[X] Close
 

கற்றதைச் சொல்லவா… மற்றதையும் சொல்லவா? 7: ஆட வரலாம்... ஆடவரெல்லாம்...


aadavarellam-ada-varalam

  • பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்
  • Posted: 17 Apr, 2018 11:10 am
  • அ+ அ-

கவியரசு கண்ணதாசனை நாம் சாதாரணத் திரைக்கவிஞர் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவர் கதைவசனகர்த்தா, திரைப்படத் தயாரிப்பாளர், பத்திரிகை ஆசிரியர். பல படங்களில் நடித்திருக்கிறார்.

எல்லாவற்றுக்கும் மேலாக அரசியலில் ஈடுபாடு கொண்டவர் என்பதையும் மறந்துவிட வேண்டாம். அவர் தயாரித்த ‘கருப்புப்பணம்’; என்ற படத்தில் அவர்; நடித்ததோடு, மிகச்சிறந்த பாடல்களும் எழுதியுள்ளார். அதில் ஒரு பாடல்தான் ‘ஆடவர் எல்லாம் ஆட வரலாம்;

காதல் உலகம் காண வரலாம் பாவையார் எல்லாம் பாட வரலாம் பாடும் பொழுதே பாடம் பெறலாம் என்ற பாடல்.

சரி... நம் எல்லோருக்கும் ஆடத் தெரியுமா? ஆடத்தான் முடியுமா? ஆடினால் யார் பார்ப்பார்கள்? என்று ஆயிரம் கேள்விகள் எழுகின்றன. ஆனால் ‘வால்கா முதல் கங்iகை வரை’ என்ற நூலை எழுதிய ‘ராகுல்ஜி’ என்று அழைக்கப்படுகின்ற ‘ராகுல சாங்கிருத்யாயன், தான் எழுதிய அந்நூலில் மனிதகுல வரலாறு பற்றி மிகச் சிறப்பாக எடுத்துரைக்கிறார்.

வேட்டைக்காரச் சமுதாயத்தில் வாழ்ந்த மனிதர்கள் தங்களின் வேட்டைப் பொருள்களைக் குழுவாக அமர்ந்து பிடித்து, அவற்றை உணவாக சமைக்கச் செய்வார்களாம். அந்த உணவு தயாராகும் வரை பறைகளை முழங்கிக் கொண்டு தொடர்ந்து ஆடுவார்களாம். வெகுநேரம் நடக்கும் அந்த ஆட்டத்தின் முடிவில் அயராமல் ஆடிய ஆணோ பெண்ணோ அல்லது இருவருமோ அத்தனை பேராலும் போற்றப்படுவார்களாம். பிறகு கடும் பசியோடு உணவு உண்ணத்

தொடங்குவார்களாம். மீண்டும் நிலவொளியில் ஆட்டம் தொடருமாம். இவ்வாறு ஆடுவதால் மனமகிழ்ச்சியும் உடல் வலுவும் ஏற்படுமாம். இப்படியாக இருந்த வேட்டைக்காரச் சமுதாயம் பின்னர் கால்நடைச் சமுதாயமாக மாறியது.

அதன்பின்னர் வேளாண்மைச் சமுதாயத்தில்தான் மனிதகுலம் நிலையான ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து வாழத் தொடங்கியதாம். அங்குதான் அரசுகள் உருவாகின. இனக்குழுத் தலைவர்கள் அரசர்களாக ஆட்சிசெய்த போதும் கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தனர்.

குறிப்பாக ஆட்டக்கலைகளை அவர்கள் போற்றி வளர்த்தனர். அதற்கான ஆதாரங்களை ஓவியங்களிலும் சிற்பங்களிலும் இன்றைக்கும் நாம் கோயில்களில் காணலாம்.

சங்ககால சோழ மன்னர் குலத்தில் ‘ஆட்டனத்தி, ஆதிமந்த்தி’ என்ற இருவரது காதல் வாழ்க்கை ஆட்டத்தை அடிப்படையாக வைத்து சொல்லப்படுகிறது. பிற்காலத்தில் இதை அடிப்படையாக வைத்துதான் கவியரசு கண்ணதாசன் ஒரு காவியம் படைத்திருப்பார். அந்தக் காவியமே ‘மன்னாதி மன்னன்’ என்று படமாகவும் வந்தது. அந்தப் படத்தில்தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நாட்டியப் பேரொளி பத்மினிக்கு ஈடுகொடுத்துப் பரதநாட்டியம் ஆடியிருப்பார்.

கால்களை செம்பஞ்சுக் குழம்பில் நனைத்துக் கொண்டு தரையில் குனிந்து பார்க்காமல்  ஆடிக்கொண்டே சிங்கத்தின் உருவத்தை வரைய வேண்டும். இந்தப் போட்டி நடனம்  மிகச்சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கும். இதே படத்தில்தான், ‘ஆடாத மனமும் உண்டோ, நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு நாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில் வீர நடைபோடும் திருமேனி தரும் போதையில் எனும் அற்புதமான பாடலை எம். எல். வசந்தகுமாரியும் டி.எம். .சௌந்தர்ராஜனும்  மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில், பாடியிருப்பார்கள்.

நாட்டியத்திற்காகவே வந்தத் திரைப்படங்கள் என்று தமிழ்த்திரைப்படங்களில் ஒரு தனி ஆய்வே செய்யலாம். ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் வைஜெயந்தி மாலாவும் பத்மினியும் ஆடுகின்ற நாட்டியப் போட்டிப் பாடலான, ‘கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே..’ என்ற பாடல் காட்சி ஒரு மாதத்திற்கும் மேல் எடுக்கப்பட்டதாக அக்காலத்தில் வியப்போடு கூறுவார்கள்.

‘தில்லானா மோகனாம்பாள்’; திரைக்காவியம் பரதம் மற்றும் நாகஸ்வரக் கலையின் மேன்மையைச் சொன்ன படம். நகைச்சுவை நடிகர்களில் சந்திரபாபு, நாகேஷ், தொடங்கி இன்றைய வடிவேலு வரை காமெடி நடனத்தை நம் கண் முன்னே கொண்டுவந்து ஆடி நிறுத்துவார்கள்.

என் நண்பர் ஒருவர் என்னிடத்தில் ஒருமுறை ஆச்சர்யமாகக் கேட்டார். ‘நாம்வணங்குகின்ற சிவபெருமான் சதா ஆடிக்கொண்டே இருக்கிறார். கண்ணபெருமான் ஆடாத ஆட்டமே இல்லை. மன்மதனாகிய காமனும் அவரது மனைவியாகிய ரதிதேவியும் ஆடவே பிறந்தவர்கள். சிலப்பதிகாரத்தில் மாதவி பதினோறு வகையான ஆடல்களை ஆடியதாக ‘அரங்கேற்று காதை’யில் இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். ஆனால் நம்முடைய வாழ்க்கை முறையில் ஆட்டம் என்பதே இல்லாமல் போய்விட்டதே?’ என்று கேட்டுவிட்டு, மேலும் தொடர்ந்தார் அவர். 

‘மேலைநாட்டுக்காரர்கள் விருந்துண்ணும்போதும் ஆடுகிறார்கள். ஓய்வாக இருக்கும்போதும் ஆடிக்கொண்டே இருக்கிறார்கள். ஆட்டம் அவர்களுக்கு ஒரு உடற்பயிற்சி போல் ஆகிவிட்டது. ஆனால் அவர்கள் வணங்குகின்ற கடவுளர்கள் ஆடியதாக புராணங்களில் நாம் பார்க்கவில்லை. நம் கடவுளர்கள் ஆடுகிறார்கள், ஆனால் நாம் ஆடுவதில்லையே ஏன்? என்று கேட்டார். நான் உடனே, என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள்.

திருவிழாக்களில் நாம் ஆடாத ஆட்டமா? மானாட்டம்,மயிலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், கரகாட்டம் என்று ஆடிக்கொண்டேதான் இருக்கிறோம். நம் வாழ்க்கை முறையில் பிறப்பில் தொடங்குகின்ற ஆட்டம்,இறப்பிலும் கூட தொடர்வதை நீங்கள் மறந்துவிட்டீர்களா? மேல்நாட்டுக்காரர்கள்ஆணும்பெண்ணுமாகச் சேர்ந்து ஆடுவார்கள். நாம் தனியாகவும் ஆடுவோம்,இணைந்தும் ஆடுவோம். ஆட்டம் என்பது நம் வாழ்க்கையில் நாடி, நரம்புகளில்எல்லாம் இப்போதும் ஓடிக்கொண்டேதானே இருக்கிறது.

‘ஆடிய ஆட்டம் என்ன… பேசிய வார்த்தை என்ன… தேடிய செல்வம்என்ன…. என்று கண்ணதாசனுடைய பாட்டையும் எடுத்துச் சொன்னேன்.

இன்னும் சொல்லுகிறேன் கேளுங்கள். ஒருமுறை கைலாயத்தில் திருமாலும்,பிரம்மனும், தேவர்களும் வேண்டிக் கேட்டுக் கொண்டதிற்கிணங்க சிவபெருமான்திருக்கூத்து ஆடத் தொடங்கினாராம்.அப்படி அவர் ஆடும்போது அவர் தலையில் உள்ள மகுடம் ஆடுகிறதாம்.

அந்த மகுடத்தில் உள்ள பிறைச்சந்திரன் ஆடுகிறானாம். சிவபெருமான்அணிந்துள்ள புலித்தோலும் ஆடுகிறதாம். கழுத்தில் அணிந்துள்ள பாம்புஆடுகிறதாம். சிவனில் பாதியாக இருக்கின்ற பார்வதி தேவியும் இணைந்துஆடுகிறாளாம். அதனால் இந்த அகிலமே ஆடுகிறது என்று குமரகுருபரர்,தன்னுடைய ‘சிதம்பரச் செய்யுட் கோவை’யில் குறிப்பிடுகிறார். இதோ அந்தப் பாடல்,

கூற்றிருக்கு மடலாழிக் குசின்முத லோறைஞ்சக

கொழுந்தேன் பில்கி,

ஊற்றிருக்குந் தில்லைவனத் தசும்பிருக்கும்

பசும்பொன்மன்றத் தொருதா ன்றி,

வண்டுபா டச்சுடா; மகுடமா டப்பிறை

துண்டமா டப்புலித் தோலுமா டப்பகி,

ரண்டமா டக்குலைந் தகிலமா டக்கருங்

கொண்டலோ டுங்குழற் கோதையோ டுங்கறைக்

கண்டனா டுந்திறங் காண்மினோ காண்மினோ…

இந்தப் பாடலை பாடும்போதே நமக்கு ஆட வேண்டும் என்று

தோன்றவில்லையா.

மாணிக்கவாசகரும் தான் பாடிய திருவெம்பாவையில்,‘காதார் குழையாடப் பைம்பூண் கலனாட....’ என்று பாடுகிறார். மீண்டும் கண்ணதாசனுக்கே வருவோம்.

‘கட்டோடு குழலாட ஆட ஆட, கண்ணென்ற மீன் ஆட ஆட….’

என்று ‘பெரிய இடத்துப் பெண் படத்தில், அவரது பாடலைக் கேட்டுப்பாருங்கள்.

அந்தப் படம் 1963ல் வெளிவந்தபோது, அந்தப் பாடலில் பிழையிருப்பதாக பெரிய சர்ச்சையே உருவானது. அது என்ன சர்ச்சை தெரியுமா? கொஞ்சம் பொறுங்களேன், மூச்சு வாங்கிக்கொண்டு சொல்லுகிறேன்.

தொடர்ந்து கற்போம்...

தொடர்புடைய செய்திகள்

 
 
Kalathin Vasanai - Kindle Edition


[X] Close