[X] Close

'24' சலனங்களின் எண்: பகுதி 35 – மோதல்


24-cable-sankar-series-salanangalin-en

  • கேபிள் சங்கர்
  • Posted: 16 Dec, 2018 13:09 pm
  • அ+ அ-

ராம் வேறு வழியேயில்லாமல், ஸ்ரீதர் கேட்டுக் கொண்டதால் தான் அவனின் பொய்க்கு உடந்தையானான்.  இவனிடம் ஷூட்டிங் இருக்கிறதா? ராமராஜ் சார் கூட ப்ளான் செய்கிறார் என்று கேட்டுவிட்டு முடிவு செய்து கொள்ளலாம் என்று கால் செய்த போது  சற்றே எரிச்சலாய்த்தான் ஆரம்பித்தான். ஏனோ தெரியவில்லை. சட்டென அவனின் குரலின் மாடுலேஷன் மாறியது. ஆப்ளிகேஷனாகவும் இல்லாமல், ஆணையாகவும் இல்லாமல் சுரெந்தர் கேட்டால் இந்த ஷெட்டியூலில் இல்லை என்று சொல்ல சொன்னான்.  எரிச்சலாக இருந்தாலும் வேறு வழியில்லை. ஸ்ரீதரின் குட் புக்கில் இடம் பெற இது தான் சந்தர்ப்பம் என்பதால் அவன் சொல்லியபடியே பேசினான். பேசி முடித்த சிறிது நேரத்தில் வாட்சப்பில் “தேங்க்ஸ்”என்று ஸ்ரீதரிடமிருந்து வந்தது பெரிய விஷயமாய் பட்டது.

ராமராஜிடம் போன் செய்து 15 நாள் ஷெட்டியூல் தனக்கு இல்லை என்றும், அவர் ப்ளான் செய்தால் நன்றாக இருக்குமென்றான். ஏதோ ஒரு விதத்தில் இரண்டு படப்பிடிப்புகளும் மோதிக் கொள்ளாமல் அமைந்தது அவனுக்கு நிம்மதியை அளித்தது.  ராமராஜும் பரபரவென வேலைகளை ஆரம்பித்தார். ஸ்ரீதரின் ஷெட்யூல் ஆரம்பம் அன்றே இவர்களும் ஷூட்டிங் ஆர்மபித்தார்கள்.

நித்யா மிகவும் எக்ஸைட்டாக இருந்தாள். மணி முதல் ஷாட்டின் போது  கண் கலங்கினார். கேமரா பக்கத்தில் நின்று “ஒரு போட்டோ எடுத்துக்கலாமா கேமராமேன் சார்” என்று கேட்டது அவருக்கு ஆச்சர்யமாய் இருந்தது.

“அட இதுக்கெல்லாம் கேட்கணுமா? தாராளமா?’என்று கேமராவை எப்படி பிடிப்பது என்று போஸ் கொடுத்து காண்பித்தார். மணி உடல் நடுங்க கேமராவை பிடித்தபடி போஸ் கொடுக்க, பளிச் பளிச்சென ஸ்டில் கேமராமேன் பரவசமாய் நான்கைந்து ஷாட்கள் எடுத்து அவரிடம் காண்பித்து. ”இதுல நல்லதா ஒண்ணு செலக்ட் பண்ணி பெரிய ப்ளோஅப்பா ஆபீஸுல மாட்டிருவோம்” என்றார்.

முதல் நாள் ஷூட்டிங் பரபரவென நடந்தது. நித்யா மட்டுமே கொஞ்சம் தடுமாற்றமாய் இருந்தாள். கொஞ்சம் நெருக்கமாய் ராமுடன் அணைக்கும் காட்சிகளில் சுற்றிலும் உள்ள கூட்டத்தை கவனித்து செயற்கையாய் நடித்தாள்.

”த பாரு நித்யா. நடிக்கணும்னு வந்துட்டா.. ஆம்பளையோ பொம்பளையோ முதல்ல விட வேண்டியது. எல்லாரும் பாக்குறாங்கங்கிற குறுகுறுப்பை. என் அனுபவத்தில இதை விட்ட அத்தனை நடிகர்களும் தங்களுக்கான எடத்தை தக்க வச்சிட்டிருக்காங்க. அந்த குறுகுறுப்பை விட்டாத்தான் நீ நடிகனாக முடியும். எல்லாரும் பாக்கணும்ங்கிறதுக்காக நடிக்க வந்துட்டு, நூறு பேர் பாக்குறாங்கன்னு குறுகினா வெளிய வரவே முடியாது.

மற.. சுத்தியும் யாருமில்லைன்னு நினை. நடிப்பு தானா வரும்,”என்ற ராமராஜை மனதில் நினைத்துக் கொண்டு, அடுத்தடுத்த டேக்குகளில் நித்யா மெல்ல வெளிப்பட ஆர்மபித்தாள். அடிப்படையில் உதவி இயக்குனராக இருந்தவளாதலால், படப்பிடிப்பு, கேமரா கோணங்கள், லைட் வாங்கி பேசுவது என சில விஷயங்கள் அறிமுகமிருந்ததால் சுலபமானது.  எதிர்பார்த்தை விட முதல் நாள் ஷூட்டிங் சிறப்பாய் முடிந்தது. ரவியை மட்டும் ஷூடிங்கிற்கு அழைக்கவில்லை திருப்பூர் மணி. அது அவனுக்கு கோபத்தை கொடுத்தது.

***************************************

சென்னை ஷெட்யூலில் சுரேந்தர் மிகவும் கடுப்பாகவே இருந்தார். அதை அவ்வப்போது வெளிக்காட்டிய போதெல்லாம் வின்செண்ட் உடன் ஒத்தூதினான். ப்ரேமியை அவ்வப்போது முகம் தவிர மற்ற இடங்களுக்கு கேமராவை ஆன் செய்தே சுரேந்தர் மானிட்டரில் உள்ள போது காட்டி அவரை குஷிப்படுத்தினான். இவர்களின் செயல்பாடுகளை கண்டு கொண்டு ஷூட்டிங் நடத்துவது ஸ்ரீதருக்கு அவ்வளவு சுலபமாய் இல்லை. ஷாட்களை ஓகே செய்ய கொஞ்சம் தடுமாறினான். அவன் தடுமாற்றத்தை கண்டு வின்செண்ட் மேலும் சிரித்தான்.

“என்னாலத்தானே ப்ராப்ளம்?” என்று கேட்டாள் ப்ரேமி

“சே.ச்சே.. “ என்று ஸ்ரீதர் சொன்னாலும் அவன் முகம் காட்டிக் கொடுத்தது.

“வின்செண்ட் சார் என்ன பண்ணுறார்னு எனக்கு தெரியாதுன்னு நினைக்கிறியா? பொண்ணுங்களுக்கு உடம்பு பூரா கண்ணுதான்”

ஸ்ரீதர் அமைதியாய் இருந்தான். “விடு நான் பாத்துக்கறேன்” என்று சொன்னவள். சுரேந்தரின் சேருக்கு அருகில் போய் உட்கார்ந்து கொண்டாள். அவளின் நடவடிக்கையைப் பார்த்து சுரேந்தர் ஆச்சர்யத்துடன் அவளையே பார்த்தார்.  ப்ரேமியின் அருகாமை அவருக்கு பெருமையாய் இருந்தது. அல்லக்கைகளை சுற்றிப் பார்த்துக் கொண்டார். அவர்கள் அசிங்கமாய் “ம்ம்” என்றார்கள்.

சுரேந்தரின் காதருகில் போய் ஏதோ முணு முணுத்தாள். சுரேந்தர் உடனே வின்செண்டை அழைத்து “பாப்பாவை க்ளோஸுல பாலோ பண்ண வேணாம்” என்றார் சற்றே சத்தமாய். அனைவருக்கும் அது கேட்டதனால் வின்செண்டுக்கு கொஞ்சம் அவமானமாய் இருந்தது. முகம் சுருங்கியது. ப்ரேமி அவனைப் பார்த்தபடியே ஸ்ரீதரை நோக்கி பார்வையால் சிரித்தாள். ஸ்ரீதர் வாய் விட்டு சிரித்தபடி “காசி அடுத்த சீன் பேப்பர் ரெடியா?” என்று கேட்டபடி க்ராஸ் செய்தான்.

இதன் பிறகு அடுத்தடுத்த நாட்களில் எப்போதெல்லாம் வின்செண்ட்  தன் அதிகாரத்தை காட்ட ஆரம்பித்தான். ஷாட்களுக்கு இடையே லைட்டிங்கிற்காக நேரம் அதிகம் எடுக்க ஆரம்பித்தான். கொஞ்சம் அருகில் போய் “சீக்கிரம் வின்செட்ண்ட்’ என்று சொல்லிக் கொண்டிருந்த ஸ்ரீதர் ஓப்பனாக “என்னங்க லைட்டிங் முடிஞ்சிதா?” என்று கேட்க ஆரம்பிக்க, வின்செண்ட் அது ப்ரேமிக்கான ஷாட் என்றால் “என்னப்பா தயாரிப்பாளர் ஹீரோயின அழகா காட்டனுங்கிறாரு..

நீ என்னடான்னா வச்ச வரைக்கும் போதுங்கிறா மாதிரி பேசுற?” என்று உரக்கச் சொல்லுவான். சுரேந்தர் அதை வழக்கம் போல பெருமையாய் எடுத்துக் கொண்டு, “ஆகட்டுங்க . ப்ரேம் நல்லாருக்கில்ல” என்று எல்லாம் தெரிந்தார்ப் போல பேச ஆரம்பித்தார். அவரின் தலையீடு இல்லாத நேரங்களில் வின்செண்ட்டின் ஆளுமை கொஞ்சம் கொஞ்சமாய் அதிகமானது.

ஸ்ரீதருக்கும் வின்செண்ட்டுக்கும் விரிசல் அதிகமாக, அதிகமாக, அதை சரிக்கட்ட ப்ரேமி சுரேந்தரிடம் நெருக்கமாய் பழக வேண்டியிருந்தது. ஷெட்டியூல் முடிவில் வின்செண்டுக்கும் ஆர்ட் டைரக்டருக்கும் முட்டிக் கொண்டது. ஒரு ஐடி கம்பெனி டீம் லீடரின் அறை அதன் பின்னணியை கொஞ்சம் ஆர்டிஸ்டிக்காக சில விஷயங்களை வைக்க சொல்லியிருந்தான் ஸ்ரீதர்.

அடிப்படையில் அவனது ரசனையும், வின்செண்டின் ரசனையும் இம்மாதிரியான விஷயங்களில் சிங்க் ஆகும். ஆனால் அன்றைய ஷுட்டிங்கில் எந்த ப்ராப்பர்ட்டி செட் செய்தாலும் திட்டிக் கொண்டேயிருந்தான். ரொம்ப நேரம் பொறுமையாய் இருந்த ஆர்ட் டைரக்டர் “சார்.. எல்லாம் டைரக்டர் செலக்ட் பண்ணது. உங்களுக்கு பிடிக்குது பிடிக்கலைன்னா அது என் பொறுப்பு இல்லை” என்று கத்திவிட, “ரசனை கெட்ட முண்டமா எல்லாரும் “ என்று பொதுவில் கத்தினான் .

“வின்செண்ட்” என்று கோபமாய் கத்தினான் ஸ்ரீதர்.  மொத்த செட்டுமே விதிர்த்துப் போய் அமைதியாய் இருக்க, அந்த திடீர் அமைதியை உணர்ந்து “கமான் டேக் போகலாம்’ என்று கத்தினான். வின்செண்ட் கொஞ்சம் நேரம் எந்த பதிலும் சொல்லாமல் கோபமாய் ஸ்ரீதரைப் பார்த்துவிட்டு, விறு விறுவென ஸ்பாட்டை விட்டு வெளியேறினான். ஒரு நிமிடம் என்ன செய்வது என்று புரியாமல் காசியைப் பார்த்தான் ஸ்ரீதர்.

மொத்த செட்டுமே மயான அமைதியானது. வெளியே போனான் செட்டின் மூலையில் அமர்ந்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த வின்செண்டிடம் போய் நின்றான். “என்ன நினைச்சிட்டிருக்க நீ? இங்க நீ டைரக்டரா நான் டைரக்டரா?” என்றான் கோபத்துடன்.

“நீதான் டைரக்டர். ஆனா நான் உன்னை விட சீனியர். எனக்குன்னு மரியாதை இருக்கு அதை நான் விட்டுக் கொடுக்க முடியாது”

“அது எப்படி நடந்துக்கிறியோ அப்படித்தான் ரிப்ளிகேட் ஆகும் வின்செண்ட்”

வின்செண்ட் பதில் சொல்லாமல் இருந்தான். இறுக்கமாய் முகத்தை வேறு பக்கம் திருப்பி வைத்துக் கொண்டான்.

”உனக்கு பத்து நிமிஷம் டைம். அதுக்குள்ள நீ வரணும் இல்லை உன் அசோசியேட் வரணும். ரெண்டு பேரும் வராட்டி நானே ஷூட் பண்ணுவேன். கேமரா அஸிஸ்டெண்டை வச்சி. யூனியன் பிரச்சனை எதுவானாலும் நான் பார்த்துப்பேன். முடிவு செய்” என்று விறுவிறுவென கிளம்பி உள்ளே போய், ப்ரொடக்‌ஷனிடமிருந்து ஒரு சிகரெட்டை வாங்கி பற்ற வைத்துக் கொண்டு, காசியிடம் பேசிக் கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் காசியின் முதுகை வின்செண்டின் அசோசியேட் பாண்டியன் தொட்டான். என்ன ? என்பது போல அவனை பார்க்க, “வாங்க ஷூட் பண்ணுவோம்” என்றான் பாண்டியன்.

“அப்ப அவரு வர மாட்டாரு” என்று கறுவியபடி, பரபரவென செட்டுக்குள் போய் “கமான்..கமான். கெட் ரெடி” என்று வேலைக்குள் மூழ்கினான். முன் எப்போதும் விட காட்சிகள் வெகு சீக்கிரமாய் முடிந்து அன்றைய ஷெட்டியூலைத் தாண்டி சில பல மாண்டேஜ் ஷாட்களை எடுத்துக் கொண்டான்.  பேக்கப் சொல்லி வெளியேறும் போது “நாளைக்கு காலையில கேமராமேன் என்னை ஆபீஸுல வந்து பார்க்கணும் இல்லாட்டி வர வேண்டாம்னு சொல்லிரு” என்று அசோசியேட் பாண்டியனிடம் சொல்லிவிட்டு விறுவிறுவென கீழிறங்கினான் ஸ்ரீதர்.

- தொடரும்

முந்தைய அத்தியாயங்களைப் படிக்க

பகுதி 34 - https://bit.ly/2LiQaXo

பகுதி 33 - https://bit.ly/2E2ZYTK

பகுதி 32 - https://bit.ly/2FPlaza

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close