[X] Close

'24' சலனங்களின் எண்: பகுதி 45 - வின்செண்ட் வினை


24-salanagalin-enn

  • கேபிள் சங்கர்
  • Posted: 22 Feb, 2019 11:50 am
  • அ+ அ-

அந்த டப்பிங் பஞ்சாயத்தின் போது சுரெந்தரிடம் ஸ்ரீதர் அப்படி பேசியிருக்ககூடாது. தஞ்சாவூர்காரனின் நுனி நாக்கு சுளீர் பேச்சு. சம்பந்தப்பட்டவருக்கு முள் குத்திய சாட்டையால் நடு முதுகில் அடித்த வலியாகவும் வேடிக்கைப் பார்ப்பவருக்கு சர்காஸ நகைச்சுவையாய் இருக்கும். 

சுரேந்தருக்கு வலித்தது. ஏற்கனவே அவர் பணப் பிரச்சனையால் நொந்திருந்தார். ஆனால் அவர் வியாபாரி. அதுவும் ஒன்றுமில்லாமல் புலம் பெயர்ந்து, கீழ் நிலை வேலை செய்து உயர்ந்திருப்பவர். அவருக்கு எங்கே அடிபணிவது. எங்கே ஏறி மிதிப்பது என்று புரிந்தவர். 

அதனால்  உடனடியாய் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவேயில்லை.  அவர் மேலும் இந்த டப்பிங் விஷயத்தைப் பற்றி பேச விழையாதது மட்டுமே ஸ்ரீதருக்கு புரிந்தது. காரணம் தன் புத்திசாலித்தனமான பேச்சு என்று நினைத்துக் கொண்டான். 

“சரி ஸ்ரீதர் உனக்கு யார் செட்டாவாங்களோ அவங்களை வச்சி பண்ணிருங்க நான் சொல்லிக்கிறேன்”. என்று போனை வைத்துவிட்டார்.

அதன் பிறகான வேலைகளில் எந்தவித சுணக்கமும் இல்லாமல் பரபரவென போனது. இன்னும் ஒரு பாடலும், சேஸிங் காட்சி மட்டுமே பாக்கியிருக்க, உடனடியாய் அதை முடித்தால் படம் முடிந்தது என்கிற நிலையில் கதை எழுதப்படும் போது சென்னையின் பெரிய மால்களில் காட்சியமைப்பதாய் கற்பனை செய்யப்பட்டு, யார் சீப்பாக தருவார்களோ அந்த மாலில் படமெடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஸ்ரீதர் தள்ளப்பட்டான். 

ரெண்டு நாள் இருந்தால் மிக முக்கியமான சிறு ஆக்ஷன் ப்ளாக். பாண்டிச்சேரியில் எடுத்த சேசிங் காட்சிகளுக்கான லீட் எல்லாவற்றையும் எடுத்து முடித்துவிட ப்ளான் செய்தான். 

பட்ஜெட் குறைவாய் ப்ளான் செய்தாக வேண்டிய கட்டாயம் . வின்செண்டுடன் காட்சிக்கான லொக்கேஷனை பார்த்துவிட்டு வரும்போதே டிஸ்கஸ் செய்தான். வின்செண்ட் தனக்கு ரெண்டு கேமரா, க்ரேன், லைட் என பெரிய செட்டப் கேட்டான். ரெண்டு நாளில் ரெண்டு கேமரா செட்டப் என்பது காட்சிகளை எடுக்க சுலபமாய் இருக்கும் என்பதை மறுக்க முடியாமல் ஸ்ரீதர் ஒத்துக் கொண்டான்.  

ஸ்டண்ட் மாஸ்டரிடம் கூப்பிட்டு எடுக்கப்பட வேண்டிய காட்சிகளைப் பற்றிச் சொல்லி, சின்ன ஆக்ஷன் ப்ளாக்கிற்கான தேவையை சொல்லி புரிய வைத்திருந்தான். அவுட்டோர் ஷூட்டிற்கு பிறகு வின்செண்டுக்கும், மாஸ்டருக்கும் எப்போதும் முட்டிக் கொண்டேயிருந்தது.

ஷூட்டிங்கிற்கு முன்பான உரசல்களை தவிர்ப்பதற்காக ஸ்ரீதரே இருவரிடையே பேசி வேலை வாங்கிக் கொண்டிருந்தான். 

மாஸ்டரைப் பற்றி மோசமாய் விமர்சனம் செய்து வின்செண்ட் பேசும் போது மறுத்தலித்து, ஆதரவாய் ஸ்ரீதர் பேச நினைத்தாலும், அது வின்செண்டுடனான தற்போதை மனநிலையை மாற்றிவிடும் என்பதால் அடங்கிப் போவதை வின்செண்ட் உணர்ந்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். 

ஸ்ரீதரின் ஆட்டிட்டியூட் தன்னிடம் மண்டியிட்டுக் கிடப்பதாய் உணர்ந்தான். அதனால் எப்போதெல்லாம் சாத்தியமோ அப்போதெல்லாம் இம்மாதிரி டீஸ் செய்தான். ஸ்ரீதர் அமைதியாகவே இருந்தான்.

படப்பிடிப்பு அன்று ஏழு மணிக்கு ”க்ரேன் டீமை தயார் ஆக சொல்லிடுங்க வின்செண்ட்”  என்று சொல்லிவிட்டு , மாஸ்டரிடம் எடுக்கப் போகும் ஆக்ஷன் ப்ளாக்கிற்கான லீட் ஷாட்களை பற்றி விளக்கிவிட்டு வந்து பார்த்த போது க்ரேன் டீம் அமைதியாய் இருந்தார்கள். 

“என்னங்க என்ன ஆச்சு?” என்று அவர்களைப் கேட்ட போது வின்செண்ட்டின் பெயரைச் சொன்னார்கள். 

“ஏன்? க்ரேன் ரெடியாக வேணான்னீங்க வின்செண்ட்?”

“உள்ள ரெண்டு மூணு மாஸ்டர் எடுத்துட்டு போயிருவோம்.” என்றான். 

உள்ளே பெரிய மாலின் பெரிய ஹாலில், அந்த ஹாலின் விஸ்தாரத்துக்கான லைட்டிங் செய்து கொண்டிருந்தான். நிச்சயம் கொஞ்சம் நேரமெடுக்கும் வேலைதான் என்று புரிந்ததால் ஸ்ரீதர் அமைதியாய் இருந்தான். 

முதல் ஷாட்டே பதினோரு மணிக்கு என்று ஆன போது டென்ஷன் ஆனான். முதல் ஷாட் முடிந்ததும் “வின்செண்ட் அதான் ரெண்டு கேமரா இருக்குல்ல மாஸ்டரையும் மிட்டையும் சேர்த்து எடுத்துரலாம்” என்ற போது நிர்தாட்சண்யமாய் “அதெல்லாம் பண்ண முடியாது. லைட்டிங் செட்டாகாது. நான் வைடுக்குத்தான் வச்சிருக்கேன்.” என்றான்.

“அப்ப ரெண்டுத்துக்கு சேர்த்து பண்ணுங்க”

“அதெல்லாம் முடியாது. லேட்டாகும் பரவாயில்லையா?” என்ற வின்செண்ட்டை நிமிர்ந்து பார்த்தான். அவன் கண்களில் ஒரு விஷமத்தனம் தெரிந்தது. 

இன்னும் நிறைய எடுக்க வேண்டும். எட்டு ஆர்ட்டிஸ்ட் காம்பினேஷன் “ஓ.கே” என்று சொல்லிவிட்டு அடுத்த ஷாட்டுக்கு போகும் போது காசி காதருகில் வந்து “நான் வேணா க்ரேன் டீமோட போய் வண்டி எக்ஸிட், எண்ட்ரி எல்லாத்தையும் அஸிஸ்டெண்ட்ட வச்சி எடுத்துர்றேன். ப்ரொடக்ஷன்ல காதக் கடிக்கிறாங்க. ரெண்டு கேமரா வச்சிட்டு என்ன பண்ணுறீங்கன்னு?” என்றான்.

வின்செண்டிடம் அருகே போய் சொன்ன போது “என்னை கொஞ்சம் வேலை செய்ய விடுங்க ஸ்ரீதர் “ என்று யாரும் எதிர்பாராத நேரத்தில் கத்தினான். மொத்த யூனிட்டும் அமைதியானது.  “நானே லைட்டிங் சரியா வராம கடுப்பாயிட்டிருக்கேன். அண்ணே அந்த ஹெச்.எம்மை கொஞ்சம் நவுத்துங்க” என்று வேலையின் டென்ஷனில் கத்தினார்ப் போல சமாளித்தான். 

ஸ்ரீதர் அமைதி காத்தான். வேறு வழியில்லை. வேறு எதோ ப்ளான் செய்கிறான் என்று புரிந்தது. முதல் நாள் ஷூட் முழுவதும் ரெண்டாவது கேமராவை பயன்படுத்தவேயில்லை. அடுத்த நாளுக்கும் அதே செட்டப் என்ற போது ப்ரெடக்ஷனிலிருந்து மேனேஜர் சேது அழைத்தார். 

“சார். உங்களுக்கு கம்பெனி நெலமை தெரியுமில்லை. தெரிஞ்சிட்டே இப்படி வேஸ்டாக்குறது நியாயமில்லை.’ என்றார். ஸ்ரீதர் அதற்கான காரணத்தை சொல்ல எத்தனித்த போது. 

“உங்களுக்கும் கேமராமேனுக்கும் எதாச்சும் பிரச்சனைன்னா அத நீங்களே முடிச்சிக்கங்க. அதை ப்ரொடக்ஷன்ல காட்டாதீங்க. நீங்க தான் டைரக்டர்” என்று சொல்லிவிட்டு சென்றார்.

அடுத்த நாள் காலையிலேயே வின்செண்டிடம் சொல்லிவிட்டான். க்ரேனையும் ரெண்டாவது கேமராவையும் பயன்படுத்தியே ஆக வேண்டுமென்று. முதல் காட்சியாய் ப்ளான் செய்ததும், அதையே என்பதால் வேறு வழியில்லாமல் ஒத்துக் கொண்டான். 

அதே நேரத்தில் நேற்று விடுப்பட்ட ஷாட்களுக்கான லைட்டிங் அதே பார்மெட் தான் என்பதால் “தயவு செய்து லைட் மேன் எல்லாரையும் உங்க அஸிஸ்டெண்ட்டை விட்டு சேம் செட்டப் செய்ய சொல்லிடீங்கன்னா. இங்க முடிச்சிட்டு அங்கே போகும் போது நீங்க செக் பண்ணிட்டு வேலைய ஆரம்பிக்க ஏதுவா இருக்கும்’ என்று மேனேஜர் முன்னிலையில் வைத்து சத்தமாய் சொன்னான்.  

“ஆமா சார். நேத்து ஏன் ரெண்டு கேமரா வச்சிட்டு யூஸ் பண்ணலைன்னு சார் சத்தம் போட்டாரு” என்று ஸ்ரீதருக்கு உதவியாய் பேசவும், வின்செண்ட் அமைதியானான். 

பரபர வேலைகள் போய்க் கொண்டிருக்க, லஞ்ச் ப்ரேக்குக்கு பிறகு ஆக்ஷன் காட்சிகளுக்கான வேலையை ஆரம்பிக்க மாஸ்டரை அழைத்தான். 

அவருக்கு காட்சிகளை ஏற்கனவே சொல்லியிருந்ததால் அவர் அஸிஸ்டெண்டுகளை வைத்து ஷாட் ப்ளான் செய்ய, விடுபட்ட காட்சிகளுக்கான ஷாட்களை பற்றி பேசிக் கொண்டிருந்த போது மாஸ்டர் ஸ்ரீதரை அழைத்தார். 

“சார். நான் ரெடி கொஞ்சம் கூட இருங்க. பேசறதுக்கு ” என்றார். மீடியேட்டர் வேலை. வேறு வழியில்லை.

மாஸ்டர் எல்லா ஷாட்களையும் ஸ்ரீதரை வைத்துக் கொண்டே வின்செண்டிடம் சொல்லாமல் ஸ்ரீதரை பார்த்து சொன்னது அவனுக்கு எரிச்சலாகிக் கொண்டேயிருக்க, இன்னும் காட்சிகள் எடுக்க வேண்டியிருப்பதால் அநேகமாய் எக்ஸ்டெண்ட் ஆகும் என்று ப்ரொடக்ஷனிடம் சொல்லி வைத்திருந்தான். 

அது குறித்து பேச மேனேஜர் அழைத்ததால் அங்கிருந்து விலகி இருந்த நேரத்தில் மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து வெளியே வந்தார். “சார். நான் சொல்லுற ஷாட்ட வைக்க மாட்டாராம். நான் இவனோட ஒர்க் பண்ண மாட்டேன்.” என்றார். 

”என்னங்க வின்செண்ட் என்ன ஆச்சு? ஏற்கனவே சொன்ன ஷெட்டியூலை விட அதிகமாப் போவுதுன்னு என்னை ரவுண்ட் கட்டிட்டிருக்காங்க. நேத்தே ரெண்டு கேமராவ யூஸ் பண்ணியிருந்தா நேத்தைய ஷாட் எல்லாம் மிச்ச ஆயிருக்காது. இப்ப என்னங்க?” என்று பொறுமையிழந்து சற்றே கோபமாய் அருகே அழைத்து வின்சென்ண்டை கடிந்ததுதான் மிச்சம்.  

“நான் அவன் சொல்லுற ஷாட் எல்லாம் வைக்க மாட்டேன். ஷூட்டிங்கே நின்னாலும் எனக்கு ஒரு மயிரும் இல்லை. நான் சொல்லுறாப் போல வந்து வேலை செய்துட்டு போவ சொல்லுங்க. இல்லாட்டி அவ்வளவுதான். லைட்ஸ் எல்லாம் ஆப் பண்ணுங்க” என்று சொல்லியபடி “ப்ரொடக்ஷன் சூடான டீ இருகக?” என்று நகர்ந்தான். 

அவன் இட்ட கட்டளை கிட்டத்தட்ட ஷுட்டிங்கை நிறுத்தியது. 

”வின்செண்ட் எந்த நிலையில நாம ஷூட் பண்ணிட்டிருக்கோம்னு உனக்கு தெரியுமில்லை?. ப்ரொடியூசரோட பைனான்சியல் நிலமை தெரிந்தே நீஇப்படி பண்றது நியாயமில்லை?”

“ஸ்ரீதர். இன்னும் ஒரு மாசம் கூட நிக்கட்டும். நாம நினைக்கிறத செய்ய வைக்கணும். இல்லாட்டி என்ன டைரக்டர் நீ?  அவனெல்லாம் ஒரு மாஸ்டர். அவன் சொல்றதை எல்லாம் நான் ஷாட்டா வைக்கணுமா? 

நான் கம்போஸ் பண்ணட்டா? ஷாட்டை.. இவனை விட நானே நல்லா கம்போஸ் பண்ணுவேன். ஜஸ்ட் ஸ்ட்ரகிள் தானே? பெரிய  ஜாக்கிச்சான் பைட் கம்போஸ் பண்றதா நினைப்பு?

நான் சொல்லுறாப் போல ஷாட் வைக்குறதா இருந்தா வர்றேன். இல்லாட்டி என்னை விட்டிருங்க”. என்றான் நிர்தாட்சண்யமாய்.

ஷூட்டிங் சத்தம் இல்லை என்றதும் ப்ரொடக்ஷன் டீம் பதறியடித்து ஓடிவர, “ஒன்னுமில்ல. .இதோ பேசிட்டு வந்திடறேன்.’ என்று மாஸ்டரை நோக்கி ஓடினான் ஸ்ரீதர்.

மாஸ்டர் தன் டீமுடன் பேக்கப் ஆக ரெடியாக இருந்தார்.  “என்ன மாஸ்டர்..?’ என்ற ஸ்ரீதரின் குரலிலிருந்த அதிர்ச்சியை உணர்ந்தவர்.  

“என்னால முடியாது டைரக்டர் சார். கிட்டத்தட்ட 50 படம் மாஸ்டரா பண்ணியிருக்கேன். இவன் பெரிய ஆளோ, நான் பெரிய ஆளோங்கிற ஈகோ இல்லாமத்தான் வேலை செய்யுறேன். அவன் என்னை அவமானப்படுத்துறான். மொத்தமா நாலு படம் கூட பண்ணாதவன். 

அதுவும் என் ஆளுங்க முன்னாடி. வேற கம்பெனியான நான் வெளிய போயிருப்பேன். உங்களுக்காகவும், சுரேந்தர் சாரோட அத்தன படத்துக்கு நான் தான் மாஸ்டர்ங்கிறதுக்காகவும் தான் அமைதியா இருந்தேன். மொத படம் பண்ணுற பல டைரக்டர்க்கு நான் ஆபத்பாந்தவனா இருந்திருக்கேன். உங்களுக்கே தெரியும்.  இனிமே முடியாது. நான் கிளம்பறேன்” என்றார்.
- தொடரும்

முந்தைய அத்தியாயங்களைப் படிக்க

பகுதி 44 - https://bit.ly/2TZdRr6

பகுதி 43 - https://bit.ly/2tl2m1y

பகுதி 42 https://bit.ly/2E8AkN1

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close