[X] Close

திருப்பரங்குன்றம் தொகுதியில்  திமுக தேர்தல் பணிக் குழுவில் 29,500 பேர்: அக்.10-க்குள் பட்டியல் அனுப்ப கட்சி தலைமை உத்தரவு


dmk-work-at-thiruparangkundram

திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் பணி ஆலோசனைக் கூட்டத்தில் பேசினார் புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் பி.மூர்த்தி. உடன் தெற்கு மாவட்டச் செயலாளர் எம்.மணிமாறன் உள்ளிட்டோர்.

  • kamadenu
  • Posted: 02 Oct, 2018 09:53 am
  • அ+ அ-

எஸ்.ஸ்ரீனிவாசகன்

திருப்பரங்குன்றம் தொகுதியில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலா 100 பேர் வீதம் 29,500 பேர் கொண்ட தேர்தல் பணிக் குழுவை அக்.10-ம் தேதிக்குள் அமைக்க திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கும் முன்பே தேர்தல் பணியில் அதிமுக, திமுக, அமமுக கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அமமுக சார்பில் வாக்குச்சாவடி வாரியாக 330 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். இந்த ஒரு தொகுதியில் மட்டும் 90 ஆயிரம் பேரை உறுப்பினர்களாக சேர்த்துள்ளதாக அமமுகவினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அதிமுகவினர் நலத்திட்ட உதவி வழங்கல், தேர்தல் பணிக்குழு அமைப்பு, ஆலோசனைக் கூட்டம், சைக்கிள் பேரணி எனத் தீவிரமாகக் களம் இறங்கிவிட்டனர். இதைத் தொடர்ந்து திமுகவினரும் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினர். வாக்குச்சாவடிதோறும் 10 பேர் கொண்ட தேர்தல் பணிக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதியில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை சென்னையில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு அதிமுகவினர் அழைத்துச் சென்றனர். அக்.7-ம் தேதி நடைபெற உள்ள அமமுக நலத்திட்ட உதவிகள் வழங்கும் கூட்டத்தில் பல ஆயிரம் பேரை கலந்து கொள்ள வைக்க ஏற்பாடு நடக்கிறது.

திமுகவும் திருப்பரங்குன்றத்தில் தேர்தல் பணி ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இதில் மாவட்டச் செயலாளர்கள் பி.மூர்த்தி, எம்.மணிமாறன் பங்கேற்றனர். இதில் பி.மூர்த்தி பேசியதாவது:

திருப்பரங்குன்றம் தொகுதியைச் சேர்ந்த 5 ஆயிரம் பேர் வரும் 10-ம் தேதி சென்னைக்கு அழைத்துச் செல்லப்படுவர். அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தேர்தல் பணியை எவ்வாறு மேற்கொள்வது என ஆலோசனை நடத்தப்படும்.

தற்போது 295 வாக்குச் சாவடிகளிலும் தலா 10 பேர் வீதம் 2,950 பேர் கொண்ட தேர்தல் பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதை 10 மடங்காக அதிகரித்து வாக்குச்சாவடிக்கு தலா 100 பேர் வீதம் 29,500 ஆக உயர்த்த கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. வரும் 10-ம் தேதிக்குள் இப்பணியை நிறைவு செய்து பட்டியல் அளிக்க வேண்டும்.

அதிமுக, அமமுக என எந்தக் கட்சிக்கும் பயப்பட வேண்டியதில்லை. நமது பலத்தை நிரூபித்தாலே வெற்றி உறுதி. தேர்தல் செலவு, நலத்திட்டம், மிரட்டல் என எதற்காகவும், யாரும் பயப்படத் தேவையில்லை. அதிமுக, அமமுகவிற்கு நிகராக, அதற்கும் ஒருபடி மேலே கூட சிறப்பாகத் தேர்தல் பணியாற்ற அனைத்து உதவிகளையும் செய்வதாக கட்சித் தலைமை உறுதி அளித்துள்ளது. இதனால் உற்சாகமாக தேர்தல் பணியை தொடர்வோம் என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close