[X] Close

குரு மகான் தரிசனம் 19: அக்கா பரதேசி சுவாமிகள்


guru-mahan-dharisanam-19

அக்கா பரதேசி சுவாமிகள்

  • kamadenu
  • Posted: 29 Nov, 2018 15:29 pm
  • அ+ அ-

திருவை குமார்

 தன்னிரு விழிப்பார்வையும் வரப்பெற்ற பிறகு தனவந்தன் யாழ்ப்பாணம் சென்று தனது அனுபவங்களை அங்கிருப்பவர்களுக்கு சொல்லிச் சொல்லி மாய்ந்து போனார்.

தனது வாழ்வின் மிகு நாட்களில் சுவாமிகளுக்கு சேவை செய்வதே தனது பிறவிப்பணி என்று தனது வாழ்வை மாற்றிக் கொண்டிருந்தார்.
இந்த பக்திக்கு மாற்றாக வேறு ஒரு கதையை இரு வேறு தாசிகள் தொடங்கி வைத்தனர்.

“ஊரில் உள்ள பெண்களை எல்லாம் ‘அக்கா! அக்கா!...’ என்று அழைப்பதெல்லாம் பொய். அவருக்கும் காம, குரோத லோபங்கள் உண்டு என்பதை நாங்கள் நிரூபித்து இந்தப் புரட்டு மனிதனின் முகத்திரையை கிழித்தே தீருவோம்” என்று சபதமே ஏற்றனர்.

சரி! எப்படி சுவாமிகளை அணுகுவது? எங்கிருந்து நாடகத்தைத் தொடங்கி எப்படி அவரை வீழ்த்துவது என்றெல்லாம் ஒத்திகையை தொடங்கிவிட்டனர் அந்த இரு தாசிகளும்.

அவர்கள் எதிர்பார்த்த நாளும் அமைந்தது. தாங்கள் மட்டுமே செல்லாமல் வேறு சில தோழிகளையும் அழைத்துக் கொண்டு – சுவாமிகளின் இருப்பிடத்துக்குச் சென்று – பவ்யமாக (!) வணங்கி அமர்ந்தனர். அவருக்கா இவர்களது பாவனை புரியாமல் இருக்கும். காரணமே இல்லாமல் இந்த விலைமகள்கள் எதற்கு இங்கு வரவேண்டும். இதில் ஏதோ சூட்சமம் உள்ளது என்பதை நொடியில் கிரகித்துக் கொண்டு அமைதியாகச் சிரித்து வைத்தார்.

‘வந்த நோக்கம் என்னவென்று சொல்லலாமே…’ சுவாமிகளே பேச்சைத் துவக்கினார்.

சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருந்த தோழியர் உடனடியாக ‘ பெருமை வாய்ந்த இந்த அக்கா சுவாமிகள் எங்கள் இல்லம் எழுந்தருளி – நாங்கள் அளிக்கும் போஜனத்தை ஏற்று அருளாசி தரவேண்டும்…’ என்று கூறினர். சுவாமிகளும் உடனடியாக ‘ ஆஹா! பேஷ்!... பேஷ்! வந்தால் போயிற்று. உண்டால் போயிற்று!...’ என்று வெகுவாக ஆமோதிக்கவே, தோழியர்களுக்கு – தொண்டைக்குழியில் அல்வா இறங்கியது போலாயிற்று.

சுவாமிகளோ பேச்சுடன் நிற்காமல் உடனடியாக எழுந்து அவர்களுடன் கிளம்பத் தயாரானார். “பாரு! சாமீக்குத்தான் எத்தனை ஆவல்!... அழைத்த உடனே கிளம்பி விட்டதே!”… என்று நகைத்தபடியே அவருடன் கிளம்பினர்.

அக்காலத்தில் தாசிகள் பல்லக்கில்தான் செல்வார்கள். அந்த வழக்கப்படியே அவர்கள் பல்லக்கில் ஏறிச் செல்ல, சுவாமிகள் நடையாய் பின் தொடர்ந்தார்.

காரணமின்றி சுவாமிகள் நடந்து போவதில்லையே… பின் எதற்காகச் செல்கிறார்…? என்று பேசியபடி சென்ற கிராமவாசிகள் சற்று நிதானித்துப் பார்த்து முன்புறம் பல்லக்கில் தாசிகள் செல்வதைப் பார்த்து அதிர்ந்து போயினர். ‘என்னாயிற்று சுவாமிகளுக்கு?...’ என்று விநோதமாகப் பார்த்தபடி சென்றனர்.

ஒருசிலர் கேலி செய்யவும் தவறவில்லை! ஆனால், சுவாமிகள் எதையும் செவிமடுத்ததாக தெரியவில்லை.

நடை தொடர்ந்தது. தாசிகளின் இல்லம் வந்தது. இல்லம் நுழைந்த தாசிகள், தங்களின் உடைகளை அலங்கரித்துக் கொண்டு – வாயிற்புறம் நின்று நடந்துவந்து சேர்ந்த சுவாமிகளை – மிகவும் மரியாதைக் கொடுப்பதுபோல நடித்து உள்ளே அழைத்துச் சென்றனர்.

பிறகென்ன? சரச – சல்லாப – கேளிக்கைப் பேச்சுகளை ஆரம்பித்தனர். நாட்டியம் சங்கீதம் என தொடர்ந்தபடி காமபோதைகளை ஏற்றினர். அங்கம் தவழ்ந்த ஆடைகள் நெகிழும்படியும் நாட்டியமாடினர். ஆடியபடியே அவர் மீது உரசலைத் தொடங்கினர்.

மகானுக்குப் புரிந்துபோயிற்று. எல்லை மீறுகிறார்கள். இவர்களைத் தடுத்து நிறுத்துவதே நல்லது என்று நினைத்தவாறே… “சரி! சரி… போதும் நான் என் வீடு திரும்புகிறேன்”… என்று கூறி எழுந்தார்.  

தாசிகளோ, ‘சுவாமி! இன்னும் விருந்தே போடவில்லை. அதற்குள் போதும் என்கிறீரே?... அதற்குள்ளாகவா திகட்டி விட்டது?...’ என்று கேலியாக கூறினர். அத்துடன் இருக்காமல் அவரை இருவருமாக ஆரத்தழுவிட முற்பட்டனர். அடுத்தவிநாடி ‘ஆ’…என்ற அலறலுடன் திக்குக்கு ஒருவராக ஓடினர்.

ஆம்! சுவாமி உடல் அக்னிப்பிழம்பாக தகித்துக் கொண்டிருந்தது. நெருப்புப் பிழம்பை கையில் பிடித்தால் என்ன கதி ஏற்படுமோ அந்த அவலத்தை அவர்கள் உணர்ந்து ஓட்டமாக ஓடினர்.

சுவாமிகளோ, விடுவிடுவென அந்த இல்லம் விட்டு வெளியேறினார். அடுத்த நிமிடம் அந்த மொத்த வீடும் தாறுமாறாக இடிந்து விழுந்தது.

சுவாமிகளோ சிரித்தபடியே வீதியைக் கடந்தார்.

தாசிகளின் வீட்டிற்குள் சென்று வெளிவரும் சுவாமிகளை கிண்டல் செய்யலாம் என கெக்கலிப்புடன் காத்திருந்த வீணர்கள்… வீடு இடிபடலத்தைப் பார்த்து வெலவெலத்து நின்றனர். வேறு சிலரோ, தாசிகளுக்கு இதுவே சரியான தண்டனை என்று கூறியபடி சுவாமிகளின் பாதம் வீழ்ந்து வணங்கினர்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஊரில் எவருமே சுவாமிகளைச் சீண்டியதேயில்லை. அவரும் மன அமைதியுடன் தனது பிள்ளையாரை அன்றாடம் வழிபட்டபடி தன்னை நாடி வந்தவர்களுக்கு நோய் தீர்த்தருளும் அரும்பணியை மேற்கொண்டார்.

ஒரு காலகட்டத்தில் சுவாமிகளுக்கு அபிப்ராயம் ஒன்று தோன்றியது.
‘யாம் இங்கு வந்திட்ட பணி நிறைவுற்றதாகவே கடவுள் திருவுள்ளம் கொண்டுள்ளதாக அறிந்தோம். எனவே, விரைவில் இறையடி சென்றுவிடுவோம்’ என்று தனது சீடரான நாராயண பரதேசிக்கு குறிப்பால் உணர்த்தினார். முதலில் வருத்தமுற்ற சீடர் பிறகு உண்மை நிலை உணர்ந்து சாந்தமானார். அதற்கான ஏற்பாடுகளை முன்நின்று செய்வதாகவும் மனஉறுதி பெற்றார்.

இதற்கிடையே நாராயண பரதேசிக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்றையும் தெரிவித்தே ஆகவேண்டும். இதே ஒரு கார்த்திகை மாதத்தில் குருவிடம் தான் அண்ணாமலை தீபம் காணச் செல்ல இருப்பதாகவும் அதற்காக பத்து தினங்களுக்கு அனுமதி தரவும் கோரிக்கை விடுத்தார்.

மக்கள் சேவையில் தன்னுடன் சீடன் உடனிருந்தாலே சாத்தியம் என்று நினைந்திட்ட சுவாமிகள் உடனடியாக ‘முடியாது ஐயனே! உனக்கு அண்ணாமலை தீபம்தானே தரிசிக்கணும். அதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன்’ என்று கூறி அனுப்ப மறுத்துவிட்டார்.

சீடருக்கோ சொல்ல முடியாத மனவருத்தம். ஆனாலும் குரு சொல் மீறவில்லை. ஆனால் மனதிற்குள் குருநிந்தனையை தொடங்கியிருந்தார். சுவாமிகளுக்கு சடுதியில் புரிந்துபோனது தனது சீடனின் மன ஓட்டம். “என்ன, நாராயணா? ஏனிந்த சோகமும் கோபமும்?”… என்றார்.

“ஆமாம் இன்றுதான் தீபத்திருநாள். ஆனால் அண்ணாமலைக்குச் செல்ல முடியலையே”… என்று விம்மினார்.

‘அட!... இதற்காகவா வருத்தம்? சரி… சரி குனிந்து கீழே பார்’… என்றார்… சீடரும் அவ்வாறே கீழ் நோக்கினார். ‘அங்கே அண்ணாமலை தீபக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பு போல் தெரிய ஆரம்பித்தது’. அண்ணாமலை தீபமும், மலைக்காட்சியும், பக்தர் கூட்டமும் கண்முன்னே காட்சிகளாக விரிந்தன.

அதுமட்டுமல்ல. அண்ணாமலை, உண்ணாமுலை சன்னதி காட்சிகளும் தெரியவரவே… குருவின் பாதம் பணிந்து தனது அறியாமைக்கு மன்னிப்பு கோரி கண்ணீர் உகுத்தார்.

சீடரை தொட்டுத் தழுவிய சுவாமிகள் “மக்கள் சேவையைச் செய்யவே நாம் வந்தோம்… அல்லவா? அதைச் சரிவர செய்தால் மகேசன் மகிழ்வார்” என்று சொல்லி அவரை சாந்தப்படுத்தினார்.

இந்நிலையில் சமாதி நிலைக்கு சற்றும் எதிர்பாராமல் தேதியை அறிவித்துவிட்டார். சீடரும் எல்லோருக்கும் அறிவித்துவிட, அன்றையதினமும் வந்துசேர்ந்தது. பிரமோதூத வருடம் ஆனி மாதம் ஆங்கில வருடம் 1872-ஜூன் மாதத்தில் நன்னொரு நாளில் பக்தர்களின் முன்னிலையிலே இறையருளில் இரண்டறக்கலந்து போனார்.

புதுவை முத்தியால்பேட்டை வாழைக்குளம் பகுதியில் உள்ள குதிரைக்குளம் அருகே அவருக்கு சமாதி எழுப்பப்பட்டது. அங்கே சிவலிங்கம் பிரதிஷ்டித்ததுடன், அக்கா சுவாமிகளால் வழிபட்டுவரப்பட்ட ஶ்ரீமனோன்மணி அம்மன் விக்ரகமும் அவர் சமாதியின் இடப்புறம் பிரதிஷ்டை செய்வித்தனர்.

அவரால் உருவாக்கப்பட்ட மண் பிள்ளையார் அண்ணாசாலையில் உள்ள கந்தன் வணிக வளாகம் அருகில் பிரதிஷ்டிக்கப்பட்டு இன்றளவும் பக்தர்களால் வழிபாடு நடைபெறுகிறது.

நீங்களும் ஒருமுறை புதுவை சென்று மகானை வழிபட்டுவாருங்கள்.

- தரிசனம் தொடரும்

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close