[X] Close

பிரதமரின் ஃபிட்னெஸ் சவால் குமாரசாமிக்கு தூண்டிலா?


narendra-modi-nominates-hd-kumaraswamy

  • பாரதி ஆனந்த்
  • Posted: 13 Jun, 2018 12:22 pm
  • அ+ அ-

பிரதமர் மோடி தனது ஃபிட்னெஸ் சவாலை ஏற்க கர்நாடகா முதல்வர் குமாரசாமிக்கு அழைப்பு விடுத்துள்ளது அரசியல் தூண்டிலாகவே பார்க்கப்படுகிறது.

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. முதல்வர் பதவியை மஜதவுக்கு விட்டுக்கொடுத்தால் ஆட்சியில் சிக்கல் இருக்காது என்ற காங்கிரஸின் கணக்கில் சறுக்கல் ஏற்பட்டுள்ளது. அமைச்சரவையில் யார் இடம்பெறுவது என்ற போட்டாபோட்டியில் கர்நாடக அரசு சற்று ஆட்டம் கண்டுதான் இருக்கிறது. பாஜக கர்நாடகாவின் ஆட்சியைக் கைப்பற்றிவிடக் கூடாது என்ற கங்கணம் கட்டிக் கொண்டு ட்வீட் அரசியல் செய்த பிரகாஷ் ராஜ் கூட கர்நாடக ஆட்சியாளர்களைப் பார்த்து எத்தனை காலம்தான் எங்களை ஏமாற்றுவீர்கள்? என வெகுண்டெழுந்திருக்கிறார்.

இந்நிலையில்தான், பிரதமர் நரேந்திர மோடி தனது ஃபிட்னெஸ் சவாலை ஏற்க கர்நாடகா முதல்வர் குமாரசாமிக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆட்டம் கண்டிருக்கும் மஜதவுக்கு ஏதோ தூண்டில் போடப்பட்டதாகவே இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது.

அரசியலான விளையாட்டு...
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் விளையாட்டாக தொடங்கிவைத்ததுதான் ஃபிட்ஜென்ஸ் சேலஞ்ச். விராட் கோலிக்கு அவர் ஒரு சவாலை விடுக்க அந்த சவால் சங்கிலித்தொடராக சென்று கொண்டிருக்கிறது. கோலியின் சவாலை ஏற்றுக் கொண்டுள்ள பிரதமர் மோடி இன்று காலை ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். சரியாக் 1 நிமிடம் 49 விநாடிகள் அந்த ஃபிட்னெஸ் வீடியோ ஓடுகிறது. ஆனால், பச்சை பசேல் என்ற புல்வெளியும் மயில் அகவும் ஒலியும் காலை நேர உடற்பயிற்சிக்கு உத்தமமான சூழல்தான். கேமிரா ஆங்கிள் அவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது. அட ஒரு ட்ரெயலர் போல் இருக்கிறதே என்றெல்லாம் இணையவாசிகள் விமர்சிக்கின்றனர். புத்தர் சிலை இருக்கிறதே அப்போது அது போதி மரமா என்றெல்லாம் சமூகவலைதளங்களில் கருத்துகள் உலா வருகின்றன. மோடி கைகளை உயர்த்தியவாறு முன்னாள் நடப்பதும் கைகளைக் கூப்பியவாறு பின்னால் நடப்பதும் அந்த வீடியோவில் இடம்பெற்றிருக்கிறது.

பின்னர், ஒரு மரத்தைச் சுற்றி மோடி நடக்கிறார். அந்த மரத்தடியில் சிறிய பாத்திபோல் சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ளது. பகுதி பகுதியாக பிரிக்கப்பட்டு தண்ணீர், மணல், கூழாங்கல், மரம் என மாறி மாறி நிரப்பப்பட்டிருக்கின்றன. அதில் கவனமாக கால் பதித்து நடக்கிறார். அப்புறம் புத்தர் முன் நின்று மூச்சுப் பயிற்சி மேற்கொள்கிறார். கடைசியாக ஒரு கல் மீது தவக்கோலத்தில் அவர் அமர்ந்திருக்க பின்புற ஆங்கிளுடன் கேமரா ஸ்தம்பிக்கிறது. ஒரு திரைப்பட போஸ்டருக்கான அத்தனை தகுதியும் அந்த ஃபிரேமில் இருக்கிறது என்றால் அது மிகையல்ல. 

#HumFitTohIndiaFit என்ற ஹேஷ்டேக் கீழ் மோடி இந்த வீடியோவையும் பகிர்ந்து ஒரு ட்வீட்டும் பதிவு செய்திருக்கிறார். அந்த ட்வீட், "எனது காலை உடற்பயிற்சியிலிருந்து சில தருணங்கள். யோகாவுடன் இயற்கையின் பஞ்சபூதங்களால் ஈர்க்கப்பட்ட பஞ்சதவஸ் நடைப்பயிற்சியை மேற்கொள்கிறேன். இந்தப் பயிற்சி புத்துணர்ச்சி அளிக்கிறது. மூச்சுப் பயிற்சியும் மேற்கொள்கிறேன்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

யார் யாருக்கு சவால்?
அடுத்த ட்வீட்டில் தனது ஃபிட்னெஸ் சேலஞ்ச் யார் யாருக்கு என்பதைப் பட்டியலிட்டுள்ளார். முதலில் கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமி, அடுத்தது காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிக பத்ரா மற்றும் 40 வயதுக்கு மேல் உள்ள அனைத்து ஐபிஎஸ் அதிகாரிகள் என வரிசைப்படுத்தியிருக்கிறார். குமாரசாமி மோடியின் அழைப்பை ஏற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

மோடி கோலியின் ஃபிட்னெஸ் சேலஞ்சை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தபோது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கிண்டலாக பெட்ரோல், டீசல் விலையுயர்வைக் கட்டுப்படுத்திக் காட்டுங்கள் என சவால் விடுத்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. இத்தகைய சூழலில் காங்கிரஸ் தயவில் ஆட்சியில் இருக்கும் குமாரசாமி மோடியின் இந்த சவாலை ஏற்பாரா என்ற கேள்விகள் எழுந்த நிலையில், குமாரசாமியோ உங்கள் அக்கறைக்கு நன்றி எனது கவனம் எல்லாம் இப்போது மாநிலத்தை ஃபிட்டாக வைப்பதில்தான் எனப் பதிலடி கொடுத்திருக்கிறார். அதற்கு உங்கள் ஆதரவு தேவை என்று சூசகமாகத் தெரிவித்திருக்கிறார்.

மோடியின் ட்வீட் காரணமாக ட்விட்டரில் இந்திய அளவில் #FitnessChallenge  இரண்டாவது இடத்தில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close