[X] Close

'24' சலனங்களின் எண்: பகுதி 33 - ஆட்டம்


24-cable-sankar-series-salanangalin-en

  • கேபிள் சங்கர்
  • Posted: 30 Nov, 2018 13:41 pm
  • அ+ அ-

பிரச்சனையை ஆரம்பித்து வைத்த வின்சென்டே அதை முடித்து வைத்தாலும், இது இத்தோடு முடியப் போவதில்லை என்று தோன்றியது ஸ்ரீதருக்கு. அடுத்தடுத்த நாட்களில் பெரிதாய் ஏதும் நடக்காவிட்டாலும், வின்செண்டின் நடவடிக்கையில் பெரிய மாறுதல் இருப்பதை கவனித்தான். இதைப் பற்றி பேசிவிடலாம் என்று நினைக்கும் போதெல்லாம் காசி தடுத்துக் கொண்டேயிருந்தான். 

“நமக்கு படம் முக்கியம் ஸ்ரீ.. அமைதியா இரு எல்லாம் சரியாவும்’ என்று சொல்லிக் கொண்டேயிருந்தான். முதல் ஷெட்டியூல் பத்து நாள் கடந்து அடுத்த ஷெட்டியூல் பாண்டிச்சேரி. சென்னை தெருக்களில் எடுக்கபட வேண்டிய காட்சிகளுக்காக பாண்டிச்சேரியை தேர்தெடுத்திருந்தான். 

கதைப்படி சென்னையில் எடுக்க வேண்டிய காட்சிகளை எதற்காக பாண்டியில் எடுப்பது என்று யோசித்தால் சிரிப்பாகத்தான் இருக்கும் ஆனால் வேறு வழியில்லை.

சென்னை தெருக்களில் பெரும் நிறுவனங்களால் கூட அவ்வளவு சுலபமாய் படமெடுக்க முடியாது. அரசு நிர்ணையிக்கும் கட்டணம் என்னவோ சொச்சம் தான் என்றாலும், அந்த இடத்தில் ஷூட்டிங் நடத்தி முடிப்பதற்குள் கமிஷனர் ஆபீஸ் பர்மீஷன், லோக்கல் போலீஸ், சட்டம் ஒழுங்கு, க்ரைம், ட்ராபிக் என முறையே அந்த லிமிட் ஸ்டேஷன் கப்பம், அக்கம் பக்கம் இருக்கும் ஸ்டேஷனிலிருந்து வரும் போலீஸாரின் கப்பங்கள். அது தவிர, லோக்கல் தாதாக்கள், கவுன்சிலர்களின் அல்லு சில்லுகளின் கட்டிங் என பத்தாயிரம் ரூபாய் ஃபீஸ் கட்டி சூட்டிங் முடிக்க, ஐம்பதிலிருந்து லட்ச ரூபாய் வரை செலவாகும். இவை அனைத்தும் கணக்கில் வராத லஞ்சம் மட்டுமே. 

ஆனால் பாண்டிச்சேரியில் அந்த பிரச்சனையில்லை. இலகுவான அனுமதி கட்டணம். ஓரிரு சிறு சிறு லஞ்சங்களைத் தவிர பெரிய பிரச்சனை ஏதுமிறாது. லொக்கேஷன் மேனேஜர்கள் கண்ட்ரோலில் எல்லாமே கூட்டமான ரோடா?, பரபர ரோட்டில் சேசிங்கா? பிரபல நடிகரை வைத்து நட்ட நடு ரோட்டில் சண்டைக்காட்சியா இப்படி எதுவானாலும் அங்கிருக்கும் மக்களும் ஷுட்டிங்கிற்கு பழக்கமானவர்களாய் ஆகிவிட்டதினால் எல்லாம் தன் போக்கில் நடந்து முடிந்துவிடும் என்பதால் பத்து நாள் எடுக்க வேண்டிய ரோடு காட்சிகளை எட்டு நாளில் அவுட்டோர் செலவானாலும் முடித்துவிட பாண்டியை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக இயக்குனர்கள் நிர்பந்திக்கபட்டிருக்கிறார்கள். 

இந்த ஷெட்டியூல் நிறைய ஆக்ஷன் காட்சிகளைக் கொண்டது. மொத்த டீமின் ஒருமித்த இசைவு முக்கியம். வின்செண்ட்டுக்கும் தனக்குமிடையே உருவாகியுள்ள வெற்றிடத்தை சரி செய்ய அவனை அழைத்து பேச விரும்பினான். இம்மாதிரியான் மீட்டிங்கிற்கு சரியான இடம் டாஸ்மாக் தான். வின்செண்ட் குடிக்க மாட்டான். விரும்பி சாப்பிடுவான். எனவே அவனை ஒரு பிரபல ஓட்டலின் பஃப்பே விருந்துக்கு வரச் சொல்லி அழைத்தான் 

நாற்பது வகை சைவ, அசைவ உணவுகள் வரிசைக் கட்டியிருந்தது. ஸ்டாட்டரை எடுத்துக் கொண்டு இருவரும் தனியாய் ஒரு டேபிளில் அமர்ந்து கொண்டார்கள். 

“ம்க்கும்.. வின்செண்ட் வர்றப் போற ஷெட்டியூல் ரொம்ப முக்கியமானது”

“யா..யா. “

“எல்லாமே ஆக்ஷன் சீன்ஸ். நம்ம கோ ஆர்டினேஷன் ரொம்ப முக்கியம்”

“ஆமா யாரு இல்லேன்னா?”

“இல்லேன்னு சொல்லலை இன்னும் கொஞ்சம் இருந்தா நல்லாருக்கும்னு நினைக்கிறேன்” என்ற ஸ்ரீதரின் குரலில் வருத்தமிருந்தது.

“இதச் சொல்லத்தான் சாப்பிடகூப்டியா?”

இதற்கு  என்ன பதில் சொல்வது என்று புரியாமல் அமைதியாய் அவனை ஏறிட்டு பார்த்தான்.

“என்னடா திடீர்னு ஸ்டார் ஓட்டலுக்கு எல்லாம் கூப்டு சாப்பாடு வாங்கித் தரயேன்னு பார்த்தேன்”

அவன் குரலில் கிண்டல் இருந்தது புரிந்தது. இத்தனை நாட்களில் அவர்கள் இருவரும் சாலிகிராமத்தில் உள்ள ஏதோ ஒரு டீக்கடை வாசலில் டீயும், சிகரட்டுமாய் தான் சந்தித்திருக்கிறார்களே தவிர இப்படியான இடங்களில் சந்தித்ததேயில்லை.

” படம் கமிட்டானதுலேர்ந்து நாம ரெண்டு பேரும் சரியா உக்காந்து பேச முடியலை. கமிங் டுத பாயிண்ட். ஷூட்ல உன்னோட ஆட்டிட்டியூட் சரியில்லை. என்ன ஆச்சுனு புரியலை. படத்துல நாம ரெண்டு பேரும் முக்கியமானவங்க. நம்மளுக்குள்ளேயே பிரச்சனை இருந்தா சரியா இருக்காது அதான் உக்காந்து பேசலாம்னு..” 

“சோத்தக் காட்டி என்ன அவமானப்படுத்திறியா?”

“என்ன சொல்லுற வின்செண்ட்?

“பின்ன. என் சைடுல உன் ஒர்க் ஏதாச்சும் சரியா இல்லாம இருக்கா? என்ன ஆட்டிட்டியுட் காட்டுறேங்குற? நீ தான் காட்டுறே? டீக்கடையில தம்மடிச்சிட்டு பேசும் போது இல்லாத ஆட்டிட்டியூட் டைரக்டர் ஆனதும் வந்திருச்சு. எல்லாமே உன் கமாண்டுல இருக்கணும்னு நினைக்கிறே? அதை நீ அறிமுகப்படுத்தின சின்னப் பையன் ஒடைச்சிட்டான்”.

ஸ்ரீதருக்கு கோபம் வந்தது. அமைதியாய் இருந்தான்

“உனக்கு உன் வேலை மேல கான்பிடண்டுன்னா எனக்கு என் வேலை மேல கான்பிடண்ட். ஸோ.. எதை எப்படி காட்டணும்னு நாலு பேருக்கு முன்னாடி சொல்லுறே. 

“அதான் உன் பிராப்ளமா?’ என்று கேட்டதற்கு பதிலே சொல்லாமல் இருந்தான். “உன்னைத்தான் கேட்குறேன்” என்று மீண்டும் ஸ்ரீதர் கேட்க எதும் பேசாமல் ப்ளேட்டை டேபிளின் மீது வைத்துவிட்டு எழுந்துப் போக எத்தனித்தவனை கைபிடித்து நிறுத்தினான் ஸ்ரீதர்.

“நான் நினைக்கிற வரைக்கும் தான் நீ என் படத்துல கேமராமேன்.” என்று சொன்ன ஸ்ரீதரின் குரலில் இப்போது நட்பு இல்லை. 
“அதை நீ சொல்லக் கூடாது. உன் ப்ரோடியூசர் சொல்லட்டும் நான் போய்க்கிறேன். என்ன?” என்றுசொல்லிவிட்டு விறுவிறுவென கிளம்பிப் போனவனை பார்த்துக் கொண்டேயிருந்தான் ஸ்ரீதர்.

************************

போதை தெளிந்து கண்விழித்த போது தான் போலீஸ் ஸ்டேஷனில் இருப்பது ரவிக்கு புரிந்தது. சட்டென ப்ளாஷ்கட்டில் முதல் நாள் நடந்தது எல்லாம் நினைவுக்கு வர, தன்னையே நொந்து கொண்டான். போலீஸ் கான்ஸ்டபிள் அவனிடமிருந்து நூறு ரூபாயை எடுத்து அவனுக்கு டீ வாங்கி வரச் சொல்லி அனுப்பினார். 

“சார்.. சார்.. ஒரு ஹெல்ப்பு. என் ப்ரெண்டு மணிக்கு ஒரு போன் போடுங்க சார்..” என்று கெஞ்சினான்.

“டேய் அவருதாண்டா உன் பேர்ல க்ம்ப்ளெயிண்ட் கொடுத்து உன்னை இங்க உக்கார வச்சிருக்காரு” 

“அய்யோ அதெல்லாம் தெரியும் சார். கொஞ்சம் போன் போடுங்க சார்” என்று சொல்லி கொண்டிருக்கும் போதே மணி ஸ்டேசனுக்குள் நுழைந்தார். கண்கள் முழுவதும் வீங்கிப் போய், களேபரமாய் இருந்த ரவியின் முகத்தைப் பார்க்காமல், எஸ்.ஐயிடம் “சார்.. கேஸ் எதுவும் வேண்டாம். ரீலீஸ் பண்ணிருங்க பார்மாலிட்டி என்னவோ அதை பண்ணிருவோம். ஆனா இனி இவன் என் கண்ணுல முழிக்கக்கூடாது” என்று எழுந்தார். 

ரவி சட்டென அவர் காலில் வீழ்ந்தான்.

“மணி.. மணி தயவு செஞ்சு என்னை அனுப்பிராத மணி. ப்ளீஸ். நான் செஞ்சது எல்லாம் தப்புத்தான். ஏதோ புரியாம பண்ணிட்டேன். திரும்ப ஊருக்குள்ள நான் பணமில்லாம போனா நாய் கூட மதிக்காது. பொண்டாட்டி புள்ளைங்கள காப்பாத்த முடியாது.

 ஏதோ உன் கூட இருக்குறங்குறதுனாலதான் எல்லாரும் பொறுத்துட்டு இருக்காங்க. என்னை அப்டியே த்ராட்ல விட்டுறாத மணி. இனி நான் தப்பு பண்ண மாட்டேன். நீ சொல்லுற படி கேக்குறேன். என்னை மன்னிச்சுரு” என்று அவரின் காலை அங்கிங்கு நகர முடியாத படி இறுகப் பற்றி அழுதான். 

தன் நிலை இப்படி ஆகிவிட்டதே என்கிற துக்கம் அவனுக்கு தொண்டையை அடைத்தது. எப்படியாவது தன் இடத்தை தக்க வைத்துக் கொள்ள  எதை வேண்டுமானாலும் இழக்கலாம் என்று முடிவு செய்துதான் மணியின் காலை இறுகப் பற்றிக் கொண்டான்.

ரவியின் கண்ணீர் மணியை உருக்கியது. “விட்ரா.. காலை விட்ரா.. சரி வா.. ஆனா இனி ஒழுங்கா இருக்கணும் என்ன?” என்ற குரலில் தழுதழுப்பு இருந்தது.

************************
ஸ்ரீதர் அலுவலகத்தினுள் நுழைந்த போது, சுரேந்தரும் அவரது அல்லக்கைக் கூட்டம் மொத்தமும் ப்ரேமியின் ஒர்க்கிங் ஸ்டில்களை பார்த்துக் கொண்டிருந்தது. ஸ்டில் போட்டோகிராபர் தன் காண்டிட் ஷீட்டை கொடுத்துவிட்டு நிற்க, வின்செண்ட் படங்களை காட்டிக் கொண்டிருந்தான். 

“நீங்க ஒரு ஒளி ஓவியர் அண்ணே” என்றது அல்லக்கை.

“எல்லாம் தயாரிப்பாளர் நீங்க கொடுக்குற சுதந்திரம் தான் சார்” என உள்ளே நுழைந்த ஸ்ரீதரைப் பார்த்துக் கொண்டே சொன்னான் வின்செண்ட். 

“வாங்க டைரக்டர். அன்னைக்கு லைட் வேணாம் டல்லா எடுக்கலாம்னு சொன்னீங்க இல்லை. இப்ப போட்டோ பாருங்க எப்படி இருக்கா ப்ரேமி லட்டு மாதிரி” என்று சுரேந்தர் எகத்தாளமாய்  கேட்டார்.

இதன் பின்னால் வின்செண்டின் தூண்டுதல் இருக்கும் என்று புரிந்ததால் ஏதும் பதில் சொல்லாமல் இருந்தான். 

“என்ன பேச மாட்டீங்களோ. அழுது வடியிற முகத்தை எவன் பாப்பான்? சோகமோ, சந்தோஷமோ நல்லா கலர்புல்லா இருந்தாத்தான் படம் பாக்குறவனுக்கு ப்ரெஷ்ஷா இருக்கும். சன் டிவி கலர் டோன் பாத்திருக்கீங்க இல்லை நம்மூரு மக்களுக்கு அப்படி டாமினெண்ட் கலர் இருந்தாத்தான் புடிக்கும்” என்ற சுரேந்தரை ஆச்சர்யமாய் பார்த்தான் இது நிச்சயமாய் அவரின் பேச்சு இல்லை. சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கும் பேச்சு. 

வின்செண்ட் சொல்லிக் கொடுத்த பேச்சு. வின்செண்ட் தன் இடத்தை தக்க வைக்க தனக்கு வைக்கும் செக் என புரிந்தது. 
“அப்புறம் சார்.. அவுட்டோர் போகப் போறோம் மத்த விஷயத்துக்கு டேட் பிக்ஸ் பண்ணிட்டீங்களா?” என்று சுரேந்தரைப் பார்த்து வின்செண்ட் கண்ணடித்துக் கேட்டான். 

“அவுட்டோரே அதுக்குத்தானே?” என்று எகத்தாளமாய் சிரித்தபடி “என்ன டைரக்டர்.. அரேஞ்ச் பண்ணிருவீங்க இல்ல?”என்றார் சுரேந்தர். 

ஸ்ரீதர் அந்த கேள்விக்கு மிகவும் அடிபட்டான். கோபம் விர்ரென ஏறியது “அது என் வேலை இல்லை சார்.” என்றான்.

- தொடரும்

முந்தைய அத்தியாயங்களைப் படிக்க

பகுதி 32 - https://bit.ly/2FPlaza

பகுதி 31 - https://bit.ly/2DMmKjA 

பகுதி 30https://bit.ly/2PhnvHg

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close