[X] Close

தோனியை அமித்ஷா சந்தித்தது ஏன்?- மோடி அலை ஓய்கிறதா?


here-s-why-bjp-president-met-captain-cool

  • பாரதி ஆனந்த்
  • Posted: 06 Aug, 2018 13:32 pm
  • அ+ அ-

மோடி.. பெயரைக் கேட்டாலே சும்மா அதுருதில்ல என்ற பாணியில்தான் பாஜககாரர்கள் சுற்றிக் கொண்டிருந்தனர். மோடி அலை, எல்லா தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் பேசப்பட்டது. 

ஆனால், இப்போது பாஜகவின் தேசிய செயலாளர் அமித் ஷா உட்பட 4000 செயல்வீரர்களுக்கு சுமார் 1 லட்சம் பேரிடமாவது சாமான்யர்கள் அல்ல வெவ்வேறு துறையில் பிரபலமாக இருப்பவர்களிடம் அரசாங்கத்தின் சாதனைகளைக் கொண்டு சேர்க்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறதாம்.

அமித் ஷாவிடம் மட்டுமே 25 பிரபலங்களை சந்திக்கும் பொறுப்பு இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காகத்தான் அமித் ஷா நேற்று (ஞாயிறுக்கிழமை) தோனியை சந்தித்திருக்கிறார். ஏற்கெனவே அமித் ஷா, ராணுவ முன்னாள் தளபதி தல்பீர் சிங் சுஹாக், மக்களவை முன்னாள் செயலர் சுபாஷ் கஷ்யாப், தொழிலதிபர் ரத்தன் டாடா, நடிகை மாதுரி தீட்சித் ஆகியோரை சந்தித்தார்.

தோனியுடனான சந்திப்பு குறித்து கடந்த 4 ஆண்டுகளில் பிரதமர் மோடி மேற்கொண்ட பணிகளை எல்லாம் பகிரும் சந்திப்பு இது என்று அமித் ஷாவே தனது ட்விட்டரில் ட்வீட் செய்திருந்தர். சம்பர்க் ஃபார் சமார்தன் என்று இந்த முயற்சிக்குப் பெயர் வைத்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் 'Contact for Support' அதாவது ஆதரவுக்கான சந்திப்பு.

அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவிருக்கிறது. சகிப்பின்மை, கும்பல் வன்முறை, பாலியல் பலாத்காரங்கள், பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, இதோ லேட்டஸ்டாக அசாமில் எடுக்கப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு இவையெல்லாம் புகைந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில்தான் கொள்கைகளின் சூத்திரதாரியான அமித் ஷா ஆதரவுக்கான சந்திப்பு திட்டத்தை அவிழ்த்துவிட்டிருக்கிறார். நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆற்றிய உரை தேசிய அரசியலில் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அரசியல் படிநிலையில் ராகுல் காந்தி எகிறிக் குதித்து உயரே சென்றிருக்கிறார்.

வடக்கே ராகுல் காந்தி என்றால் கிழக்கில் மம்தா பானர்ஜி. அசாம் குடிமக்கள் பதிவேடு விவகாரத்துக்குப் பின்னர் பாஜக மீதான விமர்சனங்களை முன் எப்போதும்விட அதிகமாக முன்வைக்கிறார். பாஜகவை அகற்றவே எதிரணிகளை ஒன்று திரட்டுவதாக முழங்குகிறார். தெற்கே தமிழ்நாட்டிலிருந்து எந்த கர்ஜனையும் இல்லை என்றாலும்கூட ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார்.

மேற்கே மகாராஷ்டிரத்தில் கூட்டணியில் இருக்கும் சிவசேனா கட்சியே பாஜகவை தினமும் தனது நாளிதழ் வாயிலாக தாக்கிக் கொண்டிருக்கிறது. இப்படி நான்கு புறமும் அரசியல் நெருக்கடியில் இருப்பதை உணர்ந்ததால்தான் அமித் ஷா 'ஆதரவுக்கான சந்திப்பை' தீவிரப்படுத்தியிருக்கிறார் எனக் கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள். மேலும் இதெல்லாம் மோடி அலை ஓய்ந்து வருவதற்கான அறிகுறி என்றும் கூறுகின்றனர். அரசியலில் இது ஒரு ஒயிட் வாஷ் முயற்சி எனக் கூறுகின்றனர்.

எதுவாக இருந்தாலும் தேர்தல் வெகு தூரத்தில் இல்லை.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close