[X] Close
 

எம்ஜிஆர் பிரிந்தது நல்லதுதான்னு கலைஞர் சொன்னார்! - வைரமுத்து சொன்ன ரகசியம்


kalaingar-mgr

கலைஞர் - எம்ஜிஆர்

  • வி.ராம்ஜி
  • Posted: 04 Sep, 2018 11:13 am
  • அ+ அ-

எம்ஜிஆர் பிரிந்தது அல்லது பிரிக்கப்பட்டது ஒருவகையில் நல்லதுக்குத்தான் என்று கலைஞர் தன்னிடம் சொன்னார் என வைரமுத்து பேசினார்.

திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் சார்பில், கலைஞர் கருணாநிதி புகழ்வணக்கக் கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு, கவிஞர் வைரமுத்து பேசியதாவது:

ஒரு தலைவரை இழந்துவிட்டு நிற்கிறோம். ஒரு கவிஞரை இழந்துவிட்டு நிற்கிறோம். ஒரு எழுத்தாளனை இழந்துவிட்டு நிற்கிறோம். ஒரு பாடலாசிரியரை இழந்து நிற்கிறோம். ஒரு திரைப்பட வசனகர்த்தாவை இழந்து நிற்கிறோம். இலக்கியப் புதுமைகள் செய்தவரை இழந்துவிட்டு நிற்கிறோம். தமிழ் மக்களை பள்ளத்தில் இருந்து மேடேற்றிவிட்ட தலைவனை இழந்து நிற்கிறோம்.

சிலரின் 30 நாட்களில் மறந்துவிடும். இன்னும் சிலரின் மரணம், 3 மாதங்களில் மறந்துவிடும். ஒருசிலரின் மரணம், மூன்று வருடங்களில் மறந்துவிடும். வெகுசிலரின் மரணம், முப்பது வருடங்களில் மறந்துவிடும். ஆனால், தமிழ் இலக்கியத்தின் கடைசி எழுத்து இருக்கும் வரை மரணமில்லாமல் வாழ்ந்திருப்பார் கலைஞர்.

ஒருமுறை கலைஞரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, அவரிடம் கேட்டேன்... ‘இந்தக் கேள்வி கேட்கிறேன் என்று மனம் கசங்கிவிடவேண்டாம். எம்.ஜி.ஆர். பிரிந்ததால் அல்லது பிரிக்கப்பட்டதால் என்றேனும் வருந்தியது உண்டா?’ என்று கேட்டேன்.

கொஞ்சம் மெளனமாக இருந்தார். மூக்குக்கண்ணாடியை உயர்த்திக்கொண்டார். ‘ஒருவகையில், அப்படிப் பிரிந்தது நல்லதுக்குத்தான்’ என்றார்.

இப்போது நான் மெளனமாக இருந்தேன். கலைஞரே தொடர்ந்து பேசினார்.

‘ஒருவேளை எம்ஜிஆர் பிரியாமல், பிரிக்கப்படாமல் போயிருந்தால், திராவிட இயக்கம் அமர்ந்த இடத்தில், தேசிய இயக்கம் வந்து உட்கார்ந்துகொண்டிருக்க இடம் அமைத்துக் கொடுத்தது போலாகிவிடும்.  எம்ஜிஆர் பிரிந்து, தனி இயக்கம் தொடங்கியதால், திராவிட இயக்கத்துக்கு எதிரான இயக்கம் இங்கே வேரூன்ற முடியாமல் போய்விட்டது அல்லவா’ என்றார்.

உண்மைதான். வெற்றிடத்தைக் காற்று நிரப்பும் என்பது விதி. ஆனால் அந்தக் காற்று ஆக்ஸிஜனாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லையே! கார்பன் டை ஆக்ஸைடாகக் கூட இருக்கலாமே.

எவ்வளது துல்லியமாக, தொலைநோக்குடன் சிந்தித்திருக்கிறார் கலைஞர்.

இவ்வாறு வைரமுத்து பேசினார்.

[X] Close