானபடுத்திக் கொண்டு திரும்பினான் ஸ்ரீதர்.

விளம்பரங்களில் ரவியின் நிறுவனப் பெயரோடு பிப்ரவரி 14 என விளம்பரப்படுத்திக் கொண்டேயிருந்தார்கள். பிப்ரவரி முதல் வாரம் ரெண்டு பெரிய படங்களும் ரிலீஸ் ஆயின. எதிர்பாராத வகையில் ரெண்டுமே ஹிட். ரெண்டாவது வாரம் தாண்டி எல்லா தியேட்டர்களிலும் ஹவுஸ் புல்லாய் போனது.

ரவிக்கு அடிக்கும் எல்லா கால்களும் அட்டெண்ட் செய்யப்படாமலே இருக்க, சுரேந்தருக்கு கடுப்பானது. சுரேந்தருக்கு போனை யார் அட்டெண்ட் செய்யாமல் விட்டாலும் கோபம் பொத்துக் கொண்டு வரும். தன்னை அவமதிப்பதாகவே நினைப்பார். கோபம் தலைக்கேறினாலும், ஸ்ரீதர் சொன்ன ரிலீஸ் டென்ஷன், பிரச்சனைகள் என்பது நியாயமாகவே இருந்ததினால் கொஞ்சம் அடக்கிக் கொண்டார்.

வார முடிவில் திரும்பவும் கால் அடித்துப் பார்த்தார் இம்முறையும் ரவி அட்டெண்ட் செய்யவில்லை. கடுப்பானார். ஸ்ரீதரை அழைத்து “நீ தான் கூட்டிட்டு வந்தேன் பெரிய புடுங்கின்னு. நீயே போய் மேட்டரை முடிக்கப் பாரு. இல்லாட்டி என்னால என் படத்தை ரிலீஸ் பண்ண முடியும்” என்று கடுப்படித்தார்.

தொடர்ந்து ரவிக்கு கால் அடித்து ஓய்ந்து போய் மீண்டும் அவனின் அலுவலகத்தில் போய் காத்து நின்றான். ரவி மிகவும் டென்ஷனாய் இருந்தான். “சும்மா போன் அடிச்சிகிட்டே இருக்காரு உங்காளு.. இங்க படம் நல்லா போகுது. அதுனால ரைடு வேற. நானே ஆயிரம் பிரச்சனையில இருக்கேன். சும்மா தொல்லை பண்ணிட்டு. பேப்பர் பாக்குறது இல்லை உங்காளுங்க எல்லாம்?”

“இல்ல சார். ரிலீஸ் டேட் அறிவிச்சாச்சு. நாளை பின்ன தப்பாயிருச்சுன்னா…” என்று தன்மையாய் பேசினான் ஸ்ரீதர்.

“என்ன பெரிய மயிரு ரீலீஸ் டேட்டு. நூறு படமெடுத்தவனே ரிலீஸுக்கு பத்து நாளு குறிச்சிட்டு வேலைப் பாக்குற நிலைமை இருக்கு. உங்க முட்டா ப்ரொடியூசருக்குத்தான் தெரியாது. உனக்கு தெரியாதா?. இதோ பாரு. உன் படம் நல்லாருக்கு இல்லைன்னு சொல்லலை. சரியா ப்ளான் பண்ணி ரிலீஸ் பண்ணனும். இல்லாட்டி ஊத்தி மூடிக்கிட்டு போவும். புரியுதா?.

அத அவன் கிட்ட சொல்லி புரியவை. இப்ப ரெண்டு படமும் நல்லா போகுது. நானே மூணாவது உன் படத்த இறக்கினா என்னை நம்பி வந்த பெரிய ஹீரோக்கள் என்ன நினைப்பாங்க?. வசூலை நானே குறைச்சதா நினைக்க மாட்டாங்க.. இந்த மாசம் லாஸ்டுல டேட் மாத்திப்போம். இருபதாம் தேதி வாக்குல பணம் அட்வான்ஸ் தர்றேன். கொஞ்சம் ரிலாக்ஸ்டா வேலை செய்வோம்” என்று கூலாய் சொன்னான் ரவி.

இவன் சொன்ன தொனியில் சொன்னால் கதை கந்தலாகிவிடும் என்பதால் மெல்ல ஆர்மபித்து இருக்கிற நிலையை சொல்லி, ரவிக்கு வந்த இன்கம்டாக்ஸ் ரைட் எல்லாவற்றையும் சொல்லி, அதனால் இம்மாத இறுதிக்கு மாற்றிக் கொள்ளும் படி ஐடியா சொன்னதாகவும், ரவி மன்னித்து மன்றாடி கேட்டுக் கொண்டதாய் சொன்னான். “அதை அந்த பு.மவன் என்னாண்ட சொல்லி கேட்கமாட்டானாமா? அவன் புளுத்தி காசு எனக்கு தேவையில்லை. நானே பண்ணிக்கிறேன்” என்றார் சுரேந்தர்.

தூக்கி வாரிப் போட்டது ஸ்ரீதருக்கு. அவசர அவசரமாய் ரவிக்கு போன் செய்து கொஞ்சம் தயவு செய்து நீங்களே நிலைமைய அவர்கிட்ட சொல்லி புரியவையுங்கள் என்று கெஞ்சிக்கூத்தாடி பேச சொன்னான். ரவியும் பாவம் பார்த்து சுரேந்தரை அழைத்தான். போன் எடுத்த முதல் வார்த்தையே பிரச்சனைக்குரியதாய் போனது. ஸ்ரீதரின் எதிர்காலம் போல.

- தொடரும்

முந்தைய அத்தியாயங்களைப் படிக்க

பகுதி 55 - https://bit.ly/2VuKqlw

பகுதி 54 - https://bit.ly/2VDEG9r

பகுதி 53 - https://bit.ly/2HkwYHa

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close