[X] Close

டிகேஎஸ் இளங்கோவன் நீக்கத்துக்கு தொலைக்காட்சி பேட்டி மட்டும்தான் காரணமா?


elangovan-removed-as-dmk-spokesperson

  • பாரதி ஆனந்த்
  • Posted: 16 Oct, 2018 09:47 am
  • அ+ அ-

டி.கே.எஸ்.இளங்கோவன் திமுக செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருப்பதற்கு சிலை திறப்பு தொடர்பாக அவர் அளித்த தொலைக்காட்சிப் பேட்டி மட்டுமே காரணம் அல்ல என்று திமுக வட்டாரத்தில் முனுமுனுக்கப்படுகிறது.

திமுக செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார் டி.கே.எஸ்.இளங்கோவன். இவர் திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர். மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர். ஆனால், அவரை திடீரென செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து நீக்கியிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

பொதுவாக, கட்சிக்குள் சீனியாரிட்டி எல்லாம் பார்க்காமல் நடவடிக்கை எடுப்பதில் அறியப்பட்டவர் அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான்.

ஆனால், அவரது பாணியிலேயே இப்போது டி.கே.எஸ்.இளங்கோவனை நீக்கியிருக்கிறார் ஸ்டாலின். இது கட்சிக்குள் சிறு சலசலப்பை ஏற்படுத்தாமல் இல்லை. எனெனில், இளங்கோவன் நீக்கத்துக்கு கட்சித் தலைமையில் இருந்து எவ்வித விளக்கமும் கொடுக்கப்படவில்லை.

64 வயதான இளங்கோவன் ராஜ்யசபா எம்.பி.யாகவும் இருந்திருக்கிறார். இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், "திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு அடுத்த மாதம் 15-ம் தேதி நடைபெறும். அதில் தேசியத் தலைவர்கள் கலந்து கொள்வார்கள். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் எப்போது தொடங்கும் எனத் தெரியவில்லை. ஆனால், சோனியா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொள்ள ஏதுவாக தேதி முடிவு செய்யப்படும்.

இந்த விழாவுக்கு அதிமுகவுக்கு அழைப்பு விடுக்கப்படாது. அரசு சார்பில் கொண்டாடப்பட்ட எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவில் பெயருக்கு அழைப்பு இருந்தது. மற்றபடி அரசு விழாக்களில் திமுக தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
மேலும், கருணாநிதி சிலை திறப்பு விழா கழகத்தின் சார்பில் நடத்தப்படுகிறது. அதனால் அதிமுகவுக்கு அழைப்பு விடுக்கத்தேவையில்லை" எனப் பேசியிருந்தார்.

இந்நிலையில்தான், கட்சியின் செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து டி.கே.எஸ்.இளங்கோவன் நீக்கப்படுவதாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்தார்.

திமுக வட்டாரத்தில் இது குறித்து, சிலை திறப்பு குறித்த பேட்டியைத் தாண்டியும் கட்சித் தலைமைக்கு இளங்கோவன் மீது அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. அண்மையில் அழகிரி விவகாரத்தில் அவர் அளித்த சில பேட்டிகளால் தலைமை அதிருப்தியில் இருந்தது. அதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது.

டி.கே.எஸ்.இளங்கோவன் திமுக எம்.பி. யும் ஸ்டாலினின் சகோதரியுமான கனிமொழிக்கு எப்போதும் ஆதரவாக செயல்படக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2015 சம்பவம்:

2015-ம் ஆண்டு இதேபோல் திமுகவின் அப்போதைய தலைவர் கருணாநிதியின் கோபத்துக்கு ஆளானர் டி.கே.எஸ்.இளங்கோவன். 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டியிடும் என்பது குறித்து ஊடகங்களுக்கு அவர் பேட்டியளித்தார். ஆனால், கட்சித் தலைமையோ இளங்கோவன் கருத்துக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று கூறியது. கருணாநிதியின் கோபத்தை உணர்ந்த இளங்கோவன் அவருக்கு மன்னிப்பு கடிதம் எழுதினார் என்பது நினைவுகூரத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close