[X] Close

ஆன்மிக அரசியலில் திராவிடப் பாணி: மாறாத ரஜினி ரசிகர்கள்


rajini-politics-news

  • Team
  • Posted: 04 Mar, 2018 22:19 pm
  • அ+ அ-

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிட்டு தனது அரசியல் ஆன்மிக அரசியல் என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டார். ஆனால் அவரது ரசிகர்கள் திராவிட அரசியலை பின்பற்றுவதை விடவில்லை. போஸ்டரில் ரஜினியை திராவிட அரசியல் கட்சித் தலைவர்கள் அளவுக்கு புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

திராவிட அரசியலா? ஆன்மிக அரசியலா? என்ற பெரிய பட்டிமன்றமே ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்குப் பின் நடந்து வருகிறது. திராவிட அரசியலுக்கு மாற்றாக தங்கள் தலைவரின் அரசியல் இருக்கும் என்று ரஜினியின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

திராவிட அரசியலின் முதல்படியே தலைவர்களை துதி பாடுவதுதான். ஆன்மிக அரசியல் பேசும் ரஜினியின் மக்கள் மன்றம் வித்தியாசமாக இருக்கும் என்று நினைக்கும் பொதுமக்கள் எண்ணத்திற்கு மாறாக, ரஜினி ரசிகர்கள் இன்று நடைபெறும் விழா ஒன்றுக்கு அடித்துள்ள போஸ்டர்கள் இவர்களும் அதே வழியில்தான் செல்வார்கள் என்பது போல் உள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திங்கட்கிழமை வேலப்பன் சாவடியில் எம்ஜிஆர் சிலையை ரஜினிகாந்த் திறக்க உள்ளார். இதனை வரவேற்று அவரது ரசிகர்கள் போஸ்டர் அடித்துள்ளனர். அதில் எழுத்துகளை விட மன்ற நிர்வாகிகள் படங்களே அதிகம் உள்ளன. ஆனால் அதைவிட கழகங்கள் தங்கள் கட்சித் தலைவர்களுக்கு பட்டம் கொடுப்பது போல் பட்டமாக கொடுத்துள்ளது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

‘வாழும் எம்ஜிஆரே’, ‘வருங்கால தமிழகத்தின் முதல்வரே’ ‘எங்கள் தலைவரே’, ‘வாழும் காமராஜரே’, ‘மக்களின் முதல்வரே’, ‘எங்கள் தலைவா’, ‘மக்களின் புரட்சியே’ என்றெல்லாம் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இதைப் பார்த்த கால் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் இவராவது புதுசா ஏதாவது யோசிப்பார் என்று பார்த்தால் இவரும் அதே ரகம் தானா? என்று தலையிலடித்துக்கொண்டு சென்றார்.  

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close