[X] Close

பெண் எழுத்து: பெற்றோருக்கு மட்டுமல்ல…


  • kamadenu
  • Posted: 23 Mar, 2019 17:06 pm
  • அ+ அ-

காரில் ஜி.பி.எஸ் இருப்பது குறித்து எப்படி சுப்புராஜுக்கும், ரவிக்கும் தெரியாதோ அது போல மணியின் குடும்பதினருக்கும் தெரியாது. அவரின் மகளைத் தவிர. மணியின் கார் பாண்டிச்சேரியின் ஈ.சி.ஆர் ரோட்டிலிருந்து ஊருக்கு உள்ளே சென்று அங்கிருந்த ஒர் பழைய ரிசார்ட்டினுள் நுழைந்தது. “என்னோட ப்ரெண்ட் இடம். இப்ப யூஸ் பண்றது இல்லை. எவளையாச்சும் தள்ளிட்டு வந்தா இங்க வருவோம். இங்க ரெஸ்ட் எடுத்துட்டு யோசிப்போம்.இவரை எப்படி டிஸ்போஸ் பண்றதுன்னு?” என்றான் சுப்புராஜ்.

அவன் சொல்வது சரியாகப்பட்டது ரவிக்கு. எல்லாம் சடுதியில் நடந்தேறியிக்க கொஞ்சம் யோசிக்க, இளைபாற நேரம் தேவை. மணியை எப்படியாவது டிஸ்போஸ் செய்ய வேண்டும் மாட்டாமல். வண்டியில் போதையில் இருந்தாலும் அது பற்றிய யோசனையிலேயே இருந்தான். அவன் பார்த்த அத்தனை சினிமா, படித்த கதைகளில் ஐடியாக்களைத் தேடினான். எல்லா கதைகளிலும் கடைசியில் கொலை செய்தவன் மாட்டியிருக்கிறான்.

எங்கேயாவது ஒரு லூப் கொடுத்துவிட்டுதான் போயிருக்கிறான். அதே நேரத்தில் அது எல்லாம் எழுதப்பட்ட கதை. ஹீரோவினால் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்று முன் முடிவு செய்யப்பட்டு எழுதப்பட்டது. இங்கே அப்படியல்ல. ஹீரோ, வில்லன் எல்லாமே அவனாய் இருக்கும் பட்சத்தில் தெளிவாய் யோசித்து முடிவெடுத்தால் நிச்சயம் தப்பிக்க முடியும்.

கடுங்கிழவனாய் ஒரு வாட்ச்மேன் மட்டும் இருக்க, “ ஆள் எல்லாம் இல்லை நீங்களே தான் எல்லாத்தையும் வாங்கிக்கணும்” என்றான் கதவை திறந்துவிடும் போதே. இது தெரிந்துதானோ என்னவோ சுப்புராஜ் வழியிலேயே சரக்கு மற்றும் இத்யாதிகளை வாங்கி வந்துவிட்டான். “சாப்பாடு ஆறிடுமேப்பா?’  என்ற அல்லக்கையின் குரலில் இருந்த வருத்தத்தை ஒதுக்கியபடி “இது பாண்டி இங்க சுவிக்கி எல்லாம் கிடையாது” என்றபடி கிடைத்த எல்லாவற்றையும் வாரிப் போட்டுக் கொண்டான்.

அறையில் செட்டிலான மாத்திரத்தில் ஆளுக்கொரு டாய்லெட்டில் நுழைந்தார்கள். சற்றே அசுவாசமான பிறகு சுப்புராஜ் தான் பேச்சை ஆரம்பித்தான். “எப்படி டிஸ்போஸ் பண்றது ரவி?” என்றான்.

“அதான் யோசிச்சிட்டிருக்கேன். துண்டு துண்டா அறுத்து மாவட்டத்துக்கு ஒரு இடமா பிரிச்சி போட்டிருவோமா?”

கேட்ட மாத்திரத்தில் உடலை விதிர்த்தான் சுப்புராஜ். ‘பாவம்யா’

சொல்வது ஈசியாக இருந்தாலும் அதை நினைத்துப் பார்க்கவே ரவிக்கு கூட கஷ்டமாய்த்தான் இருந்தது.

“ஒரு இங்கிலீஷ் சீரியல்ல டப்புல பாடிய வச்சி அதுல ஏதோஒரு கெமிக்கலை ஊத்தி வச்சா, மொத்த உடம்பு கரைஞ்சு போயிரும்னு காட்டுனாங்களே. அது என்ன சீரியல்னு நியாபகம் இல்லை தெரிஞ்சா போன்ல டவுன்லோட் பண்ணி பார்த்துருவேன்.” என்றான் வந்திருந்ததிலேயே இளையவனாய் இருந்த ஒர் அல்லக்கை.

“கூகுள்ல வேணும்னா தேடிப் பாரேன்” என்று ஆர்வத்துடன் சொன்னான் சுப்புராஜை முறைத்தான் ரவி.

“அதெல்லாம் ஆவுறது இல்லை. அப்படியே பேர் கிடைச்சாலும் அது எங்க வாங்குறது. ஒரு முழு உடம்பையே கரைக்கணும்னா எத்தன லிட்டர் தேவைப்படுமோ? வேற எதையாச்சும் யோசிப்போம். கொஞ்சம் தூங்குவோம்’ என்று சொல்லி மல்லாக்க படுத்து கண்களின் மேல் தன் வலதுகையை வைத்து மூடி தூங்க ஆரம்பித்தான்.

*************************

ராமராஜுக்கு தூக்கம் வரவில்லை. தொடர்ந்து மணியின் மனைவியிடமிருந்து போன் வந்து கொண்டேயிருந்தது. ‘போலீஸில் கம்ப்ளெயிண்ட் கொடுத்திருவோம்’ என்று சொன்னார். மனைவி கொஞ்சம் யோசித்தாலும் வேறு வழியில்லை என்பதால் மனைவியின் அப்பாவின் அரசியல் தொடர்பு மூலமாய் வாய்வழி கம்ப்ளெயிண்ட் கொடுத்த அடுத்த அரை மணி நேரத்தில் லோக்கல் ஸ்டேஷனிலிருந்து தொடர்பு கொண்டு ஸ்டேஷனுக்கு வரச் சொன்னார்கள். ராமராஜ் போய் அவர்களுக்கு தேவையான அத்தனை தகவல்களையும் கொடுத்தார். அனைவரது செல்போன் எண்களையும் கொடுத்து “எல்லாமே சுவிட்ச் ஆப் ஆயிருக்குங்க” என்றார்.

“ரவி எப்படி?” என்று கேட்ட இன்ஸ்பெக்டரிடம் ரவிக்கும் மணிக்குமிடையே ஆனா பிரச்சனை குறித்து சொல்லலாமா வேண்டாமா? என்று யோசித்த கணத்தில் இன்ஸ்பெக்டர் வால் பிடித்து “என்ன பிரச்சன?’ என்றதும் கடகடவென அடுத்தடுத்து நடந்ததை ஒப்புவித்து மூச்சு விட்டார்.

”அவரோடது என்ன கார்?”

கார் பெயரைச் சொன்னார். “ஹை எண்டா?” என்று கேட்டதற்கு என்னவென்று புரியாமல் முழித்ததை வைத்து “சரி நீங்க கிளம்புங்க. தேவையான கூப்புடுறேன். வெளியூருக்கு எங்கேயும் போயிராதீங்க” என்று கட்டளையாய் சொல்லிவிட்டு , அருகிலிருந்த எஸ்.ஐயிடம் ”இந்த கார் ஜிபிஎஸ்ஸை ட்ராக் பண்ண என்ன வழின்னு பாருங்க” என்றார்.

“சார். அவரு ஒய்ப் கிட்ட கேட்டுப் பாருங்க. அவங்க போனுக்கு ஆக்ஸஸ் கொடுத்திருக்காரான்னு?” என்றதும், இன்ஸ்பெக்டர் மணியின் மனைவிக்கு போன் செய்தார். ப்ளைட் கிடைக்காததால் காரில் வந்து கொண்டிருப்பதாய் சொல்ல, ஜிபிஎஸ் பற்றிக் கேட்டதும்  ” அம்மா.. என் மொபைல்ல பார்க்க முடியும்” என்ற மகள் சொன்னது இன்ஸ்பெக்டருக்கு கேட்டது. 

”நீங்க இப்ப எங்க வந்திட்டிருக்கீங்க மேடம்?”

“எந்த ஏரியாப்பா இது ?” என்று ட்ரைவரிடம் கேட்டு “போரூர் பக்கத்துல. நான் எந்த ஸ்டேஷனுக்கு வரணும்?” என்று கேட்டாள்.

’விருகம்பாக்கம்’ என்ற இன்ஸ்பெக்டரிடம் “இன்னும் அரை மணி நேரத்துல இருப்பேன்” என்று போனை வைத்தாள் மணியின் மனைவி.

அதே நேரத்தில் ரவி காரின் டிக்கியைத் திறந்து மணியின் பிணத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.

*************************

சூட்டோடு சூடாய் க்ளைமேக்ஸை விடுத்து, முழு படத்தையும் எடிட் செய்து தான் மட்டுமே பார்த்தான் ஸ்ரீதர். நம்பிக்கையாய் இருந்தது. சண்டைக் காட்சிகளை கொஞ்சம் டிரிம் செய்ய வேண்டும் என்று மாஸ்டரிடம் சொல்லி வரச் சொன்னான். மாஸ்டர், எடிட்டர், ஸ்ரீதர் மட்டுமே அமர்ந்து அந்தக் காட்சிகளை எடிட் செய்ய ஆரம்பித்தார்கள். மாஸ்டர் க்ளைமேக்ஸில் வின்செண்ட் எடுத்த காட்சிகளை பார்த்து கண்ணீர் வராத குறையாய் அழுதார். “பேரு கெட்டு போய்ரும் சார்.” என்றார்.

“மாஸ்டர். அதுக்குத்தான் உங்களை கூப்டேன். எது எல்லாம் மோசமா இருக்கோ அதையெல்லாம் தூக்கிருங்க. நான் பாத்துக்குறேன்” என்ற ஸ்ரீதரின் கையை பிடித்து குலுக்கிய மாஸ்டர் அடுத்த அரை மணி நேரத்தில் மொத்த க்ளைமேக்ஸ் காட்சியையும் ரஃப் கட் செய்து காட்டினார்.

அவர் வடிவமைத்த காட்சியையும் சீராய் எடிட் செய்யப்பட்டு, அதற்கான புட்டேஜ் போதாமல் இருந்ததால், அதை சரியாக்க, ஸ்ரீதர் எடுத்திருந்த க்ளோசப் மற்றும் பில்லர் ஷாட்களை வைத்து ஒப்பேத்தியிருந்தார். அதை பார்த்த ஸ்ரீதருக்கு கண்ணீர் முட்டியது. அமைதியாய் இருந்தான். அவனின் அமைதி புரிந்து அனைவரும் அமைதியாய் இருந்தார்கள்.

நினைத்த படத்தை எடுப்பது என்பது அத்தனை சுலபம் கிடையாது. எழுதும் போது கிடைக்கும் திருப்தி பெரும்பாலும் திரையில் கன்வர்ட் ஆக பட்ஜெட்டில் ஆரம்பித்து பல ஒத்துழைப்பு தேவை. இந்த தயாரிப்பில் அடிப்படையில் பிரச்சனையில்லை. தான் தேர்தெடுத்த டெக்னீஷியன்களினால் தான் இந்த பிரச்சனை என்று புரிந்து யாரை நோவது என்று புரியாமல் ஸ்ரீதர் அழுதான். அவன் எதிர்பார்த்த காட்சியில்லை.

ஆனாலும் மோசம் என்று சொல்ல முடியாத வகையில் அமைந்திருந்தது அவனுக்கு கொஞ்சம் நிம்மதியை தந்தது. படம் முடியும் தருவாயில் வரும் சேசிங் காட்சிகள் அவனைப் பொறுத்தவரை இத்தனை பிரச்சனைகளுக்கு நடுவில் சிறப்பாக வந்திருப்பதால் படம் நிறைவடையும் போது நிச்சயம் இக்காட்சி பெரிய இடறலாய் இருக்காது என்று நம்பிக்கை கொண்டான்.

“சார். இத கேமராமேன் பார்த்தா பிரச்சனை பண்ணுவான். எப்படியும் டி.ஐ.க்கு போவுமில்லை. பார்த்துக்கங்க.. திரும்ப அவமானப்பட நான் தயாரா இல்லை நிச்சயம் பிரச்சனை பண்ணுவேன். என்றார் மாஸ்டர்.

”இல்லை மாஸ்டர் இனி நான் அமைதியா இருக்க போறதில்லை” என்று சொலிக் கொண்டிருக்கும் போதே வின்செண்ட் போன் செய்தான். எடுக்காமல் விட்டான் ஸ்ரீதர். தொடர்ந்து அடித்துக் கொண்டேயிருந்தான். ஏதோஒரு பொரி தட்டி எட்டிடரின் அறையில் உள்ள பால்கனி வழியாய் எட்டிப் பார்த்த போது வின்செண்ட் கீழே நின்றிருப்பது தெரிந்தது.  இப்போது மீண்டும் வின்செண்டின் கால். சற்றே யோசித்து எடுத்தான்.

“சொல்லு வின்செண்ட்”

“க்ளைமேக்ஸ் பைட் எடிட் பண்ணியாச்சா?”

“பண்ணிட்டேன்”

“நான் இல்லாம ஓகே பண்ணாதே”  என்ற அவன் குரலில் கட்டளை இருந்ததை உணர்ந்தான் ஸ்ரீதர்.

“படத்துக்கு டைரக்டர் நானு. நான் ஓகே பண்ணா போதும். டி.ஐ எப்பன்னு சொல்லுறேன். அன்னைக்கு வந்து உன் வேலைய காட்டிட்டு போ என்னா?” என்றான் நக்கலாய். அவன் குரலில் இருந்த நக்கலும், தைரியமும் வின்செண்டை என்ன பதில் சொல்வது என்று யோசிக்க வைக்க, “வேற ஏதாச்சும் பேசணுமா?” என்ற ஸ்ரீதரின் கேள்விக்கு அவனிடம் பதிலே வரவில்லை.

*************************

மணியின் முகம் ஒரு மாதிரி உப்பிப் போய்  இருந்தது. குனிந்து மணியின் உடலை முகர்ந்தான். லேசாய் வாடை வருவது போலத் தோன்றியது. ஒரு நாளில் வாடை வருமா? என்று சுப்புராஜிடம் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். ‘சாரி மணி. நிஜமாவே உன்னைக் கொல்லணும்னு எல்லாம் ப்ளான் இல்லை. தப்பாயிருச்சு.’ என்று மனதுக்குள் சொல்வதாய் நினைத்து முணுமுணுப்பாய் பேசினான். அவன் பேசுவதை தூரத்திலிருந்து பார்த்த சுப்புராஜ் வேகமாய் ஓடி வந்து அவனைத் தள்ளிவிட்டு, டிக்கியை மூடினான்.

ரவியின் கன்னத்தில் அறைந்தான். ” த்தா.. ஏன் மடியில போட்டுட்டு அழுவேன்.” என்று ரகசியமாய்  திட்டினான். ரவி அவன் அறைந்ததைக் கூட உணராமல் மணியின் உடல் கிடந்த டிக்கி மூடப்பட்டும், அதை நோக்கி பார்த்தபடி ”தப்பாயிருச்சு.. தப்பாயிருச்சு” என்று முனகிக் கொண்டேயிருந்தான்.

“அண்ணே.. “ என்று உள்ளேயிருந்து குரல் கேட்டது. வாசலில் இளம் அல்லக்கை கையில் மொபைலுடன் நின்றிருந்தான். என்னடா என்பது போல திரும்பிப் பார்த்தான் சுப்புராஜ்.

“கம்ப்ளெயிண்ட் ஆயிருச்சு போல. பாலிமர்ல நியூஸ் போட்டிருக்கானுவ” என்றான்.

- தொடரும்

முந்தைய அத்தியாயங்களைப் படிக்க

பகுதி 46 - https://bit.ly/2WZsk7v

பகுதி 45 - https://bit.ly/2UnoELO

பகுதி 44 - https://bit.ly/2TZdRr6

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close