[X] Close

ரஜினி, கமல்: ஸ்டைல் வேறு; சித்தாந்தமும் வேறு


rajinikanth-and-kamal-haasan-different-styles-different-ideologies

  • பாரதி ஆனந்த்
  • Posted: 11 Jun, 2018 10:34 am
  • அ+ அ-

உத்தவ் நாயக்

2018-ம் ஆண்டு தொடங்கி 6 மாதங்கள் உருண்டோடிவிட்டன. தமிழக அரசியலில் இதுவரை பிரதான கட்சிகள் மட்டுமே ஆரவார அரசியல் செய்துவந்த நிலையில், இந்த ஆறு மாதங்களில் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் கவனிக்கத்தக்க அளவு தங்கள் சுவடுகளைப் பதித்துள்ளனர்.

அவர்கள் இருவருக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை இருவரும் சினிமா பின்னணியைக் கொண்டவர்கள் என்பதுதான். இருவருமே சினிமாவில் சம்பாதித்த செல்வாக்கை அரசியல் களத்தில் மூலதனமாக போட்டுள்ளனர். இந்த ஒற்றுமையைத் தவிர்த்து இருவரது அரசியல் பாணியும் வேறு. இருவரது சித்தாங்களும் வெவ்வேறு.
 
பிப்ரவரி 2018-ல் மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்டது. அன்றுமுதல் கமல்ஹாசன் தனது அரசியல் கொள்கை வலதுசாரியாகவும் இல்லாமல் இடதுசாரியாகவும் இல்லாமல் மையமானதாக இருக்கும் என்றும் மதச்சார்பற்றதாக இருக்கும் என்றும் கூறிவருகிறார். அரசியல் கட்சியை அறிவிப்பதற்கு ஓராண்டுக்கு முன்னர் இருந்தே கமல்ஹாசன் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் சில வேளைகளில் மெயின்ஸ்ட்ரீம் ஊடகங்கள் வழியாகவும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிலாகவும் ஏன் அவர் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி வாயிலாகக்கூட ஆளும் கட்சியைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

கட்சி ஆரம்பிக்கப்பட்டு 4 மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில் கமல்ஹாசன் தனது கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல அடிமட்ட அளவில் அலுவல் நிர்வாகிகளை நியமிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

கமலின் இந்த செயல்பாடுகளுக்கு நேரெதிராக அரசியல் பிரவேசம் அறிவித்த நாள் முதலே ரஜினிகாந்த் தனது பாதை ஆன்மிகப்பாதை என்பதை உறுதிப்படுத்தி வருகிறார். அதுமட்டுமல்லாமல் அரசியல் கட்சி தொடங்கும்வரை அரசியல் விவகாரங்களில் கருத்து கூறுவதில்லை என உறுதியாக இருக்கிறார். களத்தில் இறங்குவதைவிட ரஜினிகாந்தின் தற்போதைய கவனம் எல்லாம் இன்னும் ஆரம்பிக்கப்படாத தனது கட்சிக்கு வலுவான கட்டமைப்பை உருவாக்குவதிலேயே இருக்கிறது.

அந்த வகையில் ரஜினியின் மக்கள் மன்றம் செயலர்கள், உப செயலர்கள், துணை செயலர்கள், மகளிரணித் தலைவர்கள், வழக்கறிஞர் பிரிவு, விவசாயிகள் பிரிவு, ஐடி செல் பிரிவு என வார்டுவாரியாக அலுவல் நிர்வாகிகளை நியமிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. வார்டு நிர்வாகிகள் பூத் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பர். இவர்கள் வாரந்தோறும் ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்துவர். ரஜினி மக்கள் மன்றத்தின் களப்பணி நன்றாகவே இருக்கிறது. அண்மையில் காலா திரைப்பட ஆடியோ ரிலீஸ் விழாவுக்கு 10,000 பேர் திரட்டப்பட்டிருந்தனர்.

கமல்ஹாசன் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து களத்துக்கே சென்றார். மய்யம் என்ற மொபைல் அப்ளிகேஷனைத் தொடங்கினார். கிராம சபைகளைக் கூட்டினார். சில பொதுக்கூட்டங்களயும் நடத்தினார்.

பொதுப் பிரச்சினைகளில் இரண்டு சூப்பர் ஸ்டார்களின் நிலைப்பாடும் வெவ்வேறாகவே இருந்திருக்கிறது. ஐபிஎல் எதிர்ப்புப் போராட்டங்களின்போது ரஜினிகாந்த் போலீஸார் மீதான தாக்குதலையே கண்டித்தார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து பேசும்போது சமூக விரோதிகளின் ஊடுருவலே வன்முறைக்குக் காரணம் என்றார். இந்தக் கருத்துக்காக விமர்சனங்களுக்கும் உள்ளானார். அதேவேளையில் கமல்ஹாசனோ ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை முழுவதுமாக ஆதரித்தார்.

இதற்காகவே ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் இரு துருவங்கள் என்று கூறிவிட முடியுமா?  நிச்சயமாக முடியாது. ஏனெனில் இருவருமே ஒருவருக்கொருவர் விமர்சித்துக் கொள்வதில்லை. இருவருமே சினிமா, சின்னத்திரையை தங்கள் கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஊடாக பயன்படுத்துகின்றனர். இருவருமே ஊழல்தான் தமிழகத்தின் பிரதாச பிரச்சினை என அடையாளப்படுத்துகின்றனர்.

ரஜினி, கமல் அரசியல் குறித்து மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் டாக்டர் வின்சென்ட் குமாரதாஸ் கூறும்போது, "ரஜினி, கமல் இருவருமே திராவிடக் கூறுகளைக் கொண்டே தங்களை அடையாளப்படுத்த முயல்கின்றனர்.
கமல்ஹாசன் மதச்சார்பின்மையை முதன்மைப்படுத்துகிறார். தென்னிந்திய ஒற்றுமை குறித்து பேசுகிறார். இது திராவிட அரசியலுடன் நேரடியாகத் தொடர்புபடுத்திக் கொள்வதே ஆகும். ரஜினிகாந்த் ஆன்மிக அரசியலை முன்னெடுத்தாலும் எம்.ஜி.ஆரின் ஆட்சி மீண்டும்மலரும் என்றுகூறி தன்னை திராவிடத்துடன் தொடர்பு படுத்துகிறார். இருவருமே திராவிட சகாப்தத்தின் விழுதுகள்தான்" என்றார்.

கட்சிக்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கு முன்னதாகவே மக்கள் நீதி மய்யம் என்ற கட்சி உருவாக்கப்பட்டது ஏன் என்பது குறித்து செயற்குழு உறுப்பினர் ஒருவர் கூறும்போது, "கட்சிக்கு களப்பணி ஆற்ற அடிமட்ட அளவில் தன்னார்வலர்கள் தேவை என்பதை கமல்ஹாசன் நன்றாகவே உணர்ந்திருந்தார். ஆனால், மக்களிடம் முன்னெடுத்துச் செல்லும் கருத்தியல் வேண்டாமா? கொள்கையே இல்லாமல் கொள்கை பரப்பும் செயல்வீரர்களை நியமித்து என்ன பயன் என்பதையும் அவர் அறிந்திருந்தார்" என்றார்.
 
ஆனால், ரஜினிகாந்தோ கட்சி தேர்தலை எதிர்கொண்டு வெற்றி காண உறுப்பினர்கள் வேண்டும் என நம்புகிறார். அவருடைய செல்வாக்கை மட்டுமே வைத்து தேர்தலை எதிர்கொண்டுவிட முடியாது என அவர் நம்புகிறார். வலுவான கட்சிக் கட்டமைப்புடன் தனது செல்வாக்கையும் தொலநோக்குப் பார்வையையும் சேர்த்தே வெற்றிப் பாதையில் செல்ல முடியும் என தெரிந்துவைத்திருக்கிறார்.

ரஜினி, கமல் அரசியல் குறித்து அரசியல் விமர்சகர் பத்ரி சேஷாத்ரி, "கமல்ஹாசனை ஒப்பிடும்போது தேர்தலுக்கான அரசியல் கூட்டணி அமைப்பதை ரஜினிகாந்த் எளிதாக எதிர்கொள்வார்" என்றார்.
 
திரையுலகில் ரஜினியும் கமலும் நண்பர்களாக இருக்கலாம் ஆனால் அரசியல் களத்தில் இருவரும் நேரெதிர். ஏற்கெனவே காலூன்றிய கட்சிகளிடமிருந்து இருவருக்குமே கடுமையான எதிர்ப்பு இருக்கிறது. தனது தலைமையை ஏற்கும்படி மற்ற கட்சிகளை சம்மதிக்க வைப்பது கமலுக்கு அவ்வளவு சுலபமாக இருக்காது. ஆனால், ரஜினிகாந்தால் அதை எளிதாக செய்ய முடியும். ஏன் குறிப்பாக பாஜக ரஜினிகாந்துக்கு ஒரு தூணாக அமைய இசைவு தெரிவிக்கும்.

- தமிழில்: பாரதி ஆனந்த்

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close