[X] Close

குரு மகான் தரிசனம் 22: ராம்தேவ் பாபா


guru-mahan-dharisanam-22

ராம்தேவ் பாபாஜி

  • kamadenu
  • Posted: 28 Jan, 2019 12:25 pm
  • அ+ அ-

- திருவை குமார்

நீலக்குதிரையை தன்னிடமே வைத்துக்கொண்ட பிறகு அக்குழந்தை பெரியவனாகும் வரை பலப்பல அற்புதங்களை செய்துகொண்டே இருந்ததாம். இதனால் அதன் புகழ் பல்கிப் பெருகியது. இதனிடையே ராம்தேவ் என்றே அழைக்கப்பட்டு வந்த அவரது பெயருக்குப் பின்னே ‘ஜி’ சேர்ந்து கொண்டதோடு மக்களால் மிக அன்பாக பக்தியாக ராம்தேவ்ஜி பாபா என்றழைக்கப்பட்டார்.

பொதுவாகவே அன்றைய நாட்களில் மந்திர-தந்திர மாய வித்தைகள் அதிகமாக பழக்கத்திலிருந்தது. பில்லி, ஏவல், சூன்யத்தில் பலரும் அனுபவம் பெற்றிருந்தனர்.

ராம்தேவ்ஜியின் மீது அனாவசியமாக பொறாமை கொண்ட ஒரு மந்திரவாதி அவரைக் கொல்ல சதித்திட்டம் போட்டான். அவர்களது வழக்கப்படியே ஒரு குட்டிச்சாத்தானை தயார் செய்து அவர் மீது ஏவினான்.

அந்த சைத்தான் ஒரு குழந்தை வடிவமாக உருமாறி ராம்தேவின் வீட்டிலேயே விளையாடத் துவங்கியது. அனைவரும் கவனம் அற்றவர்களாக இருந்தபோது ராம்தேவின் சகோதரரைக் கவர்ந்து கொண்டு ஆகாசத்தில் பறந்தது.

விடுவாரா பாபா? தனது நீலக்குதிரையை நோக்கி கை சொடுக்கிய அடுத்த வினாடி பாபாஜியுடன் நீலக்குதிரை விண்ணில் பாய்ந்தது. ஆகாச மார்க்கத்திலே அந்த சைத்தானை வதம் செய்துவிட்டு சகோதரரை மீட்டு வந்தார்.

பிறகு சில தினங்கள் கழித்து பாலினாத் என்ற ஒரு மடத்தின் சிறப்பு அழைப்பை ஏற்று அங்கு சென்று தங்கினார். இவர் தங்கியிருந்த தினங்களில் அந்த மடத்தைச்சுற்றி சில துர்தேவதைகள் சுற்றி வருவதைக் கண்டார்.

விடுவாரா? அதே நொடியில் அனைத்தையும் விசிறியடித்தார். மடத்து நிர்வாகிகள் ஆனந்தத்தில் குதூகுலித்தனர்.

ராம்தேவ்பாபாஜியின் புகழ் பெருகிக்கொண்டே போவது பலரையும் குமைச்சலுக்குள்ளாக்கின. உள்ளுக்குள் பொறாமைத் ‘தீ’ கொழுந்து விட்டு எரிந்தது.

இவர் நிஜமாகவே தெய்வப்பிறவியா என்று ஆராயும் முகமாக சில முஸ்லீம் மன்னர்கள் ஒன்று சேர்ந்து ஐந்து முஸ்லீம் மதகுருமார்களை தயார்படுத்தினர். இஸ்லாமில் இவர்கள் ‘பீர்கள்’ என்று போற்றப்படுவார்கள்.

மன்னர்கள் பேச்சினைத் தட்டாமல், ஐவரும் மாறு வேடத்தில்  திரிந்தனர். ஆசார அனுஷ்டானத்தினை சிறிதும் கைவிடாத அந்த ஐவரும் எந்த உணவு விடுதியிலும் உணவருந்தமாட்டார்கள்.

பாபாஜியைத் தேடி அலைந்தவர்கள், ஏதாவது ஒரு மர நிழலில் அமர்ந்துகொண்டு தாம் கொண்டுவந்த உணவையாவது தின்போம்… என்று பேசியபடி நடந்தார்கள்.

முருங்கை மரம் கூட கண்ணில்படவில்லை. சூட்சுமமாக இதை தெரிந்து கொண்ட ராம்தேவ்ஜி, அவர்கள் நடந்து வரும் பாதையிலேயே ஒரு பெரும் மரத்தை தோற்றுவித்தார்.

குருமார்களின் உள்ளம் அறியாதா என்ன?

பீர்களுக்கு இந்த நிஜம் தெரிந்து போயிற்று. தனது சக்தியினாலேயே இப்பேர்ப்பட்ட மாமரத்தை தோற்றுவிக்கிறார்  என்றால்… கண்டிப்பாக இறை அவதாரமாகவே இருப்பார் என்று முடிவுக்கு வந்தனர்.

ஆனாலும், ஒரு சிறு அகம்பாவம் அவர்களை ஆட்டிப்படைக்க, தங்களது சக்தியால் பாம்பு தீண்டி இறந்த ஒரு சிறுவனின் சடலத்தை வரவழைத்து எடுத்துக் கொண்டு பாபாவின் காலடியில் கிடத்தி தங்களது மகன் அரவம் தீண்டி மாண்டுபோனான் என்று அழுதார்கள்.

சிறுவனின் சடலத்தை தன் முன் கிடத்தும்படி சொன்னார். ‘பிள்ளாய்! எழுந்திரு!’ என்று மட்டுமே சொன்னார் பாபா. சவம் சிறுவனாக எழுந்தமர்ந்து குருவைத் தொழுது புறப்பட்டுச் சென்றது.

பீர்மார்களுக்கு தலை கிறுகிறுத்தது. இத்தனை அமளிதுமளிகளுக்கிடையே ஐந்து குருமார்களையும் தமது இல்லத்தில் உணவு அருந்துமாறு பாபாஜி கோரிக்கை வைத்தார். ஆனால் அவர்களோ, “அன்றாடம் தாம் பயன்படுத்தும் தட்டினைத்தவிர வேறு ஏதும் தீண்டமாட்டோம். அதே தட்டுகளை நாங்கள் எடுத்து வரத்தான் வேண்டும் என்றால், ‘முல்தான்’ என்ற ஊருக்குத்தான் சென்றுவர வேண்டும். ஆனால், கால நேரம் போதாது” என்று சாக்குபோக்கு சொல்லியபடி நகரத்தொடங்கினர்.

“ஓஹோ உங்கள் இல்லங்கள் வெகுதூரமோ? அப்படியெனில் இதன்மீது அமர்ந்து கொள்ளுங்கள்…” என்று சொல்லியபடியே ஒரு கோரைப்பாயினை விரித்தார்.

அவர்கள் ஐவரும் அப்போது கூட “நாங்கள் ஐவரும் உட்காருவதற்கு இந்த பாயில் இடமில்லை”… என்று மேலும் சங்கடப்படுத்தினர்.

“அவ்வளவுதானே…” என்று கூறியபடி அந்த பாயை கையிலெடுத்து ஒரே உதறலாக உதற… அது இரட்டிப்பு மடங்காகியது. மூன்றுக்கு மூன்றடி அளவினான பாய் – ஆறுக்கு ஆறு அடியாக அழகாக வளர்ந்து அவர்களை ஏற்றிக் கொண்டு பறக்கத் தொடங்கிய அடுத்த நொடியே அந்த ஐந்து குருமார்களின் இல்லங்களில்  வைக்கப்பட்டிருந்த தட்டுகள் தாமாகவே பறந்துவந்து அவரவர் மடியில் விழுந்தன. பிறகு என்ன? தடபுடலான விருந்தை ஏற்ற ஐந்து குருமார்களும் தங்கள் தவறினை ஒப்புக்கொண்டு ராம்தேவ் பாபாஜியையும் தங்கள் தேசம் அழைத்துச் சென்று “ராம்ஷப்பீர்” என்ற பட்டமும் அளித்து கெளரவித்தனர்.

ராம்தேவ்பாபாஜி, சில விசித்திர விளையாட்டுகளையும் செய்துவிடுவார். அப்படித்தான் ஒரு வியாபாரி வண்டி நிறைய கல்கண்டு மூட்டைகளை ஏற்றிச் சென்று விற்றுக்கொண்டிருந்தான்.

வெகு சிரத்தையாக பாபாஜி அவனிடம் ‘இது என்ன?’ என்று எதார்த்தமாகக் கேட்க அவனோ சாமர்த்தியமாக ‘உப்பு’ என்று பதில் வைத்தான். “சரி!... சரி! பார்த்து உப்ப எடுத்துட்டுப்போ!...” என்று கூறிவிட்டு நமுட்டலாக சிரித்து வைத்தார். வியாபாரிக்கோ அரசாங்க வரி பயம். கேட்டவர் அதிகாரியோ என்று தவறான எண்ணம்.

ஆச்சு! சந்தை வந்தாயிற்று. மூட்டைகள் படபடவென இறக்கப்பட்டு வியாபார நிமித்தமாக அவற்றை அவிழ்த்தால் அனைத்துமே உப்பாக இருந்தன. வியாபாரி விழுந்தடித்து ஓடிப்போய் பாபாஜியைத் தேடிப்பிடித்து பாதம் பணிய… இங்கே சந்தையில் உப்புகள் பழையபடியே கல்கண்டாகியிருந்தன.

இப்பேர்ப்பட்ட மகான் தனது வாழ்வின் இறுதி அத்தியாயத்தையும் குறிப்பிட்டார்.

1458-ல் மண்ணுக்குள் செல்லும்நாள் என்றார். சொன்னவர் சொன்ன நாளில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள போக்ரானிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடத்தில், சமாதி நிலைக்குச் சென்றார்.

அவரது புகழும், பெருமையும் அறிந்த பிகானீர் மன்னர் அவருக்காக அற்புதமான ஆலயம் ஒன்றை எழுப்பி அதை வழிபாட்டுத்தலமாக்கி மக்களுக்கு அர்ப்பணித்தார்.

ஒருமுறை ராஜஸ்தான் சென்று மகான் சமாதியை தரிசியுங்களேன்!

- தரிசிப்போம்

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close