[X] Close

திமுகவுடன் எங்களுக்கு எந்த உறவும் இல்லை: டிடிவி தினகரன்


ttvdinakaran-speech-about-elections

  • kamadenu
  • Posted: 22 Oct, 2018 09:08 am
  • அ+ அ-

மதச்சார்பற்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அது முழு வடிவம் பெற்றதும் அறிவிக்கப்படும் என்று அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

சென்னை அசோக் நகரில் உள்ள அமமுக கட்சி அலுவலகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களுடன் டிடிவி தினகரன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

அதன்பிறகு செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது:

எங்களிடம் கருணாஸ் உட்பட 23 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதில் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அரசுக்கு ஆதரவாக இல்லை என்பதால் இவர்களது தொகுதிகளில் அரசுப் பணிகள் எதுவும் நடக்கவில்லை. எனது ஆர்.கே.நகர் தொகுதியிலும் பணிகளை செய்யாமல் மக்களை வஞ்சிக்கும் வகையில் அரசு செயல்படுகிறது.

தொகுதி மக்களுக்கு அடிப் படை வசதிகள்கூட சரிவர செய்து தராததைக் கண்டித்து அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜி தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடை பெற்றது. அதுபோல மற்ற 22 தொகுதிகளிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தினோம்.

ஆண்டிப்பட்டி - ஆர்.கே.நகர்

அதன்படி, ஆண்டிபட்டியில் நவம்பர் 10-ம் தேதி தொடங்கி, டிசம்பர் 22-ல் ஆர்.கே.நகரில் போராட்டத்தை முடிக்க திட்ட மிட்டுள்ளோம்.

பல மதச்சார்பற்ற கட்சிகள் எங்களுடன் கூட்டணி சேரும் மனநிலையில் உள்ளன. கூட்டணி குறித்து பேசிக் கொண்டிருக் கிறோம். அது முழு வடிவம் பெற்றதும் அறிவிப்போம். தேர்தல் நேரத்தில் முடிவெடுத்து கூட்டணி பற்றி வெளிப்படையாக சொல்வோம்.

மக்களவைத் தேர்தலுடன் தமிழக சட்டப்பேரவைக்கும் தேர்தல் வரும். திமுகவுடன் எங்களுக்கு எந்த உறவும் இல்லை.

சபரிமலை விவகாரத்தில் மக்களின் உணர்வு, மத நம்பிக்கை, கோயில் சட்டதிட்ட விதிகள், தற்போதைய கொந்தளிப்புக்கான காரணம் எல்லாவற்றையும் கேரள அரசு ஆய்வு செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றத்தை முறைப்படி அணுகி, சீராய்வு மனு தாக்கல் செய்து பழைய நிலையை தீர்ப்பின் மூலம் பெற்றுத் தருவதே சரியான முடிவாக இருக்கும்.

டிசம்பர் மாத இறுதிக்குள் அமமுக உறுப்பினர் எண்ணிக்கை 2 கோடியை எட்டும். முதல்வர் தனது உறவினருக்கு டெண்டர் கொடுத்ததை எதிர்த்துதான் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதுகுறித்து பதில் அளிக்காமல் முதல்வர் வேறு எதையோ பேசி மக்களை திசை திருப்புகிறார்.

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close