[X] Close

தொங்கட்டான் - 31: அவசரக் கூட்டம்!


thongattan-31-mana-baskaran

நகைத் தொழில்

  • kamadenu
  • Posted: 27 Nov, 2018 10:58 am
  • அ+ அ-

மானா பாஸ்கரன்

கே.வி.டி. பத்தர்  தன்னோட கைப்பட  ஒரு அறிக்கை எழுதி, அதை அடுத்த நாள் எல்லா பத்தர்களுக்கும் ஆள்விட்டு  அனுப்பி வைத்தார்.

அந்த அறிக்கையின் சாராம்சம் இதுதான்:

’எல்லாருக்கும் நமஸ்காரம்!

வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று அமாவாசை நாள்.  அன்றைக்கு நாம் எல்லாரும் நம்முடைய பத்தர் கடைகளுக்கு முழு விடுமுறை  அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அதுமட்டுமில்லாமல், மேற்படி அன்று காலை 10 மணியளவுக்கு  விஜயபுரம் - எல்லையம்மன் கோயிலில் நமது ஆபரணத் தொழிலாளர் சங்கத்தின் மாதாந்திர அவசரக் கூட்டம் நடைபெறவுள்ளது.  இதில் அனைத்து ஆபரணத் தொழிலாளர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.  அன்றைய  கூட்டத்தில் மிகமிக முக்கியமான நமது தொழில் தொடர்பான விஷயத்தைப் பற்றி விவாதிக்க இருக்கிறோம். அனைத்து ஆபரணத் தொழிலாளர்களும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இங்ஙனம்.

கே.வி. தெட்சணாமூர்த்தி பத்தர்.

(தலைவர்

திருவாரூர் ஆபரணத் தொழிலாளர் சங்கம்)

 அரைகுயர் நோட்டின் முதல் பக்கம் எழுதப்பட்ட அந்த அறிக்கையை எடுத்துக்கொண்டு மாங்குடி சுப்ரமணியன் எல்லா பத்தர்களிடமும் காட்டி, கையெழுத்து வாங்கி வந்தார்.

மாங்குடி சுப்ரமணியன் என்கிற பெயரை பத்தர்கள் செல்லமாக மாசு என்றழைப்பார்கள். மாசுவும் இந்தப் பொற்கொல்லர் சமூகத்தைச் சேர்ந்தவர்தான். இந்த நகை தயாரிக்கும் வேலையை மாசு கற்கவில்லை. ஆனாலும் திருவாரூரில் வாழ்ந்து வந்த பொற்கொல்லர்களை எல்லாம் அண்டிப் பிழைத்து வந்தார். எல்லாருக்கும் இவரை ரொம்பப்  புடிக்கும். ரெண்டாங்கெட்டான். 

தொண்ணூறுகள் வரையில்  நகைத் தொழிலாளர்கள் நகைப்பட்டறை வைத்து தொழில்செய்ய வேண்டும் என்றால் சென்ட்ரல் எக்ஸைஸ் டிபார்ட்மென்டில் உரிமம்  (லைசென்ஸ்) பெற்றிருப்பது கட்டாயம்.  பத்தர்களுக்குத் தேவையான இந்த லைசென்ஸ்களை அலைஞ்சு திரிஞ்சி வாங்கிக் கொடுக்கும் வேலையை செவ்வனே செய்து கொண்டிருந்தார் மாசு. தான் செய்கிற இந்த வேலைக்கு கொடுக்கிற காசை வாங்கிக் கொள்வார். பழசுபட்டு சட்டை, வேட்டிகள் இருந்து கொடுத்தால் புன்னகைக் கரம் நீட்டி ஏந்திக்கொள்வார். நா.கோ. சிவராம சேட்டு முட்டாயி கடைக்கும் கணபதி செட்டியார் மளிகைக் கடைக்கும் இடுக்குல இருந்த கீத்து கொட்டாயில்தான் மாசுவுக்கு ஜாகை.

மாசு ஒரு நடமாடும் விவிதபாரதி. விகல்பம் தெரியாத அவரோட பேச்சு எல்லாருக்கும் நல்லா புடிக்கும். ஒரு பத்தர்ட்ட போனாக்க சாமானியத்துல அங்கேருந்து கிளம்ப மாட்டார். தார்குச்சி போட்டுதான் ஆள கௌப்பிட்டு வரணும்.

மாசுவோட பேச்சே ஒரு தினுசா இருக்கும். கேட்பவரின் மனசை நோக்கி நவுந்துகிட்டே வரும் அன்பின் உரையாடல் அது. தஞ்சாவூரு ஜில்லாவுல சில பேருக்கு இப்படிப் பேசுவது அதுவா அமஞ்சிபோயிருந்தது. கோவம் வந்தால் ‘அப்டியே ஆஞ்சி புடுவேன் ஆஞ்சி...’’ என்பார்.

ஒரு வார்த்தைய அப்படியே திருப்பிச் சேர்த்து பேசுவார்  மாசு. அவரது பேச்சின் நெடு வீதியெங்கும் இந்தப் படிமானம் மிகுந்து கிடக்கும். அதுதான் அதில் இருக்கும் தனி ருசி.

 ’காப்பி கீப்பி குடிக்காம கடைக்கு கிடைக்கு எப்புடி போறது?’   

’மழகிழ பேஞ்சாதானே பயிச்சல் கியிச்சல் நல்லாயிருக்கும். ’

’சோறுகீறு இருந்தா போடுங்களேன்.’

‘ கையில காசுகீசு வந்திச்சின்னா நெலம் கிலம் வாங்கிப்போடலாம்.’ 

’இங்க  வயித்தகியித்த கழுவுறதே பெரிய விஷயமாயிருக்கே...’ 

‘கடன வுடன வாங்காம காலத்தை கீலத்த  ஓட்ட   முடீலயே...’ என்பார்.  இதுதான்  மாசுவின் மொழி.  மாசற்ற மொழி.

அந்த ஞாயிறும் வந்தது.  எல்லையம்மன் கோயிலின் பக்கவாட்டில் ஆஸ்பெஸ்டாஸ் சீட் போட்ட பிரகாரத்தில் திருவாரூர்வாழ் நகைத் தொழிலாளர்களின் கூட்டம் கூடியது. கே.வி.டி மற்றும் அருளகம் நடராஜன் ஆகியோர் நடுநாயகமாக இருந்தனர். சலங்கை பத்தர், ஜிமிக்கி கோவிந்தராஜ் பத்தர், பிச்சக்கண்ணு பத்தர், நீலா ஜிவல்லரி சவுரி ராஜன், செட்டு மணி, பாலகிஷ்ண பத்தர், சுரைக்காவூர் பத்தர், பட்ட வெட்டுற மீசை,  வெசை கணேசன், மாணிக்க பத்தர்,  மேலக்கடைத்தெரு காளியப்பப் பத்தர். கல்லு வைக்கிற சேகர், என்கிரேவர் சம்முவம், வேணு பத்தர், ஆனந்த பத்தர் எல்லாரும் பேசினர். இளவட்டங்களும் சின்ன வயது பட்டறக்கூடத்தான்களுமாக இக்கூட்டம் களை கட்டியது.

இந்த அவசரக் கூட்டம் எதற்காக என்று கேவிடி பேசும்போது அன்றைய நாளில் நகைத் தொழிலாலர்களைப்  பயமுறுத்திய  ஒரு பிரச்சினையை மையமாக வைத்து பேசினார்.

‘’இந்த அவசரக் கூட்டத்துக்கு என்னா காரணமுன்னு மொதல்லயே சொல்லிடறேன். கொஞ்ச நாளைக்கு முன்னால  வந்துதான், இங்க இந்த எல்லயம்மன் கோயில் சன்னதியில  நம்ம வடவேர் முருகேசன் கடை வெச்சிருக்காரு. தொழில் நல்லா செஞ்சிட்டுருக்கார்.  ரெண்டு மூணு காசுக்கடை வேலயும் கிராக்கி வேலயும் வாங்கி நாயமா செஞ்சிட்டு இருக்கார். அவுர பொறுத்த வரையில அவுரு அடிக்கடி கருப்பு சட்டை போடுறவருதான். அது அவரோட இஷ்ட்டம். நாம அதுக்கு ஒண்ணு சொல்றதுக்கு இல்ல. இப்ப அது ஒண்ணும் பிரச்சின இல்ல. 

   முருகேசன ரெண்டு மூணு  நாளைக்கு முன்னால ரெண்டு போலீஸ்காரங்க வந்து ஸ்டேசனுக்கு வரச் சொல்லிட்டுப் போயிருக்காங்க. அடிச்சிக்க புடிச்சிக்க  என்கிட்ட ஓடியாந்தாரு. நான் கூட வர்றேன்னு சொல்லிட்டு... வேணுங்கிறவங்க ரெண்டு மூனு  பேரை கூட்டிட்டு ஸ்டேஷனுக்கு  போனேன்.   முருகேசன் ஒரு பெருக்கடப் பொடியன் கிட்டேர்ந்து திருட்டு நகைய வாங்கிட்டதாச் சொல்லி கேட்கத்தான் கூப்ட்டேன்னாங்க.  கட்டகடைசியில அது தப்பான தகவல்னு ஆயிட்டு. சரின்னு வந்துட்டோம்.  அத விட்டுத்தள்ளுங்க. 

இப்பொ என்னன்னா... போலீஸ்காரங்கக்கிட்டே பெருக்கடப் பொடியனுவோ மாட்டுறப்ப அவன் கைய காட்டுற பத்தருங்கள போலீஸ்காரங்க விசாரிப்பாங்க. ரொம்ப இம்சை  இது. எளம்பு பண்ண நகைய இவருக்கிட்டதான் வித்தேன்னு அவன் கை காட்டுனா...  போலீஸ்காரங்களுக்கு அந்த நபரு மேல சந்தேகம் வரலாம். சில சமயம் உண்மைய கொண்டுட்டு வர்றதுக்காக  நம்ம பத்தருங்கள வெங்காரிக்கவும் செய்யலாம்.  இது அடிக்கடி இன்னமே நடக்கலாம். 

நாம எல்லாருமே  பட்டறைக்கு வந்தோமா வேல  செஞ்சோமா நாலு காசு சம்பாரிச்சோமான்னு இருந்துட்டுருக்கோம். இது போல போலீஸ் விசாரிப்பு, கேஸுன்னு   அலைய முடியாது. இதுனால பத்தருங்க பேரும் வெளியில கெட்டுப்போயிடும். காசுக்கடைக்காரங்க வேல குடுக்கறது நிறுத்திடுவாங்க. கிராக்கிகளும் நம்மள நம்பாதுங்க.  அதனால... இந்தக் கூட்டத்துல  ஒரு தீர்மானம் நிறைவேத்தி, அத போலீஸ்காரங்கள்ட்ட கொண்டி குடுக்கணும். என்ன தீர்மானம்னா... ’எங்க பத்தருங்க ஒவ்வொருத்தரும் நகை தயாரிப்பு மட்டும்தான் செய்றோம். நகைங்கள வெலைக்கு வாங்குறதோ, விக்கிறதோ செய்யுறது இல்ல. உற்பத்தி மட்டும்தான்  நாங்க செய்றோம்.  யாவாரம் செய்றது இல்ல. எங்களை போலீஸ்காரர்கள் இது போல தேவையற்ற விசாரணைக்கு அழைக்கக் கூடாது. நாங்க யாரும் திருட்டு நகைகளை வாங்கி பொழைக்க வேண்டிய நெலமையில இல்ல. எங்கள நிம்மதியா வேல செஞ்சு பொழைக்க வுடுங்க...’  ஒரு கடுதாசி எழுதி அனுப்பனும். இப்ப  கடுதாசியில் எழுதி அனுப்புறது போலீஸகாரங்கள அசமடக்குறதுக்காக மட்டுமில்ல. நாம்  ஒவ்வொருத்தரும் மனசில இந்த விஷயங்கள  வெச்சிக்கிட்டு மானத்தோட நாயமா வேல பார்க்கணும்னு நான் கேட்டுக்கிறேன்.  இந்தக்  கூட்டத்தோட தீர்மானமும் இதுதான்!’’ என்று பேசி  முடித்தார். 

கே.வி.டி இப்புடி பேசி முடித்ததும்.  ஜிமிக்கி கோவிந்தராஜ் எழுந்து  ‘’இதை நான் ஆமோதிக்கிறேன்’’ என்றார்.  முட்டாயி கடை அமிர்ந்தலிங்கம் எழுந்து ’’இதை  நான் வழிமொழிகிறேன்’’ என்றார்.

- தொங்கட்டான் அசையும்....

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close