[X] Close

முதலமைச்சர் ஆனவர்கள் எல்லாம் நடித்துக் கொண்டிருக்கிறார்களா? - விஜய்க்கு வைகைச் செல்வன் கேள்வி


vaigai-selvan-questions-vijay-for-his-speech-at-sarkar-audio-launch

  • kamadenu
  • Posted: 03 Oct, 2018 14:54 pm
  • அ+ அ-

முதலமைச்சர் ஆனவர்கள் எல்லாம் நடித்துக் கொண்டிருக்கிறார்களா?  என்று நடிகர் விஜய்க்கு வைகைச் செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் ’சர்கார்’ இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை பிரசன்னா தொகுத்து வழங்கினார். அப்போது, “நிஜத்தில் முதலமைச்சரானால் என்ன செய்வீர்கள்” என்ற கேள்வியை எழுப்பும் போது “நிஜத்தில் முதலமைச்சரானால் முதலமைச்சராக நடிக்க மாட்டேன். உண்மையாக இருப்பேன் என்பதையே சொல்ல வருகிறேன்” என்று பதிலளித்தார் விஜய்.

இதன் மூலம் விஜய்க்கும் அரசியல் ஆசை இருப்பது உறுதியாகியுள்ளது என்று பல அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்தக் கருத்துக்கு பல்வேறு அரசியல்வாதிகளும் தங்களுடைய கருத்துகளைத் கூறிவருகிறார்கள்.

விஜய்யின் பேச்சு குறித்து அதிமுகவைச் சேர்ந்த வைகைச் செல்வன் கூறியிருப்பதாவது:

சர்கார் ஆடியோ வெளியீட்டு விழாவில் நான் முதலமைச்சர் ஆனால் நடிக்கமாட்டேன் என்று கூறியிருக்கிறார். அப்படியென்றால் முதலமைச்சர் ஆனவர்கள் எல்லாம் நடித்துக் கொண்டிருக்கிறார்களா? 

அரசியல் களம் என்பது எவ்வளவு கடினமும் துயரமும் நிறைந்தது என்பதை அறியாதவர்களாக இவர்கள் இருக்கிறார்கள். நடிகர்கள் ஏதோ ஷூட்டிங் செல்வது போல வசனம் மட்டும் பேசிவிட்டு சென்றால் அது காற்றிலே கரைந்து விடும். நிழல் படமாக இருப்பவர்கள் நிஜப்படமாக வருவார்களா என்பதை காலம்தான் தீர்மானிக்கும். அதற்கான காலம் இது இல்லை 

இவ்வாறு வைகைச் செல்வன் கூறியுள்ளார்.
 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close