[X] Close
 

தலைவராகிறார் ஸ்டாலின்; கட்சிக்கு திரும்புவாரா அழகிரி?


stalin-to-takeover-as-dmk-chief

  • பாரதி
  • Posted: 10 Aug, 2018 10:04 am
  • அ+ அ-

கருணாநிதியின் மறைவை அடுத்து திமுகவின் செயல் தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின், தலைவராக பொறுப்பேற்க இருக்கிறார்.

செப்டம்பர் முதல் வாரத்தில் நடக்கவுள்ள திமுக பொதுக் குழுவில் கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட உள்ளார் என திமுக முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியிருக்கிறார்.

இந்நிலையில், ஸ்டாலின் எதிர்நோக்கியுள்ள சவால்களில் மிக முக்கியமான சவாலாகக் கருதப்படுவது அவரது மூத்த சகோதரர் அழகிரியை சமாளிப்பது. 

ஸ்டாலினுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு மு.க.அழகிரி திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு இருவருக்கும் இடையே எவ்வித சமாதானமும் ஏற்படவில்லை. ஆனால், கருணாநிதி மருத்துவமனையில் இருந்த 11 நாட்களும் அழகிரி, ஸ்டாலின் இருவரும் பலமுறை பேசியுள்ளனர். அவர்களுக்குள் சமரசம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, அழகிரிக்கும் திமுகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின்..
பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திராவிடர் கழகத்தில் இருந்து விலகிய அண்ணா, 1949 செப்டம்பர் 17-ம் தேதி திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) என்ற புதிய அமைப்பை தொடங்கினார். பின்னர் அரசியல் கட்சியாக மாறி 1957 முதல் தேர்தலில் திமுக போட்டியிட்டு வருகிறது. அப்போது திமுகவில் தலைவர் பதவி இல்லை. பொதுச்செயலாளராக அண்ணா தேர்ந்தெடுக்கப்பட்டார். 20 ஆண்டுகள் திமுகவின் தலைமைப் பொறுப்பில் இருந்த அண்ணா 1969-ல் காலமானார்.

அதன்பிறகு திமுகவில் தலைவர் பதவி உருவாக்கப்பட்டது. 49 ஆண்டுகள் தலைவராக இருந்து திமுகவை கட்டுக்கோப்புடன் வலிமை மிக்க கட்சியாக நடத்தி வந்த கருணாநிதி 19 ஆண்டுகள் முதல்வராகவும் இருந்துள்ளார்.

1969-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி திமுக தலைவராகப் பொறுப்பேற்ற கருணாநிதி, 50-வது ஆண்டில் அடியெடுத்து வைத்த நிலையில் மறைந்துள்ளார்.

இதையடுத்து, செயல் தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின், திமுகவின் அடுத்த தலைவராக பொறுப்பேற்க இருக்கிறார்.  

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close