[X] Close

காலமெல்லாம் கண்ணதாசன் 10: அஞ்சு ரூபாய்’ பாட்டு..!


5-rupees-song

  • ஆர்.சி.மதிராஜ்
  • Posted: 04 May, 2018 06:45 am
  • அ+ அ-

படம்    : பரிசு
இசை    : கே.வி.மகாதேவன் 
குரல்    : பி.சுசீலா, டி.எம்.சௌந்தரராஜன்

* * *

எண்ண எண்ண இனிக்குது ஏதேதோ நினைக்குது
வண்ண வண்ணத் தோற்றங்கள் அஞ்சு ரூபா
கண்ணை வட்டமிட்டு மயக்குது அஞ்சு ரூபா

கல்லால் அடித்த அடி வலிக்கவில்லை
அந்தக் காயத்திலே உடம்பு துடிக்கவில்லை
கண்ணால் அடித்த அடி வலிக்குதடி
நீ கண்ணால் அடித்த அடி வலிக்குதடி
அந்தக் காயத்திலே மனது துடிக்குதடி

தாயார் அணைத்திருந்த மயக்கமுண்டு
நான் தந்தை மடியிருந்த பழக்கமுண்டு
நீ யாரோ நான் யாரோ தெரியாது
நீ யாரோ நான் யாரோ தெரியாது
இன்று நேர்ந்தது என்னவென்று புரியாது

வர வர இதயங்கள் மலர்ந்து வரும்
வளமான எண்ணங்கள் மிதந்து வரும்
பல பல ஆசைகள் நிறைந்து வரும்
பருவத்தின் மேன்மை புரிந்து விடும்

ஒருவருள் ஒருவரை ஒன்றாக்கி வைத்தது
விட்ட குறை தொட்ட குறை அஞ்சு ரூபா
இனி வேகத்தில் வளரும் அஞ்சு ரூபா

* * *

வார்த்தைகளில் விவரித்துவிட முடியாத ஓர் உணர்வு காதல். என்றாலும் சங்க இலக்கியங்களிலும், திரைப் பாடல்களிலும், கவிதைகளிலும் அதிகம் எழுதப்படுவது காதல்தான். அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபிபோல ஊற்றெடுத்துக்கொண்டே இருப்பது காதல். அதிகம் பிரச்சினைக்குள்ளாவதும் காதல்தான். காதல் என்றால் என்னவென்று ஒவ்வொருவரும் அவரவர் அனுபவத்தை வைத்து அணுகுகின்றனர்.

காதலில் முக்கிய பங்கு வகிப்பது கண்கள் என்பர். கண்களை, பார்வையை, காதலை இணைத்து வந்த பாடல்களையும் கவிதைகளையும் பட்டியலிடவே முடியாது. காரணம், காதல் துவங்குவது கண்களில்தான்.

எம்.ஜி.ஆர். - சாவித்திரி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த `பரிசு' திரைப்படத்தில் இடம்பெற்ற `எண்ண எண்ண இனிக்குது' பாடலில் காதலின் படிமத்தை, அதன் வளர்நிலையை வரிவரியாக எழுதியிருக்கிறார் கவியரசர்.

கண்களுக்கும், காதல் கொண்ட கண்களுக்கும்தான் எத்தனை வேறுபாடு? காதல் சுமந்த கண்களின் பாரத்தையும் ஈரத்தையும் தாங்கவேமுடியாது; துடைத்திடவும் முடியாது. காதலின் பார்வையில் தடுமாறாதவர்கள் எவருமில்லை. காதலை முதலில் காட்டிக்கொடுப்பதும் கண்கள்தான். காதல் கொண்ட கண்களில் கனிவு கூடும். ஒருவித மயக்கநிலையில் இருக்கும், இருக்கவைக்கும். அந்தப் பார்வையையும் காதலையும் எப்போதும் எண்ணத்திலேயே வைத்திருக்கும். எப்போதும் அதன் நினைவிலேயே இருக்கும். அந்த நினைவு இனித்துக்கொண்டே இருக்கும்.

எண்ண எண்ண இனிக்குது, ஏதேதோ நினைக்குது... என்ற வரிகளில் `ஏதேதோ' என்பதன் அர்த்தத்ததை கேட்பவரின் எண்ணத்துக்கு விட்டது கவிஞரின் திறமை. காதல் கொண்ட மனம் எத்துணை துன்பம் வந்தாலும் தாங்கிக்கொள்ளும். உண்மையில் அத்துன்பங்களெல்லாம் அதற்குப் பொருட்டே அல்ல. கண்ணால் அடித்த அடியை மட்டும் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை, அந்தக் காயத்தில்தான் மனது துடிக்குதடி என்கிறார் கவியரசர்.

காதலித்த அனைவரும் சந்திக்கும் பிரச்சினை, பெற்றோரா காதலா எது முக்கியம் என்னும் கேள்வி. அடுத்த சரணத்தில் அதற்கு அற்புதமாக விடையளிக்கிறார் கண்ணதாசன்.

தாயின் அணைப்பில் மயக்கத்தை அனுபவித்திருக்கிறேன், தந்தை மடியில் விளையாடி உறங்கிய பழக்கமும் உண்டு. ஆனால் நீ யார் என்று தெரியாது, உனக்கும் எனக்கும் முன் பின் பழக்கமேயில்லை, அப்படியிருக்கையில் இன்று இந்த மனதுக்கு என்ன நேர்ந்ததென்றே புரியவில்லை. எதனால், எதன்பொருட்டு, எப்போது, எப்படி என்ற கேள்விகளுக்கெல்லாம் அப்பாற்பட்டதாயிற்றே காதல். ஒரு புதிய உறவை, புதிய நெருக்கத்தை, புதிய கிறக்கத்தை உணரச்செய்வது காதல். பெற்றோர் உட்பட எல்லா உறவுகளையும் மறக்கச்செய்து, நமக்குள் என்ன நேர்கிறது என்றே புரியாமல், ஆனால் நினைக்க நினைக்க நன்றாக இருக்கிறதே... இப்படியே இருந்துவிடக்கூடாதா என்று எண்ணவைக்கும்.

நீ யாரோ நான் யாரோ தெரியாது என்ற வரிகளுக்குப் பின், மீண்டும் ஒலிக்கும் அதே வரியை அதன் பொருள் உணர்ந்து நீட்டி, இன்று நேர்ந்தது என்னவென்று புரியாது.... என அற்புதமாகப் பாடியிருப்பார் பி.சுசீலா.

காதல் வயப்பட்டாயிற்று... பிறகு? அதற்கான விடையைத்தான் அதற்கடுத்து சொல்கிறார் கவியரசர்.

வர வர இதயங்கள் மலர்ந்து வரும்
வளமான எண்ணங்கள் மிதந்து வரும்
பல பல ஆசைகள் நிறைந்து வரும்
பருவத்தின் மேன்மை புரிந்து விடும்

காதலில் காதல் மட்டும்தான் சுயநலம். காதல் கொண்ட மனதுக்குள் சுயநலத்துக்கு இடமில்லை. இந்த உலகமே ஒரு சொர்க்கம்போல இருக்கும். பார்ப்போர் அனைவர் மீதும் அன்புகொள்ளச் செய்யும். எல்லோர் மீதும் அக்கறை காட்டும். எல்லோரும் நல்லவர்களாகவே இருப்பர். இவை எல்லாமே காதலுக்கு இடையூறு இல்லாதபோது மட்டுமே. காதலுக்கு ஒரு துன்பம் என்றால் உலகத்தையே எதிர்த்து நிற்கும் வல்லமையையும் அதே காதல் தரும். அதனால்தான் காதலில் காதல்மட்டும்தான் சுயநலம் கொண்டது.

ஒரு அரும்பாக இருந்த இதயம் மெல்ல மெல்ல வளரும். அதன் நறுமணம் இந்தப் புவியெங்கும் பரவும். மனதில் நல்ல நல்ல எண்ணங்களைத் தோற்றுவிக்கும். தன் காதலின் இணையோடு எப்படியெல்லாம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசைகள் பல்கிப் பெருகும். பருவத்தில் மேன்மையும் பொறுப்பும் வாழ்வும் புரிய ஆரம்பிக்கும் என்று நிறைவுசெய்கிறார் கண்ணதாசன்.

* * *
படத்தில் படகோட்டும் பெண்ணாக இருப்பார் சாவித்திரி. எம்.ஜி.ஆர். அக்கரைக்குச் செல்ல சாவித்திரி படகோட்டுவார். வைத்த கண் வாங்காமல் எம்.ஜி.ஆர். சாவித்திரியைப் பார்க்க, அய்யய்யே... சேச்சேச்சேச்சே... என்னய்யா அப்படிப் பார்க்கிறே.... என்று அலுத்துக்கொள்வது கவிதை. படகில் இருவரும் பயணிக்கும் காட்சியிலும் ஒரு பாடல் உண்டு. ``ஆளைப் பார்த்து அழகைப் பார்த்து ஆசை வைக்காதே....'' என்னும் பாடலும் அற்புதமான பாடலே. அந்தப் பயணத்திற்காக படகோட்டியதற்கு ஐந்து ரூபாயைக் கூலியாகத் தருவார் எம்.ஜி.ஆர்.
அதற்கு அடுத்த சந்திப்பில் வருவதுதான் `எண்ண எண்ண இனிக்குது' பாடல். அந்த அஞ்சு ரூபாயை ஞாபகமாக இந்தப் பாடலில் பொருத்தியிருப்பார் கண்ணதாசன். பாடலின் நிறைவில்,

ஒருவருள் ஒருவரை ஒன்றாக்கி வைத்தது
விட்ட குறை தொட்ட குறை அஞ்சு ரூபா
இனி வேகத்தில் வளரும் அஞ்சு ரூபா
என்று முடித்திருப்பார். 

ஒருவருள் ஒருவராய் ஒன்றாக்கி வைத்த காதல் எல்லாவற்றையும் வளர்க்கும், வளர்க்கவேண்டும்.

காதல் என்பது உணர்தல் மட்டுமன்று, வளர்தலும்தானே?

- பயணிப்போம்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close