[X] Close

'24' சலனங்களின் எண்: பகுதி 55 - நித்யா, பாரதி, சிகரெட்


24-salanangalin-enn

  • கேபிள் சங்கர்
  • Posted: 03 May, 2019 10:28 am
  • அ+ அ-

இரண்டாவது குவாட்டர் போய்க் கொண்டிருந்தது. இப்போதெல்லாம் ராமராஜ் அனத்துவதற்கு கூட யாரையும் வைத்துக் கொள்வதில்லை.  தனியே குடிக்க ஆரம்பித்துவிட்டார்.

மணி ஏழானால் டான் என்று ரஞ்சித் ஒயின்ஸில் அடைக்கலம் ஆகிவிடுகிறார். என்னதான் இருபது வருடங்களாய் டாஸ்மாக் ஆனாலும் பழைய சினிமாக்காரர்களுக்கு இன்றைக்கும் அது ரஞ்சித் ஒயின்ஸ்தான். பல வடபழனி சினிமாக்காரர்களுக்கு எல்லா ஒயின்ஷாப்புகளின் பெயர்கள் அத்துபடி. ரஞ்சித், பிரபா, மணி என்று.

நல்ல போதை ஏற ஆரம்பித்திருந்த வேளையில் ராமராஜின் போன் அவர் பாக்கெட்டினுள் அடித்தது. டாஸ்மாக்கில் அலைபோன்ற பேச்சுக்கூச்சலில் அவருக்கு கேட்கவில்லை. சிறிது நேரத்தில் மீண்டும் அடிக்க, சரக்கு சப்ளை செய்யும் பையனுக்கு கேட்டு “சார்.. உங்க போன் அடிக்குது” என்று உசுப்பிவிட்டு போக, கொஞ்சம் யோசனையிலிருந்து விலகி, பாக்கெட்டினுளிலிருந்து போனை எடுப்பதற்குள் கட் ஆனது.

யார்? என்று பார்த்தார். மணியின் வீட்டிலிருந்து அவரது மாமனார் அழைத்திருந்தார். அடித்த போதையெல்லாம் சட்டென இறங்கினார்ப் போல இருந்தது. திரும்ப அவர்களுக்கு கால் அடிக்கலாம் என்று நம்பரை ரீ டயல் செய்ய முயல்வதற்குள் அவர்களே அழைத்தார்கள்.

”வணக்கம் ராமராஜ். எப்படி இருக்கீங்க?”

“நல்லாருக்கேங்க” என்பதை மிக கவனமாய் நாக்குழறாமல் பேச முயன்று வழக்கத்தை விட இடைவெளி விட்டு பேசினார். இடைவெளி டாஸ்மாக் சத்தத்தை எதிர்முனைக்கு கடத்தியது. திருப்பூரில் ஆயிரக்கணக்கில் தினக்கூலி தொழிலாளர்களை கட்டி மேய்ப்பவர்கள். அவர்களுக்கு புரியும் இந்த சத்தம் எங்கிருந்து வருமென்று. “நாளைக்கு சென்னை வர்றோம். உங்களை சந்திக்கணும். க்ரீன் பார்க் வந்துருங்க” என்று சொல்லிவிட்டு போனை கட் செய்தார் மணியின் மாமனார்.

ஒரு கணம் என்ன கேட்டோம்? என்ன பேசினோம்? என்றே ராமராஜுக்கு புரியவில்லை. தயாரிப்பாளர் சைடிலிருந்து வருகிறார்கள் என்பதே உற்சாகமான விஷயம். அவர்கள் என்ன சொன்னாலும். டேபிளின் மேலிருந்த மிச்சமிருந்த சரக்கை ஒரே கல்ப்பில் அடித்துவிட்டு, “டேய் தம்பி .இன்னொரு குவாட்டர் கொடுடா” என்று ஆடர் செய்தார்.

வந்த சரக்கை மொத்தமாய் குடித்தார். குடித்து விட்டு வண்டிய எடுக்கும் போதே நிதானம் தவறித்தான் இருந்தார். வண்டி பழக்கத்திற்கு அவரை ஓட்டிக் கொண்டு சென்றது. ஆனால் எதிரே வந்த பைக்காரன் போதையில்லாமல் இருந்தான். ஆனால் அவனை வண்டி ஓட்டி வரவில்லை. வண்டியை அவன் ஓட்டிக் கொண்டு வந்தான்.

நடுவில் வந்த மாட்டை கவனிக்காமல் வலது புறம் கட் அடிக்க எண்ணி, அதற்குள் மாடு நகர்ந்த படியால் வேறு வழியேயில்லாமல் ராமராஜ் வந்த இடது புறம் ஒடிக்க, இதை எதையும் எதிர்பார்க்காத அவரின் வண்டி ஒரே வேகத்தில் எதிரே குறுக்கே வந்த வண்டியின் மேல் மோதியது. வண்டியும் ராமராஜும் தனித்தனியே பிரிந்து விழுந்தார்கள்.

**********************************************

நித்யாவுக்கு அந்த வெப் சீரீஸ் ஸ்கிரிப்ட் மிகவும் பிடித்திருந்தது. முக்கியமாய் திரையில் நயந்தாரா போன்ற நடிகைகளுக்கு கிடைக்ககூடிய வாய்ப்பு. முழுக்க முழுக்க அவளது கேரக்டரைச் சுற்றியே போகும் திரைக்கதை.

இரண்டு மூன்று கிஸ்ஸிங் மட்டும் எக்ஸ்போசிங் காட்சிகள் இருந்தாலும், படிக்கும் போது எங்கேயும் உறுத்தவேயில்லை. திணிக்கப்படாத உடலுறவு காட்சிகள். தேவையானவை. படித்து முடித்ததும் தன்னால் இந்த கேரக்டரை சரியாய் செய்ய முடியுமா? என்கிற சந்தேகம் வந்தது.

ஆழமாய் மூச்சிழுத்து, பெருமூச்சாய் வெளியேற்றி, “நீ தான் பண்றே” என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள். இயக்குனரைப் பார்த்து “எனக்கு ஓக்கே. நான் ரெடி” என்றாள். எழுந்து வந்து அணைத்து “வெல்கம் டூ த டீம்”என்றான் இயக்குனன்.

அடுத்த சில வாரங்களில் ஷூட்டிங்கிற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டு பிக்ஸ் செய்த தேதியில் ஷூட் தொடங்கப்பட்டது. நித்யா மிகவும் இன்வால்டாக வேலை செய்தாள். தனக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு என்பதை ஒவ்வொரு நாள் ஷூட்டிலும் உண்ர்ந்து கொண்டேயிருந்தாள்.

முதல் உடலுறவு காட்சியின் போது அதீத கான்சியஸாய் இருந்தாள். க்ரூ மெம்பர்கள் மிகக் குறைவாய் கேமராமேன், இயக்குனர், ஒர் உதவியாளரைத் தவிர வேறு யாரையும் அறையில் அனுமதிக்காமல்தான் படம்பிடிக்க ஆரம்பித்தார்கள். ஹீரோவாக நடித்தவனின் கண்களில் தெரிந்த பளபளப்பை பார்த்ததும் அவளுக்கு ஒரு மாதிரியாய் இருந்தது.

அவள் உடைகளை அவன் கழட்ட விழையும் போது ஆர்வமாய் அவளின் மார்பில் சட்டென கை வைத்தான். இக்காட்சியில் இயல்பாய் எது தோன்றுகிறதோ அப்படி செயல்பட விடுவதுதான் இயல்பு என்றாலும் அவளால் முடியவில்லை. இயக்குனரிடம் ”ஒரு ஒன் அவர் தனியா இருந்துட்டு வந்திரட்டுமா? ப்ளீஸ்” என்றாள். புரிந்த கொண்ட இயக்குனன் “ வித் ப்ளெஷர். பட்.. கம் பேக் சூன்” என்று அனுப்பி வைத்தான்.

மேக்கப் அறைக்குள் வந்தவள் தன்னையே கண்ணாடியில் பார்த்தாள். வீட்டின் கண்ணாடியும், ராமும் தவிர வேறாரும் பார்க்காத தன் உடலை ஊரே பார்க்கப் போகிறது என்று நினைக்கும் போது லேசாய் உடல் விதிர்த்தது. 

ராமும் அவளும் பல உலகத் திரைப்படங்கள் ஒன்றாய் வீட்டில் அமர்ந்து பார்த்திருக்கிறார்கள். மீண்டும் அதே படத்தைப் பார்க்கும் போது அதில் நடிக்கும் நடிகர்களின் நிலை குறித்தும், அவர்களது உடல் வாகை குறித்தும் கிண்டலாய் பேசியிருக்கிறார்கள்.

ஆப்டர் ஆல் நடிப்புத்தானே. கான்ஸியசிலிருந்து வெளியே வருவதுதான் நடிப்பின்  முதல் அடிப்படை. அப்படியானால் இதுவும் நடிப்புத்தான். அதை உணர்ந்தால் எல்லாமே சரியாகும் என்று தோன்றியது. ஆனால் அப்படி நினைக்க அதே மனது தடை போடுகிறது. குழப்பமாய் அமர்ந்திருந்த வேளையில் கதவு தட்டப்பட்டது.  “யெஸ் கம்மின்’ என்றாள். உள்ளே வந்தவள் பாரதி. உதவி இயக்குனர்.

“கொஞ்சம் டைம் கொடு பாரதி” என்றாள் பெருமூச்சோடு.

அவளையே நின்று பார்த்தவள் “கேன் ஐ சிட்” என்று கேட்டாள். யாராவது பக்கத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.  தன் அருகில் இருந்த சேரை காட்டினாள். அமர்ந்தவள் எங்கே ஆரம்பிப்பது என்று யோசனையாய் நித்யாவையே பார்த்தாள்.

”ஐ கேன் அண்டர்ஸ்டேண்ட். யுர் ப்ராப்ளம்” என்று ஆரம்பித்தாள் மையமாய்.

நித்யா அமைதியாய் இருந்தாள்.

“கஷ்டம் தான். நடிக்குறது ஒரு விதத்துல கஷ்டம்னா. கொஞ்சூண்டு மாராப்பு விலகுற திருட்டு வீடியோவையே பொக்கிஷமா சேவ் செய்துட்டு, பாத்ரூம்க்கு கொண்டு போய் பார்ப்பானுங்க. இப்படி ஓப்பனா எக்ஸ்போஸ் பண்ணா என்னாகும்னு யோசனை வரது இல்லை?”

நித்யா பதில் சொல்லாமல் தன் மனதில் உள்ளதை சொல்கிறாளே என்று அவளையே பார்த்தாள். பாரதி தன் பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரட்டை எடுத்து “கேன் ஐ ஸ்மோக்” என்று அனுமதி கேட்டாள். அவளுக்கு சிகரெட்டின் நெடி பிடிக்கும். வெளியே சொன்னால் கிண்டலடிப்பார்கள் என்று சொல்லமாட்டாள். பல சமயம் பெட்டிக்கடைகளில் வாசலை கடக்கும் போது அங்கே விரவியிருக்கும் சிகரெட்டின் வாசனையை ஒரு கணம் நின்று சுவாசிப்பாள்.

பாஸிவ் ஸ்மொக்கிங் கேன்சரை வரவழைக்கும் என்கிற அலாரத்தை மீறி நின்று போவாள்.  “யெஸ் யூ கேன்” என்று பாரதியை அனுமதித்தாள். சிகரட்டை பற்ற வைத்து ஆழமாய் ஒரு இழுப்பு இழுத்துவிட்டு, நித்யாவின் பக்கம் சிகரட்டை நீட்டினாள். “ம்ம்ஹும். பழக்கமில்லை.” என்றாள்.

“ஜஸ்ட் ஹேவ் எ ட்ரை” என்று மீண்டும் சிகரட்டை அவளின்பால் நீட்டினாள் பாரதி.

“எங்கப்பா சிகரட் பிடிப்பாரு. சின்ன வயசுல சிகரட் பிடிச்சுட்டு என் கிட்ட வந்து முத்தம் கொடுத்தா நான் மூஞ்சிய திருப்பிப்பேனாம். அதுக்காக சிகரட் பிடிக்கிறத விட்டுட்டாராம். சிகரட்டையே விட்டுட்டாருனு  ஒவ்வொரு முறை பெருமையா சொல்லும் போது, எனக்காக விட்ட அந்த சிகரட்ட பாக்கும் போதெல்லாம் ஜிவ்வுனு இருக்கும்.

காலேஜ் படிக்கும் போது க்ரூப் ஸ்டடி போது ராத்திரில அடிக்க ஆரம்பிச்சோம். செம்ம திரில்ல இருந்துச்சு. என்னோட முதல் செக்ஸுவல் எக்ஸ்பிரியஸுக்கு பிறகு எல்லாம் முடிச்சிட்டு, நானும் அவனும் மாத்தி மாத்தி சிகரட்டை உறுஞ்சுனோம். தட் வாஸ் ஏ நைஸ் எக்ஸ்ப்ரீயன்ஸ். நான் சிகரட் புகையை அவனுக்குள்ள மாத்தி அவன் புகையை விடுவான். தட் லீட்ஸ் டூ த செகண்ட் ரவுண்ட்.” என்று வெட்கமாய் சிரித்தாள்.

தன் கையில் புகைந்து கொண்டிருந்த சிகரட்டை பார்த்தாள் நித்யா. எடுத்து வாயருகில் வைக்கும் போதே சிகரட்டின் மணத்தோடு, வித்யாசமான வாசனை நாசியில் ஏற, லேசாய் கமறியது. இருமினாள். பல சினிமாக்களின் ஆரம்ப காட்சி நாயகனான முகேஷ் நினைவுக்கு வந்தான். பகபகவென சிரித்தாள்.

அவள் சிரிப்பது எதற்கு என்று புரியாவிட்டாலும், பாரதியும் சிரித்தாள். பின்பு முகேஷைப் பற்றி சொல்லி சிரித்தார்கள். தன் முதல் பஃப்பை இழுத்து, இருமி, சரியாகி, பதட்டமில்லாமல் இரண்டாவது ப்ஃபை இழுத்து உள்ளூக்குள் தம் கட்டும் போது ஏதோ நிரவி உள் போவது போல அவளுக்கு உணர்ந்து கண்கள் மின்ன சிரித்தாள்.

”யூ நோ ஒன்திங். அதைப் பண்ணாத, இதைப் பண்ணாத, நீ சாமி, பூதம், அது இதுன்னு ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி நம்மளை அவனோட பொதுபுத்திக்கு நாயைப் போல பழக்கி வச்சிருக்கானுங்க. எதை செஞ்சாலும் அவன் என்ன நினைப்பான்? ஊரு என்ன நினைக்கும்னு. ஏன்னா அவனுங்களுக்கு பயம். எங்க விட்டா இவ எல்லா ஆம்பளையும் தூக்கி சாப்டுருவாங்குற பயம்.

பொம்பளை என்னைக்கு தன்னைப் பத்தின கான்சியஷ விடறாளோ அன்னைக்கே அவ சக்கஸ் ஆக ஆரம்பிச்சிருவா.  ஆம்பளைங்க எப்பவுமே கான்சியச விட மாட்டாங்க. ஆனா அது அவங்களுக்கு இயல்புலேயே இருக்கு. ஆனா பொம்பளைக்கு சொல்லிக் கொடுத்தது. சொல்லிச் சொல்லி சொல்லி, எப்பவுமே கான்சியசா ஆக்கிட்டானுங்க. அதை விடறதை பெரிய விஷயமா பேசி இன்னும் கான்ஷியசா ஆக்குறாங்க.

இன்னைக்கும் பொண்ணுங்க தம் அடிக்கிறத ‘ஆ”னு வாய் பொளந்து பார்க்குற கூட்டம் தான் அதிகம் நம்ம ஊர்ல. தம் அடிக்குறது, குடிக்கிறது, பிடிச்சவனோட படுக்குறது சரிங்கிறதுகாக சொல்லலை. ஆனா இதையெல்லாம் அவனுங்க உரிமையா செய்யுறத நம்மளை குற்ற உணர்ச்சியோட செய்ய வைச்சுட்டாங்க. இன்னொரு பஃப் அடிக்கிறியா?” என்று அவளுக்கு சிகரட்டை தர, இப்போது உற்சாகமாய் தன் இழுப்பை இழுத்தாள் நித்யா. அவள் அடித்தது கஞ்சா.

- தொடரும்

முந்தைய அத்தியாயங்களைப் படிக்க

பகுதி 54 - https://bit.ly/2VDEG9r

பகுதி 53 - https://bit.ly/2HkwYHa

பகுதி 52 - https://bit.ly/2UqymMN

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close