[X] Close

'24' சலனங்களின் எண்: பகுதி 52 - மன்னிப்பு


24-salangalin-enn

  • கேபிள் சங்கர்
  • Posted: 12 Apr, 2019 12:18 pm
  • அ+ அ-

ஸ்ரீதரின் ஃபோன் அடிக்க, எடுத்தான். 

மறுமுனையில் காசி “இப்பத்தான் எழுந்திருக்கிறியா?” என்றான்

“ஆமாம். என்ன விஷயம்?”

“ஒண்ணுமில்லை. கொஞ்சம் பேசணும். குளிச்சி ரெடியா இரு. டிபன் வாங்கிட்டு வரவா?” என்று கேட்டான்.

“எதுனாச்சும் சீரியசா?”

“அதான் நேர்ல வர்றேன் இல்லை. சொல்லுறேன். நாலு இட்லி வடகறி போதுமில்லை” என்று சொல்லிவிட்டு போனை கட் செய்தான். காசி எப்போதும் இப்படித்தான் பேச வேண்டியதை மட்டுமே பேசி வைத்துவிடுவான்.

சூடாக ஒரு டீ குடித்தால் நன்றாக இருக்குமென்று தோன்றியது.  பல் தேய்த்து, கீழிறங்கி கடைக்குப் போய் டீ குடித்துவிட்டு, ஒரு சிகரட்டை எடுத்து பற்ற வைத்தான். புகையை ஆழ இழுத்த போது  சுரேந்தர் “என் கால்ல வந்து விழ வைக்குறேன் பார்” என்றதையும், “உன் படமும் என் பொட்டிக்குள்ளதான்” என்று வேட்டியை தூக்கிக் காட்டியது நினைவுக்கு வர, கோபமாய் இன்னும் வலிந்து சிகரெட்டை இழுத்ததினால் சீக்கிரமே முடிந்தது.

இன்னொரு சிகரட்டை வாங்கி பற்ற வைக்கும் போது, காசி “மச்சி எனக்கும் பத்த வை” என்று தன் சிகரட்டோடு முகத்தின் முன் நின்றான். அவனுக்கும் பற்ற வைத்துவிட்டு, “டீ” என்று கேட்டான். காசி வேண்டாம் என்று மறுத்து “பசிக்குது டிபன் சாப்பிடுவோம். வா” என்று சிகரெட்டை இழுத்தபடி முன் போனான். போன மாத்திரத்தில்  டிபன் பேக்கை திறந்து ப்ளேட்டில் பரப்பி ஸ்ரீதருக்கு தனியாய் எடுத்து வைத்துவிட்டு சாப்பிட ஆரம்பித்தான்.

அவன் பசி புரிந்து அவனுடன் ஸ்ரீதரும் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தான். சாப்பிட்டு முடிக்கும் வரை ஏதுவுமே பேசவில்லை. முடித்து ஆளுக்கொரு சிகரெட்டை எடுத்து பற்றவைத்து “நீ நேத்தைக்கு அங்க போயிருக்க கூடாது ஸ்ரீ” என்றான் காசி.

“எத்தனையோ நாள் அவாய்ட் பண்ணியிருக்கேன். நேத்து எது நடக்ககூடாதோ அது நடந்திருச்சு.”

“சேது சார் காலையில எல்லாத்தையும் சொன்னாரு. அபீஸ் பக்கம் யாரும் வரக்கூடாதுன்னுட்டாராம்.”

“சார். இந்த மாச சம்பளம்ணேன். அட இருப்பா. .நீ வேறனு போனைக் கட் பண்ணிட்டாரு”

“ம்ம்”

“என்ன பண்ணப் போற?”

”தெரியலை. ரொம்ப அசிங்கமா பேசிட்டான். எத்தனை உழைச்சிருப்போம். இந்த கடவுள் ஏண்டா இப்படி முட்டாக்…..கெல்லாம் காசு தர்றான்?

“நமக்கு அறிவை கொடுக்குறான் இல்லை. எல்லாமே ஒரே இடத்துல இருந்திருச்சுன்னா சமதர்ம சமுதாயம் வந்திரும்னு கடவுளே ப்ளான் பண்ணித்தான் படைச்சிருக்கான் போல” என்று தத்துவமாய் பேசி தனக்குள்ளே காசி சிரித்துக் கொண்டதை பார்த்து ஸ்ரீதரும் சிரித்தான்.

“நம்ம நிலமைய நினைச்சா சிரிப்பாத்தான் இருக்கு காசி. கால்ல விழ வைக்குறேங்குறான். எச்சத் தே……………ன்.”

“கெட்ட வார்த்தையில தனியாத்தான் திட்ட முடியும் ஸ்ரீ. நேர்ல திட்ட முடியாது. அவன் எதிர்காலம் நம்ம கிட்ட இல்ல. நம்மளுதுதான் அவன் கிட்ட. ஒர் படம் ரிலீஸாகாம இருக்குறதுக்கு பல காரணம் இருக்கலாம். ஆனால் தயாரிப்பாளரே நிறுத்தி வைச்சா அதுக்கு காரணம் நாமதான்னு இண்டஸ்ட்ரி பேசும்.

என் ப்ரெண்டு ஒருத்தன். இருந்துருந்து பத்து வருஷம் கழிச்சு படம் பண்ணான். படம் கிடைக்குற வரைக்கும் ஒழுங்கா இருந்தான். ஷூட்டிங் போன நாள்லேர்ந்து ஒரே அலப்பறை. பத்து நாள் ஷூட்டிங்குல எட்டு அசோசியேட், ரெண்டு அஸிஸ்டெண்ட் மாறிட்டானுங்க.

எந்த ஹீரோனால படம் கிடைச்சுதோ. அவனே கோவாப்ரேட் பண்ணலை. படம் முடிஞ்சு சென்சார் ஆகுற நேரத்துல இருந்த ஒரே நம்பிக்கையான கேரியர் கேள்விக்குறியாகி இன்னைய வரைக்கும் ஒண்ணும் தேரலை.

ப்ரோடியூசர் மயிராப் போச்சுனு படத்தை தூக்கிப் போட்டுட்டு. அதுக்கு அப்புறம் பத்து படத்தை டிஸ்ட்ரிப்யூஷன், ப்ரொடக்‌ஷனு அவன்பாட்டுக்கு வியாபாரம் பண்ணிட்டுத்தான் இருக்கான். ஆனா அவன் படத்தைப் பத்திக் கேட்டா சரியான பதில் இல்லை.

இன்னைய வரைக்கும் படத்தை டிஸ்ட்ரிப்யூட்டர் ஷோக்கு கூட ஏற்பாடு பண்ண முடியாதுங்குறான். மூணு வருஷம் ஆச்சு. இனி படம் வந்தாலும் அது வேலைக்கு ஆகாது. எல்லாத்துக்கும் காரணம் அவன் ஆட்டிட்டியூட். அவன் மேல இருக்குற கோவத்தையெல்லாம் டெக்னீஷியன்கள் அவன் கிட்ட காட்டினாங்க. அது ப்ரொடக்‌ஷன்ல தெரிஞ்சுச்சு. மொத்தமா படம் முடிஞ்சு, வியாபாரம் ஆகலைனு ப்ரொடியூசர் டைரக்டர் மேல காட்டிட்டானுங்க. இன்னைய வரைக்கும் அடுத்த படம் வரலை.” என்று சொல்லியபடி, ஸ்ரீதரின் சிகரட் பாக்கெட்டிலிருந்து இன்னொரு சிகரட்டை எடுத்து பற்ற வைத்தான்.

“இப்ப என்னாங்குற? நான் செஞ்சதுதான் தப்புங்குறியா?”

“அந்த பட டைரக்டர் கேரியர் மாதிரி ஆகிறப் போவுது. ஜாக்குறதையா இருங்குறேன்”

“என் இடத்துல நீ இருந்து பாத்திருக்கணும். அப்ப இப்படி பேச மாட்டே?”

“ஒரு கோ டைரக்டர் அவமானபடாம வாழ முடியாதுனு உனக்கு தெரியாதா ஸ்ரீ?”

அவன் சொன்னது ஸ்ரீதருக்கு புரிந்தது. அதே நேரத்தில் இத்தனை வருஷ திறமையையும், பொறுமையையும் ஒரு குடி நாள் கவிழ்த்துவிட்டதை நினைத்து உள்ளுக்குள் பெரும் ஓலம் எழுந்து கொண்டிருப்பதை உணர்ந்தாலும், தான் செய்தது தன்மானமான செயல் என்றும் அதை நினைத்து வருந்தத் தேவையில்லை என்று வேறொரு குரலும் உள்ளுக்குள் எழுவதை தடுக்க முடியவில்லை.

சேது சார் போனில் அழைத்திருந்தார்.

“என்ன டைரக்டர். எழுந்தாச்சா? மப்பு எல்லாம் தெளிஞ்சிருச்சா?” என்றவரின் குரலில் கொஞ்சமே கொஞ்சம் கிண்டல் இருந்ததாய் பட்டது ஸ்ரீதருக்கு.

“ம்.. எழுந்தாச்சு சார் சொல்லுங்க”

“ஆபீஸ் பக்கத்துல இருக்குற டீக்கடைக்கு வர முடியுமா?”

“ஏன் ஆபீஸ்ல மீட் பண்ணக்கூடாதா?”

“காசி வந்து சொல்லியிருப்பானே?”

ஸ்ரீதர் மெளனமானான். “சொன்னானில்ல. அதான் நிலமை. நேர்ல வா பேசுவோம். இதை எப்படி சரிப் பண்றதுன்னு பாக்கணும். அரை மணி நேரத்துல வாங்க” என்று போனை வைத்தார். அடுத்த அரை மணிநேரத்தில் டீக்கடை வாசலில் இருந்தார்கள் இருவரும்.

ஒரே நாள் இரவுக்குள் தன் அலுவலகம் என்று இருந்த ஒரு இடத்தினுள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது அதிர்ச்சியாய்த்தான் இருந்தது.  சேது சார் சற்றே சிரித்த முகத்தோடு கையாட்டியபடியே வந்தார். கொஞ்சம் நம்பிக்கையாய் இருந்தது.

”மாஸ்டர் மூணு டீ” என்று மாஸ்டரிடம்  ஆர்டர் கொடுத்துவிட்டு,

“அப்புறம்?. ஒரு ராத்திரியில எல்லாமே மாறிப்போசுல்ல?”

ஸ்ரீதர் பதில் ஏதும் பேசாமல் இருந்தான். “நேத்து அத்தனை சொல்லுறேன். அடங்க மாட்டேங்குறியளே?. உங்களைச் சொல்லியும் தப்பு இல்லை. உங்க வயசு. ரத்தம் சூடா இருக்கும் போது, கமிட் மெண்ட் ஏதும் இல்லாத போது அப்படித்தான் இருக்கும்” என்று பெருமூச்செறிந்தார்.

“நேத்து நடந்தது என்னானு உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும். அதைப் பத்தி பேசி பிரயோஜனமில்லை. இதுக்கு முன்னாடி ரெண்டு படம் இந்தமாதிரி ஏதோ ஒரு மொக்கை காரணத்துக்காகத்தான் பொட்டிக்குள்ள வச்சிருக்காரு. அந்த படங்க வரத விட பொட்டில இருக்குறது அந்த டைரக்டருங்களுக்குத்தான் நல்லது.

ஆனா உங்க படம் நிஜமா படமா வந்திருக்கு. வெளிய வந்தாத்தான் எங்களுக்கும் நல்லது. நாங்களும் நாலு படம் பண்ணியிருக்கோம்னு சொல்லிட்டு திரிஞ்சாலும் யாருக்கும் தெரியாது. உங்க படம் வரும் போது எங்க ப்ரொடக்‌ஷன் தெரியும். அது எங்க தலைவருக்கு நல்லதோ இல்லையோ இதை நம்பி வேலை பாத்துட்டிருக்குற எங்களைப் போல ஆளுங்களுக்கு நல்லது. பொழைப்பு ஓடும்.”

“இப்ப என்ன பண்ணனும்னு சொல்றீங்க சேது சார். கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கணுமா?” என்ற ஸ்ரீதரின் குரலில் கடுப்பும் கோபமும் முண்டியடித்து தெரிந்தது.  சேது அது புரிந்து சற்றே பொறுமையாய் இருந்து மெல்ல ஆரம்பித்தார்.

”தலைவரோட ஒண்ணுவிட்ட தம்பி மகன்.  படிக்க வசதியில்லைன்னு தலைவர் கிட்ட ஹெல்ப் கேட்டாங்க. நம்மாளும் ஒத்த ரூபா கொடுத்துட்டு நான் தான் கொடுத்தேன் நான் தான் கொடுத்தேங்குறவர் தானே. கொடுத்துட்டு சொல்லிக்காட்டுறாருனு தம்பிக்காரன் பொண்டாட்டி கொஞ்சம் வியாபாரம் எல்லாம் பண்ணி இந்த வருஷம் பணம் வேணாம்னு சொல்லிட சொல்லிட்டா.

அதுலேர்ந்து நம்மாளுக்கு வீம்பு கோபம். எல்லாம் நல்ல படியா போய்ட்டா அப்புறம் என்ன கடவுள் பூதம்?. தம்பிக்கு தொடையில கட்டி வந்து கேன்சர்னுடானுங்க. திரும்பவும் வறுமை. வேற வழியில்லை. மொத்த குடும்பமும் படிப்புக்கும், வீட்டு செலவுக்கும் யாராச்சும் உதவித்தான் ஆகணும்னு.

தலைவர்கிட்ட உறவுக்காரவுங்க மூலம் தூது விட்டாங்க. இதுக்குத்தானே காத்திட்டிருந்தாரு. நேர வீட்டுக்கு போய்ட்டாரு. தம்பியும் அவன் பொண்டாட்டியையும் வச்சிட்டு மத்த உறவுக்காரங்க மத்தில காசு வாணாம், பெரிய மயிருமாதிரி சொன்னே இல்லை. அதான் கடவுள் கட்டிய கொடுத்திருக்கானு சொல்லி அழுக வச்சி. அல்லக்கைங்களை கிட்ட சொல்லி, அவங்க பையனை தனியா கூட்டிட்டுப் போய், பெரியப்பா கால்ல போய் விழுந்து “பெரியப்பா. அப்பா பண்ணது தப்புத்தான் எனக்கு உதவி செய்யுங்கனு கால்ல விழுந்து கேக்கணும்னு தம்பி பொண்டாட்டிக்கு புரியறாப் போல கேட்க சொல்லிட்டாரு.

பையன் 10வது படிக்கிற பையன். வீடு பூரா உறவுக்கார பயலுவ. அவனோட முறைப் பொண்ணு எல்லாம் இருக்கு. அத்தனை பேர் மத்தில அவன் அப்பா அம்மாவ விட்டுக் கொடுத்து கால்ல விழுந்து கெஞ்சி அழுதான் பாரு. அத என்னால மறக்கவே முடியாது.

அந்த பையன் என்னைக்கா இருந்தாலும் இதை மறக்க மாட்டான். பெரியப்பா தனக்கு செய்தது உதவின்னு எடுத்துக்க மாட்டான். என்னைக்காவது ஒருநாள் பழிவாங்க காத்திட்டிருப்பான்.

எத்தன மோசமான ஈனமான மனுசன் கூட வேலை செய்யுறோம்னு புரிஞ்சுது. ஒரவு தான். ஒரு காலத்துல ஒரு வேளை சோத்துக்கு நாயா அலைஞ்சவருத்தான் இதோ பத்து வருஷமாத்தான் இந்த பணமெல்லாம். ஆனா அவரு மனசுல பணம் தான் எல்லாத்தையும்கொடுக்குதுனு புரிஞ்சுக்கிட்டாரு. அதுனால எவன் மனசையும் பாக்குறதில்லை.

சொல்றேனு தப்பா நினைக்காதீங்க. முடிஞ்ச வரைக்கும் நாலு சுவத்துக்குள்ளேயாவது மன்னிப்பு கேட்கணும்னா கேட்டிருங்க. அது உங்களுக்கு மட்டுமில்லை. எல்லாருக்கும் நல்லது. நான் கம்பெல் பண்ணலை. ப்ராக்டிகலா யோசிக்கிறேன். நீங்களும் நாலு படம் பண்ணி நல்லாருக்கணும்.” என்று பெருமூச்சோடு முடித்தார் சேது.

என்ன பதில் சொல்வது என்று புரியாமல் ஸ்ரீதர் அமைதியாய் இருக்க, காசி இருவர் முகத்தையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான்.

- தொடரும்

முந்தைய அத்தியாயங்களைப் படிக்க

பகுதி 51 - https://bit.ly/2uWG72K

பகுதி 50 - https://bit.ly/2GhIuDX

பகுதி 49 - https://bit.ly/2CIHmXv

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close