[X] Close

மதுரையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கூட்டத்தில் அமைச்சருடன் அன்புச்செழியன் ஒரே மேடையில் பங்கேற்றதால் சர்ச்சை


controversy-involving-minister-on-the-same-platform-at-the-jayalalithaa-birthday-party-in-madurai

  • Team
  • Posted: 27 Feb, 2018 06:15 am
  • அ+ அ-

மதுரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் கே.ராஜுவுடன், சினிமா பைனான்சியர் அன்புச்செழிய னும் பங்கேற்றதால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.

மதுரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. தெற்குமாசி வீதி தேரடி தெருவில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் கே. ராஜு, முன்னாள் மேயர் கு.திரவியம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது: தமிழகத்தில் ஆட்சியை எதிர்க்கட்சிகள் குறை கூறினாலும், ஆளுநர் பாராட்டி உள்ளார். இந்த ஆட்சி கலைந்துவிடும் எனக் கூறியே மு.க.ஸ்டாலின் ஓய்ந்து விட்டார். எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியபோது, மக்கள் வெள்ளத்தில் வந்தார். ஆனால், நடிகர் கமல் மதுரையில் கட்சி தொடங்கியபோது கூட்டமே இல்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தங்கள் சொத்துகளை நாட்டுக்கு கொடுத்துள்ளார்கள். ஆனால், ரஜினி, கமல் திரைப் படங்களில் ஒழுக்கத்தை சொல்லிக் கொடுக்கவில்லை.

எம்ஜிஆர், ஜெயலலிதா எங்களுக்கு நல்ல பழக்கத்தை சொல்லிக் கொடுத்ததால், இதுநாள் வரை எங்களிடம் எந்த கெட்ட பழக்கமும் இல்லை. எனவே அதிமுக ஆட்சி பல தலைமுறைகளுக்கு தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.

 

மேடையில் அன்புச்செழியன்

இக்கூட்ட மேடையின் முன்வரிசையில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் அமர்ந்திருந்தார். ஏராளமான போலீஸார் பாதுகாப்புடன் நடந்த இந்தக் கூட்டத்தில், அன்புச் செழியன் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

சினிமா நடிகரும், தயாரிப்பாளருமான சசிக்குமாரின் மைத்துனர் அசோக்குமார் தற்கொலை வழக்கில் அன்புச்செழியனைப் போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், செல்லூர் கே.ராஜூவின் பேரன்கள் காதணி விழா சமீபத்தில் மதுரையில் நடந்தது. இதில் முதல்வர், துணை முதல்வர் உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இவ்விழாவிலும் முதல் வரிசையில் அன்புச்செழியன் அமர்ந்திருந்தார். இதை பலர் வியப்புடன் பார்த்தனர். அசோக்குமார் தற்கொலையில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிறகு, அப்போதுதான் அன்புச்செழியன் முதல்முறையாக பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இந்நிலையில், நேற்று அன்புச்செழியன் மேடையிலேயே அமர்ந்திருந்தார். இதுகுறித்து கட்சியினர் கூறும்போது, ‘அன்புச்செழி யன் மதுரை மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணியின் இணைச் செயலாளராக உள்ளார். அவர் அதிமுக கூட்டத்தில் பங்கேற்பதில் ஆச்சரியம் இல்லை. அசோக்குமார் தற்கொலை வழக்கை சட்டரீதியாக அவர் எதிர்கொண்டு வருகிறார். நீதிமன்றத் தடை உள்ளதால் அன்புச்செழியனைக் கைது செய்ய முடியாது. இதனாலேயே, பொது நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்’ என்று தெரிவித்தனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close