[X] Close

'24' சலனங்களின் எண்: பகுதி 51 - செகண்ட் சான்ஸ்


salangalin-enn

  • கேபிள் சங்கர்
  • Posted: 08 Apr, 2019 10:21 am
  • அ+ அ-

தம்பி சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. நாம போகப் போற ப்ரொடியூசர் ரொம்பவும் செண்டிமெண்ட் ஆளு. சினிமாவுக்கு புதுசு. பெருசா ஏதும் தெரியாது. உங்க போன படங்கள் நின்னு போனதை பத்தி சொல்லாம பிஸினெஸ் பேசிட்டிருக்காங்கனு சொல்லியிருக்கேன் அத அப்படியே மெயிண்டெயின் பண்ணிக்கங்க.” என்று தழைந்த குரலில் சொன்ன மீடியேட்டர் ராஜேந்திரன் மீது ராமுக்கு ஏனோ கோபம் வரவில்லை.

எனக்கென்னங்க கொறைச்சல். நான் நல்லாத்தான் நடிச்சிருக்கேன். படம் நின்னுப் போச்சுன்னா அது அவங்க பிரச்சனை. நான் ஏன் பொய் சொல்லணும்?” என்று கேட்க நினைத்த ராமின் மனதில் கோபத்தை விட ஆதங்கம் தான் நிறைய இருந்தது.

எங்கு போனாலும் இதே கேள்விதான். ‘என்னா சார்.. படம் நின்னுருச்சாமே?”

பர்ஸ்ட் படம் நின்னா சினிமாவுல அப்படியே முத்திர குத்திருவாங்களே சார்.”

முதல் கோணல் முற்றும் கோணல். நீங்க பேசாம திரும்ப ஐடி கம்பெனிக்கே போயிருங்க.”

நான் தான் அன்னைக்கே சொன்னேன் இல்லை. சினிமா எல்லாம் சாதரணமில்லைனு. நீதான் கேட்காம போன” என்று கொலீக்ஸ் போனில் அட்வைஸ் செய்த போது அழுகை தான் வந்தது.

ஒரு புதுமுகத்துக்கு ஒரு படம் வாய்ப்பு கிடைப்பதே அரிது. பணம் கொடுத்து வாய்ப்பு வாங்கி போஸ்டரில் பேர் போட்டுக் கொள்பவனை கணக்கில் சேர்த்துக் கொள்ளவில்லை. ஆனால் தனக்கு கிடைத்த இரண்டு வாய்ப்பும் ஒரு சேர கவிழ்ந்து போகும் என்று ராம் நினைக்கவேயில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது. ஸ்ரீதரிடம் எதுவும் கேட்கவே முடியவில்லை. முகம் கொடுத்து பேச மாட்டேன் என்கிறான்.

ராமராஜோ எல்லாவற்றுக்கு நம்பிக்கைதான் வாழ்க்கை என்று சொல்லிக் கொண்டே மீண்டும் ஜில் ஜில் ஒயின்ஸ் கடைக்கு சரக்கடிக்க போய்விட்டார். இப்போதெல்லாம் எதிர்காலத்தை பற்றி மிக நம்பிக்கையாய்த்தான் பேசுகிறார். குடித்திருந்தாலும்.

ஒரு மாதம் அமைதியாய் இருந்தான். திரும்ப வேலைக்கு போய்விடலாமா என்ற நப்பாசை கூட வர ஆரம்பித்துவிட்டது. காரணம் நித்யா. பத்து நாட்களாய் ”ஒரு நாலு வருஷம் அமெரிக்கா எங்கயாச்சும் போய்ட்டு வந்து கையில காசோட வந்தா நாமளே சின்னதா ப்ரொடக்‌ஷன் ஆர்மபிச்சிரலாம் இல்லை” என்று ஆசைக் காட்டினாள். அவளுக்கும் நம்பிக்கையில்லை.

அமெரிக்கா இல்லை ஆஸ்திரேலியா கூட போகலாம் .ஆனால் போனால் திரும்ப எல்லாம் வர முடியாது. ஆள் விழுங்கும் தேசங்கள். மனதில் ஓரத்தில் விடாது கருப்பாய் இழுக்கும் சினிமாவை விட மனமேயில்லை. வருமானத்தை இழந்து, மரியாதை இழந்து இருக்க வேண்டுமா என்று யோசித்து யோசித்து மண்டை காய்ந்ததுதான் மிச்சம்.

விஜய் சேதுபதி ஜூனியர் ஆர்டிஸ்டா நடிச்சவரு. இன்னைக்கு இருக்குற எடம் என்னானு உனக்கே தெரியும். முன்னாடிதான் யார் பிள்ளையாவோ இருந்தா வாய்ப்பு கிடைக்கும். இப்ப எல்லாம் அப்படி இல்லை. யார் பிளையா இருந்தாலும் திறமையிருந்தா வாய்ப்பு கிடைக்கும். முதல்ல நம்மளை நம்பணும். சந்தோஷமா நம்பணும்" என்று  ஆறுதலாய் நினைத்துக் கொள்வான்.

மீடியேட்டர் ராஜேந்திரன் கண்ணனை அறிமுகம் செய்து வைத்தார். ராம் தன் நிலையைப் பற்றி பட்டும் படமால் சொல்ல, கண்ணன் பேச ஆரம்பித்தான். 

"நம்ம பொறப்பே நம்பிக்கையிலதான் ஆரம்பிக்குது. செக்ஸை யாரும் அடுத்த தலைமுறைய உருவாக்குறதுக்கான பயிற்சியாய் நினைச்சு இயங்குறது இல்லை. முதல்ல அவங்க சந்தோஷம். அந்த சந்தோஷம் தரும் நம்பிக்கை. அது தான் அடுத்த தலைமுறைக்கான வித்தா மாறுது. நான் சினிமா பண்ணனும்னு நினைச்சு வந்தேன். குடும்பம் விடலை. இன்னைக்கும் யாராச்சும் வேலைய விட்டுட்டு சினிமாவுல போய் வேலை செய்யுறேன்னு சொன்னா அத்தனை சந்தோஷமா இருக்கும். நான் செய்ய முடியாதத அவங்க செய்யுறாங்களேன்னு. கிட்டத்தட்ட ஹீரோ மாதிரிதான் அவங்களைப் பார்ப்பேன்.

ஆஸ்திரேலியா போனேன். கல்யாணம் பண்ணேன். குழந்த பெத்தேன் நிறைய சம்பாதிக்கறேன். நிம்மதியே இல்லை. அதுக்கு காரணம் நான் விரும்புற விஷயத்த பண்ணலை. நல்ல சக்ஸஸ்புல் வாழ்க்கை இருக்கு. அதை விட்டுட்டு ஜெயிப்போமா தோப்போமானு தெரியாத துறையில ஆசைய மட்டுமே வச்சிட்டு இறங்குறது புத்திசாலித்தனமில்லைனு மூளை சொன்னாலும், மனசு விட மாட்டேன்குது. ஆஃப்டர் ஆல் மனுஷன். வேலைக்கு மட்டுமே மூளை சொல்லுறத கேப்பான். வாழ்க்கை எப்பவுமே மனசு சொல்றதுதான். நான் மனசு சொல்றத கேக்க தயாராகிட்டேன்.

ஒரு ஸ்கிரிட்ப் எழுதிட்டேன். அதுக்கான பட்ஜெட் எல்லாம் போட்டு வச்சிட்டேன். ஒரு வருஷம் ஷூட்டிங் மட்டும். மூணு கால நிலை. அந்தந்த காலநிலையிலதான் ஷூட்டே பண்ண முடியும். அதுக்கு டெடிகேட்டடா இருக்குற, பொறுத்தமான நடிகர் வேணும். எனக்கு நீங்க ஓக்கே. ஒரு வருஷம் என்னோட ட்ராவல் பண்ண தயாரானு சொல்லுங்க. நான் தயாரா இருக்கேன். என் கதைக்கான ஹீரோவுக்குத்தான் இங்க வந்து நாலு மாசமா தேடிட்டிருக்கேன்

யாரும் செட்டாகலை. அப்படி செட்டானா ஒரு வருஷன் வேற படம் ஏதுவும் ஒத்துக்காம ட்ராவல் பண்ண யோசிக்கிறாங்க. காரணம் கமர்ஷியல் ஸ்கிரிப்ட் கிடையாது. ஆனா நிச்சயம் என்னால இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவெல் சர்கிள்ல ஒரு பெரிய இம்பாக்டை கொண்டு வர முடியுங்கிற நம்பிக்கை இருக்கு. ஓக்கேனா சொல்லுங்க. உங்களுக்கான அக்ரிமெண்ட் ரெடி. நாளைக்கே ரிகர்சல் ஆரம்பிச்சிருவோம்."

கண்ணன் மிடில் ஏஜ் ஆளாய் இருந்தான். மீடியேட்டர் சொன்னது போல புதுசு, செண்டிமெண்ட் பார்ட்டியாய் தெரியவில்லை. தெளிவாய் அவன் என்ன செய்யப் போகிறான் என்பதை மிகத் தெளிவாய் முடிவெடுத்து வைத்திருக்கிறான். அவனின் ஆப்ஷனில் யெஸ். ஆர் நோ தவிர வேறு பதில்களே இல்லை. ராமிற்கு அவனது கமிட்மெண்ட்டும், டெடிக்கேஷனும் பிடித்திருந்தது.

ஆனால் ஒரு வருஷம் என்பது பெரிய தூரமாய் பட்டது. கொஞ்சம் மனக்குழப்பத்துடனே இருந்தான். அதை புரிந்து கொண்ட கண்ணன் “ராம். சினிமால ஒரு வருஷங்கிறது ஒண்ணும் பெருசில்லை. வீட்டுக்கு போய் யோசிச்சிட்டு வந்து சொல்லுங்க. டேக் யுர் டைம். மீட் பண்ணுவோம்” என்று கை கொடுத்து அனுப்பி வைத்தான்.

நித்யாவுக்கு போன் செய்து மீட் பண்ணனும் என்று மெசேஜ் அனுப்பினான். ராமராஜ் சாருக்கு போன் செய்தான். ரிங் போய் ரொம்ப நேரம் கழித்து எடுத்து பேசிய போதே குழறளாய் இருந்தது. மதியமே சரக்கடித்திருக்கிறார். திறமையானவர். தகுதியானவர். வீழ்ந்து போய் கிடக்கிறார். இவரைப் போன்றவர்கள் ஜெயித்தால் தான் நம்பிக்கை பிறக்கும். நிஜம் அப்படி இருப்பதில்லை.

இவரின் இன்றைய நிலையைக் கண்டு பயம்தான் வந்தது ராமுக்கு. வீட்டின் சாவியை வாசலில் உள்ள பூந்தொட்டிக்கு அடியில் வைத்துள்ளதாகவும், ஒரு மணி நேரத்தில் வருவேன் என்று மெசேஜ் போட்டிருந்தாள். வண்டியை அவள் வீட்டிற்கு விட்டான். பூந்தொட்டியின் அடியிலிருந்து சாவியை எடுத்து திறந்து ஃபேனை தட்டிவிட்டு கண் மூடி சோபாவில் படுத்தான். எப்போது தூங்கினான் என்றே தெரியவில்லை. திடுக்கிட்டு முழித்த போது எதிரே நித்யா அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

எப்ப வந்தே நித்தி. சாரி. தூங்கிட்டேன்”

ஆமா கதவ எல்லாம் தொறந்து போட்டுட்டு”

ஸாரி..ப்பா எப்படி தூங்கினேன்னே தெரியலை. டாமன் டயர்ட்”

ஹேய்.. நோ ப்ராப்ளம். இங்க தூக்கிட்டு போறதுக்கு என்ன இருக்கு?”

பதில் சொல்லாமல் அமைதியாய் அவளையே பார்த்தான். “என்ன சார்.. என்ன ஒரு மாதிரியா பாக்குறீங்க?”

கலைந்து ‘பச்’ என்றான்.

என்னாச்சு இன்னைய மீட்?”

கண்ணனைப் பற்றி, ஒரு வருட காண்ட்ரேக்ட் பற்றி எல்லாவற்றையும் சொன்னான். “நீ என்ன சொன்னே?”

யோசிச்சுட்டு வர்றேனு சொல்லியிருக்கேன். ஒரு வருஷம் மொத்தமா வேற படம் பண்ண முடியாது. ஒரே குழப்பமா இருக்கு.”

எதிர் சேரிலிருந்து எழுந்து வந்து அவனருகில் உட்கார்ந்தாள். ”நானும் உன்னை குழப்பிட்டிருக்கேனு நினைக்கிறேன். நீ நடிக்கிறதுக்காக வேலைய விட்டு, போராடி, ரெண்டு படம் கிடைச்சு ரெண்டுமே ரிலீசாகாம இப்ப பெரிய கேள்வியோட இருக்கிற.

உன்னை இப்ப நடிக்க கூப்பிடுறவன் உன்னைப் போல ரிஸ்க் எடுக்காம போய் மன உளைச்சல்லயே இருக்கிறத விட ரிஸ்க் எடுக்கலாம்னு நினைச்சு திரும்ப வந்திருக்கான். உன்னை நான் அமெரிக்கா போன்னு குழப்புனா மாதிரி அவனையும் யாரோ அப்ப குழப்பியிருக்காங்க.

அவன் நிலைமையிலதான் நீ எங்க போனாலும் இருப்பேனு தோணுது. என் சுயநலத்துக்காக உன் கனவை, இழக்க சொல்லுறது எந்தவகையில சரின்னு இப்பத்தான் தோணுது. நான் சினிமால வரணும்னு ஆசைப்பட்ட போது எங்கம்மா வேணாம்னு சொன்னாங்க. அத்தனை கோபம் துக்கம் இருந்துச்சு.

ராம் நித்யா பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனின் முகத்தை தன் மார்பின் மேல் அழுந்த சாய்த்துக் கொண்டு, “நீ உன் கனவை நிஜமாக்க போ. பணம், மாரல் சப்போர்ட் எல்லாம் வேணும்னா நான் கூட இருக்கேன். என்ன கூட ஒரு வெப் சீரீஸுக்கு நடிக்க கூப்டிருக்காங்க. அதுக்குத்தான் ஆடிசன் போய்ட்டு வந்தேன். யாருக்கு தெரியும் என்ன எழுதியிருக்குன்னு?. நான் சினிமாவுக்கு வந்தது, உன்னை சந்திச்சது, நடிகையானது எல்லாமே விதிக்கப்பட்டதுன்னு இனி வருவது விதிக்கப்பட்டிருக்கும்.

எனக்கென்னவோ ரெண்டுல ஒண்ணாவது வெளியாயிரும்னு தோணுது. அது வெளியாற நேரத்துல நீ ஒரு படத்துல நடிச்சிட்டிருக்கங்கிறது உன் கேரியருக்கு நல்லது. அது ஹிட்டுன்னா. இன்னும் நல்லது. பாசிட்டிவா யோசிப்போம்.” என்று மார்பின் இருந்த அவன் தலையை கோதிவிட்டுக் கொண்டே பேசியவளின் முகத்தை நிமிர்ந்து பார்த்து கண்களில் நன்றியுடன் அவளை முத்தமிட்டான் ராம்.

- தொடரும்

முந்தைய அத்தியாயங்களைப் படிக்க

பகுதி 50 - https://bit.ly/2GhIuDX

பகுதி 49 - https://bit.ly/2CIHmXv

பகுதி 48 - https://bit.ly/2CJG0vQ

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close