[X] Close

தொங்கட்டான் - 32 : மார்கழிச் சங்கு


thongattan-32-mana-baskaran

  • kamadenu
  • Posted: 02 Dec, 2018 13:35 pm
  • அ+ அ-

 மானா பாஸ்கரன்

வாரத்தின் முதல் நாள் என்பதால் திங்கட்கிழமை கேவிடி தனது கடையில்  ஊதுபத்தி ஏற்றி வைத்து சாமி கும்பிட்டுவிட்டு தனது இருக்கையில் உட்கார்ந்திருந்தார். அவர் உட்கார்ந்திருக்கும் இடத்துக்கு பின்பக்கத்தில் அவரது மகன் ராஜமாணிக்கம் ரேடியோ ரிப்பேர் கடை வைத்திருந்தார். அங்கிருந்து கர்புர்ரென்று ரேடியோ  சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. அப்போது   இரண்டு சேப்பு தொப்பி வைத்துக்கொண்டு, டவுசர் போட்ட போலீஸ்காரர்கள் வந்தனர். அதில்  ஒருவர் ஏட்டு என்றும் இன்னொருவர் கான்ஸ்டபிள் என்றும் அவர்கள் பரிமாறிக்கொண்ட உத்தியோக பாஷையில் இருந்து புரிந்தது. சைக்கிளை விட்டு இறங்கியவர்கள் நேராக கேவிடியிடம் வந்தனர்.

‘பத்தரய்யா... நாங்க டவுன் ஸ்டேஷல்லேர்ந்து வர்றோம்  இன்ஸ்பெக்டர் உங்கள பார்த்துட்டு வர சொன்னார்’’ என்றார் ஏட்டு. 

‘’அப்டியா... நாங்க போன வாரம் வந்தப்ப இருந்த இன்ஸ்பெக்டர்  வேற ஊருக்கு மாறிட்டாராமே?’’ என்றார் கேவிடி அவர்களிடத்தில்.

‘’ஆமாங்க பத்தரய்யா....  அவரு  வலங்கைமானுக்கு மாறிட்டாரு. இப்ப வந்திருக்கிறவரு  அதிரடி அறிவானந்தம்னு பேரு. நல்ல மனுசன். ஊரு எப்படி அலறப் பபோவுது பாருங்க. தப்பு பண்ற கசம் புடிச்ச ஆளுங்கள கதறவுட்ருவாரு...’’ என்றார்.

‘’அப்டியா... ரொம்ப நல்லது. என்னா விஷயமா வந்திருக்கீங்க...”’’

‘’ஒண்ணுமில்ல... நீங்க ஸ்டேசனுக்கு ஒரு லெட்டர் உங்க சங்கம் சார்பா அனுப்பியிருக்கீங்கள்ல. அதை பரீசீலனைக்கு எடுத்துக்கிட்டதா சொல்லச்  சொன்னாரு. எஸ்.பி ஆபீஸுக்கும் நாகப்பட்டணத்துக்கு அனுப்பியிருக்கிறதா சொல்லச்  சொன்னாரு. அது மட்டுமில்லாம, எங்கள்ட்ட மாட்டுன அக்யூஸ்ட், மூங்கி பிளாச்சி போட்ட கேட்டு உள்ள கடையின்னு தப்பா அடையாளம் காட்டியிருக்கான். அதான் நாங்க  முருகேசன்ங்கிறவரை விசாரிக்க வேண்டியதா போச்சு. இப்ப விசாரணையில குருவாடி தோப்புலேர்ந்து வந்து எல்லையம்மன் சந்நதி தெருவுல  பட்டறை வெச்சிருக்குற மாதவன்ங்கிற ஆளுதான் திருட்டு நகை வாங்கியதா கண்டுபுடிச்சிட் டோம். அந்த ஆளு எஸ்கேப்பாயிட்டாரு. தேடிட்டு இருக்கோம். அந்த ஆளு கடையிலேயும் மூங்கி பிளாச்சிலதான் கேட்டு போட்டிருக்கு... அதுலதான் அக்யூஸ்ட்  குழம்பிப்போயிருக்கான்...’’ என்றார் ஏட்டு.

‘’அப்டியா... அந்த மாதவன் நீங்க சொல்ற மாதிரி போலீஸுக்கே டேக்கா குடுக்கற ஆளுதான். அவன் நகை வேல செய்யல.  தரவு வேல,  திருட்டு நகை வாங்குறது,  பட்டு ஜரிகை வாங்குறதுன்னு என்னன்னமோ கிரிசல்கெட்ட வேல பார்த்திட்டு இருக்கான். அந்த ஆளுக்கிட்டே எங்க பத்தருங்க   குடுக்கல் வாங்கல் வெச்சிக்கிறதே இல்ல.   இதுக்கும்  முன்னாடி ரெண்டு மூணு தடவை திருட்டு நகை வாங்கி மாட்டியிருக்கான். நாங்க  யாரும் அவனுக்கு ஜவாப்தாரியா வர மாட்டோம்.  போலீஸ்காரங்க என்ன வேணாலும் செஞ்சுக்குங்க. இது மாதிரியான கிரிசல் கெட்ட ஆளுங்களாலதான்  குந்துனாப்புல வேல பர்க்கிற  எங்களுக்கெல்லாம் கெட்டப் பேரு.... சரி  இருங்க டீ சோல்றேன்   குடிச்சிட்டுப் போங்க...’’ என்று சொன்ன கேவிடி, எதிர்த்தாப்புல இருந்த அலி டீ கடையை நோக்கி சைகையினாலேயே ரெண்டு டீ சொன்னார்.

சற்றைக்கெல்லாம் டீ வந்தது.  குடித்துவிட்டு அந்த  இரண்டு போலீஸ்காரர்களும் விடைபெற்றனர்.

*** **** ****

க்கிரி திண்ணையில் பட்டறையில் உட்கார்ந்திருந்தார். 

 அவருக்கு மூச்சு மேலும் கீழும் வாங்கியது. சமீப காலமாக அவரை  மூச்சிரைப்பு  நோய் பாடாய் படுத்தியது. தலையில் தண்ணீர் ஊற்ற முடியவில்லை. உடனே சளி பிடித்துக்கொள்கிறது. ஒரே  இருமல். விக்ஸும் அமிர்தாஞ்சனுக்கும் கேட்கவில்லை. அவ்வப்போது வாங்கிய ஆர்.எஸ்.பதி  தைலப் பாட்டில்கள் வீட்டில்  உருண்டன. யாரோ சொன்னார்கள் என்று  தஞ்சாவூருக்கும் வல்லத்துக்கும் இடையில் இருக்கிற செஞ்சிப்பட்டி ஆஸ்பத்திரிக்கு சென்று வந்தார் பக்கிரி. மகாத்மா காந்தி பெயரில் இருக்கும் நெஞ்சக நோய் மருத்துவமனை அது. அங்கு போனபோதுதான்... அங்குள்ள டாக்டர்கள் பக்கிரியை ரெண்டு நாட்கள் தங்க வைத்து பரிசோதித்துவிட்டு, அவருக்கு வந்திருப்பது ஆஸ்துமா நோய் என்றார்கள். தனக்கு இப்புடி  ஒரு ஒடம்பு  பாதிப்பு வந்துட்டுதே என்று குமைந்து போயிருந்தார் பக்கிரி.  கையோடு எட்டுமுழ மல்லு வேட்டியில் இருந்து கிழித்த துணியை வைத்துக்கொண்டு, மூக்கில் எட்டிப்பார்க்கும் சளியை துடைத்துக்கொண்டே இருந்தார்.

திண்ணையில் வேத்த மனுசாள் யாராவது இருக்கிறார்களா என்று எட்டிப்பார்த்த பாப்பாத்தி, கையில்  வைத்திருந்த எவர்சில்வர்  ஏனத்தை  பக்கிரியிடம் நீட்டினாள்.

‘’என்னாந்த இது?’’ என்றார் பக்கிரி மையில்  லோட்டாவை வாங்கியவாறே.

‘’நெஞ்செலும்பு சூப்பு. இஞ்சி  சீரகம்லாம் போட்டு வெச்சது. சூடா இருக்கு..மூச்சிழுப்புக்கு நொம்ப நல்லது... ’’ என்றாள்.

கொதிக்க  கொதிக்க  இருந்த  சூப்பை உறிஞ்சி உறிஞ்சி குடித்தார் பக்கிரி.

பட்டறை இருந்த திண்ணைக்கு கீழே ஆளோடியில் சேப்பரசன்   சம்மணம் போட்டு உட்கார்ந்துகொண்டு, ரெட்ட வடச்  சங்கிலிக்கு  பித்தள புருசு போட்டு பாலீஷ் போட்டுக்கொண்டிருந்தான்.

சேப்பரசனையே  உற்றுப்  பார்த்துக் கொண்டிருந்த  பக்கிரிக்கு  அந்த யோசனை வந்தது. எழுந்து விட்டுக்கு  உள்ளே  சென்றவர், தனது  தங்கச்சி  அம்சவல்லியையும்  தனது  மனைவி பாப்பத்தியையும் கூப்பிட்டார். 

‘’என்னாண்ணே... ஒடம்பெல்லாம் நல்லாயிருக்குல்ல... திடுதிப்புன்னு கூப்பிடிறியே...’’ என்றாள் .

’’ஒண்ணுமில்ல... என்னால இன்னமே  பட்டறயில ஒக்காந்து  நல்லா  வேல செய்ய  முடியுமான்னு தெரியில.  ஊதுகுழாய  புடிச்சி  நெருப்பூத  முடியில.  சோத்துக்  கையால  ரெக்கிரோட புடிச்சா  கை ஆடுது. வர வர கிராக்கி வேலயும் கொறஞ்சிட்டே வருது. எங்காலம்  இப்புடியே ஓடிப்போயிட்டு. அதான் சேப்பரசன நம்ம கோகிலா  புருசன் முருகேசன்கிட்டே வேலக்கு கொண்டிவுட்டுறலாம்னு  பாக்கிறேன்...’’

‘’நீ செஞ்சா எதுவும் நல்ல ரோசனையாதான் இருக்கும்ணே... உன் இஷ்டப்படி செய்யி..’’’ என்று சட்டென்று பச்சைக் கொடி அசைத்தாள் அம்சவல்லி. பாப்பாத்தியும் சம்மதம் சொன்னாள்.

***  ***  ***

சேப்பரசனுக்கு மாமன்காரனின் திட்டம் தெரிய வந்தபோது...  கொஞ்சம் மனசு மசமச  என்றுதான் இருந்தது.  ரெண்டாம்பேருக்குத் தெரியாம மாமன்காரனிடம் வேலை கற்றுக்கொண்டோம்.  நகரத்துக்குப்  போனால் எல்லாரிடமும் பேசணும் கொள்ளணும்... என்கிற மலைப்பு எட்டிப்பார்த்தது. இத்தனை வருசமா மாமன்காரன் காலையே சுத்திக்கிட்டு கிடந்தோம். இப்போ வெளியூர் போகப் போகிறோம் என்கிற  பாச உணர்வும் அவனை அழுத்தியது. 

சேப்பரசனுக்கு தூக்கமே வரவில்லை.  மார்கழி குளிர். போர்வைக்குள் சுருண்டு... புரண்டு புரண்டு படுத்தான். என்னன்னமோ யோசனைகள் வந்து வந்து போயின.  இரவு மணி எத்தனை என்று தெரியவில்லை. மார்கழி மாச நடுராத்திரி.  சங்கு ஊதி வருவதை  எந்த தெருவில் இருந்தோ  சங்கு ஒலி  வந்து  காதில் விழுந்து உணர்த்தியது. தஞ்சை ஜில்லாவில் அப்போது மார்கழி மாசத்தில் நள்ளிரவுகளிலோ, அதிகாலையிலோ  ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு சங்கு ஊதி வருவார்.  ஐந்து நிமிடங்களுக்கு  ஒரு தடவை சங்கு  ஊதும் ஓசையும்... தொடர்ந்து ஒலிக்கும் மணி சத்தமும்  அந்த கிராமத்துக்கு கலாச்சார வண்ணம் பூசிச் செல்லும்.. மார்கழி மாதத்தில் நடக்கும் அதிகாலை பஜனைக்கு மக்களை துயிலெழச் செய்யவே இந்த சங்கு நாதம் இசைக்கப்பட்டது என கிராமத்து பெரியவர்கள் சொல்வார்கள். இவ்வாறு மார்கழி இரவுகளில் சங்கு ஊதி வருபவர்கள் சங்கு ஊதிகள் என்றழைக்கப்பட்டார்கள். 

அவர்கள் மார்கழி மாதம் முழுக்க கொட்டும் பனியிலும், நடுங்க வைக்கும் குளிரிலும் சங்கு ஊதிக்கொண்டு வருவார்கள். அப்படி மாதம் முழுக்க சங்கு இசைத்த சங்கு ஊதிகள்... மார்கழி முடிந்து தை பிறந்ததும் அந்த ஊரில் நடைபெறும் அறுவடை நாட்களில்... அந்தந்த வயல்காரர்களின் களத்து மேட்டுக்கு கையில் சாக்கு எடுத்துக்கொண்டு வந்துவிடுவார்கள். அறுவடை முடிந்து  நெல்லைத்  தூற்றி முடித்ததும்... அறப்பு அறுத்தவர்கள், ஊர் சலவைக்காரர், ஊர் முடி திருத்துநர்,   ஊர் தலையாரி, ஊர் கோயில் பூசாரி என்று ஒவ்வொருவருக்கும் அந்த வயல்காரர் தான் இஷ்டப்பட்ட அளவில் மரக்காலில் அளந்து நெல் கொடுப்பார்கள். அதுபோலவே சங்கு ஊதிக்கும் மரக்காலில் நெல் அளந்து  கொடுப்பார்கள்.

சங்கு ஊதி வீட்டுக்கருகில் வந்து தெருவை கடந்து போகப்போவது நெருங்கி வரும் சங்கு  ஓசை உணர்த்தியது. படுக்கையில் இருந்து எழுந்து ஜன்னல் கதவைத் திறந்து எட்டிப்பார்த்தான்  சேப்பரசன். குளிருக்கு இதமாக ஒரு கருப்பு கம்பளியை சங்கு ஊதி போர்த்தியிருந்தார். போர்வையின் ஓரங்களில் சிவப்பு வெள்ளையால் ஆன பார்டர் போட்டிருந்தது. தலையில் வெள்ளை நிற துணியால் முண்டாசு கட்டியிருந்தார். பக்கிரியின் வீட்டை தாண்டும்போது...ம்ம்பும்ம்ம்ம்ம்ம்... என்கிற சங்கு  ஓசை ஜன்னல் வழி வீட்டுக்குள்  நுழைந்தது. அதன் அடையாளமாக வீட்டுக்குள் அம்மாவும் அத்தை பாப்பாத்தியும்  ‘’சங்கு ஊதி... போறார்...’’’ என்று பேசிக்கொள்வது கேட்டது.

அந்த மார்கழிச் சங்கு  ஓசை நீண்ட நேரம் கேட்டுக்கொண்டே இருந்தது. சேப்பரசன் தூங்க ஆரம்பித்தான்.

- தொங்கட்டான் அசையும்...

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close