[X] Close

அப்பா ஸ்டைலில் ஸ்டாலின் அழைப்பு; விழுப்புரத்தில் திமுக முப்பெருவிழா


appa-style-stalin

  • வி.ராம்ஜி
  • Posted: 14 Sep, 2018 10:20 am
  • அ+ அ-

அண்ணா பிறந்தநாள், திமுக உதயமான விழா, பெரியார் பிறந்தநாள் விழா என முப்பெரும் விழா நடைபெறுவது வழக்கம். நாளை 15ம் தேதி சனிக்கிழமை விழுப்புரத்தில் திமுக முப்பெரும் விழா நடக்கிறது.

இதையொட்டி, கலைஞர் கருணாநிதி பாணியிலேயே உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதி அழைப்பு விடுத்திருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.

“தலைவர் கலைஞரின் நினைவை உள்ளத்தில் ஏந்தி, விழுப்புரம் நோக்கி விரைந்து வருக, உடன்பிறப்பே!” என்று தலைப்பிட்ட அந்தக் கடிதத்தில் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:

என் உயிரினும் மேலான தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளே!

முத்தமிழாக - முக்கனியாக இனித்து எழுச்சி தரும் கழக விழா, முப்பெரும் விழா! தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா பிறந்த திருநாள் விழாக்களும், காலம் கன்னித் தமிழகத்திற்குக் களிப்புடன் ஈந்த கழகத்தின் தோற்றமும், ஒன்றாய் இணைக்கப்பட்டு உயர்வோடு நடக்கின்ற இனிய விழா! நம் உயிருடன் இரண்டறக் கலந்திருக்கிற தலைவர் கலைஞர் அவர்கள் ஆண்டுதோறும் தவறாது எடுத்த தனிப்பெரும் விழா! உடன்பிறப்புகளின் உணர்வில் - உள்ளத்தில் பதிந்திருக்கும் திராவிட இலட்சியங்களைச் சிறப்புற நினைவூட்டும் திருவிழா! “விழுப்புரத்தில் விழிப்புற்றெழுக!” என்று அன்றொருநாள் நமது தலைவர் கலைஞர் அழைத்தாரே, அதே மாநகரில் செப்டம்பர் 15ஆம் நாள், எழுச்சியுடன் நடைபெறவிருக்கிறது முப்பெரும் விழா! அந்த விழாவுக்கான எனது அன்பு அழைப்புதான் இந்த மடல்.

‘தலைவர் கலைஞர் அவர்கள் வகுத்துக் காட்டிய பாதையில், காலத்திற்குகந்த வியூகங்களோடு உங்களில் ஒருவனான நான், உங்கள் பேரன்புடன் கழகத் தலைமைப் பொறுப்பினை ஏற்று, உங்களுடன் பயணிக்கிறேன். அந்தப் பயணத்தில் உங்களுக்கு நானும், எனக்கு நீங்களும் தோளோடு தோள் நின்று இயக்கத்தை அவர் பாணியில் கட்டிக் காப்பதே தலைவர் கலைஞர் அவர்களுக்கு நாம் செய்கிற உண்மையான அஞ்சலி. அந்த உத்வேகம் மேலிட உண்ர்ச்சிப் பெருக்கோடு நடைபெற உள்ளது முப்பெரும் விழா! 

மத்தியிலும் - மாநிலத்திலும் நடைபெறுகிற மக்கள் விரோத - ஜனநாயக விரோத அரசுகள் தூக்கி எறியப்பட வேண்டும். அதற்கான அமைதியான அறநெறிக் களத்திற்கு நாம் தயாராக வேண்டும். தோழமை சக்திகள் துணை நிற்கின்றன. நாடு எதிர்கொண்டுள்ள சவாலை நாம் அறிவோம். அதனைச் சந்திக்க ஆயத்தமாகவும் ஆர்வத்துடனும் இருக்கிறோம் என்ற சூளுரையை மேற்கொள்ள விழுப்புரத்தில் கூடிடுவோம்!

மாவட்ட கழகச் செயலாளர் அன்புச் சகோதரர் முனைவர் பொன்முடி அவர்கள் சிறப்பான முறையிலே முப்பெரும் விழாவினை முனைப்போடு ஏற்பாடு செய்து வருகிறார். மாவட்டக் கழகத்தில் உள்ள மற்ற நிர்வாகிகளும், அருகில் உள்ள கழக மாவட்டங்களைச் சேர்ந்த கழக நிர்வாகிகளும் ஒன்றிய – நகர – பேரூர் - கிளைக் கழக நிர்வாகிகளும் -செயல் வீரர்களும் அயராது பாடுபட்டு வருகின்றனர்.

கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்ற பிறகு, உடன்பிறப்புகள் அனைவரையும் ஒருசேர சந்திக்கின்ற பேரார்வத்துடன் விழுப்புரம் நோக்கி விரைகிறேன். நீங்களும் அதே ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் வருவீர்கள் என்று வழியெல்லாம் விழி வைத்து எதிர்பார்க்கிறேன். அதுதானே கழகம் வளர்த்துள்ள இயக்கப் பாசம்; இரத்த பாசம்! தலைவர் கலைஞர் நமக்குள் உருவாக்கிக் கெட்டிப்படுத்தியிருக்கும் உறவின் மேன்மை! மூத்தோரும் இளையோரும் உடன்பிறப்புகள் என்ற உயர்வால் இணைந்து பங்கேற்கும் முப்பெரும் விழாவில், கழகம் காத்திட உழைத்தோருக்கு விருது வழங்கிச் சிறப்பிப்பது தலைவர் கலைஞர் அவர்கள் உருவாக்கித் தந்த வாஞ்சைமிகு வழக்கம். அதனைச் சிறப்புறத் தொடர வேண்டும் என்ற எண்ணத்துடன், இந்த விழாவிலும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

கழகத்தைக் கட்டிக்காப்பதில் தலைவர் கலைஞர் அவர்களுக்கு, நம் மூத்தவர்கள் எந்தெந்த வகையில் துணை நின்றார்கள், பல்வேறு முனைகளில் கழகப் பணிகளை எப்படி மேற்கொண்டார்கள் என்பதை இளைய உடன்பிறப்புகள் தெரிந்து கொள்ளும்போது, இந்த இயக்கத்தின் தியாக வரலாற்றை அறிந்து கொள்வதுடன், இந்த இயக்கம் கட்டிக்காக்கப்பட வேண்டிய தேவையும் தெரியவரும். அதற்குத் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்வதற்கான விழாவாகத்தான் முப்பெரும் விழா நடைபெறவிருக்கிறது.

தி.மு.கழகத்தை சிலர் குடும்பக் கட்சி என்று விமர்சனம் செய்யும்போது, அவர்களின் அறியாமையை எண்ணி மனதுக்குள் சிரித்துக் கொள்வேன். இது குடும்பக் கட்சிதான். குடும்பம் குடும்பமாக இலட்சோப இலட்சம் குடும்பங்கள் கட்சி விழாவில் பங்கேற்கிற பெருமைமிகு தொண்டர்களை இந்த இயக்கத்தைத் தவிர வேறெந்த இயக்கத்தில் காண முடியும்? கழகத்தை நிறுவிய பேரறிஞர் அண்ணா அற்புதமான அந்த உணர்வை விதைத்தார். கழகத்தைக் கட்டிக்காத்த தலைவர் கலைஞர் அவர்கள் அந்த உணர்வை, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்த்தார்.

மூன்று தலைமுறையாக நாங்கள் தி.மு.க. குடும்பம் என்று சொல்லிக் கொள்வோர் நெஞ்சில்தான் எத்தனை பெருமிதம். என் தாத்தா - பாட்டி, அம்மா - அப்பா, நானும் என் உடன்பிறந்தோரும் தி.மு.க.வினர்தான் என்று பெருமைப்படக்கூடிய தொண்டர்களைக் கொண்ட இயக்கம் இது. தமிழ்நாட்டில் வாழ்வோர் அனைவரையும் தன் குடும்பமாக நினைக்கின்ற இயக்கம். உலகில் வாழும் தமிழர்களையெல்லாம் உடன்பிறப்புகளாகக் கருதிப் போற்றுகிற இயக்கம். அத்தகைய சிறப்பு வாய்ந்த பேரியக்கத்தின் பெருவிழா, முப்பெரும் விழா! 

கழகம் காத்திடவும், தலைவர் கலைஞர் அவர்களின் புகழுக்கு மேலும் மேலும் பெருமை சேர்த்திடவும், குடும்பம் குடும்பமாக விழுப்புரத்தில் கூடிடுவோம்! கொள்கை முழங்கிட குன்றின் மேலிட்ட விளக்கெனக் குவிந்திடுவோம்! வெற்றிபுரி நோக்கி வீறுநடைபோட்டு விரைந்திடுவோம்! உங்களில் ஒருவனாக, உங்களால் ஒருவனாக, உள்ளத்தில் அன்பு பொங்கிட அழைக்கிறேன்! சாலைகளெல்லாம் விழுப்புரம் நோக்கியே அமையட்டும்! ஊரெல்லாம் விழுப்புரம் விழுப்புரம் என்றே உரைக்கட்டும்! காத்திருக்கிறேன் வாரீர், வாரீர்!
இப்படியாக, தன் தந்தையைப் போலவே கடிதம் எழுதி, தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close