[X] Close

எம்.பி.க்கள் ராஜினாமா கோரிக்கை: ஸ்டாலினை வரிசைகட்டி விமர்சிக்கும் அமைச்சர்கள்


admk-against-stalin

  • Team
  • Posted: 04 Mar, 2018 23:16 pm
  • அ+ அ-

காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்காவிட்டால் தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை அதிமுக அமைச்சர்கள் விமர்சித்து வருகின்றனர்.

காவிரி பிரச்சினையில் மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இதை தமிழக அரசியல் கட்சிகள் கண்டித்து வருகின்றன.

அதிமுக துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்டோரும் போராட்டம் நடத்துவோம் என எச்சரித்தனர். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் முதல்வர் எடப்பாடியை சந்தித்த மு.க.ஸ்டாலின் பிரதமரை சந்திக்க வேண்டும், அப்படி பிரதமர் சந்திக்க மறுத்தால் 8-ம் தேதி சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்.

மேலும் இந்த பிரச்சினையில் 6 வார காலத்திற்குள் வாரியத்தை அமைக்காவிட்டால் தமிழக எம்பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். தமிழகத்தில் அதிமுக இரண்டு அணிக்கும் சேர்த்து 51 எம்பிக்கள் உள்ளனர். திமுகவுக்கு 4 ராஜ்ய சபா எம்.பி.க்கள் உள்ளனர். இந்நிலையில் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை அதிமுகவில் உள்ள அமைச்சர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.

அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். “திமுகவுக்கு நாடாளுமன்றத்தில் ஒரு எம்பி கூட இல்லை. அதனால் அவர் சுலபமாக சொல்லி விட்டார். ஆனால் இலங்கையில் முள்ளிவாய்க்காலில் இலங்கைத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது, இலங்கை தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டபோது நீங்கள் கூண்டோடு ராஜினாமா செய்திருக்க வேண்டியது தானே. உங்கள் எதிர்ப்பை காட்ட அன்று ராஜினாமா செய்திருந்தால் காங்கிரஸ் ஆட்சியே கவிழ்ந்திருக்கும். ஆனால் சுய நலம் அன்று எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் 1.5 லட்சம் பேர் கொல்லப்பட்டார்கள். அன்று ராஜினாமா செய்தீர்களா? நீங்கள்.” என்று கேள்வி எழுப்பினார்.

எச்.ராஜா கூறுகையில் ''ஸ்டாலின் வீட்டுக்கு சென்று அவர் காவிரி பிரச்சினையில் செய்த துரோகத்திற்காக 100 தோப்புக்கரணம் போடச்சொல்லவேண்டும், 74-ல் துரோகம் செய்த துரோகிகள் இன்று ஏன் வாயை திறக்கிறீர்கள். நீங்கள் சும்மா இருங்கள் மோடி உச்ச நீதிமன்றம் சொன்னபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வேலையை பார்த்துக்கொள்வார்'' என்று தெரிவித்தார்.

கோவில்பட்டியில் பேட்டியளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறுகையில், ''மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக எம்.பி.க்களை ராஜினாமா செய்யச் சொல்லும் அருகதை இல்லை. 13 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் இருந்த திமுகவினர் வருமானம் வரும் துறையாக பார்த்து வாங்கி வைத்துக்கொண்டனர்.

இவர்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் அன்று நீர்வளத்துறை அமைச்சகத்தை வாங்கி இந்தப் பிரச்சனையை தீர்த்திருக்கலாம் அல்லவா?'' என்று கேள்வி எழுப்பினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close