[X] Close

குரு மகான் தரிசனம் 18: அக்கா பரதேசிசுவாமிகள்


guru-mahan-dharisanam-18

  • kamadenu
  • Posted: 22 Nov, 2018 14:29 pm
  • அ+ அ-

திருவை குமார்

தலைப்பே வியப்பாகஇருக்கிறதல்லவா? பரதேசிசுவாமிகள் என்பதுசரி! அதுஎன்ன அதற்கு முன்பாக ‘அக்கா?’ என்றசொல். இளவயது முதலேயே கணபதியே கண் கண்ட தெய்வம் என்று போற்றித் துதித்த ஒரு மாடு மேய்க்கும் சிறுவனே தனது பின்னாட்களில் இந்தபட்டத்தைஅடைந்திருந்தார்.

கிராமத்தில் தன்வசம் ஒப்படைக்கும் கால்நடைகளை மேய்க்கும் பொறுப்பை ஏற்றிருந்த அந்த சிறுவன் வழக்கம்போல் கால்நடைகளை மேயவிட்டுவிட்டு பிள்ளையார் உருவத்தை களிமண்ணில் செய்யத்தொடங்கினான். பொழுது நகர்ந்தது. பிள்ளையாரும் உருவாகிஇருந்தார். இவனது பொறுப்பில் விடப்பட்டிருந்த ஒரு கொழுத்த பசு ஒன்று கன்றுடன் காணாமல் போயிருந்தது.

வீடு திரும்பப் பயந்தவன் மேய்க்கும் இடத்திலேயே இருந்துவிட, வேலைக்கு வைத்துக்கொண்ட எஜமானன் காடு தேடிவந்து நொடிப்பொழுதில் விஷயம்அறிந்து, அவனை மெத்தக் கடிந்துகொண்டதோடு “என் வீட்டுப்பக்கம் வராதே!... உனக்கு வேலை கிடையாது” என்று கத்திவிட்டு நகர்ந்தான்.

அலங்கமலங்க முழித்த சிறுவன் தான் பிடித்த பிள்ளையாரைத் தொழுதபடி நின்றான். அதை கையிலேந்தியபடி தெருத்தெருவாக சுற்றினான். பசி உறக்கம்  எல்லாம் மறந்து திரிந்தான்.

அப்படித்தான் ஒரு தெருவில் பிள்ளையாருடன் அமர்ந்திருந்த போது அத்தெரு வழியே சென்ற இளவயது மாது ஒருத்தி பிள்ளையாரைக் கண்டதும் வணங்கி துதித்து வலம்வந்தாள். அக்காட்சியைக் கண்ட சிறுவனுக்கு மகிழ்ச்சி எல்லைமீறியது. தன் பிள்ளையாரையும் மதித்து வணங்கிய அந்த பெண்ணைப் பாராட்டும் விதமாக ஓடிச்சென்று அவள் வலக்கரம் பற்றி அதன்மீது முத்தமிட்டான்.

அவ்வளவுதான்! அந்தப்பெண் பரிதவித்தவளாக ஓலமிட்டாள்! உன் அக்கா வயதுள்ள என் கரம் பற்றி முத்தமிடுவாயா? இதுசரிதானா?” என்று கேள்விகளை விசிறிவிட்டு சென்றுவிட்டாள்.

தாமதமாக தன் தவறுணர்ந்தவன் அந்தப்பெண்ணிடம் தன் செயலுக்காக மன்னிப்புக் கேட்க நினைத்து ஓடினான், தேடினான்! ஊஹும்! பலனில்லை. அவள் எங்கும் கிடைக்கவில்லை.

ஆனாலும், தனது செய்கை இன்னொருவரை இந்தளவு பாதித்துவிட்டதே என்று நினைந்து  நினைந்து வருந்தினான். இனி ஒரு பெண்ணை மனதாலும் நினைந்திடக்கூடாது என்று உள்சபதம் ஏற்று ஊரில் எதிர்படும் எந்தவொரு பெண்ணையுமே வயது வித்தியாசம் பார்க்காமல் ‘அக்கா’ என்றே அழைக்க ஆரம்பித்தான்.

வெகு பலர் கண்டுகொள்ளாமல் போனாலும் ஒருசிலர் முகம்சுளித்தனர். இவனைவிட இளைய வயதினர் அவனது ‘அக்கா’ என்ற சொல்லை விரும்பவில்லை. முகம்சுளித்துச்சென்றனர்.

காரைக்கால் அம்மையார் போல் தனது இளமைப்பருவமும் தொலைந்துபோய்விடக்கூடாதா என்று கணபதியைப் பிரார்த்தித்தபடியே இருந்தான். வயதில் இளையவர்கள் தன்னை, தன் சம்பாஷனையை வெறுக்கிறார்கள்  என்று தெரிந்து கொண்டபிறகு தன் வயதிற்கு மூத்தவர்களை மட்டுமே நேருக்குநேர் சந்திப்பதை வழக்கப்படுத்திக் கொண்டதுடன் பிறர் சந்திப்புகளை அறவே தவிர்த்துவிட்டான். இப்படியான வாழ்வு அமைந்துவிட்டதே என்று வருந்தியபடியே இருந்தவனுக்கு ஞானத்தெளிவு ஏற்பட ஆரம்பித்திருந்தது.

நம் பிறவிநோக்கம் என்ன? நான் யார்?... என்றெல்லாம் சிந்திக்க ஆரம்பித்துவிட்டு இறுதியில் பிறர்க்கு புண்ணியம் தரும் பிச்சைத்தொழிலை நாமும் மேற்கொள்ளலாம் என்ற முடிவிற்கு வந்தான். பிச்சையெடுத்து பூர்வ ஜென்ம கடனைத் தீர்த்துவிடலாம் என்று நினைத்ததும் அல்லாமல் வீதியில் இறங்கி பிச்சை எடுக்கவும் ஆரம்பித்தான்.

நல்லபடியாக போய்க்கொண்டிருந்த பிச்சை எடுப்பில் அன்று மீண்டும் விதி விளையாடிதோ என்னவோ! மீண்டும் ஒருபெண் மூலமாகவே பிரச்னை எழும்பியது. “ஏனப்பா! வாட்டசாட்டமாக கொழுகொழுவென்றிருக்கும் நீ உடல் வருத்திப் பிழைக்காமல் எதற்குப் பிச்சைஎடுக்கிறாய்?”என்று கேட்டு வைத்தாள்.

“எப்பணியும் அறியாத இவனுக்கு எவர் ஒரு பணி தருவாரம்மா?...” என்று கேட்டான்.

சிறுவனின் கட்டுமஸ்தான உடலைப் பார்த்த அந்தப் பெண், ‘உனக்கு வேலைதானே தேவை. என் பின்னால் வா” என்றழைத்தபடி நேரடியாக செஞ்சிக்கு அழைத்தும் சென்றுவிட்டாள்.

அங்கு ஏதேதோ முயற்சிகள் செய்து சிறுவனை காவல்துறை பணிக்குச் சேர்த்துவிட்டாள்.

சிறுவனுக்கோ வேலை கிடைத்ததில் பெருமைஇல்லை! அடக்கடவுளே! மீண்டும் இந்த ஜென்மாவில் ஒருகடனில் சிக்கிவிட்டோமே என்று நொந்தபடி, பணியில் சேர்ந்தான்.

வருமானத்தில் ஒருபாதி அந்தப் பெண்மணிக்கென்றும் மறுபாதி சேமிப்புக்கும் என்று சபதமேற்கொண்டான். ஆனால் விதிவிடுமா?... அன்று மீன் ரூபத்தில் வந்தது. சிறுவன் வேலைப் பார்க்கும் காவல்நிலையத்தின் உயர்அதிகாரி இவனை அழைத்து ‘மீன்வாங்கி வீட்டில் கொடுத்துவா’  என்று உத்தரவிட்டுள்ளார்.

தனக்கு மீன் வாங்கி பழக்கமில்லை என்று அவன் மறுதலிக்கவே, அதிகாரியே மீன் மார்க்கெட் சென்று மீன்களை வாங்கி பத்திரப்படுத்தி சிறுவனிடம் தந்து ‘இதையாவது வீட்டில் சேர்த்துவிடு!...என்று சொல்லிச் சென்றுவிட்டார்.

அந்த மீன்கள் சென்ற இடம் எங்குதெரியுமா? இவன் தங்கியிருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த பெண்ணின் வீட்டில் கொடுத்துவிட்டான்.

இரவு வரை வீட்டிற்கு மீன்கள் வந்து சேராத சினத்தில் உக்கிரமூர்த்தியான காவல்அதிகாரி நள்ளிரவில் காவல்நிலையத்திற்கு படையெடுத்தார். சிறுவனுக்கு காலையில் துரத்திய விதி நள்ளிரவில் வினையாக முடிந்தது. பணி செய்ய வேண்டியவன் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். ஏற்கெனவே உக்கிரமூர்த்தியாக உள்ளே நுழைந்த அதிகாரி கால சம்ஹாரமூர்த்தியாக மாறிப்போனார். கடுகடுவென முகத்துடன் காச்மூச்சென்று கத்தித்தீர்த்தார்.

காவல்நிலையமே அவரது கத்தலில் நடுநடுங்கித்தான் போயிருந்தது. ஆனால், அச்சிறுவனின் உடலில் சிறுசலனமும் இல்லை. வெறுத்துப்போன அதிகாரி, வேறொரு போலீஸ்காரரை சாட்சிக்கு வைத்துவிட்டு வீடு போய்ச் சேர்ந்தார்.

மறுநாள் வந்ததும் வராததுமாக விசாரணைப்படலம் துவங்கியது.

சிறுவனாகிய அந்த காவலனை வார்த்தைகளால் வெளுத்துவாங்கியதுடன் ‘டிஸ்மிஸ்’ உத்தரவையும் நீட்டிவைத்தார். ஆனால், அதை வாங்க மறுத்த சிறுவன் முந்தைய இரவு நடந்தது மொத்தத்தையும் விளக்கியதுடன் கடுப்புடன் அவர் வண்டியை உதைத்துக் கிளப்பிச் சென்றது வரை ஒப்புவித்தான். அதிகாரிக்கு படபடப்பு இன்னும் அதிகமாகி ‘நானா பொய் பேசுகிறேன். இதோ சாட்சிக்கு ஆள் தருகிறேன்’ என்று சொல்லிவிட்டு முந்தையநாள் பணிக்கு நின்றிருந்த வேறொரு காவலரை அழைத்து சம்பவத்தை விளக்குமாறு கூறினார்.

சாட்சிபூதம் வேறுவிதமாக கிளம்பியது. “ஆமாம்! நீங்கள் வந்தீர்கள். இவரும் எழுந்து பதில் சொல்லி உங்களை அனுப்பித்தானே வைத்தார்” என்று பிளேட்டைத் திருப்பினான் பார்க்கவேண்டுமே?... அதிகாரிக்கு தட்டாமாலை சுற்றாதகுறையே!

ஆனாலும், விடாகண்டன் கொடாகண்டனாக வெறிகொண்டவராக, ‘சரி! இதுபோகட்டும்! நான் வாங்கித் தந்த மீன்கள் எங்கேபோனது?” என்று கேட்டு வாய்மூடும் முன்பாக, “அதான் உங்கள் சம்சாரத்திடம் தந்தேனல்லவா?” என்றான். “சரி! போய் அதனை எடுத்துவா?”  என்று எதிர் உத்தரவு போடவும், அடுத்த அரை மணிநேரத்தில் நேற்று அதிகாரி வாங்கிய அதே மீன்களை கையிலெடுத்து வந்து நீட்டினான்.

அதிகாரிக்கு கோபம் உச்சியில் நின்றது. அதேசமயம் ஆச்சரியமும் நீண்டது.

‘இன்னமுமா மீன் கெடவில்லை’ என்று நினைத்த மாத்திரத்திலேயே “சரி..சரி இன்று போய் சமைத்து உண்ணும்” என்று அவரிடம் நீட்டியதும் “ஏண்டா நேற்றைய மீன்களை இன்று சமைத்து சாப்பிட நானென்ன முட்டாளா” என்ற அடுத்த விநாடியே அந்த மீன்கள் பட படவென துள்ளிக் குதிக்க ஆரம்பித்தன. விழிகளில் பயம் ஒருபுறம்!... திகைப்பு ஒருபுறம் மேலிட எதிர்நின்ற காவலனை நோக்கினார். அவருக்கு முன்பாகவே, தனது காக்கி உடுப்புகளை கழற்றிய சிறுவன், “நம்பிக்கையற்ற மனிதர்களிடம் வேலை பார்ப்பது என்பது, செத்த பிணத்தை தின்ன சாகும் பிணம் ஆசைப்படுவதுபோல்” என்று கூறி வெளியேறி சென்றே விட்டான்.

பிறகுதான் தன்னிடத்தில் பணிபுரிந்தது சாதாரண மானுடனல்ல மகான் என்று.

உடனடியாக அவரைத் தேடிக் கிளம்பி அலைந்து திரிந்தும் பலனில்லை. அவர் புதுவை சென்றுவிட்டதாக அறிந்துகொண்டார். செஞ்சிக்கு காவல் பணிக்கு மகான் மட்டும் வந்து ஆஜராகவில்லை. அவருடைய மண் பிள்ளையாரையும் சுமந்தேவந்திருந்தார்.

இப்போது காவல் பணியை விடுத்து புதுவைக்கு வந்து விட்டபிறகு வேறெதுவும் செய்யத்தோன்றாமல் சதாசர்வமும் பிள்ளையாரை துதித்தபடியே காலம் கழித்துவந்தார்.

இவரது ஆற்றலையும், தேஜஸ்சையும் உணர்ந்த சித்தானந்த சுவாமிகள் மடத்தைச் சேர்ந்த சிஷ்யர்கள் தினமும் உணவளித்து வந்தனர். இந்நிலையில் நாராயண பரதேசி என்ற ஒரு சீடர் அறிமுகமாகிக்கொண்டார். இரவு நேரத்தில் ஒருசங்கு ஒன்றை ஒலித்தபடி நமது மகான் தெருவைச் சுற்றிவர, தயாராக இருக்கும் பெண்கள் சோறு, குழம்பு, காய் என்று விதவிதமாக அவர் சுமந்துவரும் அன்னக்காவடியில் போடுவார்கள்.

மதியவேளைகளில் நாராயண பரதேசி இந்த பணியை செய்தபடி குருவும் சிஷ்யரும் காலம் கழித்து வந்தனர். ஒரு சில குடும்பங்கள் தங்கள் வீட்டிலேயே மதிய உணவு சாப்பிட அழைப்பதும் உண்டு. பெரும்பாலும் நமது மகானாகிய பரதேசி சுவாமிகள் அன்னம் சாப்பிடுவதை தட்டிக்கழித்துவிடுவார். அப்படி மீறி சாப்பிட நேர்ந்தால் அந்த வீட்டில் ஒரு ரூபாய் காணிக்கை தரவேண்டும் என்று கேட்டு வாங்குவதைவாடிக்கையாக வைத்திருந்தார்.

அந்த ஒருரூபாய் மட்டும் எதற்கு?... என்று வினா எழுகிறதல்லவா?

புதுச்சேரியில் உள்ள சோலை தாண்டவன் குப்பத்தில் நடுத்தெருவில் வாழ்ந்த ஒருவரிடம் அதைக் கொண்டு சேர்க்கநினைப்பார். ஆனால், அவர்களோ அதை வாங்கமறுப்பார்கள். ஆனாலும் விடாப்பிடியாக “அக்கா, இந்த ரூபாய் சென்ற ஜென்மக் கடன் அக்கா! இதை வாங்கிக்க” என்று வற்புறுத்தி கொடுத்துவிடுவாராம்.

சதா, அக்கா அக்கா என்றே விளித்திருந்த இவரை பலரும் ‘அக்கா பரதேசி’ என்றே அழைக்கத் துவங்கினர். இந்த ஒருரூபாய் சமாசாரம் அந்த குடும்பத்தாரை தூங்கவிடவில்லை. என்ன சொல்லி இதை நிறுத்துவது!...  என்று ஆலோசனையில் இருந்தபோது ஒருநாள் அந்த இல்லம் நுழைந்தவர் “அக்கா இந்த ஒருரூபாயுடன் உன் கணக்கு முடிந்துவிட்டது. என் கடன் அடைபட்டுவிட்டது” என்று சொல்லிச் சென்றுவிட்டாராம். பிறகு அவர் எவரது கண்களிலும் பட்டதில்லை. ஆனால் வெகு தினங்களுக்குப் பிறகு ஒருசிலர் இலங்கை யாழ்ப்பாணத்தில் அவரைப் பார்த்ததாகக் கூறினர். இப்படிச் சொன்னவர்கள் கூறிய அங்க அடையாளங்களை கவனப்படுத்திக் கொண்ட கிராமத்தினர் ‘ஆமாம்! அவர் எங்களோட அக்காசாமிதான்! அவரப் பார்த்தா இங்க வரச்சொல்லுங்க” என்று அவர்களிடம் வேண்டிக் கொள்வார்களாம்.

ஆனால், யாழ்ப்பாணத்தில் கதை வேறாக போய்க் கொண்டிருந்தது. அங்கு பெரும் தனவந்தராக மதிக்கப்பட்ட ஒருவர் அக்கா பரதேசி சுவாமிகளை போலி சுவாமி என்று பிரகடனம் செய்து வந்தாராம். அத்துடன் விடாமல் அவரை பரீட்சை செய்யவேண்டி ஒரு பொதுஇடத்துக்கு வரும்படியும் அடாவடியாக அழைப்புவைத்தாராம்.

ஆனால் சுவாமிகள் எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் போகவே, அந்த தனவந்தர் அக்கா பரதேசிகள் அமர்ந்திருந்த இடத்திற்கே சென்று எகத்தாளமாக “அக்காசாமீ! அன்ன அபிஷேகம் செஞ்சுக்குமா?” என்றாராம். சற்றே கண்திறந்து பார்த்த சுவாமிகள் ‘ஓ! தாராளமாக’.. என்றாராம்.

வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த தனவந்தர் உடனடியாக, சுடச்சுட சோறுவடித்து அண்டாக்களில் உள்ள அன்னம் முழுவதையும் அதே வேகத்தில் சுவாமிகள் தலையில் கவிழ்த்திருக்கிறார். ஆயிற்று! அன்ன அபிஷேகம் ஆயிற்று! ஆளூம்ஆயிற்று இன்று!... என்று இறுமாப்புடன் தனவந்தர் காத்திருந்தார்.

அரை மணிநேரம் கடந்த பிறகு ஆறிப்போன அன்னம் மொத்தத்தையும் நீக்கிப் பார்த்தபோது உள்ளே அக்கா பரதேசி சுவாமிகள் ஆடாமல் அசங்காமல் அமர்ந்திருந்தார். அவர் மீது ஒரு சிறுகொப்புளம் கூட இல்லை. ஆனால், அடுத்த சிலவினாடிகளில் தனவந்தரின் கண்பார்வை போயிருந்தது. இரண்டு விழிப் பார்வைகளும் போய்விட்டன.

தனவந்தன் கதறினான். கண்ணீர்விட்டான். குறை தீர்த்து அருளும்படி அழுதுதீர்த்தான்.

ஆனால் சுவாமிகள் சொன்னார், “ எல்லாம் கடவுள் திருவுளப்படியே நடந்துள்ளது. உன் விழி வேண்டுமானால் புதுச்சேரிக்கு வந்துசேரு!” என்று கூறிவிட்டு யாழ்ப்பாணம் அகன்றுவிட்டார்.

அவர் பின்னே தொடர்ந்த தனவந்தனும் தனது தவறுகளுக்காக அழுதபடியே சுவாமிகளுக்கு சேவைகள் செய்துவந்தான். தன் பார்வையைத் தந்து விடுவார் என்று நினைத்திருந்த அவனுக்கு ஒருநாள் சுவாமிகளிடத்திலிருந்து ஒரு ஆணை பிறந்தது.

‘இனிமேல் உனக்கு வேலையில்லை. நீ போகலாம்’ என்று சொல்லிவிட்டார். அவனும் அழுதவாறே கிளம்பும்போது சுவாமிகள் “கவலைப்படாதே! கடவுளை தரிசித்துப்போ” என்றாராம்.

அவனுக்கு அழுகை பீறிட்டது. “கண்ணற்ற என்னை இன்னுமா ஏளனம் செய்வது சுவாமீ!” என்றான் அவர் சொன்னார், “உன்னால் பார்க்க முடியும் பார்” என்றார். அடுத்த நிமிடம் அவனது விழித்திரைகளில் ஒளி பற்றிக் கொண்டது. பழைய நிலைக்குத் திரும்பினான்.

கடவுளையும் சுவாமிகளையும் வணங்கி யாழ்ப்பாணம் திரும்பினான். இந்த தனவந்தனின் கதை அறியாத இரண்டு தாசிகள் சுவாமிகளைச் சோதிக்கக் கிளம்பினர்.

-    தரிசனம் தொடரும்

 

 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close