[X] Close

'24' சலனங்களின் எண்: பகுதி 46 - ரணகளம்


24-salanagalin-enn

  • கேபிள் சங்கர்
  • Posted: 02 Mar, 2019 10:23 am
  • அ+ அ-

மாஸ்டர் நான் கிளம்புகிறேன் என்றதும் நிலைமை கையை மீறுகிறது என்று ஸ்ரீதருக்கு புரிந்தது.

ஷூட்டிங் நடக்காமல் இருந்ததால் ஜூனியர் ஆர்டிஸ்ட் எல்லாம் கலைய ஆரம்பித்திருக்க, அதைப் பார்த்த ப்ரொடக்ஷன் மேனேஜர் ”என்னா சார்?” என்று வந்துவிட்டார்.

நிலைமையை சொன்னான். “அவன கேமராமேனா போட்ட போதே நினைச்சேன் இது மாதிரி ஏதாச்சும் ஆகும்னு. சரி விடுங்க அதைப் பத்தி இப்ப பேசி என்ன பண்ண? ஏதாச்சு பேசி சரி பண்ணுங்க. சாருக்கு போன் அடிச்சிட்டா அவருக்கு பதில் சொல்லியே நாளு போயிரும்” என்று பிரச்சனையை ஸ்ரீதர் பக்கமே தள்ளிவிட்டு போனார்.

என்ன செய்வது என்று ஒரு கணம் யோசித்து நின்றான். நிச்சயம் வின்செண்ட் செய்வது தவறு. மிகப் பெரிய கேமராமேன் கூட இம்மாதிரியான விஷயங்கள் செய்ய மாட்டார்கள். அப்படியே உதாரணமாய் ஒரு சில கேமராமேன்கள் செய்திருந்தால் அந்த மாஸ்டர் அவரின் திறமை மீதான மரியாதை காரணமாய் அவர்களுடன் ஒத்துழைத்திருக்கலாம். 

ஆனால் அது முழுக்க, முழுக்க அவர்களது விருப்பம். இங்கே ஈகோ பெரிய அளவில் கொதித்துக் கொண்டிருக்கிறது.

’நீ என்னடா ஷூட்டிங்கை நிறுத்துறது? நானே பேக்கப் சொல்லி நிறுத்துறேன். டைரக்டரை விட நீ பெரிய மயிரா?’ என்று கோபம் கொப்பளித்தாலும், அது சரியான முடிவு கிடையாது. ஒரு இயக்குனரை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளர் நல்லவனோ, கெட்டவனோ அவருக்கு படம் வெளியாகாமலேயே நஷ்டத்தை ஏற்படுத்துகிறவன் நல்ல இயக்குனர் இல்லை என்பது ஸ்ரீதரின் எண்ணம்.

ஆனால் பெரும்பாலான இயக்குனர்கள் டைரக்டர் ஆகிவிட்டாலே ஏதோ கொம்பு முளைத்தது போல எண்ணிக் கொண்டு படம் முடிகிறவரை தயாரிப்பாளருக்கு கூட படத்தில் என்ன நடக்கிறது என்று காட்டாமல், பெரிய செலவை இழுத்துவிட்டு, பிற்பாடு படம் ஹிட்டாகியும் தயாரிப்பாளர் மட்டும் நடுத்தெருவில் நிறுத்தி வைத்த கதையெல்லாம் பார்த்திருக்கிறான்.

முதல் படம். எக்காரணம் கொண்டும் தன்னால் இப்படம் நிற்ககூடாது என்பதில் உறுதியாய் இருந்தான். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்து, யாரிடம் வேண்டுமானாலும் அவமானப்பட தயாராய் இருந்தான்.

“த பாரு வின்செண்ட். நீ செய்யுறது சரியில்லை. லாஜிக்கும் இல்லை. மாஸ்டர் வைக்குற ஷாட்ல பிரச்சனையா?  இல்லை மாஸ்டர் பிரச்சனையா? சொல்லு பேசி சரி பண்ணுறேன்.”

வின்செண்ட் பதில் சொல்லாமல் “ப்ரொடக்ஷன் காப்பி கேட்டா தர மாட்டீங்களா?” என்று கத்தினான்.

”வின்செண்ட் நீ பண்றது சரியில்லை. நீ என்னை அவமானப்படுத்துறதா நினைச்சு உன்னையே அசிங்கப்படுத்திட்டிருக்க. புரிஞ்சுக்க. நான் தான் கூட இருக்கேன் இல்லை. ரெண்டு பேருக்கும் ஒத்து வர மாதிரி ஷாட்ஸ் வைக்குறேன். நீங்க ரெண்டு பேரும் பேசிக்க வேணாம். நானே எல்லாத்தையும் பாத்துக்கறேன். கொஞ்சம் கோவாப்ரேட் பண்ணு.

இன்னைய தேதிக்கு ஒரு நாள் ஷூட்டிங் செலவு கிட்டத்தட்ட மூணு லட்சம். இன்னொரு நாள் இதை அசெம்பிள் பண்ண முடியாது. ப்ரொடியூசருக்கு லாஸாகும். ப்ளீஸ்”

“ப்ரோடியூசர் லாஸ் ஆனா எனக்கு என்ன? அது உன் கவலை. என்னால முட்டாளுங்க கூட எல்லாம் வேலை செய்ய முடியாது.’

”இப்படி பேசுறது சரியில்ல வின்செண்ட்”

“சரி தப்பெல்லாம் இப்ப பேசி பிரயோசனம் இல்லை. அவன் ஆளுங்களுக்கு என்ன பண்ணனும்னு சொல்லிக் கொடுத்து உள்ள அனுப்ப சொல்லு. நான் பாத்துக்குறேன். அவன் என் கண் முன்னாடி நிக்கக்கூடாது. இல்லாட்டி நான் கிளம்பறேன் நீ ஷூட்டிங் முடிஞ்சா நடத்திக்க.” என்ற அவனது குரலில் கிண்டல் அதிகமாய் இருந்தது.

ஸ்ரீதரின் கெஞ்சல் குரல், அவனின் தவிப்பை பார்த்து குரூரமாய் அவன் மனதினுள் கெக்கலித்தான்.

“மாஸ்டர்னு ஒருத்தரை வச்சிட்டு பைட்டர்ஸை நாம டைரக்ட் பண்றது தப்பு வின்செண்ட்”

வின்செண்ட் பதிலேதும் சொல்லாமல் ப்ரொடக்ஷன் பையன் கொண்டு வந்த காப்பியை வாங்கிக் கொண்டு எழுந்து போனான்.

மாஸ்டர் ஸ்ரீதரின் வருகைக்காக காத்திருந்தார். அவனின் முகம் பார்த்து என்ன நடந்திருக்கும் என்று புரிந்து கொண்டவராய் “என்ன திமிர்தனம் காட்டுறானா? இப்பவே நான் யூனியன்ல கம்ப்ளெயிண்ட் பண்ணிரட்டா?”

”அய்யோ அதெல்லாம் வேணாம் மாஸ்டர்” என்று சொன்ன ஸ்ரீதரின் குரல் உடைந்திருந்ததை கவனித்தவர்.

“சார்.. என்ன நீங்க இதுக்கு போய் கலங்குறீங்க? ப்ரொடியூசர்  கிட்ட நான் பேசுறேன். இவனை மாதிரி அரைவேக்காடுங்களை எல்லாம் சும்மா விடக்கூடாது” என்று கோபமாய் கத்தினார்.

அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போதே சுரேந்தரிடமிருந்து போன் வந்தது. ஸ்ரீதர் போனை எடுக்கவில்லை. மாஸ்டரிடம் காட்டினான். “இப்ப என்ன பண்ணனும்? உங்களுக்கு ?” என்றார்.

“நீங்க உங்க பைட்டர்ஸர்ஸ் கிட்ட என்ன பண்ணனும்னு சொல்லிக் கொடுத்து அனுப்புவீங்களாம். நானும் அவனும் சேர்ந்து எடுத்துக்கறோம்” என்ற ஸ்ரீதரை அதிர்ச்சியுடன் பார்த்தார் மாஸ்டர்.

“நீங்க சொல்லுறத வேற யாராச்சும் மாஸ்டர் கேட்டான்னா போடா மயிருன்னு போய்ட்டேயிருப்பான் டைரக்டர் சார். நானா இருக்க அமைதியாய் இருக்கேன்.”

“மாஸ்டர். உங்களுக்கே நம்ம ஆளைப் பத்தி தெரியும். இன்னைக்கு ஷூட்டிங் செலவு என்னான்னு தெரியும். இந்த ஷூட்டிங்கை இப்ப அசெம்பிள் செய்யுறதுக்கு எத்தனை பிரச்சனையை தாண்டி வர வேண்டியிருக்குனு.

இதெல்லாம் ஜஸ்ட் அவனோட ஈகோவுல காலியாருச்சுன்னா.. அவனுக்கு ஒண்ணுமில்லை. வேற படம், வேற வேலைன்னு போயிருவான். ஆனா இது எனக்கு முத படம். ஆல்மோஸ்ட் முடிச்சிட்டேன். இப்ப போய் நின்னுருச்சுன்னா. நம்மாளு ஏற்கனவே ரிலீஸ் செய்யாம வச்சிருக்கிற படத்துல இதுவும் முடிக்காத படமா வச்சிருவாரு.

இத நான் உங்க கிட்ட கேட்கக்கூடாது. பட் வேற வழியில்லை. உங்க பைட்டர்ஸை மட்டும் அனுப்பி வையுங்க. மிச்சத்த நான் எப்படியாச்சும் பார்த்துக்குறேன். ப்ளீஸ்” என்று குரல் உடைந்து அழுதான் ஸ்ரீதர். 

மாஸ்டர் ஏதும் சொல்லாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். சட்டென கண்கலங்கி அவனை அணைத்துக் கொண்டார். “நீங்க போங்க நான் பாய்ஸை அனுப்புறேன்” என்று சொல்லிவிட்டு “பாய்ஸ்” என்று குரல் கொடுத்தார்.

தடதடவென ஸ்டண்ட் ஆட்கள் ஓடி வந்து அவர் முன் நிற்க “சார் கூட போங்க. அவரு என்ன சொல்லுறாரோ அதை செய்திட்டு வந்திருங்க” என்றதும் “மாஸ்டர்.. என்ன சொல்றீங்க?.” என்று இழுக்க. “எனக்காக.. ப்ளீஸ் செய்யுங்க” என்று கேட்டதும் “என்ன மாஸ்டர் ப்ளீஸ்னு எல்லாம் சொல்லிட்டு. வாங்க சார்.. நாம போகலாம்” என்றார்கள்.

அவர்களுடன் ஸ்ரீதர் உள்நுழைந்ததைப் மாலின் மாடியிலிருந்து பார்த்த வின்செண்ட் கீழிறங்கி வந்தான். “என்னவாம் ஃபைட்டு மாஸ்டருக்கு?” என்று அழுந்திச் சொன்னான்.  அவனின் கிண்டல் உடன் வந்த பைட்டர்ஸுக்கு பிடிக்கவில்லை. வின்செண்டை அழுத்தமாய் பார்த்தார்கள். அந்த பார்வையின் அர்த்தம் புரிந்தாலும் எகத்தாளமாய் சிரித்த படி “நீ வா ஸ்ரீ. நாம பைட் கம்போஸ் பண்ணுவோம்” என்றான்.

அதன் பிறகான படப்பிடிப்பு சம்பவங்கள் எல்லாம் சிலது ஆஹாவாகவும் பலது அபத்தங்களாகவுமே படமாக்கப்பட்டது. ஒரு சிறிய கைகலப்பு போராட்டம் தான் காட்சி என்பதினால் மாஸ்டர் பைட்டர்ஸுக்கு முதலில் சொல்லிக் கொடுத்த போதே ஸ்ரீதர் பார்த்ததினால் அதையே பைட்டர்ஸிடம் சொல்லி செய்யச் சொன்னான்.

அதற்கான கோணங்கள் என்ன சொல்லியிருந்தாரோ அதையே வைத்தான். வின்செண்ட் இதை உணர்ந்த போது கிட்டத்தட்ட அக்காட்சியை முடித்திருந்தான் ஸ்ரீதர்.  “ஸ்ரீ ரெண்டு மூணு ஸ்டெடி கேம் ஷாட் வேணும் மிஷ்கின் படம் மாதிரி” என்றான்.

‘இந்த ஷாட்டை முடிச்சிட்டு எடுப்போமே?” என்ற ஸ்ரீதரின் குரலைக் கேட்காமல், ஸ்டெடிகேம் பாஸ்கரை அழைத்து அவனுடன் விவாதிக்க போய்விட்டான். மிகவும் சோர்வடைந்தான் ஸ்ரீதர். ஓங்கி அவன் மண்டையில் ஒரு போடு போட்டு விடலாமா? என்கிற அளவுக்கு கோபம் வந்தது.

அதற்கு பிறகு வின்செண்ட் கம்போஸ் செய்த ஒரு மணி நேர ஷாட்கள் எல்லாம் அபத்தத்தின் உச்சம். அவன் பார்த்த படங்களில் எடுத்திருந்த ஷாட்களையெல்லாம் இதில் புகுத்தி கிட்டத்தட்ட ஸ்டண்ட் ஆட்களை அப்படி விழு, இப்படி எழுந்துக்க என்று டார்ச்சர் செய்து கொண்டிருந்தான்.

தகவல் மாஸ்டருக்கு போய்விட, மாஸ்டர் ஸ்ரீதருக்கு போன் செய்தார். புரிந்து போன் எடுத்து “இதோ இன்னும் அரை மணியில அனுப்பிடறேன் மாஸ்டர்.” என்று சொல்லி, “வின்செண்ட் போதும் ஸ்டெடி கேம் ஷாட். பைனல் க்ளோஸ் ஒண்ணு எடுத்து முடி” என்று கட்டளையாய் சொல்ல, சட்டென நிமிர்ந்து பார்த்து என்ன நினைத்தானோ “ஓகே” என்று அடுத்த வேலைக்கு சென்று அன்றைய ஷூட் முழுவதையும் பரபரவென முடிந்து வண்டியில் ஏறும் போது மணி இரவு ரெண்டு.

“அந்த ஸ்டெடி கேம் ஷாட் நல்லா வந்திருச்சு இல்லை” என்ற வின்செண்டுக்கு எந்த பதிலும் சொல்லாமல் ”அண்ணே ஒரு ஐஞ்சு நிமிஷம் கழிச்சு கிளம்பலாம். ஒரு தம் அடிக்கணும்” என்று சொல்லி “ப்ரொடக்ஷன்ல யாருங்க ஒரு சிகரட்” என்று கிளம்பிய ஸ்ரீதரையே பார்த்துக் கொண்டிருந்தான் வின்செண்ட்.

- தொடரும்

முந்தைய அத்தியாயங்களைப் படிக்க

பகுதி 45 - https://bit.ly/2UnoELO

பகுதி 44 - https://bit.ly/2TZdRr6

பகுதி 43 - https://bit.ly/2tl2m1y

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close