[X] Close

‘காசெல்லாம் மண்ணாப் போச்சு’ - எம்.ஆர்.ராதா; ‘அவ்ளோ நிலம் வாங்கிருக்கேனு சொல்லு!’ - கலைஞர்


kalaingar-mayilsamy

கலைஞர் கருணாநிதி

  • வி.ராம்ஜி
  • Posted: 26 Aug, 2018 20:56 pm
  • அ+ அ-

கலைஞரைப் போல நகைச்சுவை உணர்வு உள்ளவர்களைப் பார்க்கவே முடியாது. அவரை தள்ளி நின்று ரசித்தவன் நான். அவரைப் போல மிமிக்ரி பேசியதற்குத்தான் அப்படியொரு கைத்தட்டல் கிடைத்தது எனக்கு என்று நடிகர் மயில்சாமி, பேசினார்.


கோவையில், மறக்க முடியுமா கலைஞரை எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. திரையுலகப் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டு பேசினார்கள்.இதில், நடிகர் மயில்சாமி பேசியதாவது: 

14 அல்லது 15 வயதில் அரசியலுக்குள் வந்தவர் கலைஞர். அன்று தொடங்கி தன் இறுதிக்காலம் வரை, அரசியலிலும் தமிழகத்திலும் தமிழ் மக்களுக்கும் அவர் செய்த பணிகளும் சீர்திருத்தங்களும் ஏராளம். எப்போதும் ஒரு எனர்ஜி கலைஞரிடம் இருக்கும். அதிலும் குறிப்பாக, நகைச்சுவை உணர்வு எல்லாச் சூழ்நிலைகளிலும் அவரிடம் இருந்தது. அது தோல்வியாக இருந்தாலும் சரி, வெற்றியாக இருந்தாலும் சரி. நகைச்சுவை உணர்வுடனேயே பதில் சொல்வார் கலைஞர். 

நடிகர் விவேக் தன்னுடைய பிறந்தநாளின் போது கலைஞரிடம் ஆசி வாங்குவதற்காகச் சென்றார். ‘என்னய்யா’ என்று கேட்டார். ’எனக்குப் பிறந்தநாள். ஆசீர்வாதம் பண்ணுங்க என்று விவேக் கேட்க, ‘எத்தனாவது பிறந்தநாள்’னு கலைஞர் கேட்டார். அவர் ஏதோ வயசைச் சொன்னார். உடனே கலைஞர், ‘எனக்காவது உண்மையச் சொல்லுய்யா’ன்னு சொன்னார். அதுதான் கலைஞர். 

இன்னொரு சம்பவம் சொல்லுவாங்க. அது உண்மையா பொய்யான்னு தெரியல. எம்.ஆர்.ராதா அவர்கள்கிட்ட கலைஞர் பேசிட்டிருக்கும் போது, ‘’ஏய்யா, இவ்ளோ படம் நடிக்கிறியே. சம்பாதிச்சதெல்லாம் சேத்து வைச்சிருக்கிறியா’ன்னு கலைஞர் கேட்டார். ‘சம்பாதிச்சதெல்லாம் மண்ணாப் போச்சு’ன்னு ராதா அண்ணன் சொல்ல, உடனே கலைஞர் கொஞ்சமும் யோசிக்காம,ல் ‘அவ்ளோ லேண்டு வாங்கிப்போட்டுருக்கேனு சொல்லு’ என்று சொன்னாராம். 

84ம் வருஷம். என்னோட மிமிக்ரிக்கு நல்ல வரவேற்பு இருந்துச்சு. என் நண்பர்கள் பத்துபேர். அதுல ஏழு பேர் திமுக. ஆனா எல்லாரும் எம்ஜிஆர் படங்கள்னா விரும்பிப் பாப்பாங்க. ஒருநாள், எங்க கலைஞரைப் போல பேசு. பேசிப்பாரு. செம கைத்தட்டல் கிடைக்கும்னு சொன்னாங்க. அப்ப வடபழநில சிங்காரவேலர் திடல்ல ஒரு மீட்டிங். எல்லாரும் பேசி முடிச்சதும், ஒருத்தர் வந்து, ‘பெரியாரின் சீடர், அண்ணாவின் தம்பி, திராவிட இயக்கத் தலைவர், திமுக தலைவர்னெல்லாம் அடுக்கிகிட்டே பேசிட்டு, கடைசியா டாக்டர் கலைஞர்னு சொல்லும் போது அப்படியொரு கைத்தட்டல். பிரமிப்போட பாத்தேன். 

உடனே தொண்டர்கள் அமைதியாயிட்டாங்க. கலைஞர் மைக் பக்கம் வந்தார். மைக்கைத் தட்டிப் பாத்தார். விழாக்காரங்க பேரெல்லாம் சொன்னார். பிறகு, ‘அன்பார்ந்த... பெரியோர்களே... தாய்மார்களே... நண்பர்களே...’ன்னு சொல்லி நிறுத்தினார். ஒருநிமிஷம்... அடுத்தாப்ல... ‘என்... உயிரினும் மேலான... அன்பு உடன்பிறப்புகளே’னு சொன்னதுதான் தாமதம், தட்டுறான் தட்டுறான் கைத்தட்டிக்கிட்டே இருக்காங்க தொண்டர்கள். அடுத்தாப்ல அஞ்சு நிமிஷத்துக்கு கலைஞர் பேசவே முடியல. ஒரே கைத்தட்டல்தான். அந்தக் கைத்தட்டல் நின்ன பிறகு கலைஞர் பேசினார்.

இப்படி மயில்சாமி பேசிக்கொண்டிருக்கும் போது,என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே’ என்று கலைஞர் குரலில் பேச, பலத்த கரகோஷம். ‘இதை நான் சொல்லும்போதே இவ்ளோ கைத்தட்டல்கள்னா, கலைஞர் சொல்லும்போது எவ்ளோ இருந்திருக்கும், பாருங்க. இது கூட எனக்குக் கிடைச்ச கைத்தட்டல் இல்ல. கலைஞரோட சொல்லுக்கும் குரலுக்கும் கைத்தட்டினீங்க’ என்று நெகிழ்ந்து சொன்னார் மயில்சாமி.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close