[X] Close

குரு மகான் தரிசனம் 21: ராம்தேவ் பாபா


guru-mahan-dharisanam-21

  • kamadenu
  • Posted: 11 Jan, 2019 11:28 am
  • அ+ அ-

திருவை குமார்

பாரதத்தின் மறைந்த முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய் அவர்களால் ‘போக்ரான்’ எனும் இடம் ராஜஸ்தானின் பிரபலமாகிப் போனதை நாம் அனைவரும் அறிவோம். அணுகுண்டு சோதனை நடத்தப்பட்ட அந்த இடத்தில் இருந்து மிகச்சரியாக பனிரெண்டு கிலோமீட்டர் தொலைவில் மற்றுமொரு பிரபலமான இடம் உள்ளது. அதுவே மகான் ஸ்ரீராம்தேவ் பாபா என்று பக்தர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட அற்புதச் சித்தரின் அவதாரத் தலம்.

தோமர் என்றோரு இனம். அதில் அவதரித்தவரே மகான் பாபா ராம்தேவ். இந்த இனமானது ராஜபுத்திர வம்சத்தின் வழி வந்தது.  வடதேசத்தில் கோரி முகம்மது, அலாவுதீன் கில்ஜி போன்றவர்கள் கோலோச்சிய காலத்தில் அவதரித்தவர்.

முன்னொரு காலத்தில் வடநாட்டில் ராணாஜி என்ற தெய்வீக மகான் வாழ்ந்து கொண்டிருந்தார். ஒருநாளில் ஏதோ ஒரு கோபத்தில் அந்த தேசத்தை ஆண்ட மன்னன் மகானைப் பிடித்து வந்து கண்டதுண்டமாக வெட்டி எறிந்தான்.

வெட்டப்பட்ட உடல் பாகங்களிலிருந்து ரத்தம்தானே பீறிட்டிருக்க வேண்டும்? மாறாக பசும்பால் ஆறாக ஓடியது. மன்னன் நிலைகுலைந்தான். பயத்தில் வெலவெலத்து நின்றான். வெட்டுப்பட்ட ராணாஜியானவர் ஏதோ யாருமற்ற அனாதை இல்லை. அவருக்குப் பிறந்தவர்கள் எட்டு மகன்கள். அவர்களில் ஆறு பேர் மொகலாய படையினரால் கொல்லப்பட்டனர். மீதமுள்ள இருவரும் எப்படியோ தப்பிப்பிழைத்து புஷ்கர் எனும் ஊருக்குள் ஓடிவந்து ஒளிந்தனர்.

ஆனால் விடாது விதி என்பதுபோல் முகலாயர்கள் அங்கும் கூட துரத்தி வந்து கொண்டிருந்தனர். விஷயத்தின் விபரீதம் உணர்ந்த ராணாஜியின் இரு பிள்ளைகள் மீண்டும் ஓடத்துவங்கினர். காஷ்மீர் எல்லைப்பகுதிக்குச் சென்று சேர்ந்தவர்கள் அங்கிருந்த ‘உண்டா’ எனும் பிரதேசத்தில் தலைமறைவு வாழ்க்கை நடத்தினர். அவர்கள்...  அஜ்மல்ஜி, தன்ருப்ஜி.

வாழ்ந்த காலம் எல்லாம் போய் ஓய்ந்த காலமாகி விட்டதே என்ற வேதனையுடன் இருந்த இருவருமே அங்கிருந்த மக்களுக்கு தங்களால் இயன்ற சேவைகளைச் செய்து வந்தனர். இதனால் மக்கள் மத்தியில் பெரும் மதிப்பினைப்பெற்றனர்.

இதனிடையே ஜெய்சல்மீரைச் சேர்ந்த மன்னன் ஒருவன் தனது மகளுக்கு மணமுடிக்க சேவை மற்றும் தியாக மனப்பான்மை கொண்ட வரனைத் தேடி வந்தான். மன்னனின் மகள் அங்கஹீனமானவள் மட்டுமல்ல. கண்பார்வையும் அற்றவள். எனவே, அரச வம்சத்தைச் சேர்ந்த எவருமே அந்தப் பெண்ணை மணக்க முன்வரவில்லை. இந்த நிலையில்தான் அஜ்மல்ஜீ சகோதரர்களைப் பற்றிக் கேள்விப்பட்ட அரசன் அவர்களை அரசவைக்கு வரவழைத்தான்.

வந்தவர்களிடம் வெகு வினயமாக தனது விண்ணப்பத்தை வெளிப்படுத்தினான். பதில் என்ன வருமோ என்று படபடப்புடன் அரசன் காத்திருக்க அஜ்மல்ஜீயோ நிதானமாக பதில் தந்தான். “மன்னவரே! எனக்கு மனப்பூர்வமான சம்மதம்” அந்த ஒற்றை வரி பதிலில் பூரித்துப்போன அரசன் அடுத்த முஹூர்த்தத்திலேயே திருமணத்தை வைத்தான்.

இங்குதான் அந்த அதிசயம் தொடங்கியது. மணமேடையில் தனது மகளின் கரம் பற்றி அஜ்மல்ஜீயிடம் ஒப்புவித்து இரண்டு சொட்டு கண்ணீர் சொரிந்தான் அரசன். சபையே நிசப்தமாக இருக்க திடீரென மணமகள் ஆர்வமாக கூக்குரலிட்டாள். “தந்தையே! எனக்குப் பார்வை தெரிகிறது… எனது உடல் பாகங்கள் பழைய நிலைக்கு மாறுவதை உணர்கிறேன்”…

அவ்வளவுதான்! அரசன் ஆனந்தக் கண்ணீர் உகுத்தான். தனது மாப்பிள்ளை என்றும் பாராமல் பாதம் பணிந்தான். ஏனென்றால் நடந்தது நம்பமுடியாத மாற்றமல்லவா?

பிறவியில் ஏற்பட்ட பிணி தீருவதென்றால் யாரால்தான் நம்பமுடியும்!

ஆனால் நடந்து முடிந்ததால் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அத்தனை பேருமே ஸ்தம்பித்துப் போயிருந்தனர்.

அஜ்மல்ஜி கண்டிப்பாக இறை அருள் சக்தி பெற்றவர் என்றும் புரிந்து கொண்டனர்.

காலம் தடதடவென்று ஓடியது… ஆனால் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் மட்டும் ஏற்படவில்லை.

இதனால் அஜ்மல்ஜியும் அவனது மனைவியும் சொல்லொணா துயரத்திற்கு ஆளாயினர். மனத்தவிப்பை மறக்கும்படியாக காலாற நடந்து செல்லலாம் என்று வயல்காட்டிற்குள் சென்றபோது எதிர்ப்பட்டவர்கள் அனைவருமே சொல்லி வைத்தாற்போல் முகம் தாழ்த்தி சென்றனர்.

இருவருக்கும் ஏதும் புரியவில்லை. காரணம் புரியாமல் தவித்தபோது ஒரு வயதானவர் மட்டும் அருகில் வந்து “குழந்தை இல்லா தம்பதிகளின் முகம் பார்த்தால் தங்களுக்கும் அந்த பாக்கியம் வராமல் போகுமோ என்று அஞ்சியே அப்படிச் செல்கின்றனர்…” என்று விவரித்துச் சென்றார்.

குழந்தை வரம் மட்டுமன்றி தங்கள் நிலங்களில் விளைச்சல் கூட வராமல் போகலாம் என்றும் அஞ்சுவதாக அந்த முதியவர் தெரிவித்துச் சென்றார்.

கண்கள் குளமாக… பாதி வழியில் இல்லம் திரும்பினர். வந்தவர்கள் நேராக சிவபெருமானின் ஆலயத்திற்கு முன்பாக நின்று கண்ணீர் உகுத்து வருந்தினர்.

தெய்வீக சக்தி பெற்ற அஜ்மல்ஜி வருத்தப்படுவதைப் பார்த்துக் கொண்டு சிவனார் சும்மா இருப்பாரா என்ன?... அன்றைய இரவே கனவில் வந்து நின்றார். “அஜ்மல்ஜி!... வருந்தாதே… நேராக துவாரகைக்கு சென்று கிருஷ்ணரை வேண்டிக்கொள்” என்று சொல்லி மறைந்தார்.

அஜ்மல்ஜி அடுத்த தினமே துவாரகைக்குச்சென்று அங்கிருக்கும் பழமையானதொரு கிருஷ்ணர் கோயிலில் வழிபாட்டைத் துவங்கினார்.

வழிபாடு நீண்டபடியே சென்றதே தவிர, பலன் ஏதுமில்லை. கிருஷ்ணர் ஏறெடுத்துக்கூட தங்களைப் பார்க்கவில்லை… என்ற கோபத்தில் கோவிலுக்கும் சென்றபோது… அங்கிருந்த பண்டிதர் வழக்கம்போல் பிரசாதங்களும், மலர் மாலையும் தந்து உபசரித்தார்.

வழக்கத்துக்கு மாறான உக்கிரத்துடன் அஜ்மல்ஜி அன்று வந்திருப்பதை பண்டிட் அறிந்திருக்கவில்லை. வாங்கிய வேகத்தில்… அவற்றை  கிருஷ்ணனின் சிலை முன்பாகவே விசிறி எறிந்தார்.

“உதவிக்கு வராத உன்னுடைய பொருட்கள் எனக்கு எதற்கு?”… என்று சொல்லிவிட்டு மனைவியுடன் கோயிலை விட்டு வெளியேறினார்.

கடுகடுவென கோபாக்னியுடன் சாலையில் அஜ்மல்ஜி செல்வதைப் பார்த்திட்ட மற்றொரு பண்டிட் அவரைத் தடுத்து நிறுத்தியதோடல்லாமல் ‘ஏன் அஜ்மல்ஜி வீணாக சிலை மீது பகை வளர்க்கிறாய், உனக்கு என்ன வேண்டுமோ அதை நேரடியாகவே கிருஷ்ணனைக் கேட்டுப்பெற்றுக்  கொள்ளலாமே? அவன் எங்கு வெகுதூரத்துக்கா போய்விட்டான். இங்கிருக்கும் துவாரகா நதி தீரத்தில்தானே சயனித்திருக்கிறான். போ!... போய் கேள்!...” என்று கூறிவிட்டு பதிலுக்கு காத்திராமல் அஜ்மல்ஜியைக் கடந்து சென்றுவிட்டார்.

ஆத்திரம் கண்ணை மறைத்தது… பரபரவென மனைவியை இழுத்தபடி துவாரகையின் கடலுக்குள் நடக்க ஆரம்பித்துவிட்டார்.

என்ன ஆச்சரியம்! தம்பதிகள் நடப்பதற்கு தண்ணீர் வழி தந்தபடியே சென்றது. இறுதியில் மலர்ந்த முகத்துடன் தாமரைமணாளன் அஜ்மல்ஜியை ஆரத்தழுவி ‘என்ன… சினமாகி சீற்றமெடுத்து இவனைக்காண வந்தாயா?... என்றார்.

ஆதவனைப்பார்த்த தாமரையாக மாறிய அஜ்மல்ஜியும் அவனது மனையாளும் கேவிக்கேவி அழுதனர்.

பாராளும் பரந்தாமனுக்குத் தெரியாததா என்ன?

அடுத்த வினாடியே கொடுத்தான் பெரியதொரு வாக்கினை…!

“குழந்தை மட்டுமே கேட்க வந்திட்ட உங்களுக்கு நானே குமரனாக வரப்போகிறேன்… இப்போது திருப்திதானே?...”

என்று கூறி கலகலவென நகைத்து வைத்தான்.

ஆனால், அஜ்மல்ஜிக்கு நம்பமுடியவில்ல. “ஆமாம், கிருஷ்ணா உன் வாக்கு…?” என்று இழுத்து நீட்டவே, ‘ஓஹோ’ நம்பமுடியாமல் உள்ளதா?... சரி! நான் உன் இல்லத்தில் பிறக்கும்போது உனது நகரில் அமைந்திருக்கும் ஆலயங்களில் உள்ள மணிகள் அனைத்துமே தாமாக முன்வந்து ஓசை எழுப்பும். நகரின் மத்தியப்பகுதியில் ஒரு பெரும் தீஜ்வாலை தோன்றும். இதுமட்டுமே அல்ல! உன் வீட்டில் உள்ள நீர்நிலைகளில் பால் ஊற்றெடுக்கும்…” என்றார்.

கடல்விடுத்து கருணாமூர்த்தியை கடலென நம்பி தம்பதிகள் வீடு திரும்பினர். அடுத்த சில மாதங்களில் மனைவி கருவுற்று இருக்கும் செய்தியை உணர்ந்த அஜ்மல்ஜி… மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தான்.

கிருஷ்ணர் அவதரிக்கும் நாளும் வந்தது. அஜ்மல்ஜியின் மனைவி அழகான ஆண்மகவைப் பெற்றெடுத்த அடுத்த நொடியே கிருஷ்ணர் சொல்லிவைத்த அத்தனை அறிகுறிகளும் தென்பட்டன.

நகரமே வியப்பில் ஆழ்ந்துபோனது. பிறப்பிலே பெருமேதாவியாக தேஜஸ்வியாக ஜ்வலித்த அக்குழந்தைக்கு ‘ராம்தேவ்’ என்று பெயரிட்டனர்.

கிருஷ்ணனல்லவா வந்திருப்பது…! சுட்டித்தனங்களைக் காட்டாமல் விட்டுவிடுவானா என்ன?… அப்படியே ஆரம்பித்து வைத்தான் முதல் காட்சியை…

அடுப்பில் பாலைக் காய்ச்ச வைத்துவிட்டு குழந்தைக்கு பாலூட்டத் துவங்கினாள். குழந்தையின் ஸ்பரிசத்தில் மெய்மறந்தவள் பால் பொங்குவதை மறந்து போயிருந்தாள். ஆனால், ஆலிலைபாலகன்… அந்த ஆவி பொங்கும் பாலை தன் மழலைக்கைகளால் அன்னைக்கு தெரியாமலே கீழிறக்கி வைத்தான்.

ஆனால் சடுதியில் பார்த்துவிட்ட அந்த தாய் பதறிப்போனாள்… நீண்டு வளர்ந்து பாலை இறக்கி வைத்த கரம் மீண்டும் மழலைக்கரமாக அல்லவா மாறிவிட்டது. இது என்ன அதிசயம்?... என்று விக்கித்துப் போனாள்.

இதை எல்லாரிடத்திலும் சொல்லி சொல்லி மாய்ந்து போனாள். ஆனாலும் அவள் பொய் உரைக்கிறாள் என்று எண்ணிய ஊர் மக்கள் எவருமே அவள் பேச்சை நம்பவில்லை.

நாட்கள் நகர்ந்தன. வீதியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அவ்வழியே குதிரை மீது ஒருவன் செல்லும் காட்சியைப் பார்த்து தனக்கும் குதிரை வேண்டும் என்று அடம்பிடித்து அன்னையை ஆட்டுவித்தான்.

அன்னைக்கு அவனது நச்சரிப்பு தாளாமல் போக ஒரு பொம்மை குதிரையைக் கொண்டு அவன் முன்பாக வைத்துவிட்டுப் போய்க் கொண்டிருந்தாள்.

தெய்வாம்சம் பொருந்திய பாலகனாயிற்றே நமது ராம்தேவ். அடுத்த வினாடி அந்தப்பொம்மை குதிரை மீதமர்ந்து ஆகாசத்தில் பறக்கத்துவங்கிவிட்டான்… அவ்வாறு பறந்து திரிந்துவிட்டு பழையபடியே வீடுவந்து சேர்ந்தபோதே அதுவரை நம்பாமல் இருந்த ஊர் மக்கள் ராம்தேவை நம்பத்துவங்கினர்.

ராம்தேவோ தான் பயணித்த குதிரைக்கு நீலக்குதிரை என்று பெயரிட்டு தன்னுடனே வைத்துக் கொண்டான்.

  • தொடரும்… 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close