[X] Close

'24' சலனங்களின் எண்: பகுதி 44 - மரணம்


24-salanagalin-enn

  • கேபிள் சங்கர்
  • Posted: 15 Feb, 2019 16:19 pm
  • அ+ அ-

சலனமற்றுக் கிடந்த மணியை நால்வரும் சுற்றி நின்று பார்த்துக் கொண்டேயிருந்தார்கள். 

ரவியும் சுப்புராஜும் செய்த காரியம் வேண்டுமானால் ஒர் தேர்ந்த வில்லனின் செயல் போல தெரிந்தாலும், நிஜத்தில் அப்ரசண்டி கிரிமினல்கள் தான். 

ஏதோ கூட்டி வந்து கடத்தி வைத்து மிரட்டினால் பணம் கிடைக்கும் என்கிற நப்பாசையில் செய்த விஷயம் தீவிரமாகிவிட்டது. 

“ஆஸ்பிட்டலுக்கு வேணா கூட்டிட்டு போலாமா?” என்ற ரவியின் தலையில் ஓங்கி அடித்தான் சுப்புராஜு. 

“ம*@!க் கூட்டிட்டு போவ. அதும் நீயே கொன்னுட்டு. அப்படியே புழலுக்கு போயிர வேண்டியதுதான்.” என்றான்.

ரவிக்கு அவன் சொன்னதன் தீவிரம் புரிந்ததால் அமைதியாய் இருந்தான். கூட இருந்த இரண்டு பேருக்கும் ஒன்றும் புரியாமல் ‘அண்ணே நாங்க கிளம்பட்டுமா?” என்று அபத்தமாய் கேட்டனர்.

“யாராச்சும் இங்கேயிருந்து கிளம்பினீங்க.. நான் அப்ரூவரா மாறி எல்லாரையும் போட்டுக் கொடுத்திருவேன்” என்றான் சுப்புராஜு. 

அனைவரும் அமைதியாய் ஏதும் பேசாமல் இருந்தார்கள். “இப்ப என்ன பண்றது?” என்றான் ரவி.

“யோசிக்கணும். நாம மாட்டாம இருக்கணும்னா யோசிக்கணும்” என்ற சுப்புராஜின் முகம் விகாரமாய் இருந்தது. “டேய் இங்கே ஒருத்தன் இருங்கடா” என்று சொல்லிவிட்டு ரவியின் தோளில் தட்டி அழைத்துக் கொண்டு உள்ளே போனான். 

மீதமிருந்த சரக்கை எடுத்து ஆளுக்கொரு க்ளாஸில் ஊற்றிக் கொண்டு “ம்ம். குடி” என்றான். ரவி ஏதும் புரியாமல் பார்க்க “குட்ரா” என்று உரத்து சொல்லி அவனும் குடித்தான். 

அவசரமாய் குடித்ததில் சட்டை மேலெல்லாம் சரக்கு வழிந்தது. “துண்டு துண்டா அறுத்துரலாமா?’ என்று கேட்ட மாத்திரத்தில் “அய்யோ” என்றான் ரவி. 

“ஏண்டா?’

“வீடு பூரா ரத்தமாய்ரும்”

”ரத்தம் உறைய ஆரம்பிச்சிருச்சுன்னா வராதாம். கூகுள்ல படிச்சிருக்கேன்” என்றவனின் முகத்தை ஏறிட்டு பார்த்த ரவியின் முகத்தில் கொஞ்சம் தெளிவு பிறந்தது. 

“முதல்ல அவன் செல்போனை ஆஃப் பண்ணு. அடுத்தது. நம்ம போன் எல்லாத்தையும் ஆஃப் பண்ணுவோம் தேவைங்கிறபோது மட்டும்தான் ஆன் செய்யணும் என்னா? ஏன்னா இப்ப மாட்டுற பாதி கொலை கேஸுங்க செல்போன் வச்சித்தான் கண்டுபிடிக்குறானுவ. ஓகே. 

அப்புறம் பாடிய வண்டி டிக்கீல போட்டுட்டு ஒரு நாள் சுத்துவோம். நல்ல ஆள் நடமாட்டம் இல்லாத இடமாப் பார்த்து ரம்பத்த வச்சி பார்ட் பார்ட்டா அறுத்து ஹைவேல போற எடத்துல எல்லாத்துலேயும் ஒவ்வொன்னா தூக்கி வீசிருவோம். என்னா?

நாளைக்கே நீதான் கடைசியா பேசினா. உன்னோடதான் அவன் பேசினான்னு சொன்னாலும் பாடி கிடைக்காம கேஸ் நிக்காது” 

”அப்ப கண்டுபிடிச்சிருவாங்களா?” என்று கேட்ட ரவியின் கேள்வியில் இருந்த அபத்தத்தை உணர்ந்து சுப்புராஜ் சிரித்தான். ரவியும் அசட்டுத்தனமாய் அவனுடன் சிரித்தபடி, “அது சரி கூடவே இருந்திருக்கேன். 

மொதக் கேள்வி எனக்குத்தானே வரும். நான் சமாளிச்சிக்குறேன். நீங்க சொல்றதுசரிதான். அதை அப்புறம் பார்த்துப்பம். இப்ப டிஸ்போஸ் பண்ணனும்” என்று பெருமூச்செடுத்து எழுந்தான். 

“அண்ணே வண்டிய ரிவர்ஸ் எடுத்து டிக்கியை திறந்து ரெடியா வைங்கண்ணே.. அண்ணனை பத்திரமா அனுப்பி வைப்போம்” என்று  கட்டளையிட ஆரம்பித்தான்.

அவர்களும் பரபரவென வேலைகளை செய்ய அரம்பித்தார்கள். தலையின் பொட்டிலும், பின் மண்டையிலும் அடிபட்டு ரத்தம் வழிந்திருந்தது. சுப்புராஜும், ரவியும் மணியை தூக்கி ஒரு சேரில் உட்கார வைத்துவிட்டு, ரவி டப்பிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து சிரத்தையாய் தரையை மொழுகினான். 

ரத்தம் படிந்திருந்த தரை சுத்தமாகியது. ஃபேனைப் போட்டுக் காய வைத்தான். அதே ஈரத்துணியை வைத்து மணியின் முகத்தில் இருந்த ரத்தக் கரைகளை துடைத்தான். அடிப்பட்ட இடங்களில் துடைக்கும் போது அவனையும் அறியாமல் எங்கே வலிக்குமோ என்று பயந்து துடைத்ததை உணர்ந்தான். 

அடுத்த நொடி விக்கி விக்கி அழ ஆரம்பித்தான். அதை யாரும் எதிர்பார்க்கவில்லை. சுப்புராஜு அவனை மணியிடமிருந்து விலக்கி கொண்டு வந்து “என்னடா.. என்ன ஆச்சு?” என்று கேட்டான்.

”அநியாயமா கொன்னுட்டேனேடா நான் பாவி. கூட்டி வந்து சோறு போட்டு, வேலை கொடுத்து அவனைப் போயி..” என்று அதற்கு மேல் சொல்லிய வார்த்தைகள் ஏதும் புரியா வண்ணம் அழுகையோடு பேச. சுப்புராஜு அவனை வாயை மட்டும் பொத்தினான். 

அவன் கைகளில் பொத்தப்பட்டு குழறிய வார்த்தைகள் அமுங்கிப் போய் வெளிவந்தது.  அழுது முடிக்கும் வரை அனைவரும் காத்திருந்தார்கள். முடித்தான். கண்களை துடைத்துக் கொண்டு  ”சுப்பு நீ தலையப் பிடி. நான் காலைப் பிடிக்கிறேன்’ என்று வேலையில் இறங்கினான். 

மணி டிக்கியில் ஏற்றப்பட. சுற்றிலும் ஒரு முறை எல்லா இடங்களையும் பார்த்தார்கள். சரக்கு மிச்சங்களைத் தவிர வேறேதும் இல்லை. வண்டியில் ஏறும் போது எதற்கும் ஒரு முறை மணியை பார்த்துவிடுவோம் என்று டிக்கியை திறந்து பார்க்க ஒரு காலில் மட்டுமே செருப்பு இருந்தது. 

“டேய் ஒரு செருப்பு உள்ளேயே  இருக்கு.” என்று ரகசியமாய் கத்தினான். அவனே உள்ளே போய் தேடினான். தலையில் அடித்த போது சுருண்டு விழுந்த மணியின் கால்கள் உதறியபோது ஒன்று மட்டும் விலகி கதவருக்கில் போய் விழுந்திருந்தது. தேடி கண்டுபிடித்து மீண்டும் மணியின் கால்களில் மாட்டி விட்டு ஒரு நிமிடம் மணியையே பார்த்தபடி நின்றிருந்துவிட்டு  வண்டியில் ஏறி கிளம்பினான் ரவி.

*************************

“வணக்கங்கம்மா.. எப்படி இருக்கீங்க?” என்ற ராமராஜின் குரலில் அதீத மரியாதை இருந்தது. 

“சார். போன் சுவிட்ச் ஆப்புல இருக்கு. உங்க கூட இருக்காரானு கேட்கலாம்னுதான்” என்றது மணியின் மனைவி குரல். அதனால் தான் அத்தனை மரியாதை ராமராஜின் குரலில். 

“சார். காலைலேந்து வரலை ஆபீஸுக்கு. வீட்டுல இருப்பாரோ என்னவோ. ஷூட்டிங் இல்லை இல்ல அதான் நாங்களும் கூப்பிடலை.” 

“யாரையாச்சும் ஒரு ஆளை வீட்டுக்கு அனுப்பி பார்த்துட்டு போன் பண்ண சொல்றீங்களா? நெதம் சரியா காலையில ஒருக்கா, மதியம் , ரவைக்குனு போன் பண்ணிருவாரு. 

புள்ளைங்க வேற என்ன போன் பண்ணாரான்னு கேட்க ஆரம்பிச்சிருதுங்க’ என்ற அவரின் குரலில் கவலை இருந்தது.  

போன் கட் செய்த மாத்திரத்தில் ராமராஜ் தன் உதவியாளர்களை அழைத்து  “சார் நம்பருக்கு ஒரு வாட்டி ட்ரை பண்ணுங்க. அப்படியே ரவிக்கு ஒரு கால் அடிங்க. எப்படியும் அவர் கூடத்தானிருப்பான். நான் சார் வீடு வரை போய்ட்டு வர்றேன். தம்பி நீ உன் வண்டிய எடுத்துட்டு வா.” என்று பரபரவென கட்டளைகள் பிறப்பித்தபடி வண்டியில் ஏறினார். 

வீட்டுக்கு போய் பார்த்தார். பூட்டியிருந்தது. வாட்ச்மேனிடம் வந்து “எஃப்-4, மணி சார்.. என்று கேட்க. அவன் “லெட்ஜரைப் பார்த்து  “அவரு இல்லியே அவரும் கூட ஒருத்தர் இருப்பாரே அவர் தான் வண்டிய ஓட்டிட்டு போனாரு. திரும்ப இன்னும் வரலை.” என்று தகவல் சொன்னான். 

ஆபீஸுக்கு போன் செய்து ”ரவி போன் கிடைச்சுதா?’ என்று கேட்டார். “இல்லை சுவிட்ச் ஆப் ஆயிருக்கு” என்ற பதிலைக் கேட்டதும், அவர் பங்கிற்கு ரவி மற்றும் மணியின் நம்பரை ட்ரை செய்தார். அவருக்கு அதே நிலைதான். என்ன செய்வது என்று சிறிது நேரம் யோசிக்க அரம்பித்தார். 

எதாவது ஒரு நம்பிக்கையான பதிலை மணியின் மனைவியிடம் சொல்லிவிட வேண்டுமென்று முடிவு செய்து, அவரை தொடர்பு கொண்டு “சாரும், ரவியும் தான் எங்கயோ கிளம்பி போயிருக்காங்க. பிஸினெஸ் விஷயமா யாரையோ பாக்கணும்னு போயிருக்காங்க. 

சார்ஜர் எடுத்துட்டு போகாம இருந்திருக்கலாம். வந்திருவாங்க. வந்ததும் போன் பண்ணச் சொல்லுறேன்” என்றது, எதிர் முனையில் தான் பேசிய மாடுலேஷன் நிச்சயம் நம்பிக்கையை கொடுக்கும் என்று நம்பினார். 

’சே… எல்லாத்தையும் சினிமாவாவே நினைக்க ஆரம்பிச்சிட்டோம்” என்று தன்னையே நொந்து கொண்டு சிரித்தபடி அங்கிருந்து கிளம்பினார்.

*************************

பாண்டிச்சேரியை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது மணியின் கார். மணியை டிக்கியில் கொஞ்சம் அசெளகரியமாய் மடக்கி  வைக்கும் போது ரொம்பவே வருத்தப்பட்டான் ரவி. 

“சட்டையில துளி அழுக்குப்பட விடமாட்டான்” என்று அசந்தர்ப்பமாய் சொல்லிக் கொண்டு வந்தான். “தபாரு. நீதான் ரொம்பவே எமோஷனலா ஆகி காட்டிக் கொடுத்துருவ போல. ஆனது ஆயிருச்சு. ஒரு ரெண்டு நாள்ல எல்லாத்தையும் சப்ஜாடா முடிச்சிட்டு நாம பாட்டுக்கு திரும்பப் போறோம். என்ன புரியுதா?” என்றான் சுப்புராஜ். 

ரவி பலமாய் தலையாட்டினான். 

”பாடி வாசனை வந்திருராது?” 

‘உடனேயெல்லாம் வராது. ஒரு நாள் ஆகும் டீ கம்போஸ் ஆவுறதுக்கு” என்றவனை ரவி மீண்டும் ஆச்சர்யமாய் பார்க்க  “கூகுள்ல போட்டிருந்தான்” என்றான் சுப்புராஜ்.

வண்டி பாண்டியின் எல்லைக்குள் நுழைந்தவுடன் “சரக்கு வாங்கிக்கலாமா?” என்றனர் அடிபொடிகள். 

ரவி தன் பாக்கெட்டிலிருந்து கத்தையாய் பணத்தை எடுத்து அதிலிருந்து ஒரு காந்தி நோட்டை உருவி கொடுத்தான். அத்தனையும் மணியின் பணம். அவர் பாக்கெட்டிலிருந்து எடுத்தப் பணம். 

”இத வச்சிக்கத்தானே இத்தன செய்ய வேண்டியிருக்கு?” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான். தான் மிகவும் செண்டிமெண்டலாய் ஆகிப் போனதை உணர்ந்து ‘இது நமக்கு சரிப்பட்டு வராது’ என்று உறுதியாய் முடிவெடுத்து வாங்கி வந்த பாட்டிலை எடுத்து கடகடவென குடித்தான். 

சுப்புராஜு வண்டியைக் கிளப்பினான். “வீட்டுல தேட இன்னும் ஒரு நாளாவது ஆகும். பாடிய டிஸ்போஸ் பண்ணதும், காரையும் டிஸ்போஸ் பண்ணிரணும் ட்ரேஸ் பண்ண முடியாத அளவுக்கு ” என்றான் சுப்புராஜ். 

காரில் ஜி.பி.எஸ் இருப்பது தெரியாமல்.

- தொடரும்

முந்தைய அத்தியாயங்களைப் படிக்க

பகுதி 43 - https://bit.ly/2tl2m1y

பகுதி 42 https://bit.ly/2E8AkN1

பகுதி 41 https://bit.ly/2SbCB2D

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close