[X] Close

ராகுல் - பா.ரஞ்சித் சந்திப்பு!- திரையில் பேசிய அரசியல் டெல்லிக்கு நீள்கிறதா?


rahul-gandhi-meets-kaala-director-pa-ranjith-and-kalaiarasan

  • பாரதி ஆனந்த்
  • Posted: 11 Jul, 2018 15:02 pm
  • அ+ அ-

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து வந்திருக்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித். கபாலி, காலா என அடுத்தடுத்து இரண்டு படங்களை ரஜினிகாந்தை வைத்து இயக்கியதால் தமிழ்த் திரையுலகில் ரஞ்சித் கவனம் பெற்றிருக்கிறார். சில எதிர்ப்புகளையும் சம்பாதித்திருக்கிறார்.

தனது படைப்புகளில் சமூக நீதி பற்றியும் தலித் அரசியல் பற்றியும் அவர் பேசி வருகிறார். தற்போது, நிழலில் மட்டுமல்ல களத்திலும் செயல்படத் தொடங்கியிருக்கிறார். நீட் எதிர்ப்பு, கச்சநத்தம் படுகொலை என பல்வேறு சம்பவங்களில் தனது கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துள்ளார். இது குறித்து ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில், "மெட்ராஸ், கபாலி, காலா போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் ரஞ்சித்தை நான் நேற்று டெல்லியில் சந்தித்தேன். நடிகர் கலையரசனும் இருந்தார். சினிமா, அரசியல், சமூகம் என எங்கள் பேச்சு விரிந்தது. இந்த சந்திப்பு என்னை மகிழச்செய்தது. எங்கள் ஆலோசனை தொடரும் என எதிர்பார்க்கிறேன்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

இதற்கு பதிலளித்துள்ள ரஞ்சித், "என்னை சந்தித்தற்கு நன்றி சார். நமது மதச்சார்பற்ற அரசியல் சாசனத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் மதவாதம், சாதியப் பாகுபாடுகள் குறித்து ஆலோசித்தேன். ஒரு தேசியத் தலைவரான ராகுல் பல்வேறு சித்தாந்தங்களைக் கொண்டோரையும் சந்திப்பது ஊக்கமளிக்கிறது. நமது ஆலோசனைகள் வடிவம் பெறும் என எதிர்பார்க்கிறேன்" என ட்வீட் செய்திருக்கிறார்.

காலா படத்தில் ரஞ்சித் மோடி அரசை மறைமுகமாக சாடியிருப்பார். தூய்மை இந்தியா திட்டமும் கேலி செய்யப்பட்டிருக்கும். இதுகூட ராகுல் - ரஞ்சித் சந்திப்புக்கு அடித்தளமாக அமைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் ரஞ்சித் தனது ட்வீட்டில், நமது ஆலோசனைகள் வடிவம் பெறும் என எதிர்பார்க்கிறேன் எனக் குறிப்பிட்டிருக்கிறார். இது ஏதாவது அரசியலுக்கான அடித்தளமாகக் கூட இருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close