[X] Close

துணை முதல்வரின் சொந்த மாவட்டத்தில் எடப்பாடியார் பேரவை தொடக்கம்: ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் அதிர்ச்சி


edapadi-peravai-started-at-ops-hometown

தேனி மாவட்டத்தில் ஒட்டப்பட்டுள்ள எடப்பாடியார் பேரவை சுவரொட்டி.

  • kamadenu
  • Posted: 14 Oct, 2018 11:17 am
  • அ+ அ-

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் எடப்பாடியார் பேரவை தொடங்கப்பட்டுள்ளது. இது ஓ.பி.ஸ். ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊர் தேனி மாவட்டம் பெரியகுளம். நான்கு சட்டப் பேரவை தொகுதிகளைக் கொண்ட தேனி மாவட்டத்தில் போடி தொகுதியில் இருந்து சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம்.

இவர் சசிகலா குடும்பத்தினருக்கு எதிராக போராட்டம் தொடங்கிய காலத்தில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்டிபட்டி சட்டப் பேரவை உறுப்பினர் தங்க. தமிழ்ச்செல்வன், பெரியகுளம் சட்டப் பேரவை உறுப்பினர் கதிர்காமு, கம்பம் சட்டப் பேரவை உறுப்பினர் ஜக்கையன் ஆகியோர் உட்பட யாரும் இவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

பின்னர் அதிமுகவின் இரண்டு அணிகளும் இணைந்தன. டி.டி.வி. தினகரன் அணியில் இருந்த கம்பம் சட்டப் பேரவை உறுப்பினர் ஜக்கையன் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்காமல் முதல்வர் கே.பழனிசாமியை சந் தித்து தன் ஆதரவைத் தெரிவித்தார். அப்போது முதல் ஓ.பன்னீர்செல்வம், ஜக்கையன் ஆகியோரிடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

ஈழத் தமிழர் படுகொலையில் திமுக, காங்கிரஸ் கட்சிகளைக் கண்டித்து கடந்த மாதம் தேனி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜக்கையன் பங்கேற்கவில்லை. மேலும் அதற்கடுத்து நடைபெற்ற அரசு விழாக்களையும் ஜக்கையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து புறக்கணித்தனர்.

இந்நிலையில் தேனி, பெரியகுளம், கம்பம், போடி, ஆண்டிபட்டி உட்பட மாவட்டம் முழுவதும் தேனி மாவட்ட எடப்பாடியார் பேரவை என்ற சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. ஆர்.பால்பாண்டி என்பவர் புகைப்படத்துடன் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டியில், புரட்சித் தலைவி ஆட்சியைத் தொடர்ந்து சிறப்பாக நடத்தி வரும் இரும்பு மனிதர் தமிழக முதல்வர் கே.பழனிசாமியை வாழ்த்துகிறோம் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இந்த சுவரொட்டியில் முதல்வர் படம் பெரியதாகவும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் படம் சிறியதாகவும் இடம் பெற்றுள் ளது.

சுவரொட்டியை ஒட்டியுள்ள பால்பாண்டி என்பவர் ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியின் வட்டார கமிட்டி தலைவராக இருந்தார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் அதிமுகவில் இணைந்தார்.

ஒப்பந்ததாரராக உள்ள இவர் கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜக்கையனின் ஆதரவாளர். இவருக்கு சில மாதங்களுக்கு முன் கம்பம் ஒன்றிய அதிமுக பிரதிநிதி பொறுப்பு வழங்கப்பட்டது.

ஜக்கையன் ஆதரவாளர் ஒருவர் ஒட்டியுள்ள இந்த சுவரொட்டியால் தேனி மாவட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து கருத்து கேட்க முயன்ற போது பால்பாண்டியை தொடர்பு கொள்ள முடிய வில்லை.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close