[X] Close

காலமெல்லாம் கண்ணதாசன் 9: பொன்னை விரும்பும் பூமியிலே...


kalamellam-kannadasan-alayamani

  • ஆர்.சி.மதிராஜ்
  • Posted: 27 Apr, 2018 10:05 am
  • அ+ அ-

படம்    : ஆலயமணி

இசை    : எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி

குரல்    : டி.எம். சௌந்தரராஜன்

 

* * *

 

பொன்னை விரும்பும் பூமியிலே

என்னை விரும்பும் ஓருயிரே

புதையல் தேடி அலையும் உலகில்

இதயம் தேடும் என்னுயிரே

 

ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே

ஆலயமணியின் இன்னிசை நீயே

தாய்மை எனக்கே தந்தவள் நீயே

தங்க கோபுரம் போல வந்தாயே

புதிய உலகம் புதிய பாசம்

புதிய தீபம் கொண்டு வந்தாயே

 

பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்

பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்

அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்

அழைத்து வந்தார் என்னிடம் உன்னை

இந்த மனமும் இந்த குணமும்

என்றும் வேண்டும் என்னுயிரே

ஆலமரத்தின் விழுதினைப் போலே

அணைத்து நிற்கும் உறவு தந்தாயே

வாழைக் கன்று அன்னையின் நிழலில்

வாழ்வது போலே வாழவைத்தாயே

உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு

உள்ளம் ஒன்றே என்னுயிரே

 

* * *

தேடல் இல்லாத மனிதனைத் தேடினாலும் கண்டுபிடிக்கமுடியாது. ஒருநாளில் நாம் காணும் மனிதர்களை சற்று கவனித்துப்பார்த்தால், எல்லோரும் எதையோ தேடிக்கொண்டேயிருக்கிறார்கள். தேடித் தொலையும் விழிகளுடன் எப்போதும் பரபரப்பு. பெரும்பாலான மனிதர்களின் தேடல் பணம்தான். பணம் இருந்தால் எல்லாத் தேவைகளும் தீர்ந்துவிடும்... என்னும் மாயை அப்படித் தேட வைக்கிறது.

வாழ்க்கை முழுக்க பொருளைத் தேடித் தேடி, வாழ்வின் பொருளை உணர முடியாமலே போய்விடுகிறது. எனில் வாழ்வின் பொருள்தான் என்ன? வாழ்க்கைக்குப் பொருள் தேவையில்லையா? நிச்சயம் தேவைதான். வாழ்வதற்குப் பொருள்வேண்டும். வாழ்ந்ததற்கும் பொருள் வேண்டும்.

எதையாவது இழக்கும்போது, இந்த உண்மை நம் முகத்தில் பளீரென அறையும். அந்த இழப்புதான் நாம் இதுவரை எவற்றையெல்லாம் இழந்துவந்திருக்கிறோம் என்பதை நமக்கு உணர்த்தும்.

பணத்தையெல்லாம் பெரிதாக எண்ணாமல் சுய ஒழுக்கத்தோடும், அறத்தோடும் வாழும் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கும், பணம் இல்லாத சூழலில், பணத்தேவைக்காக படும் அவமானத்தில், எதுவும் செய்ய இயலாத கையறு நிலையில், பணம்தான் வாழ்க்கையோ, பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லையோ என்கிற எண்ணம் தோன்றும். ஆனால், நேர்மையாயிருப்பதின் உச்சபட்ச மகிழ்ச்சியே நேர்மையாக இருப்பதுதான். அந்த உணர்வை எத்தனை பொருளாலும் புதையலாலும் அளித்துவிட முடியாது.

ஆரோக்கியமான உடல் உறுப்புகளோடு பிறக்கும் குழந்தை கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். ஊனத்தோடு பிறக்கும் குழந்தைகளோ கடவுளின் குழந்தைகள். அவர்களுக்குத்தான் அதிகபட்ச அக்கறையும், கவனிப்பும் தேவைப்படுகிறது. ஒரு மனிதனுக்குத் தேவையானது ஆரோக்கியமும் ஊனமற்ற உடலும் மனமும்தான். அதைக்கொடுத்த இறைவனே, மனிதன் அனுபவிக்க இயற்கையையும் படைத்திருக்கிறான். உங்கள் தேடல் உங்கள் பாடு. எதை அடைய, எதைத் தேடுகிறோம்... அது கிடைக்கும்.

எவ்வளவு பொருள் சேர்த்தாலும், உனக்காக நாலு நல்ல மனிதர்களைச் சேர்த்துக்கொள் என்பார்கள். எவ்வளவு சத்தியமான வார்த்தைகள். பெரும் பணக்காரர்களிடமும், அதிகார வர்க்கத்திடமும், கண்ணசைக்கும் முன்னரே சேவகம் செய்ய ஆயிரம்பேர் காத்திருப்பர். அதெல்லாம் அவர்கள் மீதுள்ள அன்பாலா? இல்லை, அவர்களிடம் உள்ள பணத்தாலும் பயத்தாலும். இரண்டும் போனால் எல்லாம் போய்விடும்.

எது போனாலும், நம் மீது அக்கறை கொள்ள, கவனித்துக்கொள்ள, புரிந்துகொள்ள, சுயநலமற்ற அன்புகொண்ட இதயம் ஒன்று இருந்தாலும் போதுமல்லவா? அப்படி ஓர் இதயத்தை அடைவது எத்தனை சுகம்? அதுபோன்ற ஏராளமான இதயங்களைப் பெற, நம் வாழ்க்கையை நாம் எப்படி அமைத்துக்கொள்ளவேண்டும் என்று சிந்திக்கவேண்டும்தானே?

ஒரு மனிதன், இருபது வயதுவரை பெற்றோருக்குப் பிள்ளையாக இருக்கிறான். இருபதிலிருந்து முப்பதுக்குள் மட்டும்தான் அவனுக்குப் பிடித்த அவனது வாழ்க்கையை வாழ்கிறான். வாழ்க்கை என்றால் என்ன என்பதைக் கண்டுகொள்கிறான். முப்பதுக்குப் பிறகு, அவனது பிள்ளை குடும்பம் என்று, அதற்காகவே தன் மீதி வாழ்வை செலவழிக்கிறான். எல்லா இன்ப துன்பங்களையும் அனுபவித்து, பிள்ளை பெற்று, வளர்த்து ஆளாக்கி அவர்களது வாழ்க்கைக்கான வழியைக் காண்பித்து முதியோனாகிறான். பிள்ளை பேரன் குடும்பம் என்று மகிழ்ச்சியாக எஞ்சிய வாழ்வைக் கழிக்கும் காலத்தில், ஆதரவின்றி, பேச ஆளின்றி முதியோர் இல்லத்தில் சேர்க்கப்படுவது எத்தனை துயரமானது.

ஒரு குழந்தைக்குத் தேவைப்படும் கவனிப்பும் அக்கறையும் முதியோருக்கும், நோயுற்றவருக்கும், ஊனமுற்றோருக்கும் தேவைப்படும். அவர்களது தேவைகளை நாம் நிறைவேற்றுகிறோமா என்பதை நமக்கு நாமே கேட்டுக்கொள்ளத்தான் வேண்டும். காரணம், நாமும் ஒருநாள் பழுப்பு இலையாவோம். இலை கிழிந்து அந்தரத்தில் தொங்கும்.

உடலுக்கு நோவென்று இரண்டு நாள் மருத்துவமனையில் இருந்து பார்த்தால் தெரியும் வாழ்க்கை. அதுவரை தோன்றாத தத்துவங்களும், பெரியோர் சொல்லி புரியாமல் இருந்த வாழ்வும் புரியும். நன்றாக இருந்து, ஏதேனும் ஒரு விபத்தில் கையையோ, காலையோ அல்லது கண்களையோ இழப்பது எத்தனை கொடிது? வாழ்வின் புரிதல் என்பது இழப்பில் இருந்துதான் தெரியவேண்டுமா? இருக்கும்போதே உணர்ந்து தெளியலாம்தானே?

* * *

பொதுவாக கண்ணதாசன் பாடல்களுக்கான இந்தக் கட்டுரைகளை எழுதும்போது, பாடல் இடம்பெற்ற  படத்தை முழுமையாகப் பார்ப்பேன். முன்னரே பார்த்த படமாக இருந்தாலும், எல்லாப் படத்தின் கதையும் மனதில் தங்கியிருப்பதில்லை. பாடல்கள் அப்படி இல்லை. படத்தில், பாடலுக்கான தேவை என்ன? எந்தச் சூழலில் அந்தப் பாட்டு வருகிறது. அந்தச் சூழலுக்கு அந்தப் பாடல் எவ்வாறு பொருந்துகிறது என்பதைச் சொல்ல அது உதவியாக இருக்கும்.

`பொன்னை விரும்பும் பூமியிலே' என்ற இந்தப் பாடல் மனசின் அடியாழத்தில் ஏற்கெனவே தங்கிப்போன பாடல். ஆலயமணியின் கதை உண்மையில் இப்போது நினைவில் இல்லை. ஆனால் இந்தப் பாடல் எனக்குள் கிளர்த்திய உணர்வுகள்தான் இந்தக் கட்டுரையின் ஆரம்ப பத்திகள். கண்ணதாசன் இப்படித்தான் இதயங்களை வென்றார்.

எந்த விளக்கவுரையும், பொழிப்புரையும் தேவைப்படாத எளிமையான வரிகளுக்குச் சொந்தக்காரர். அவரின் வரிகளுக்கு நாம் அர்த்தம் சொல்லத்தேவையில்லை. அவரது வரிகள்தாம் நமக்கு ஆயிரம் ஆயிரம் அர்த்தங்களைச் சொல்லித்தருகின்றன.

புதையல் தேடி அலையும் உலகில், இதயம் தேடும் உயிரை எப்படியெல்லாம் போற்றிப் பாராட்டலாம்?  ஆயிரம் மலரில் ஒரு மலர், ஆலயமணியின் இன்னிசை, தாய்மை தந்த தங்க கோபுரம், புதிய உலகம், புதிய பாசம்,  இருளைப்போக்கி வாழ்க்கையில் புதிய ஒளிக்கீற்றைப் பரவச்செய்யும் புதிய தீபம் என்கிறார் கண்ணதாசன்.

பறவைகள், ஆலமரம், வாழைக்கன்று என்று அவர் பயன்படுத்தும் சொற்கள், நமக்கு நன்கு பழகியவை, எளிமையாகப் புரிபவை. அவற்றின் மூலம் அவர் உணர்த்தும் பொருள் புதிது. இயற்கையை உதாரணம் கொண்டு எழுதப்படும் அவர் பாடல்கள் இயற்கையைப்போலவே காலங்கள் கடந்தும் இருந்துகொண்டிருக்கும் என்பது உண்மைதானே?

கருணை மகன் கால் இழந்தான்

கண்ட மக்கள் மனமொடிந்தார்...

என்று பாடலின் ஆரம்பத்தில் தொகையறா வரும்.

கால்களை இழந்த சிவாஜி, சக்கர நாற்காலியில் இருந்து எதிரில் நிற்போரின் கால்களை அத்தனை ஏக்கத்தோடு பார்ப்பதாக அமைந்திருக்கும் காட்சி மனதை உருக்கும்.

இழப்புக்குப்பின் தெரியவரும் உண்மைக்கு வலி அதிகம். எல்லாமும் நம்மிடம் இருக்கின்றது. இருக்கும்போதே சுதாரித்துக்கொள்வோம். இழந்தோர்க்கு உதவியாய் அன்பாய் இருப்போம்.

வாழ்வின் பொருள் அன்பன்றி வேறென்ன?

- பயணிப்போம்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close