[X] Close

'24' சலனங்களின் எண்: பகுதி 53 - புது ஒப்பந்தம்


24-salangalin-enn

  • கேபிள் சங்கர்
  • Posted: 21 Apr, 2019 12:20 pm
  • அ+ அ-

ஸ்ரீதருக்கு அவமானத்தால் அழுகை தான் வந்தது. எந்தவித தவறும் செய்யாமல் மன்னிப்பு கேட்பது தன்மானத்துக்கு இழுக்கு என்று பட்டது. தன்மானத்துக்காக பெரிய பெரிய ஆட்கள், வாய்ப்புக்கள் எல்லாவற்றையும் தூக்கிப் போட்டிருக்கிறான். திடீரென குப்பையாய் தன்னை உணர்ந்தான்.

துக்கம் உள்ளுக்குள் மண்டி, மண்டி வெடிக்க, முகத்தை மூடிக் கொண்டு பொது இடம் என்று பார்க்காமல் அழ ஆரம்பித்தான். இதை இருவரும் எதிர்பார்க்கவில்லை. அதிர்ந்து போய் ஸ்ரீதர் தோள் பிடித்து தனியே அழைத்துச் சென்றார்கள்.

அலுவலகத்தில் வாசலில் இருந்த புங்கைமர நிழலில் நிறுத்தி, அவன் அழுது முடிக்கும் வரை பொறுமையாய் இருந்தார்கள். கர்சீப் எடுத்து முகத்தை,  அழுந்த துடைத்துக் கொண்டு, “சாரி சார்” என்றான் ஸ்ரீதர்.

“பரவாயில்லை. அழுறது நல்லதுதான். அதுவும் பொது வெளியில. அழுகையில மனுஷனோட எல்லா ஈகோவும் போயிரும். சட்டுனு மனசு வெளிச்சமாயிரும். அது ஒரு லைப் லைன் மாதிரி. கிடைக்கிற வெளிச்சத்துல பிடிச்சிட்டு எழுந்து நின்னுறணும். இல்லாட்டி திரும்ப மேக மூட்டம் மாதிரி மூடிக்கும். சாரி டைரக்டர். உங்களுக்கே டயலாக் சொல்லுறேன்.” என்று சிரித்தார். 

ஸ்ரீதருக்கு அவர் சொல்வது போல் தான் இருந்தது. சட்டென உலகம் பளிச்சென்று ஆகிவிட்டதாய் தோன்றியது.

“சரி சார். சொல்லுங்க எப்படி மன்னிப்பு கேட்கணும்? ஆனா இந்த வலி எந்த ஒரு கிரியேட்டருக்கும் வரக்கூடாது. அறிவு இருக்குறவன் கிட்ட காசு இருக்குறது இல்லை. காசு இருக்குறவன் கிட்ட அறிவு இருக்குறது இல்லை. கடவுள் என்னமா ஸ்கெட்ச் போட்டு ஸ்க்ரீன் ப்ளே அமைச்சிருக்கான் பாருங்க. ம்ம் நான் ரெடி சார்.” என்று முகம் துடைத்து நின்ற ஸ்ரீதரை இருவரும் ஆச்சர்யத்தோடு பார்த்தார்கள்.

“ரெண்டு நாள் சாருக்கு கால் அடிச்சிட்டே இருங்க. அவரு எடுக்க மாட்டாரு. இல்லாட்டி யாரையாச்சும் எடுக்கச்  சொல்லி அவமானப்படுத்துவாரு. இக்னோர் பண்ணுங்க.

எப்படி உங்களோட திரும்ப பேச வைக்குறதுன்னு ப்ளான் பண்ணணும். எது எப்படியோ நம்ம ஆபீஸுல இருக்குற சாரோட அத்தனை ப்ரெண்சுகளுக்கும் நாம எடுத்தபடத்துலேயே இதான் படங்கிற முடிவோட இருக்காங்க. எங்கங்க தூண்டி விடணுமோ அங்க தூண்டிவிடுறேன்.

அத்தோட இவர் படமெடுப்பாரு ஆனா பாதில நிப்பாட்டிடிவாருனு ஒரு பேச்சு இருக்குறத அவருக்கு அவமானமா உறுத்துற அளவுக்கு சொல்ல ஆட்கள் ரெடியா இல்லை. அதை சொல்ல வைக்கணும்.

ரெண்டு நாள். பொறுமையா இருங்க. எத்தன அவமானம் வந்தாலும். நீங்க ஜெயிக்கணும். அதுக்கு என்ன காரியம் ஆகணுமோ அதைப் பண்ணுவோம்” என்று கிளம்பினார் சேது.

சிகரட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டே “ஒரு படம் பண்ண டைரக்டர் பண்ற திரைக்கதையை விட மத்தவங்க அதை முடிக்க பண்ற திரைக்கதைதான் அபாரமா இருக்குல்ல?”என்று காசியைப் பார்த்துக் கேட்டான் ஸ்ரீதர். அவன் பேச்சில் வெறுமை இருந்தது.

**********************************

அடுத்த ரெண்டுநாள் சேது சொன்னார்ப் போல தொடர்ந்து சுரேந்தருக்கு கால் செய்தான் ஸ்ரீதர். கூடவே பயணிக்கிற சேது அவரை படித்து வைத்திருந்திருக்கிறார். அவர் சொன்னது போலவே போன் எடுக்கவில்லை. ரெண்டொரு முறை எடுத்து ஸ்ரீதர் “சார்.. ஹலோ..? ஹலோ” என்று கூப்பிட்டதை கதறலாய் எண்ணி சுரேந்தர் கட் செய்துவிட்டு “ங்கொத்தா அழுவட்டும்” என்று கொக்கரித்தார்.

உடனிருந்தவர்கள் மையமாய் தலையாட்டினாலும், சேது மட்டும் ”டைரக்டர் ரொம்பவே ஃபீல் பண்ணுறாரு. எல்லார்கிட்டேயும்.” என்று மெல்ல ஆரம்பித்தார்.

“பின்ன வலிக்குமுல்ல. அதுக்குத்தானே வச்சேன் ஆப்பு” என்று மீண்டும் ஆரவாரமாய் சிரித்தார்.

”அக்கா வேற ரொம்ப வருத்தப்பட்டாங்க. போன வாரம் அக்கா கிட்ட பாட்டு ட்ரைலர் எல்லாத்தையும் அனுப்பி விட்டீங்கல்ல. அவங்களுக்கு இந்த வாட்டி ரொம்ப பிடிச்சிப் போச்சு. ஏண்டா என்னா பிரச்சனை?னு கேட்டுட்டே இருக்காக” என்று அஸ்திரத்தைப் போட்டார்.

”என்ன மயிருக்கு நீ அவ கிட்ட இங்க நடக்குறத சொல்லுற?” என்று சேதுவை எகிறினார்.

“அக்காவே டைரக்டர் கிட்ட பேசி கன்னாபின்னானு திட்டியிருக்காங்க. வாழ்க்கை கொடுத்தவரு அப்படி இருப்படித்தான் பேசுவாரு. நீ எப்படி பதில் பேசலாம்னு விட்டு வாங்கிட்டாக. டைரக்டர் அழுதுட்டாராம்.

நான் தெரிஞ்சே பேசலைங்க. சாருக்கு எதிரே அப்படிபேசுவனா? நான் போதையில தெரியாம தப்பு பண்ணிட்டேன் போல. மன்னிப்பு கேட்க போன் போட்டா சார் எடுக்க மாட்டேன்குறாரு புலம்பியிருக்காரு.”

”ஆமா சார். நேத்து நான் சிகரட் வாங்கப் போவும் போது கடையில டைரக்டரப் பார்த்தேன். அழுகுறாரு. நான் ஏன் அப்படி பேசினேன்னே தெரில சார். சரக்கு அடிக்காம இருந்திருக்கணும் இல்லாட்டி நான் சார் கிட்ட தப்பா பேசுவனானு ஒரே அழுவாச்சி.” என்றார் சுரேந்தரின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர்.

அவர் தான் சுரேந்தரை அவ்வப்போது தரைக்கு கொண்டு வருவதில் முக்கியமானவர். சமயங்களில் தனிமையில் இருக்கும் போது சுரேந்தர் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டுகிறவர். அவரை வைத்துத்தான் பல முறை சேது சுரேந்தரிடம் காரியம் சாதித்துக் கொள்வார். ஆனால் இம்முறை சேது எதுவுமே சொல்லாமல் அவரே பேசியிருக்கிறார்.

அவர் பேசியதும் சேது அவரை நிமிர்ந்து பார்த்தார். அவர் மையமாய் சேதுவைப் பார்த்து சிரிக்க புரிந்து கொண்டு அமைதியானார். தொடர்ந்து அடுத்தடுத்து வந்தவர்கள் அனைவரும் ‘டைரக்டர் ரொம்ப வருத்தப்படுறாரு. அழுவுறாரு” என ஆளாளுக்கு ஒவ்வொரு டயலாக் மோடில் சுரேந்தரின் காது பட பேச வைக்கப்பட, சுரேந்தர் நெகிழ்ந்தார்.

அவருக்கும் இந்தப்படம் பிடித்துத்தான் இருந்தது. அவர் எடுத்த படங்களைப் பார்த்தவர்கள் இத்தனை தூரம் பாராட்டியதேயில்லை ஏதோ முகத்துக்கு எதிராய் பாராட்டியிருந்தாலும் பின்னால் போய் இவனுக்கு எல்லாம் என்ன மயிரத் தெரியும் என்று பேசுவது அவருக்கு தெரிந்தாலும் சினிமாவில் கிடைக்கும் புகழும் போதையும் பெண்களும் அவருக்கு போதைதான். 

இம்முறை சுரேந்தர் அழைத்த போது எடுத்த மாத்திரத்தில் “ஆபீசுக்கு வாங்க டைரக்டர்” என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டார். மொத்த அலுவலகமும் சந்தோஷத்தில் குதூகலித்தது.

**********************************

ராம் அக்ரிமெண்டை ஒரு முறை நிதானமாய் படித்துப் பார்த்தான். கண்ணன் தன்னிடம் சொன்ன விஷயங்களே அதில் இருந்தது. கண்ணை மூடி கடவுளை வேண்டிக் கொண்டு கையெழுத்திட்டான்.

கண்ணன் அவனை ஆரத்தழுவி “வெல்கம்” என்று வரவேற்றான். படபடவென கேமரா க்ளிக் செய்யப்பட்டது. அடுத்த நொடி ஆன்லைன் மார்கெட்டிங் டீமிடம் அனுப்பப்பட ராம் நடிக்கு புதிய படத்தின் செய்தி ட்ரெண்டிங் செய்யப்பட்டது.

ஒரு டீவி சேனல் பேட்டியில் இப்படத்தின் வாய்ப்புக்கு மிக முக்கியமான காரணம் தயாரிப்பாளர் சுரேந்தர் தான் என்று சொல்லியிருக்க, அது வெளிவந்த அடுத்த சில நிமிடங்களில்  ‘வாழ்த்துக்கள்” என்று ஸ்ரீதரிடமிருந்து வாட்ஸப் வந்தது.

அவனுக்கு “நன்றி” என்று டைப் செய்து அனுப்ப எண்ணி, கால் செய்தான்.

“ஹலோ ஸ்ரீதர்”

“வாழ்த்துக்கள் ராம்”

“தேங்க்ஸ். உங்களாலத்தான் இந்த வாய்ப்பே”

“நீங்க திறமையானவர் எதை எங்க எப்ப பேசணும்னு சரியா புரிஞ்சிருக்கீங்க ராம். ”

“நம்ம படம் ப்ரோமோ பார்த்துத்தான் இந்த வாய்ப்பு எனக்கு”

“குட். ஆல் தெ பெஸ்ட். கொஞ்சம் பாடி லேங்குவேஜுல கான்சண்ட்ரேட் பண்ணுங்க” என்று சொல்லி வாழ்த்திவிட்டு போனை வைத்துவிட்டான். ராமுக்கும் என்ன பேசுவது என்று புரியவில்லை. அவன் வாழ்த்தில் கொஞ்சம் கோபம் இருந்ததை புரிந்து கொண்டான்.

இண்டர்வியு கொடுத்த பிறகுதான் ஸ்ரீதரின் பெயரை தான் எங்கேயும் குறிப்பிடவேயில்லை என்பதை.

யார் முதல் எனும் போட்டி நிறைந்த உலகில் கிடைக்கிற வாய்ப்பில் நன்றியோ, நக்கலோ தெரிவித்தே ஆக வேண்டிய கட்டாயம் இன்று நம்முன் கிடைக்கும் கேமரா, மீடியாவின் கவனம் நாளை கிடைக்குமோ? கிடைக்காதோ? என்று யாருக்கு தெரியும். ராம் மிகவும் வருத்தப்பட்டான்.

**********************************

சில்லென்ற பீரை கடகடவென ரஞ்சித் ஒயின்ஸ்பாரில் குடித்துக் கொண்டிருந்தார் ராமராஜ். இத்தோடு மூன்றாவது பீர். வாட்ஸப்பில் ராமின் புதுப்பட அறிவிப்பைப் பார்த்தார். சிரித்துக் கொண்டார்.

“நடிகன் என்னைக்கும் பொழைச்சுக்குவான். நல்லாருடா” என்று மனமார வாழ்த்தினார். ஒரே மூச்சில் பீரை முடித்தவர் பையனிடம் “ந்தாடா இன்னொரு பீர் கொண்டு வா” என்றார். “அண்ணே காசு காலியாயிருச்சுண்ணே” என்றான் பையன். அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் தன் பாக்கெட்டில் பணத்தை தேடினார்.

சில்லரையாய்த்தான் இருந்தது. சரி போ என்பது போல அவனிடம் கையாட்டிவிட்டு மெல்ல எழுந்தார். லேசான தள்ளாட்டம் நடையில் இருந்தது. மெல்ல வெளியே வந்து சிகரட்டை எடுத்து பற்ற வைத்தார். ஆழ இழுத்து புகையை விட்டார். 

எதிர்காலமே சூன்யமாய் புகையின் நடுவே தெரிந்தார்ப் போல இருந்தது. “போடா டேய்” என்று ஆகாயத்தைப் பார்த்து சத்தமாய் கத்தியபடி மெல்ல ரோட்டினுள் கலந்தார். அவரின் பையில் இருந்த போன் அடித்துக் கொண்டிருந்தது அவருக்கு கேட்கவில்லை. மணியின் மனைவி அடித்த கால் அது.

**********************************

”வணக்கம் மேன் நான் சுப்ரியா. வெப்சீரீஸ் ஆடிஷன் வந்தீங்க இல்ல. சார் உங்களை செலக்ட் பண்ணியிருக்காரு. பைனல் டிஸ்கஷனுக்கு நாளைக்கு வர முடியுமா?” என்ற உதவி இயக்குனர்  குரல் கேட்டது நித்யாவுக்கு உற்சாகம் பீறிட்டது.

“ஷுயூர்.. ஷூயூர் எத்தனை மணிக்கு?” என்று கேட்டாள்.

அடுத்த நாள் சொன்ன நேரத்தில் சரியாய் இருந்தாள். ஆடிசனின் போதே அந்த டீமை மிகவும் பிடித்துப் போனது. முழுக்க முழுக்க, இளைமையான உதவி இயக்குனர் டீம். மிடில் ஏஜ் சென்சிட்டிவ் ரைட்டர். அதே வயதில் அனுபவமுள்ள இயக்குனர். என பர்பெக்ட் டீமாய் இருந்தது.

“பாருங்க நித்யா. உங்களுக்கு வெப் சீரீஸ் பத்தி தெரியும்னு நினைக்கிறேன். கொஞ்சம் போல்ட்டா சென்சார் பயம் இல்லாம சுதந்திரமா செயல்படுற இடம். நம்ம சீரீஸ்ல ரெண்டு மூணு எக்ஸ்போசிங் சீன் இருக்கு. பட் நாட் வல்கர்.

ப்ரண்டல் நியூட் இல்லாட்டியும் பேக்ல விஷுவல் காட்ட வேண்டியிருக்கும். ரெண்டு செட்யூசிங் சீன்ஸ் இருக்கு. முக்கியமா பீமேல் ஓரியண்டட் சீரீஸ்ங்குறதுனால இது தேவை. சும்மா ஹைஃப்புக்கு இல்லை. நீங்க முடிவெடுக்கிறதுக்கு முன்னாடி ஐ வில் கிவ் யூ த ஸ்கிரிப்ட். பட் ஆன் ஒன் கண்டீஷன்.

அதை இங்கேயே படிக்கணும். அந்த சீன்ஸ் எல்லாம் நிச்சயம் கதைக்கு தேவையான சீன்ஸ். உங்களுக்கு ஓக்கேன்னா அப்புறம் சைன் பண்ணிக்கலாம் ஓக்கே” என்றார் இயக்குனர்.

அவரின் ஓப்பன் பேச்சு அவளுக்கு மிகவும் பிடித்தது. ஸ்கிரிப்டை படிக்க ஆர்மபித்தாள். நடுநடுவே காப்பி, தண்ணீர் என எல்லாம் வந்து கொண்டேயிருந்தது. முழுக்க முழுக்க, தன்னைச் சுற்றியே நடக்கும் கதை பத்து வருஷம் காத்திருந்தாலும் சினிமாவில் இப்படியோர் கேரக்டர் தனக்கு கிடைக்கவே கிடைக்காது என்று தோன்றியது.

ஒரு உதவி இயக்குனராய் இக்கதை தனக்கு கொடுக்கப் போகும் வெளிச்சத்தை உணர்ந்தாள். வெளியே வந்து ராமுக்கு போன் செய்தாள். “கொஞ்சம் எக்ஸ்போஸிங் சீன்ஸ் இருக்கு. பட் இது என் லைப் டைம் கேரக்டர் போனா கிடைக்காது. என்ன சொல்றே?” என்ற அவளது கேள்வியில் இருந்த ‘ஒத்துக்கோயேன்’ என்கிற உள்குரல் அவனுக்கு புரிந்தது. “உன் இஷ்டம்’ என்றான் ராம்.

- தொடரும்

முந்தைய அத்தியாயங்களைப் படிக்க

பகுதி 52 - https://bit.ly/2UqymMN

பகுதி 51 - https://bit.ly/2uWG72K

பகுதி 50 - https://bit.ly/2GhIuDX

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close